Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh

தாயகத்தில் டயஸ்பொறா முதலீடு: எந்த நோக்கு நிலையிலிருந்து? - நிலாந்தன்

தாயகத்தில் டயஸ்பொறா முதலீடு: எந்த நோக்கு நிலையிலிருந்து? - நிலாந்தன்

கடந்த மாதம் நடுப்பகுதியளவில் கொழும்பில் ஒரு சந்திப்பு நடந்தது. வறுமை ஆய்வுக்கான நிலையம் Centre for Poverty Analysis (CEPA) என்ற ஒரு சிந்தனைக்குழாத்தினால் இச்சந்திப்பு ஒழுங்குசெய்யப்பட்டது. நோர்வீஜிய அரசாங்கம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு என்பவற்றின் அனுசரணையுடனான இச்சந்திப்பில் டயஸ்பொறா தமிழர்கள் மத்தியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்குபற்றியிருக்கிறார்கள். இவர்களுள் 2009 மே மாதத்திற்கு முன்பு தீவிரமாக அரசியலில் ஈடுபட்டவர்களும் உண்டு, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டிராத இரண்டாம் தலைமுறையினருமுண்டு. இவர்களுக்கான பயணச் செலவுகளை மேற்படி நிறுவனமே பொறுப்பேற்றது.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் டயஸ்பொறா முதலீடுகள் மற்றும் உதவிகள் தொடர்பான ஒரு சந்திப்பு இதுவென்று கூறப்படுகின்றது. நான்கு மாகாண சபைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு கிழக்கில் இயங்கும் சிவில் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மத்திய வங்கி ஆளுநர், முதலீட்டுச் சபைத் தலைவர் ஆகியோரும் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரும் இதில் பங்கேற்றியிருக்கிறார்கள். கிழக்கு மாகாண சபையிலிருந்து அதன் ஆளுநரும், தமிழரான ஒரு அமைச்சரும் பங்குபற்றியிருக்கிறார்கள். வடமாகாண சபையிலிருந்து சில அதிகாரிகள் பங்கேற்றியிருக்கிறார்கள். அவர்களோடு அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகக் கொண்டவரும், முதலமைச்சருக்கு நெருக்கமானவரும், முதலமைச்சரின் மூலோபாய ஆலோசகர் என்று விளிக்கப்படும் ஒருவரும் இச்சந்திப்பில் பங்குபற்றியிருக்கிறார்.

இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவுப்புக்களோ, செய்திகளோ வெளிவரவில்லை. இச்சந்திப்பில் பங்குபற்றிய சிலர் தரும் தகவல்களின்படி வடக்கு கிழக்கில் டயஸ்பொறா முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாகவும், தொழில்சார் திறன்களை டயஸ்பொறாவிலிருந்து பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் உரையாடப்பட்டதாக தெரிகிறது. இதில் பங்குபற்றிய டயஸ்பொறாத் தமிழர்கள் சிலர் வடமாகாண சபையின் நிர்வாகத் திறன் தொடர்பில் விமர்சனங்களோடு காணப்பட்டார்கள். ஓர் உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின் போது ஒரு டயஸ்பொறாத் தமிழர் வட மாகாணசபை அதிகாரி ஒருவரிடம் பின்வருமாறு கேட்டாராம். 'கடந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் சாதித்தவற்றைக் கூற முடியுமா'? என்று. அதற்கு அந்த அதிகாரி சொன்னாராம் 'பிராந்திய மற்றும் உள்ளூர் தெருக்களை திருத்தியிருக்கிறோம்' என்று.

அதே சமயம் கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரை அதன் சார்பாக ஆளுநர் அச்சந்திப்பில் பங்குபற்றியிருக்கிறார். ஓர் அமைச்சரும் பங்குபற்றியிருக்கிறார். இது வட மாகாண சபையோடு ஒப்பிடுகையில் கிழக்கு மாகாண சபையானது இது போன்ற சந்திப்புக்களில் அதிகம் ஆர்வம் காட்டுவதைக் குறிக்கின்றது என்று ஒரு டயஸ்பொறாத் தமிழர் சொன்னார். ஆனால் கிழக்கு மாகாண சபை ஆளுநர் மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்திய அரசு சாரா அமைப்பைப் போன்ற நிறுவனங்களோடு நீண்ட காலமாக நெருங்கிச் செயற்படும் ஒரு வரலாற்றைக் கொண்டவர் என்பதால் இது போன்ற சந்திப்புக்களில் அவர் ஆர்வத்தோடு பங்குபற்றியிருக்கலாம் என்று ஒரு மூத்த சிவில் அதிகாரி சுட்டிக்காட்டினார்.

