Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்? - ஒரு விவாதத்தை நோக்கி - யதீந்திரா

தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்? - ஒரு விவாதத்தை நோக்கி - யதீந்திரா

 

சில தினங்களுக்கு முன்னர் திரு மாஸ்டரின் (திருநாவுக்கரசு) உரையை கேட்க முடிந்தது. நீண்டகாலத்திற்கு பின்னர் பொது மேடையொன்றில் அவர் பேசியிருக்கிறார். ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை அறிவுபூர்வமான தளங்களில் விவாதிப்பவர்களில் திருநாவுக்கு ஒரு தனியிடமுண்டு. குறிப்பாக புவிசார் அரசியல் பார்வையின்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள, கையாள முடியாது என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வருபவர் திருநாவு. அதேவேளை இந்தியாவை தவிர்த்து ஈழத் தமிழர்களுக்கு தீர்வில்லை என்பதையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருபவர். அந்த வகையில் அவரது பேச்சு என்னளவில் ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில் இந்தக் கருத்தை அவர் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகிறார். இப்போதும் அவரது பேச்சு அவரது நெடுநாள் நம்பிக்கையின் பிரபலிப்பாகவே இருக்கிறது. ஒரேயொரு வித்தியாசம் இதுவரை ஈழத்து மண்ணில் நின்று சொன்னவர் இப்போது அதனை தமிழ்நாட்டில் நின்று கூறியிருக்கிறார்.

கடந்த யூலை 29ம் திகதியுடன் இந்திய - இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்று 30 வருடங்கள் கடந்துவிட்டன. முப்பது வருடங்கள் என்பது மனித வாழ்வில் சாதாரணமான ஒரு காலகட்டமல்ல. இந்த முப்பது வருடங்களின் பின்னரும் ஈழத் தமிழ் மக்களுக்கான விடிவு தொடர்பில் கேள்விகள் எழும்போதெல்லாம் மீளவும் இந்தியா என்னும் ஒரு சொல்லையே நாம் உச்சரிக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவின் தேவைப்பாடு என்பது இப்போதும் முன்னரைப் போன்று பிரகாசமாகவே இருக்கிறது. அது இப்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் யதார்த்தமாகும். திருநாவின் உரை அந்த யதார்த்தத்திற்கான நற்சான்றிதழ்தான்.

தமிழ்த் தேசியர்கள் மத்தியில் இந்தியா தொடர்பில் இருவகை பார்வையுண்டு. ஒன்று திருநாவும் அவரை பின்தொடர்பவர்களினதும் புரிதல். அதாவது, சிறிலங்காவை புதுடில்லி சரியாக புரிந்துகொள்ளவில்லை. அது தொடர்ந்தும் கொழும்பை கையாளுவதன் ஊடாக இந்தியாவின் நலன்களை பாதுகாக்க முடியுமென்னும் நம்பிக்கையின் மீதே பயணம் செல்கிறது. ஆனால் மறுபுறமாக கொழும்போ எப்போதுமே இந்தியாவின் நலன்களுக்கு மாறாகவே செயற்பட்டு வருகிறது. எனவே இந்தியாவின் நலன்களை பாதுகாக்க வல்லவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமே. ஈழத் தமிழர்கள்தான் இந்தியாவின் உண்மையான நண்பர்கள். அதனை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இது ஒரு வகை பார்வை என்றால், இன்னொரு தரப்பின் பார்வையோ முற்றிலும் வேறானது. அதாவது இந்தியாவை ஒரு விரோதியாக காணும் போக்குக் கொண்டது. இந்தியா விடுதலைப் புலிகளின் அழிவிற்கு உதவியது. எனவே இன்றைய ஈழத் தமிழ் மக்களின் அவல நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம். அந்த வகையில் இந்தியாவை ஒரு நட்பு சக்தியாக நாம் கொள்ள முடியாது. இது பெருமளவிற்கு உணர்ச்சிவசமான ஒரு நிலைப்பாடு.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை தெளிவாக மனதில் இருத்திக் கொள்வது அவசியம். இலங்கையின் மீதான இந்தியாவின் நேரடித் தலையீடு என்பது தனிநாடு ஒன்றை இலக்காகக் கொண்டதல்ல. இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கூறியதுமில்லை. ஆனால் ஆரம்ப காலங்களில் இந்தியா எங்களுக்கு ஒரு தனிநாட்டை பெற்றுத் தருமென்னும் பார்வை தமிழ் இயங்கங்களின் மத்தியில் இருந்தது உண்மை. ஆனால் ஒரு கட்டத்துடன் தங்களின் பார்வை தவறு என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர். இது தொடர்பில் இந்திரா காந்தியின் ஆலோசகரும் இலங்கை விவகாரங்களை கையாண்டவருமான ஜி.பார்த்தசாரதி, விடுதலை இயங்கங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுமிருக்கிறார். இது தொடர்பில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவருமான சித்தார்த்தன் என்னிடம் கூறும் போது, '1984இல் என்னைச் சந்தித்த பார்த்தசராதி ஒரு விடயத்தை அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தார். அதாவது, இந்தியா ஒருபோதும் உங்களின் தனிநாட்டு கோரிக்கையை ஆதரிக்காது. அது மட்டுமன்றி அப்படியான ஒன்றை இந்தியா ஒரு போதும் அனுமதிக்கவும் மாட்டாது'.

