Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சி.வி.கே சிவஞானத்தின் 30 வருடகால முதல்வர் கனவு -  சுடரவன்

சி.வி.கே சிவஞானத்தின் 30 வருடகால முதல்வர் கனவு -  சுடரவன்

 

ஜே.ஆர் குடும்பத்தினருக்கு தான் எப்போதும் வேண்டப்பட்டவர் என்பதை திரு.சி.வி.கே சிவஞானம் மீண்டும் நிரூபித்துள்ளார். 'அரசியலில் குள்ளநரி' என்று வர்ணிக்கப்பட்ட ஜே.ஆரின் மருமகன் தான் என்பதை ரணிலும் நிரூபித்துள்ளார். இதேவேளை ஜே.ஆர், ரணில் ஆகியோரை மட்டுமல்ல சிவஞானத்தின் குள்ளநரித் தனத்தையும் தாங்கள் புரிந்துவைத்துள்ளோம் என்பதை வடபகுதி இளைஞர்களும் பொதுமக்களும் ரணிலுக்கும் சிவஞானத்திற்கும் உணர்த்தி வருகின்றனர்.

ஜே.ஆர் குடும்பத்தினருக்கும் சிவஞானத்திற்கும் உள்ள உறவு ஆழமானது. இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்கள் இதற்குச் சான்றாகும். ஒரு இடைக்கால அரசு வடகிழக்கில் ஏற்படுத்தப்படவிருந்தது. வட-கிழக்கு இணைப்புக்குச் சம்மதித்து ஜே.ஆரும் கையொப்பமிட்டிருந்தார். ஆனால் இந்த இரண்டு விடயங்களையும் அவர் மனமொப்பிச் செய்யவில்லை. வட - கிழக்கு இணைப்பு என்பது ஒரு வருடத்திற்கு மட்டுமே. அதன்பின் கிழக்கில் நடைபெறும் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னரே கிழக்கு வடக்குடன் இணைந்திருக்க முடியும் என்று நரித்தனமாக ஒரு விடயத்தை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் புகுத்திவிட்டார் ஜே.ஆர்.

அரசியலில் நீயெல்லாம் ஒரு கத்துக்குட்டி என்று மறைமுகமாக ராஜீவுக்கு உணர்த்தி வந்தார் ஜே.ஆர். 'உங்களுடைய தாத்தா காலத்தில்... ' என்றொரு சொற்தொடரை ராஜீவுடனான சந்திப்புக்களின்போது ஜே.ஆர் பயன்படுத்துவார். 'உன்னுடைய தாத்தா காலத்திலேயே அவருடன் அரசியல் ரீதியாகத் தொடர்புடையவன் நான். உனது வயதைவிட எனது அரசியல் அனுபவம் கூட. நீயெல்லாம் எனக்கு அரசியல் கற்பிக்க வருகிறாயா?' என்ற அர்த்தம் தொனிக்க மறைமுகமாக அத்தொடரைப் பயன்படுத்துவார். இந்த அர்த்தத்தை உண்மையாக்குவது போலவே ராஜீவும் நடந்துகொண்டார். காஷ்மீர் இந்தியாவுடனா அல்லது பாகிஸ்தானுடனா இணைந்திருப்பது என்பது குறித்து அம்மாநில மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என ஐ.நா தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அப்படியெல்லாம் நடத்த முடியாது, காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கப்படமுடியாத என இன்றுவரை வலியுறுத்தி வருகிறது இந்தியா.

அப்படிப்பட்ட இந்தியாவின் பிரதமர் ஒருவரை கிழக்கு வடக்குடன் இணைந்திருப்பதா இல்லையா என்று வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சம்மதிக்க வைத்து கையொப்பமிடவைப்பது என்பது சாதாரண விடயமா? ஜே.ஆரின் சூழ்ச்சியைப் புரியாமலே இவ்வாறு கையொப்பமிட்டார் அரசியலில் தவழும் குழுந்தையாக இருந்த ராஜீவ். அதனால்தான் அவருடன் இணைந்து கூட்டாக நடத்திய செய்தியாளர் மாநாட்டில் 'கிழக்கில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் வட-கிழக்கு இணைப்பு தொடர்பாக உங்களது நிலைப்பாடு எவ்வாறு இருக்கும்?' என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு 'இணைப்புக்கு எதிராகவே பிரச்சாரம் செய்வேன்' என பதிலளிக்க முடிந்தது ஜே.ஆரினால்.

