சிறிலங்கா அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரும் அசோக் மேத்தா, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களுக்கு இந்தியா பொதுமன்னிப்பு வழங்குமா எனச் சிந்திக்க வேண்டும் என்று சிங்கள பௌத்த தேசியவாதி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற 'ஸ்திரத்தன்மையை நோக்கிய நிலையான சமாதானம்' எனும் பொருளிலான சிறிலங்காவின் படைத்துறைக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்த விடுதலைப் புலிகளின் போராளிகள் 383 பேர் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்பதாக கூறியிருந்தார்.
இது தொடர்பில் இக்கருத்தரங்கில் கருத்து வெளியிட்ட இந்திய அமைதி காக்கும் படையில் முன்னர் பணியாற்றிய ஓய்வுபெற்ற இந்தியப் படை அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, சட்ட நவடிக்கை எடுப்பதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள 383 விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மரபுரீதியான போர் அணுகுமுறைகளில் விடுதலைப் புலிகளின் போராளிகள் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதனால், அவர்களை படைத்துறையில் இணைத்துக் கொள்வது சிறிலங்கா படைத்துறைக்கு நன்மை ஏற்படும் என அசோக் மேத்தா கூறியிருந்தார்.
அத்துடன், அவர்களை படையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் சிறிலங்கா ஜனாதிபதி விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இவரின் இக்கருத்துத் தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள சிங்களத் தேசியவாத ஊடகங்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும், சிறிலங்காவுக்கு எதிரான சக்திகளாலும் மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளன.
அத்துடன், விடுதலைப் புலிகள் தொடர்பில் நன்கு அறிந்துள்ள அவர், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோருவது வேடிக்கையான விடயம் என்றும் இவ்வூடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அசோக் மேத்தாவின் வேண்டுகோள் தொடர்பில் படைத்துறைக் கருத்தரங்கில் பதிலளித்த சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, 'நாட்டைப் பாதுகாப்பதே படைத்தரப்பினரின் முதன்மையான கடமை. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகள் மீண்டும் ஒருங்கிணைவதை படைத்தரப்பினர் தடுக்க வேண்டியுள்ளது.
புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், சிறிலங்காவுக்கு எதிரான சக்திகளும் தான் இந்தியாவுக்குத் தவறான தகவல்களை வழங்கி வருகின்றனர்' எனக் குறிப்பிட்டிருந்தமை தெரிந்ததே.