அதிகம் பிரசித்தமாகாத இச்சந்திப்பைக் குறித்து பல்வேறு வகைப்பட்ட அபிப்பிராயங்களும் உண்டு. நோர்வேயைச் சேர்ந்த ஒரு முகநூல் பதிவர் இது தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். 2009 மேக்குப் பின் மற்றவர்களை அளக்கப் பயன்படுத்திய அதே அளவு கோல்களை இச்சந்திப்பில் பங்குபற்றியவர்கள் தங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்ற தொனிப்பட அவர் பதிவிட்டிருந்தார். ஒரு முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் டயஸ்பொறாவை பிளவு படுத்தும் அரசாங்கத்தின் முயற்சி இதுவென்று சுட்டிக்காட்டினார். ஏற்கனவே ஆட்சி மாற்றத்தின் முன் பின்னாக சிங்கப்பூரிலும், லண்டனிலும் நடந்த சந்திப்புக்களின் விளைவே இதுவென்று அவர் குறிப்பிட்டார். சில டயஸ்பொறா அமைப்புக்கள் அரசாங்கத்தோடு இணங்கிச் செயற்பட தொடங்கிவிட்டன என்றும் இந்த 'றிவேர்ஸ் லொபியின்' ஒரு பகுதியாகவே இச்சந்திப்பைப் பார்க்க வேண்டும் என்றும் ஒரு டயஸ்பொறா அவதானி கூறினார்.

டயஸ்பொறாத் தமிழர்கள் அவர்கள் நினைத்தபடி வடக்கு கிழக்கில் சுயாதீனமாக முதலீடுகளைச் செய்ய முடியாது. வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய முன் வருவோரை முதலீட்டுச் சபையே திசை திருப்பி விடும் சந்தர்ப்பங்களும் உண்டு. தெற்கில் உள்ள ஓர் இடத்தில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு பின்வரும் சலுகைகள் கிடைக்கும் என்ற ஒரு பட்டியலைக் காட்டி முதலீட்டாளர்களை தெற்கை நோக்கிக் கவரும் உத்தியை அவர்கள் பயன்படுத்தியது உண்டு என்று மேற்சொன்ன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். வெளித் தோற்றத்திற்கு இது தாயகத்திற்கும் டயஸ்பொறாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை விருத்தி செய்யும் ஒரு சந்திப்பாக தோன்றினாலும் அதன் உள் நோக்கங்களைக் கருதிக் கூறின் டயஸ்பொறாவை பிளவுபடுத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாகவே இச் சந்திப்பை பார்க்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான ஐயங்களின் பின்னணியில்தான் சில வாரங்களுக்கு முன் கனடாவில் இருந்து வந்த வணிகர்களின் தூதுக்குழு ஒன்றை வடமாகாண முதலமைச்சர் சந்திக்க மறுத்தாரா? என்ற கேள்வியும் எழுகின்றது. அது போலவே அண்மையில் தான் கட்டிக் கொடுத்த வீடமைப்புத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்ச்சிக்காக ஒரு தமிழ் கோப்ரேட் நிறுவனம் ரஜனிகாந்தை அழைத்து வர முற்பட்ட பொழுது அதற்கு கடும் எதிர்ப்பு காட்டப்பட்டது. குறிப்பிட்ட கோப்ரேட் நிறுவனம் தொடர்பாகவும் மேற்கண்டவாறான விமர்சனங்கள் உண்டு. இந்த விமர்சனங்கள் யாவும் ரணில் மைத்திரி ஆட்சி மாற்றங்களுக்குப் பின்னானவை அல்ல. அதற்கும் முந்தியவை. அதாவது 2009 மேக்குப் பின்னரான புதிய வளர்ச்சிகளின் பாற்பட்டவை.

