இந்தியாவுடன் சீபா உடன்படிக்கையை செய்து கொள்ள விரும்பவில்லை என இந்திய அதிகாரிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதேவேளை, 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறையில் உள்ள சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் புதிய விடயங்களை இணைத்துக் கொள்வது குறித்து ஆலோசனை செய்யத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
இந்தியாவுடன் சீபா உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கு 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் புதுடில்லிக்கு விஜயம் செய்திருந்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்திருந்திருந்தார்.
ஆனால், இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவுடன் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் எதுவும் பேசவில்லை.
சீபா உடன்படிக்கை தொடர்பில் தவறான கருத்துக்களை இலங்கையிலுள்ள சில வர்த்தகத் தரபபினர் பரப்பி வருவதாக இந்திய வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் கருதுகின்றனர்.
2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான சீபா உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
இது தொடர்பில் 2008ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரை இவ்விரு நாடுகளுக்கும் இடையில் 13 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், இந்த உடன்படிக்கை இதுவரை கைச்சாத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.