'70 ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது தமிழ் மக்களினுடைய அரசியல் அடையளத்தை இழக்கச் செய்து, சமூக பொருளாதாரக் கட்டமைப்பினை பலவீனப்படுத்தி அழிக்கின்ற, 'பெருந்தேசியவாதத்தின் மேலாண்மையினை விரிவாக்குதல்' என்ற மூலோபாயத்தினை அடிப்படையாகக் கொண்டது.
எனவே தமிழர் தாயகத்திற்கான அரசியல் பொருளாதாரம் (Political economy of Tamils homeland) மூலோபாய அடிப்படையில் கட்டியமைக்கப்படுவது அவசியமானதாகும்' என கடந்த ஞாயிற்றுக்கிழமை நோர்வேயில் நடைபெற்ற கருத்துப்பட்டறையில் வலியுறுத்தப்;பட்டுள்ளது.
'புலம்பெயர் சமூகமும் தாயக மக்கள் மேம்பாடும்: வாய்ப்புகளும் சவால்களும்' எனும் தலைப்பில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற கருத்துப்பட்டறையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. நோர்வேயின் மேம்பாட்டு நிதிய (Development Fund) மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்துப்பட்டiறியனை நோர்வே தமிழர் கற்கை மையம் ஏற்பாடு செய்திருந்தது.
சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனையாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல்வாதிகள், அரசாங்க இயந்திரம், இராணுவம், பௌத்தமதபீடங்கள் ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் இலங்கைத் தீவின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழர் தாயகத்தின் அரசியற் பொருளாதாரத்தை அழிக்கும் பெருந்தேசியவாதத்தின் நிகழ்ச்சித் திட்டத்தினை எதிர்கொள்வதற்கான மூலோபாயம் தமிழர் தரப்பிடம் கடந்தகாலத்தில் இருக்கவில்லை. தமிழ் மக்களின் பொருண்மிய முனைப்புகளும் மூலோபாயத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படவுமில்லை
போருக்குப் பிந்திய சூழ்நிலையில் தமிழர்களின் பெரும்பாலான முயற்சிகள் மனிதநேயத்தினை மையப்படுத்திய, உடனடித்தேவைகளை முதன்மைப்படுத்திய வறுமை மற்றும் பட்டினித் தவிர்ப்பினை முதன்மை இலக்குகளாய் கொண்டிருந்திருக்கின்றன.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்குரிய தனித்துவமான, மூலோபாய அடிப்படையிலான அரசியல் பொருளாதாரம் கட்டியமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். புலம்பெயர் சமூகத்தினது மேம்பாட்டுத் திட்டங்களும், செயல் முன்னெடுப்புகளும் தாயக மக்களுக்கு மிகதிக அவசியமாக உள்ளது.
புலம்பெயர்மக்களின் முயற்சிகள் உதிரி உதவிகளாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில், நீண்டகால அடிப்படையில் தாயக மக்கள் சமூக ரீதியாக வலுவான பொருளாதாரக் கட்டமைப்பினைக் கொண்டிருப்பதற்குரிய வகையில் நுண்ணிய திட்டமிடலுடன் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற கருத்து கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டது.
புலம்பெயர் சமூகமும் மேம்பாடும் தொடர்பான கோட்பாட்டுக் கருத்துக்களை உள்ளடக்கிய ஆய்வுரையினை கலாநிதி தர்மா சர்வேந்திரா அவர்கள் வழங்கினார். புலம்பெயர்வு – புலப்பெயர்வு குறித்தும் புலம்பெயர் சமூகங்கள் புலத்தில் சிறுபான்மையினனராக, டயஸ்பொறாவாக (Diaspora) நாடு கடந்த சமூகங்களாக (Transnational Communities விளிக்கப்படும் வௌ;வேறு நிலைப்பாடுகள் குறித்த கோட்பாட்டு அடிப்;படைகள் குறித்து சுருக்கமாகக் குறிப்பிட்டார். புலம்பெயர் சமூகங்கள் தத்தமது தாயகங்களை நோக்கி முன்னெடுக்கும் மேம்பாட்டுச் செயற்பாடுகளுக்காக வௌ;வேறுவகை வளங்கள் அவர்களிடையே அமைந்துள்ளதாக ஆய்வுகள் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட வள ஆளணியினரில் ஒருவராக கலந்து கொண்ட சர்வேந்திரா, அவை தாயகச் சூழலில் எவ்வாறான நேர்மறையானதும் எதிர்மறையானதுமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்பது பற்றிய கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.