எனவே இந்த விடயத்தில் இந்தியா மிகவும் வெளிப்படையாகவே இருந்திருக்கிறது. இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக அறிந்துகொண்டதன் விளைவாகவே புளொட் இயக்கம் மாலைதீவின் சதிப்புரட்சிக்கு உதவியது. ஆனால் அந்த முயற்சியையும் இந்தியாவே தோற்கடித்தது. புளொட் மாலைதீவின் சதிப்புரட்சிக்கு உதவியதற்கு பின்னாலிருந்த காரணம் பலரும் அறியாத ஒன்று. ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றிபெற வேண்டுமாயின் அதற்கு ஒரு வலுவான பின்தளம் தேவை. ஆரம்பத்தில் அவ்வாறானதொரு பின்தளமாக இந்தியாவே இருந்தது. ஆனால் இந்தியாவுடன் முரண்படுகின்ற சூழலில் ஏற்பட்டால் அதனை இழக்க நேரிடும். எனவே பிறிதொரு நாட்டிலும் ஒரு பின்தளத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில்தான் புளொட் தலைவர் உமாமகேஸ்வரன், மாலைதீவை கைப்பற்றும் முயற்சிக்கு உதவத் தீர்மானித்திருந்தார்.

இன்னொரு உதாரணத்தையும் இந்த இடத்தில் பார்க்கலாம். 2010ம் ஆண்டு, கூட்டமைப்பின் தலைவரும் இன்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்ற இரா.சம்பந்தனை நேர்காணல் செய்திருந்தேன். இந்தியா தொடர்பிலும் அவரிடம் கேட்டேன். பதிலளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு இடத்தில் தானும் காலம் சென்ற அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரும் கூட்டாக இந்திராகாந்தி அம்மையாரை சந்தித்ததை நினைவு கூர்ந்தார். இந்திராகாந்தி ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட்டாராம். அதாவது, பெரும்பான்மை மக்களின் மனதை புண்படுத்தாமல் உங்களுக்கு ஒரு நல்ல தீர்வை பெற்றுத் தருவேன். இதனைக் கூறிவிட்டு என்னைப் பார்த்த சம்பந்தன், இதன் பொருள் என்ன என்றார்? அதாவது தனிநாடு என்னும் பேச்சுக்கு இடமில்லை என்பதுதானே இதன் பொருள்.

எனவே இந்தியா ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு தனிநாட்டை பெற்றுக் கொடுப்பதற்காக இலங்கையின் மீது தலையீடு செய்யவில்லை என்பது வெள்ளிடைமலை. ஆனால் இப்போது திருநாவு முன்னிறுத்தும் வாதம் முற்றிலும் வேறுபட்டது. ஈழம் சாத்தியம் ஏனெனில் அது இந்தியாவின் தேவை. இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையை இரண்டு துண்டுகளாக்குவது அவசியம். அப்போதுதான் இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். திருநாவு கூறுவது போன்று, ஈழம் உருவாகினால் அது இந்தியாவிற்கு நல்லதுதான். அதிலொரு சந்தேகமுமில்லை. ஆனால் தனக்கு சாதகமான ஒன்றை ஏன் இந்தியா இதுவரை பரிசீலிக்கவில்லை? உண்மையில் இலங்கைத் தீவை உடைக்க இந்தியா விரும்பியிருப்பின் அதற்கு வாய்ப்பான சூழல் விடுதலைப் புலிகளின் காலத்தில்தான் இருந்தது. ஏனெனில் ஒரு தனிநாட்டை நிர்வகிப்பதற்கான அனைத்து ஆற்றலையும் விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர். ஆனால் இந்தியாவோ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் முலோபாயத்திற்கே உறுதுணையாக இருந்தது. எனவே ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கான அனைத்து வாய்ப்புக்களும் இருந்தபோதே அதனைச் செய்ய முயற்சிக்காத இந்தியா எதிர்காலத்தில் அப்படியான ஒன்றை பரிசீலிக்க வேண்டுமென்பது இந்தியா தொடர்பான எமது பார்வையில் உள்ள குறைபாடாகவே அமையும்.