இடைக்கால நிர்வாகத்தின் தலைமைக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படவேண்டும் என்பது பிரபாகரனது உறுதியான நிலைப்பாடு. வட-கிழக்கு இணைப்பை வலுப்படுத்த இதுவே வழி என்பது அவரது தீர்மானம். வடக்கு மாகாணத்தவரின் தலைமையின் கீழ்தான் எப்போதும் எமது அரசியல் இருக்க வேண்டுமா என பேதங்களை உருவாக்கும் சக்திகளைச் செயலிழக்கச் செய்ய வேண்டுமாயின் சிவில் சேவை அதிகாரியாக (உதவி அரச அதிபர்) இருந்த பத்மநாதன் அவர்களையே இத்தலைமைப் பொறுப்புக்கு நியமிக்க வேண்டுமென்பது அவரது நிலைப்பாடு. இந்த விவகாரங்களைக் கையாண்ட இந்தியத்  தரப்புக்கு பத்மநாதனின் பெயரை மட்டுமே புலிகள் முன்மொழிந்தனர். அதற்கு ஒப்புக்கொண்ட இந்தியத் தரப்பு 'நியமிக்கப்படுபவர் பத்மநாதன்தான், எனினும் புலிகள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளிவந்தால் அரசுக்கு எதிரான சக்திகளின் கை மேலோங்கிவிடும். எனவே ஜே.ஆர் கோருவதைப் போல மேலும் இருவரின் பெயர்களைத் தாருங்கள். இம் மூவரிலிருந்து பத்மநாதனைத் தெரிவுசெய்தது போல நிலமையை உருவாக்குவோம்' என உறுதியளித்தனர். அதன் பிரகாரம் மேலும் இருவரின் பெயர்கள் கொடுக்கப்பட்டன. அதில் ஒருவர் சி.வி.கே சிவஞானம். இவரது பெயரைக் கண்டதும் தனது இலக்கு நிறைவேறப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இவரையே இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக அறிவித்தார் ஜே.ஆர். இந்தியப் பிரதமர் ராஜீவுக்கே தண்ணிகாட்டிய ஜே.ஆருக்கு அதிகாரிகளுக்குக் காட்டுவதா சிரமம்?

ஜே.ஆரின் அறிவிப்பைக் கண்டதும் புலிகள் சீற்றமுற்றனர். இந்தியா தம்மை திட்டமிட்டே ஏமாற்றியதாகக் கருதினர். ஏனெனில் இந்திய அதிகாரிகளான பூரி, குப்தா ஆகியோர் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்னதாக பலாலி வழியாக வந்து பிரபாகரனைச் சந்தித்தனர். 'இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். தயவுசெய்து அவரைச் சந்திக்கவும்' என அழைப்பு விடுத்தனர். இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டது. 'உங்களது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே நாங்கள் உலங்கு வானூர்தியைக் கொண்டு வந்து ஏற்றிச் செல்கிறோம். சந்திப்பு முடிந்ததும் உங்களை பத்திரமாகக் கொண்டுவந்து சேர்க்கிறோம்' என உறுதியளித்தனர். ஒருவாறு பிரபாகரன் சம்மதம் தெரிவித்தவுடன் அடுத்த பந்தை வீசினர். 'நீங்கள் இந்தியப் பிரதமரை சந்திக்க விரும்புவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் ஒரு கடிதம் எழுதித் தாருங்கள்' என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த விடயம் பிரபாகரனுக்கு நெருடலாகவே இருந்தது. ஏதோ ஒரு சதி நடக்கப் போவதாக உணர்ந்தார். எனினும் அயலில் உள்ள ஒரு வல்லரசைப் பகைக்க அவர் விரும்பவில்லை. தான் எதற்கும் விட்டுக் கொடுக்காதவர் என்ற பிம்பம் ஏற்பட்டுவிடும் எனவும் அவர் கருதினார். எனவே அவர்கள் கோரியவாறு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். அடுத்து தனது திட்டங்களை அவரே அவசரமாக வெளியிட்டார். காலையில் ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடைபெற்றது. அதில் 'இந்தியப் பிரதமரின் அழைப்பை ஏற்றே நான் அங்கு செல்கிறேன். இப் போராட்டத்தில் உயிர்நீத்த 650 சடலங்களையும் கடந்தே செல்கிறேன். நான் வரும்வரைக்கும் பிரதி தலைவராக என்னால் நியமிக்கப்பட்டுள்ள மாத்தையா இயக்கத்தை எனது சார்பில் நடத்துவார்.' எனக் கூறி மாத்தையாவை அறிமுகப்படுத்தினார். திருநெல்வேலி குமாரசாமி வீதியிலிருந்த புலிகளின் பணிமனையொன்றில் இப்பத்திரிகையாளர் மாநாடு நடைபெற்றது. இதேவேளை மாத்தையாவிடம் 'நான் எதுவாக இருந்தாலும் நேரில் வந்துதான் சொல்லுவேன். இந்தியாவில் இருந்து நான் எதைச் சொன்னாலும் அதை சீரியசாக எடுக்கத் தேவையில்லை' என்று எச்சரிக்கை உணர்வுடன் கூறிவிட்டுச் சென்றார். சுதுமலையிலிருந்து அவர் உலங்கு வானூர்தி மூலம் இந்தியாவுக்குப் பயணமானார். அன்று மாலை இந்தியத் தொலைக்காட்சி, 'இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை தான் சந்திக்க விரும்புவதாகவும் இதற்கான ஏற்பாட்டைச் செய்து தருமாறும் பிரபாகரன் எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளையடுத்து அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்' என அறிவித்தது.