புலம்பெயர் சமூகங்களால் அவர்தம் தாயகங்களில் முன்னெடுக்கப்படுகின்ற மேம்பாட்டுத்திட்டங்கள் அவர்கள் வாழும் நாடுகளின் அரசுகள் மற்றும் அரசு சாரா உதவி நிறுவனங்களால் ஒப்பீட்டளவில் சாதகமாக நோக்கப்படுகின்ற, ஊக்குவிக்கப்படுகின்ற புறநிலை நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சில புலம்பெயர் சமூகங்கள் தமது தாய்நாட்டு அரசுகளுடன் உறவுகளைக் கூடுதலாகக் கொண்ட அரசுடன் இணைக்கபட்ட டயஸ்பொறாக்களாகவும் (State linked Diaspora) வேறு சில புலம் பெயர் சமூகங்கள் அரசற்ற டயஸ்பொறக்களாகவும் (Stateless Diaspora) இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஈழத்தமிழர் டயஸ்பொறா போன்ற அரசற்ற டயஸ்பொறாக்கள் தாயக மக்களின் மேம்பாட்டுக்கு உதவுவது கூடுதல் சவால் மிக்கதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தங்கியிருந்து முன்னாள் போராளிகளின் நிலைமைகளை நேரடியாக அறிந்து திரும்பியுள்ள திரு.சஞ்சயன் செல்வமாணிக்கம் முன்னாள் போராளிக் குடும்பங்களுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். உணர்வாளர்களின் உதவியுடன் சில குடும்பங்களுக்கு சிறு கைத்தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தமை பற்றியும் குறிப்பிட்ட அவர், எவ்வாறான வழிவகைகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்ற கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.
தமிழர் தாயகத்தின் சமகால நிலைமைகள், கொடிய போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளீட்டல் ஆகியவற்றின் அவசியம் குறித்த கருத்துகள் பங்கேற்பாளர்களினால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
பாரிய மனித அவலங்களுடன் போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழர் தாயகப்பகுதிகளில் இன்னமும் இயல்புநிலை தோற்றுவிக்கப்படவில்லை. போரினால் மிக மோசமான பாதிப்புகளுக்குள்ளான மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வாழ்வாதாராம் மற்றும் மக்கள் மேம்பாடு என்பன தொடர்ச்சியாக கேள்விக்குரியவையாகவே உள்ளன. தமிழர் தாயகத்தின் சமகால நிலைமைகள், குறிப்பாக மக்களுக்குரிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தல், பொருளாதார வாழ்நிலையை மேம்படுத்துதல், மக்கள்மயப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்தல் சார்ந்து புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்குள்ள தெரிவுகள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பாக பரந்துபட்டதும் ஆழமானதுமான கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்வதோடு, செயற்பாடுகளை முன்னெடுக்க உகந்த வழிவகைகளை ஆய்ந்தறிய வேண்டிய அவசியத்தின் புறநிலையில் நோர்வே தமிழர் கற்கை மையம் இதற்கான கருத்துப்பட்டறையினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கருத்தரங்கினை வள ஆளணியினருள் ஒருவராக கலந்து கொண்ட சிரான் அமைப்பின் முன்னாள் பணிப்பாளர் ம.செல்வின் நெறிப்படுத்தினார்.