ஏன் இலங்கைத் தீவு உடைவுறுவதை இந்தியா விரும்பாது? திருநாவு சொல்லுவது போன்று அப்படியொன்று உருவாகினால் இந்தியாவிற்கு நல்லது, அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரு அரணாக இருக்கும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இலங்கை இரு துண்டுகளானால், ஒரு (சிங்களவர்கள்) துண்டு முற்றிலும் சீனாவுடன் சென்று விடும் என்பதை நாம் இங்கு கவனிக்கத் தவறுகின்றோம். திருநாவு கூறுவது போன்று கொழும்பு காலத்திற்கு காலம் இந்தியாவிற்கு மாறான முடிவுகளை எடுக்கத் தயங்கியதில்லை என்பது உண்மைதான். அவ்வாறான முடிவுகளை எடுக்க முற்பட்ட போதெல்லாம் அதற்கான விலையையும் குறித்த ஆட்சியாளர்கள் கொடுக்க நேர்ந்ததையும் நாம் மறந்துவிடக் கூடாது. இறுதியாக விலைகொடுத்தவர்தான் மகிந்த ராஜபக்ச. அவரது அளவுக்கதிகமான சீன நெருக்கமே இறுதியில் அவரது வீழ்ச்சிக்கு காரணமாகியது. திருநாவு சொல்லுவது போன்று இலங்கை விடயத்திலிருந்து இந்தியா எப்போதும் விலகிநிற்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அதற்காக இந்தியா, ஈழத் தமிழர்களுக்காக ஒரு தனிநாட்டை நிறுவ உதவும் என்பதற்கான எந்தவொரு அடிப்படைகளும் இல்லை. உண்மையில் அவ்வாறான ஒன்று உருவாவதை தடுப்பதிலேயே இந்தியா முழுக் கவனத்தையும் செலுத்தும் என்பதே யதார்த்தம். ஏனெனில் இலங்கைத் தீவு இரண்டு துண்டுகளானால் இந்தியாவின் கொல்லைப் புறத்தில் சீனாவின் நிரந்தர நண்பன் ஒருவனை உருவாக்குவதற்கான வாய்ப்பை இந்தியாவே உருவாக்கிக் கொடுப்பதாகிவிடும். அப்படியொரு முடிவை இந்தியா எடுக்குமா?

தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்? - ஒரு விவாதத்தை நோக்கி - யதீந்திரா

நாடுகள் உடைவுறுவதற்கான ஒரு உலக ஒழுங்கு முன்னர் இருந்தது. அவ்வாறானதொரு சூழலில்தான் ஈழத் தமிழர் அரசியல் ஆயுதப் போராட்ட வடிவம் கொண்டது. அவ்வாறானதொரு சூழலில் கூட, அன்றைய சோவியத் சார்பு இந்தியா இலங்கைத் தீவை உடைக்க முயற்சிக்கவில்லை. அன்றைய சூழலில் இந்தியா நினைத்திருந்தால் அதனைச் செய்திருக்க முடியும். ஆனால் நான் மேலே குறிப்பிட்டவாறான காரணத்தை அடியொற்றித்தான் இந்தியா அதனைத் தவிர்த்திருக்க வேண்டும்.