மிக நேர்த்தியாக திட்டமிட்டே தமது தலைவரைத் தம்;மிடமிருந்து பிரித்துச் சென்றுள்ளனர் என்று புலிகள் ஆத்திரப்பட்டனர். அதற்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் பொதுவாக ஊடகங்களில் வெளிவந்தவையே. அன்று பிரபாகரனிடமிருந்து கடிதம் வாங்கியது போலவே இடைக்கால நிர்வாக சபைக்கு கட்டாயம் பத்மநாதனைத் தலைவராக நியமிப்போம் எனக் கூறி மேலும் இருவரின் பெயரைப் பெற்றுவிட்டு, இப்போது சி.வி.கே சிவஞானத்தின் பெயரை அறிவித்தமை குறித்து ஆத்திரமுற்றனர்.

சி.வி.கே சிவஞானத்தின் 30 வருடகால முதல்வர் கனவு -  சுடரவன்

பிரபாகரன் விடாப்பிடியாக நின்றார் பத்மநாதனையே நியமிக்க வேண்டுமென்று. அதேபோல் ஜே.ஆரும் விடாப்பிடியாக நின்றார் (தனது அன்புக்குரிய) சி.வி.கே சிவஞானம்தான் தலைமை நிர்வாகியென்று. இந்நிலையில் புலிகளின் அறிவுறுத்தலையடுத்து வேண்டா வெறுப்பாக (கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று) ஒரு செய்தியை ஊடகங்களுக்கு நேரில் கொண்டுபோய் கொடுத்தார் சிவஞானம். அதன் சாரம் 'இந்தப்பழம் புளிக்கும்'.

அன்று ஜே.ஆர் இவர்மீது கொண்ட பேரன்பை அவரது மருமகன் ரணிலும் புரிந்துகொண்டார். சமாதான காலத்தில் மீண்டும் யாழ். மாநகர ஆணையாளராக விளங்கினார் சி.வி.கே சிவஞானம். யாழ்.நூலகம் எரிக்கப்படட போதும் இவரே ஆணையாளர். புனரமைக்கப்படட போதும் இவரே ஆணையாளர்.

ரணில் முதல்வரை எதிர்க்கத் துணிந்ததற்கு சி.வி.கே சிவஞானம் எப்போதும் தம்பக்கம் நிற்பார் என்ற நம்பிக்கையும்தான் காரணம். காரணம் இல்லாமல் தோரணம் ஆடாது. இவ்வளவு மக்கள் பலமுள்ள முன்னாள் நீதியரசரான முதல்வரை ஏதோ 'பீயோன்' போல நடத்த முற்பட்டார் சி.வி.கே என்றால் அதற்கு ரணில்தான் காரணம் என்பதை சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை. 1987 இல் கிடைக்காத அந்த தலைமை நாற்காலியில் ஒரு நாளேனும் குந்திவிட வேண்டுமென சசிகலா பாணியில் துடியாய் துடிக்கிறார் சி.வி.கே.

கென்னடி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தடவையும் போட்டியிட்டார். இவருக்கு எதிராக Barry Goldwater என்பவர் களத்தில்  இருந்தார். இக்காலப் பகுதியில் ஒரு விடயம் சம்பந்தமாக கென்னடியைக் சந்திக்கப் போயிருந்தார் இவர். உரையாடல் ஆரம்பித்த சில நிமிடங்களில் ஜனாதிபதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 'மன்னிக்கவும் ஒரு பத்து நிமிடம் பொறுங்கள் தொலைபேசியில் உரையாடிவிட்டு வருகிறேன்.' எனக் கூறிவிட்டு போனார் கென்னடி. எப்படியாவது ஜனாதிபதியின் ஆசனத்தில் ஒரு தடவையாவது உட்காந்து விட வேண்டுமென தவித்துக்கொண்டிருந்த Barry Goldwater இந்தச் சந்தப்பத்தை பயன்படுத்துவோமா விடுவோமா என மனக்குழப்பத்தில் இருந்தார். இறுதியாக ஜனாதிபதி திரும்பி வர பத்து நிமிடம் ஆகும் தானே என்ற நம்பிக்கையில் ஜனாதிபதியின் ஆசனத்தில் உட்கார்ந்தார். இவர் உட்காரவும் கென்னடி வரவும் சரியாக இருந்தது. இவருக்கு எழும்புவதா இருப்பதா என்ற குழப்ப நிலை. புன்னகைத்தபடியே அவரது தோளில் தட்டிய கென்னடி 'பரவாயில்லை... ஆசைக்குக் கொஞ்சநேரம் உட்கார்ந்திருங்கள்' என்றார். அதன் அர்த்தம் இதில் உட்கார ஆசைப்படலாமே தவிர என்றைக்கும் நீ ஜனாதிபதியாக முடியாது என்பதும்தான். முதல்வர் சி.விகேயை தனியாகக் கூப்பிட்டு கென்னடி பாணியில் ஒரு ஐந்து நிமிடம் ஆசைக்கு அந்த ஆசனத்தில் உட்கார வைத்திருந்தால் சிலவேளை இந்தக் குழப்பம் நடந்திருக்காது.

