நியூயோர்க்கில் அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டம் இடம்பெறும்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்க சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டிருந்த திட்டம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஐ.நா பொதுச்சபையில் வருடம் தோறும் இடம்பெறும் உலக அரசியல் தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இக்கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வார் என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்பார்த்திருந்தார்.
ஆனால், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமருக்குப் பதிலாக உயர்மட்ட அமைச்சர் ஒருவரே இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவரின் சார்பில் உரையாற்றவுள்ளார். இது சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வுக் கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்வதற்கு இந்தியா, ஸ்பெய்ன் மற்றும் பெனின் ஆகிய நாடுகளை ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பொறுப்பாக நியமித்துள்ளார்.
ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்ட சிறிலங்கா மீதான தீர்மானத்துக்கு இம்மூன்று நாடுகளும் ஆதரவாக வாக்களித்திருந்தன.
அதேவேளை, இம்மூன்று நாடுகளில் ஸ்பெய்ன் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் இலங்கை விவகாரங்களில் அதிக கரிசனை செலுத்துவதில்லை. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்தியாவின் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இதனை முன்னிட்டு இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி அதன் ஆதரவைப் பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதனடிப்படையில் சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமையில் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் சிறிலங்கா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இம்மாதம் 24ஆம் திகதி புதுடில்லிக்கு விஜயம் செய்யவிருந்தனர்.
ஆனால், சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினருடன் இடம்பெறவிருந்த இச்சந்திப்பை இந்தியா காரணம் எதுவும் தெரிவிக்காமல் இடைநிறுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்தே, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார்.
ஆனால் இக்கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளமாட்டார் எனவும், அவருக்குப் பதிலாக உயர்மட்ட அமைச்சர் ஒருவரே அவரின் சார்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுயள்ளது.
இந்தியப் பிரதமரை நியூயோர்க்கில் சந்தித்துப் பேசும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், அவர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் புதுடில்லிக்கு விஜயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தான் விரைவில் புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவிடம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.