2009 மேக்குப்பின் தமிழ்த் தேசிய அரசியலின் கூர் முனை போல டயஸ்பொறாவே காணப்பட்டது. ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஈழத்தமிழ் அரசியலை டயஸ்பொறாவே முன்னெடுக்கப் போகிறது என்ற ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்பட்டது. இத்தகையதோர் பின்னணியில் 2009 மேக்கு முன் தமிழ் டயஸ்பொறாவில் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட பலரும் தாயகத்திற்கு திரும்பி வருவதில் சட்டத் தடைகளும், அச்சுறுத்தல்களும் ஏற்பட்டன. அதே சமயம் ஓர் இனப்படுகொலை மூலம் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்த ராஜபக்ஷ அரசாங்கத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் வலிமை பெற்றது. ஒரு புறம் ஒரு தொகுதி அரசியற் செயற்பாட்டாளர்கள் தாயகம் வந்துபோகமுடியாத நிலை. இன்னுமொரு புறம் ராஜபக்ஷ அரசாங்கத்தைBoycottபுறக்கணிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை.

தாயகத்தில் டயஸ்பொறா முதலீடு: எந்த நோக்கு நிலையிலிருந்து? - நிலாந்தன்

2009 மேக்குப் பின்னரான கொந்தளிப்பான ஈழத்தமிழ் உளவியற் சூழலில் குறிப்பாக டயஸ்பொறாவில் ராஜபக்ஷ அரசாங்கத்தினை புறக்கணிப்பதா? அல்லது தமிழ்ப் பகுதிகளில் அபிவிருத்தியில் பங்கேற்பதாboycott or engage - என்ற வாதம் அதிகம் அழுத்தம் பெறலாயிற்று. இவ்வாறான வாதப்பிரதிவாதங்களின் பின்னணியில் கொழும்புக்கு வந்த டயஸ்பொறா முதலீட்டாளர்கள் பலரும் மகிந்தவின் ஆட்களாகவே பார்க்கப்பட்டார்கள். அவர்கள் மகிந்தவின் ஆட்களோ இல்லையோ அவர்கள் தாயகத்துள் நுழையும் பொழுது ராஜபக்ஷ அரசாங்கத்தோடு ஏதோ ஒரு விகிதமளவிற்கு சுதாகரிக்க வேண்டிய ஒரு அரசியற் பொருளாதாரச் சூழலே நாட்டில் நிலவியது என்ற ஒரு நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பலமாக ஏற்பட்டு விட்டது. ஈழத்தமிழர்கள் மத்தியில் செயற்படும் மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு மனித உரிமை அமைப்பைச் சேரந்தவர்கள் அந்நாட்களில் அரசாங்கத்தோடு இணங்கிச் செயற்படும் தமிழ்க் கட்சிகளோடு ஏதோ ஒரு விகிதமளவிற்கு தொடர்புகளைப் பேணினால்தான் தமிழ்ப் பகுதிகளில் செயற்பட முடியும் என்று நம்புமளவிற்கே நிலமைகள் காணப்பட்டன.

இவ்வாறான ஓர் அரசியல், இராணுவச் சூழலுக்குள் டயஸ்பொறவிலிருந்து நாட்டுக்குள் வந்த பெரும்பாலான முதலீட்டாளர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். இந்த விமர்சனங்களின் தொடர்ச்சிதான் இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிட்ட தமிழ் கோப்பரேட் நிறுவனத்தின் மீதும் கனடாவிலிருந்து வந்த முதலீட்டாளர்கள் மீதும் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களாகும்.

இவ்வாறு boycott or engage என்ற விவாதம் நிலவிய ஒரு சூழலில் மேற்கு நாடுகள் தமிழ் டயஸ்பொறாவை தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப குறிப்பிடத்தக்க அளவிற்கு பயன்படுத்தின. ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளை பெருமளவிற்கு தொகுத்தது தமிழ் டயஸ்பொறாதான். ராஜபக்ஷவை வழிக்குக் கொண்டு வருவதற்கு டயஸ்பொறாவை ஒரு கருவியாக மேற்கு நாடுகள் பயன்படுத்தின. அதில் வெற்றியும் கண்டன. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் அதே மேற்கு நாடுகள் டயஸ்பொறாவின் தீவிரத்தைத் தணிக்க முற்படுகின்றன. அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள், மற்றும் நபர்களின் மீதான தடைகளை நீக்குவதன் மூலம் டயஸ்பொறாவிற்கும், தாயகத்திற்கும் இடையிலான தூரத்தைக் குறைத்து டயஸ்பொறாவையும், தாயகத்தையும் நெருங்கி உறவாட வைத்து அதன் மூலம் டயஸ்பொறாவின் தீவிர நிலையை தணிக்கலாம் என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றன. ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் டயஸ்பொறாவானது தாயகத்தோடும், அரசாங்கத்தோடும் இடையூடாடத் தேவையான நகர்வுகளை மேற்கு நாடுகளே முன்னெடுக்கின்றன. அதாவது இப்பொழுது boycott இல்லை. எல்லாவற்றிலும் engage- பங்கெடுப்பது தான்.