சி.வி கேயை மட்டுமல்ல மாவை, ப.சத்தியலிங்கம் மற்றும் வித்தியாதரன் உட்பட முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட சகலரையும் வரிசையில் நிற்க வைத்தோ டோக்கன் கொடுத்தோ சில நிமிடங்கள் அந்த ஆசனத்தில் உட்கார வைத்திருக்கலாம் போல இருக்கிறது. கனடாவில் இருந்து சென்ற நிதியை முதல்வர் ஏப்பம் விட்டு விட்டார் என்பது போல ஒரு செய்தியை வெளியிட்டார் வித்தியாதரன். இந்தியாவில் தரும அடி என்று ஒரு வழக்கம் இருக்கிறது. யாருக்காவது சிலர் கூட்டாக அடிக்கிறார்கள் என்றால் காரணம் கேட்காமலே இடையில் புகுந்து தாமும் நாலு அடி வைப்பதுதான் இந்த தரும அடி. தன்னை முதல்வராக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்குமாறு சி.வி விக்னேஸ்வரனிடம் வித்தியாதரன் கேட்டிருந்தார். அப்போது அரசியல் பற்றி விக்னேஸ்வரன் சிந்தித்தே இருக்கவில்லை. 'நான் என்ன அரசியல்வாதியா?  என்னிடம் ஏன் வந்து கேட்கிறீர்கள்?' என்று அவர் கேட்டபோது கட்சிக்கும் மக்களுக்கும் அவர் மீது இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார் வித்தியாதரன். இந்த உண்மையை காலைக்கதிர் அறிமுக விழாவில் போட்டுடைத்து விட்டார் முதல்வர். தனது புன்னகைக்கு விக்னேஸ்வரன் மயங்காத ஆத்திரமோ அல்லது இந்தியாவில் நடப்பது போல் தானும் நாலு தரும அடி கொடுக்க நினைத்தாரோ தெரியவில்லை.        

நாவலரின் சிலையையே குப்பை லொறியில் ஏற்றி அனுப்பியவருக்கு முதல்வர் எம்மாத்திரம்? பிரமுக வங்கியில் கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான 13 கோடியைக் கொட்டிவிட்டு பெப்பே என விழிப்பவர்தான் வடக்கை ஆளப்போகிறாராம்.

முதல்வரை வீழ்த்த நடந்த சதியின் முதல் அங்கமாக அவரது வலது கரமாக விளங்கிய ஐங்கரநேசனை உடைக்க வேண்டுமென அஸ்மின், ஆர்னொல்ட், சயந்தன் ஆகியோர் நடத்திய சதிப் பேச்சுவார்த்தை குறித்து கடந்த ஜனவரி 15ம் நாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் அனுப்பிய கடிதம் அம்பலப்படுத்துகிறது. அதில் சுமந்திரனின் பங்குபற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய அமைச்சை உங்களுக்கே தருகிறோம் என லிங்கநாதனுக்கு ஆசை காட்டியமை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி நிரலில் முன்னாள் இராணுத் தளபதி சரத் பொன்சேகா உள்ளடங்கி இருப்பது குறித்தும் பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன.

முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் இட்டு ஆளுநரிடம் வழங்கிய சி.வி.கே தலைமையிலான உறுப்பினர்களை இனிமேலும் தமது சபை சந்திகளுக்கு அழைக்கப்போகிறோமா என உறவினர்களும் நண்பர்களும் சிந்திக்க வேண்டும். குறிப்பாக முதல்வரை அரசியலுக்கு வலிந்து அழைத்த கம்பாவாரிதி இ.ஜெயராஜ் இது பற்றி கவனம் எடுக்க வேண்டும்.  

இந்த உறுப்பினர்களின் சகோதரர்களும், பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் தமக்கு ஏற்பட்டுள்ள வரலாற்றுப் பழியை நீக்க என்ன செய்யவேண்டுமென சிந்திக்க வேண்டும். 

6/26/2017 5:39:28 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்