கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக அரசும், அதனுடன் சேர்ந்தியங்கும் குழுக்களும் பல அடாவடித்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அரசால் திணிக்கப்பட்டது. எனினும், இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் தேர்தல் காலத்தில் மக்களையும், வேட்பாளர்களையும் அச்சத்தில் வைத்து தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக அரசும், அதனுடன் சேர்ந்தியங்கும் குழுக்களும் பல அடாவடித்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வேட்பாளர் பலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனக்கும் இந்த அச்சுறுத்தல் நேரடியாகவும், மறைமுகமாகவும் விடுக்கப்பட்டுள்ளது. எனது சகோதரர் அரச அடியாட்களின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்துள்ளார். அதேவேளை, எனது ஆதரவாளர்கள் மற்றும் எனது சக வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இதனூடாக தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கலாம் என்று அரசும், அதனுடன் சேர்ந்தியங்கும் குழுக்களும் பகற்கனவு காணுகின்றனர். ஆனால், எமது மக்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய இலட்சியத்தில் உறுதியாக நிற்கின்றார்கள். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இது நிரூபணமாகும்.- இவ்வாறு கூட்டமைப்பின் வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.