அதாவது தமிழ் டயஸ்பொறாவையும், அரசாங்கத்தையும் நெருங்கச் செய்ய வேண்டும் என்று மேற்கு நாடுகளும் ஆர்வத்தோடு உள்ளன. இலங்கை அரசாங்கமும் ஆர்வத்தோடு உள்ளது. டயஸ்பொறாத் தமிழர்களில் ஒரு பகுதியினரும் ஆர்வத்தோடு உள்ளார்கள். இம் மூன்று தரப்புக்களுக்கும் வெவ்வேறு நிலையான நலன்கள் இருக்க முடியும். அவை சில சமயம் ஒரு புள்ளியில் சந்திக்கவும் முடியும்.

மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு டயஸ்பொறா ஒரு தடையாக இருக்கக் கூடாது. எனவே டயஸ்பொறாவை அரசாங்கத்தோடு ஏதோ ஒரு விகிதமளவிற்கு நெருங்கச் செய்ய வேண்டும்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை டயஸ்பொறாவை உடைக்க வேண்டும். 2009 மேக்குப் பின் தமிழ்த் தேசிய அரசியலின் கூர்முனை போலக் காணப்பட்ட ஒரு டயஸ்பொறாவை பல துண்டுகள் ஆக்க வேண்டும். சிங்கள, பௌத்த அரசுக்கு எதிராக அனைத்துலக அபிப்பிராயத்தை உருவாக்கி வரும் ஒரு டயஸ்பொறாவை பல துண்டுகளாக உடைத்து பலவீனப்படுத்த வேண்டும். எனவே அவர்களும் டயஸ்பொறாவோடு engage பண்ணத் தயார்.

டயஸ்பொறாவிலுள்ள ஒரு பகுதியினரைப் பொறுத்தவரை அவர்கள் வர்த்தக நோக்கத்தோடு வருகிறார்கள். அவர்கள் தமது வர்த்தக சாம்ராஜ்யத்தை தாயகத்திலும் விரிவாக்க விரும்புகிறார்கள். ஆனால் தாயகத்தின் சமூக, பொருளாதார விவகாரங்களில் பங்கெடுக்க முன்வரும் எல்லாருமே வர்த்தக இலக்குகளைக் கொண்டவர்கள் அல்ல. போரினால் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்புவோரும் உண்டு. 'எனது பிள்ளை எல்லா வளங்களோடும் படித்துக் கொண்டிருக்கும் போது அதையே மற்றவர்களின் பிள்ளைகளும் அனுபவிக்க வேண்டும் என்று  நான் ஆசைப்படுகிறேன்' என்று மேற்படி சந்திப்பில் பங்கு பற்றிய ஒருவர் சொன்னார்.

