நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவராக பணிபுரியும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள லங்கா நியூஸ் வெப் இணையத்தளம், சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இம்மாதம் நாளை முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, மக்கள் போராட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்ற நிலையில், அதனை ஒடுக்குவதற்காகவே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரி என்ற ரீதியிலேயே சிறிலங்;கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இப்பணியை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளார். இதையடுத்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கொழும்பு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், கொழும்பு விடுதி ஒன்றில் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு முறையற்ற முறையில் சகலவிதமான பணிகளையும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் 8ஆம் திகதி அதே பணியை மீண்டும் செய்யவுள்ளார் என லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.