பிரதம நீதியரசருக்கெதிரான குற்றவியல் பிரேரணையை விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் நீதிமன்றில் ஆஜராகவேண்டுமென்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அறிவிப்பை ஏற்றுக்கொள்வதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பியும்) இன்று தீர்மானித்துள்ளன.
நீதிமன்றத்தின் அறிவிப்பை நிராகரித்து இன்று நீதிமன்றில் ஆஜராகாதிருக்க ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் தீர்மானித்துள்ள நிலையில், மேற்படி இரு கட்சிகளும் இந்த முடிவை எடுத்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரித்த தெரிவுக்குழுவில், கூட்டமைப்பின் சார்பில் இடம்பெற்றிருந்தார். தற்போது அவர் இந்தியாவுக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். எனவே, அவரின் சார்பில் சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜராவார். ஜே.வி.பியின் தெரிவுக்குழு உறுப்பினர் விஜித்த ஹேரத் (நாடாளுமன்ற உறுப்பினர்) சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா ஆஜராவார்.
தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சிகளுள் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அறிவிப்பை ஏற்று நீதிமன்றில் ஆஜராகும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாம் ஆஜராகமாட்டோம் எனத் தீர்மானித்துள்ளது. அத்துடன், தமது கட்சியின் மேற்படி தீர்மானம் தொடர்பில் கட்சித் தலைவர் விசேட அறிவிப்பொன்றை விடுப்பார் என்றும் தெரிவித்தது.
இதேவேளை, கொழும்பு அஸாத் ஸாலி நிலையத்தில் நேற்று இடம்பெற்ற 'அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' என்ற அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுத் தீர்மானத்தை அமுலாக்கம் செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி பிரதம நீதியரசர் தரப்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், சபாநாயகர் உள்ளிட்ட தெரிவுக்குழுப் பிரதிநிதிகள் மன்றில் ஆஜராகவேண்டும் என்று அறிவிப்பு விடுத்திருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மேற்படி அறிவிப்பு தவறானது எனக் கூறி பிரதி சபாநாயகர் சமூகத்தைத் தவறாக வழிநடத்துகிறார் என்பதை கடந்த வாரங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது நான் தெளிவுபடுத்தியிருந்தேன்.
இப்போது பிரதி சபாநாயகர் அமைதியாக இருக்கிறார். ஆனால், ஆளுந்தரப்பிலுள்ள சட்டத்தரணிகளான அமைச்சர்கள் சிலர் இது தொடர்பில் பொய்யான தகவல்களை மக்களுக்குக் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்துக்குக் கிடையாது என்ற சபாநாயகரின் அறிவிப்பை எடுத்துக்காட்டி, தெரிவுக்குழு உறுப்பினர்கள் நீதிமன்றம் செல்வது சட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது என ஆளுந்தரப்பு அமைச்சர்கள் தவறான கருத்தைக் கூறுகிறார்கள்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அறிவிப்பை ஏற்றுக்கொள்வதும், ஏற்காமல் விடுவதும் அவரவரின் விருப்பம். அது சுதந்திரமானது. ஆனால், சபாநாயகரின் அறிவிப்பின் காரணமாக நீதிமன்றில் ஆஜராகமாட்டோம் என்று தெரிவுக்குழுவின் ஆளுந்தரப்புப் பிரதிநிதிகள் கூறுவது தவறானதாகும்.
அரசமைப்புக்கு வியாக்கியானம் கொடுக்கும் உரிமை உயர்நீதிமன்றத்துக்கு இருக்கிறது. அதனடிப்படையில் தனது கடமையை உயர்நீதிமன்றம் செய்துள்ளது. இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளை (வியாழக்கிழமை) தெரியவரும். அதன்படி அனைவரும் செயற்படவேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தை வியாக்கியானம் செய்யும் பொறுப்பு உயர் நீதிமன்றத்துக்குண்டு. அதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சபையில் அறிவித்திருக்கிறார். எனவே, இதன்படி நாம் செயற்படவேண்டும் என்று தெரிவித்தார் சுமந்திரன்.