சீனா, இன்று இலங்கைக்குள் காலூன்றிவிட்டது என்பது உண்மைதான். அது இந்தியாவிற்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றல்ல என்பதும் உண்மைதான். இந்தியாவின் கவலைகளை புறம்தள்ளுவதன் மூலமாக ஏற்படும் நீண்டகால ஆபத்தை கொழும்பும் அறியாமலில்லை. கொழும்பிற்கு இந்தியா தொடர்பில் ஒரு நீண்ட ராஜதந்திர அனுபவம் உண்டு. அந்த அனுபவங்களை புறம்தள்ளி செயலாற்றினால் இந்தியாவின் பதில் எவ்வாறு அமையும் என்பது தொடர்பிலும் கொழும்பிடம் ஒரு கற்றல் உண்டு. சீனாவுடனான ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை சமநிலைப்படுத்துவதற்காக மத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது என்பதானது, நான் மேலே குறிப்பிட்ட அனுபவக் கற்றலின் விளைவுதான். எனவே இந்தியா எப்போதும் இலங்கை விவகாரங்களில் தவிர்க்க முடியாதவொரு சக்தியாகவே இருக்கும். அது இந்த பிராந்தியத்தின் அரசியல் யாதார்த்தம். கொழும்பும் அதனை விளங்கிக் கொண்டுதான் பயணிக்கும்.

இந்த இடத்தில்தான் ஒரு கேள்வி குறுக்கிடுகின்றது. இதுதான் யதார்த்தம் என்றால் தமிழ்நாடு ஈழத் தமிழர்களுக்காக என்ன செய்ய முடியும்? தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இயங்கிவரும் ஒரு சில கருத்தியலாளர்கள், தொடர்ச்சியாக ஒரு விடயத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஈழம் - தமிழ் நாடு – புலம்பெயர் சமூகம் ஆகிய மூன்றும் ஒரு நேர்கோட்டில் பயணிக்க வேண்டும். இந்த வாதத்தின் சாத்தியப்பாடு தொடர்பில் என்னிடம் கேள்வியிருந்தாலும் கூட, முதலில் தமிழ்நாட்டின் வகிபங்கு என்னவாக இருக்கிறது என்பதில் நமக்குள் ஒரு தெளிவு இருப்பது அவசியம். முதலில் இதுவரை தமிழ் நாட்டின் வகிபங்கு என்னவாக இருந்தது என்னும் கேள்விக்கான பதிலை நாம் கண்டடைய வேண்டியிருக்கிறது. ஒரு விடயத்தில் சரியான புதிதலின்றி, கற்பனைகளில் திளைப்பதானது, எந்த வகையிலும் நாம் முன்னோக்கிச் செல்வதற்கு பயனளிக்காது.

தமிழ்நாடு பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் முள்ளிவாய்க்கால் நிலம் ஈழத் தமிழ் மக்களின் குருதியில் உறைந்தது. ஆனால் தமிழ்நாட்டால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்திய மத்திய அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியவில்லை. இன்றுவரை இதுதான் நிலைமை. அறிக்கைகள், ஆவேசமான பேச்சுக்கள் - இவற்றுக்கு அப்பால் தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? அல்லது இதுவரை கையாண்ட முறைகளுக்கு மாறாக தமிழ்நாட்டின் புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டியிருக்கிறதா? இதனை ஒரு விவாதமாக நாம் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் எங்கு நின்றிருந்தோம்? - இப்போது எங்கு நிற்கிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அரசியலை அறிவுபூர்வாக அணுகவேண்டுமாயின் முதலில் இவ்வாறானதொரு பார்வை நமக்குள் அவசியம். முதலில் தமிழ்நாட்டால் என்ன செய்ய முடியுமென்று சிந்தியுங்கள். இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை நன்கு விளங்கிக் கொண்டு எவ்வாறு மத்தியை நோக்கி பேச முடியும் என்று சிந்தியுங்கள். நீண்டகாலமாக நீங்களும் பேசுகின்றீர்கள். ஆவேசமாக உரையாற்றுகின்றீர்கள். ஆனாலும் உங்களின் பேச்சுக்களை மத்தி கண்டுகொள்ளவில்லை. அப்படியாயின் அவர்களை நெருங்கும் வகையில் நீங்கள் பேசவில்லையா அல்லது பேச இயலவில்லையா? உங்கள் பேச்சில் எங்கோ ஒரு பெரிய துவாரம் இருக்கிறது. அதனை கண்டடையுங்கள். பின்னர் ஈழம் தொடர்பில் விவாதிக்கலாம்.

நன்றி: காக்கைச் சிறகினிலே

9/15/2017 1:08:04 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்