இவ்வாறு தாயகத்தில் முதலீடு செய்வதற்கோ அல்லது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கோ விரும்பும் டயஸ்பொறா தமிழர்களில் அநேகர் வடமாகாண சபையை அதிகம் விமர்சிக்கிறார்கள். வயதால் மிக இளைய வடமாகாண சபையானது தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கூட முழுமையாக பிரயோகிக்க முடியாமல் திண்டாடுகிறது என்ற ஒரு குற்றச்சாட்டை அவர்கள் முன் வைக்கிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தைத் தெளிவு படுத்த வேண்டும். வடமாகாணசபையை விமர்சிப்பவர்கள் மூன்று நோக்கு நிலைகளிலிருந்து அதைச் செய்கிறார்கள். முதலாவது முதலமைச்சரின் தலைமைத்துவப் பண்பை குறை சொல்பவர்கள். இவர்கள் இந்த விமர்சனத்தை மாகாண சபையின் நிர்வாகச் செயற்பாடுகளில் காணப்படும் தவறுகளுக்கூடாக சுட்டிக் காட்டுகிறார்கள். இரண்டாவது வகை அரசாங்கத்தின் நோக்கு நிலையிலிருந்து வடமாகாண சபைமீது வைக்கப்படும் விமர்சனம். வட மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் போதாது என்பதோடு ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்கும் அரசாங்கம் தடையாகக் காணப்படுகின்றது என்று முதலமைச்சர் கூறுகிறார். குறிப்பாக முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் இன்று வரையிலும் சம்மதிக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இவ்வாறு வடமாகாண சபைக்குள்ள அதிகாரங்களைக் குறித்து விமர்சிக்கும் ஒரு முதலமைச்சரை மட்டந்தட்டுவதற்கு அரசாங்கத் தரப்பு கவர்ச்சியான ஓர் உத்தியைக் கையாள்கிறது. அது என்னவெனில் ஏற்கெனவே வழங்கப்பட்ட அதிகாரங்களையே அவரால் கையாள முடியவில்லை என்பதுதான். அதாவது அவருக்கு நிர்வாகம் செய்யத் தெரியாது என்று காட்டப் பார்க்கிறார்கள். இது இரண்டாவது வகை.

மூன்றாவது வகை முதலமைச்சரை தனிப்பட்ட ரீதியில் முடக்கும் ஒரு வேலைத்திட்டம். தமிழ்த் தேசிய அரசியலில் மாற்று அரசியல் கட்சி ஒன்றுக்கு அவர் தலைமை தாங்கக் கூடும் என்று ஊகிக்கப்படுகிறது. எனவே அவரையும் அவருக்கு விசுவாசமான அமைச்சரையும் விமர்சிப்பதன் மூலம் ஒரு மாற்றுத் தலைமையாக அவர் மேலெழுவதை தடுப்பது. இதை அவருடைய சொந்தக் கட்சிக்காரர்களும் செய்கிறார்கள். அரசாங்கமும் செய்கிறது.

எனவே வடமாகாண சபையின் நிர்வாகத் திறன் குறித்த விமர்சனங்களை முன் வைக்கும் டயஸ்பொறாத் தமிழர்கள் குறிப்பாக முதலீட்டாளர்களும் அபிவிருத்தித் திட்டங்களை கையில் வைத்திருப்பவர்களும் வடமாகாண சபையை விமர்சிக்கும் போது மேற்சொன்ன விடயங்களை கவனத்தில் எடுக்க வேணடும். தமிழ் மக்களின் கூட்டுரிமைகளைப் பாதுகாக்கும் விதத்தில் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட ஒரு சமஷ்டித் தீர்வை தமிழ் மக்கள் கோரி வருகிறார்கள். அப்படியொரு தீர்வையும் உள்ளடக்கி ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் இன்று வரையிலும் பின்னடிக்கிறது. இது தொடர்பில் அரசாங்கத்தினரின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு மேற்கு நாடுகளும் தயாரில்லை. இத்தகையதோர் பின்னணியில் பலவீனமான, வயதால் மிக இளைய ஒரு மாகாண சபைக்கூடாக முதலீடுகளைச் செய்யலாம், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கலாம் என்று டயஸ்பொறாத் தமிழர்களை நோக்கி விடுக்கப்படும் அழைப்புக்களை அவர்கள் அதன் அரசியல் உள்நோக்கங்களுக்கூடாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது boycott பற்றி கதைப்பவர்கள் குறைவு. பெரும்பாலானவர்கள் engage- பண்ணுவது பற்றியே கதைக்கிறார்கள். நவீன ராஜதந்திரம் எனப்படுவது ஒரு விதத்தில் engage-பண்ணுவது தான். ஆனால் எந்த நோக்கு நிலையிலிருந்து engage- பண்ணுவது என்பதுதான் இங்கு முக்கியமானது. அரசாங்கத்தின் நோக்கு நிலையிலிருந்தா? அல்லது மேற்கு நாடுகளின் நோக்கு நிலையிலிருந்தா? அல்லது தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்தா?

நன்றி: இகுருவி கனடா

5/12/2017 2:45:06 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:

முந்தய பதிவுகள்

ஒலிப்பதிவுகள்
• செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

• ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

• மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

• முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

• புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்