மலேசியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் நந்தா கொடகே தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னரேயே சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று, அவர் தொடர்பில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு மற்றும் படைத்துறை அமைச்சு ஆகியவற்றுக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே அவர் இவ்வாறு திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மலேசியாவில் இயங்கி வரும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொண்டு வரும் பரப்புரைகளை இவர் முறியடிக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உத்தரவை ஏற்க மறுத்துள்ள நந்தா கொடகே, பதவிக்காலம் முடியும் வரை தான் மலேசியாவுக்கான தூதுவராக தொடர்ந்து பணியாற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவுக்கான தூதுவராக அவர் மலேசியாவில் தொடர்ந்தும் பணி புதிந்தால், அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு தயாராகி வருவதாக தெரிய வருகின்றது' என இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.