நாடாளுமன்றத்துக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கமுடியாது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டும், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு இப்போது கலைக்கப்பட்டுவிட்டதாலும் நாளை அந்தத் தெரிவுக்குழுவின் பிரதிநிதிகள் நீதிமன்றில் ஆஜராகமாட்டார்கள் என்று அரசு இன்று அறிவித்துள்ளது.
மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அழைப்பாணை விடுக்கமுடியாது என்று காலஞ்சென்ற முன்னாள் சபாநாயகர் அநுரா பண்டாரநாயக்க வழங்கிய தீர்ப்பை முன்மாதிரியாகக்கொண்டு தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் அண்மையில் அதே தீர்ப்பை வழங்கினார். அதன் அடிப்படையில் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நீதிமன்றில் ஆஜராவதில்லை என்று தீர்மானித்துள்ளது.
அதுமாத்திரமின்றி, தெரிவுக்குழுவின் பணி முடிந்து விசாரணை அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. கலைக்கப்பட்ட தெரிவுக்குழுவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுக்க முடியாது. இதனை அடிப்படையாகக் கொண்டும் நீதிமன்றில் ஆஜராவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் ஆஜராகி நாடாளுமன்றத்தின் கௌரவத்தைக் குறைக்க விரும்பவில்லை. நாடாளுமன்றம் இந்த நாட்டு மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் சபையாகும். அந்தச் சபையே உயர்ந்தது.
நாடாளுமன்றிற்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கமுடியாது என்ற நிலைப்பாட்டில் சபாநாயகர் மட்டுமன்றி எதிர்க்கட்சிகளும் உள்ளன. நாம் ஆஜராகாமல் இருப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையாது.
பிரதம நீதியரசரின் விவகாரம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் எதிரொலிக்கும் என்றும் அது அரசுக்குப் பாதகமாக அமையும் என்றும் சிலர் கூறுகின்றனர். பிரதம நீதியரசரின் விவகாரம் எமது உள்நாட்டுப் பிரச்சினை. இதில் எவரும் தலையிட முடியாது. இது முதல் தடவையாக நாட்டில் இடம்பெறுவது அல்ல. அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பிரதம நீதியரசர்களுக்கு எதிராக இவ்வாறு பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு அமைச்சர் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.