கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவைச் சிதைக்கப் பொய்யான தகவல்களைக் கூறி இனவாதத்தைக் கக்கித் திரியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் தக்க பதில் வழங்குவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தேசியம் தமிழ்த் தேசியத்தோடு ஒருபோதும் இணைந்து போக முடியாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்த கூற்றுத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
'சம்மாந்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தமிழ், முஸ்லிம் உறவை உடைக்கும் வகையில் உரையாற்றியுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
அதில் குறிப்பாக அதாவுல்லாவின் கட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டு ஹக்கீமின் காலடியில் வந்து விழுந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்குப் பிச்சை கேட்டு வெற்றி பெற்ற உறுப்பினர் தவம் முஸ்லிம் தேசியம், தமிழ்த் தேசியத்தோடு ஒருபோதும் இணைந்து போக முடியாது என்று கூறியுள்ளார்.
இவரின் இந்தக் கருத்து கட்சி ரீதியானது என்பதல்ல. இது அவரின் தனிப்பட்ட கருத்து. இதை தமிழ், முஸ்லிம் மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள். இவருக்கும், இவருடன் சேர்ந்து தமிழ், முஸ்லிம் உறவைச் சிதைக்க இனவாதத்தைக் கக்கித் திரிவோருக்கும் எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் மக்களே தக்க பதில் வழங்குவார்கள்.
யார் எதைக் கூறினாலும் தமிழ், முஸ்லிம் உறவு ஒருபோதும் சிதையாது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாதிரி நாம் முஸ்லிம் மக்களை நடுத்தெருவில் விடமாட்டோம். முஸ்லிம் மக்களை அரவணைத்தே நாம் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் பங்கெடுப்போம்' என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.