Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அடுத்தநாள் கட்டுநாயக்காவில் நின்றோம்

அடுத்தநாள் கட்டுநாயக்காவில் நின்றோம்
மூனா

 

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - பகுதி 3

மண்டையோட்டுப் படம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றியது.

மண்டையோடு மட்டுமல்ல அதிகாரிகளும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

'எங்களின் கொம்பியூட்டர்களில் இவை தெரிந்தன. இவைகளை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி இல்லை'

பண்பாகப் பேசினார்கள்.

அது எனக்குப் போதுமானதாக இருந்தது. எனது பயணத்தின் நோக்கத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தேன். கூடவரும் கொல்கரின் பெயரையும் இழுத்து விட்டேன்.

'நல்ல நோக்கத்திற்கான பயணம். ஆனாலும் இப்படியான பொருட்களைக் கொண்டு செல்வதானால் அதற்காக பிரத்தியேகமான படிவங்களை பூர்த்தி செய்து அனுமதியை நீங்கள் பெற்றிருக்க வேண்டும்'

பிரச்சினை எனக்குப் புரிந்தது. ஆனால் பொதிக்குள் என்ன என்ன இருக்கிறது என்பதை அவர்கள் சொல்லவில்லையே.

'செயற்கைக் கால்களைச் செய்வதற்கான சில இரசாயனப் பொருட்களும் இதுக்குள்ளை இருக்கு. எல்லாத்தையும் அங்கை கொண்டு போய்ச் சேர்க்கிறது எங்கடை பொறுப்பு என்ற பேச்சோடைதான் ஒத்தப்பேடியோடை ஒப்பந்தம் செய்து இருக்கிறம். நீங்கள்தான் கொண்டு போகவேணும். இவை எல்லாம் உங்கடை பொறுப்பு' ஆனந்தண்ணை சொன்னது காதில் கேட்டுக் கொண்டிருந்தது.

முடிந்தளவு வாதாடிக் கொண்டிருந்தேன். அவர்கள் இறங்கி வரவில்லை.

'இப்படியான பொருட்களை பொதிக்குள் வைத்திருந்ததற்காக பேசாமல் உங்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கையளித்துவிட்டு, நாங்கள் எங்களது அடுத்த  வேலையைப் பார்க்கலாம். ஆனாலும் ஒரு புனர்வாழ்வுப் பணிக்காக போகும் உங்களுக்குப் பிரச்சினைகள் தர நாங்கள் விரும்பவில்லை. உங்களை நாங்கள் நம்புகிறோம். வேண்டுமானால் அந்த இரண்டு பொருட்களையும் எடுத்து வைத்துவிட்டு உங்கள் பயணத்தை தொடருங்கள்'

அந்த இரண்டு பொருட்களும் இல்லாமல் பயணம் செய்வதில் அர்த்தம் இல்லை. வன்னியில் அவற்றைப் பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனந்தண்ணைக்குத் தகவல் தருவதற்கும் முடியவில்லை. எண்ண அலைகள் எனக்குள் எழுந்து, என்னை அங்கே இங்கே என்று இழுத்துக் கொண்டிருந்தன.

விமானத்தில் இருந்து என் பெயர் சொல்லி இறுதி அறிவிப்பு வந்தது. அங்கே அவர்கள் கதவைப் பூட்டப் போகிறார்கள்.

எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் எனது மனைவியும், கொல்கரும் விமானத்துக்குள் இருந்து தவித்துக் கொண்டிருப்பார்கள்.

'இங்கிருந்து தொலைபேசி எடுக்கலாமா?'

யாருடன் கதைக்க வேண்டும்?

எங்களது கழகத்தின் தலைமையுடன்.

சற்று தாமதித்தார்கள்.

இலக்கத்தைச் சொல்லுங்கள்.

சொன்னேன். நல்லவேளை அலுவலகத்தில் வூப்பெற்றால் நகரத் தொண்டர் இருந்தார்.

அவருக்கு நிலமையைச் சொல்லி அந்த இரண்டு தகர டப்பாக்களையும் பொறுப்பேற்று எனக்கு வன்னிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி சொன்னேன். அவரது பெயர் மற்றைய விபரங்களை அலுவலகருக்கு எழுதிக் கொடுத்தேன். அவர்களுக்கு அது திருப்தியாகப் பட்டது.

'உங்களுக்கு நேரமாகி விட்டது. இங்கிருந்து ஓடிப் போனால் மட்டுமே விமானத்தில் ஏற வாய்ப்பு இருக்கிறது. முயற்சி செய்யுங்கள்' அலுவலகர் சொன்ன பொழுது பகீர் என்றது. அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.

கடைசி செக்கன் என்பார்களே அதை அன்றுதான் உணர்ந்தேன். திட்டாத குறையாக உள்ளே போக அனுமதித்தார்கள்.

விமானத்தின் உள்ளே போய் இருக்கையில் அமரும் பொழுது, மனைவியிடம் இருந்தும் கொல்கரிடமும் இருந்து ஒரே கேள்வி வந்தது. மொழிகள் மட்டும் இரண்டாக இருந்தது.

'என்ன பிரச்சினை?'

'இரண்டு மருந்தை விடமாட்டார்களாம்' ஒரு மொழியில் சொன்னேன்.

'நாங்கள் அப்பவே சொன்னனாங்கள். தாங்கள் எல்லாம் செய்யிறம் எண்டு சொல்லிச்சினம். அந்த மருந்து இல்லாமல் போறதிலை பிரயோசனம் இல்லை' கொல்கர் தலையில் அடித்துக் கொண்டான்.

'இறங்கிப் போய் திரும்ப எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வருறதுக்கு இனி வாய்ப்பில்லை. அங்கை போயிட்டு, ஏதாவது வழி இருக்கிறதா எனப் பார்பபோம். பிளேன் இப்ப ரன்வேயில் ஓடிக்கொண்டு இருக்குது'

கொல்கர் சமாதானம் ஆகவில்லை என்பது தெரிந்தது.

எல்லாம் சரியாக நடக்கும் என்று என் மனம் சொன்னது.

அடுத்தநாள் இலங்கையில் கட்டுநாயக்காவில் நின்றோம். பெரிய பெரிய பொதிகளை தள்ளு வண்டிகளில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தோம்.

நாங்கள் வைத்திருந்த பெரிய பொதிகளை அதிகாரிகள் அதிசயமாகப் பார்த்தார்கள். எங்கள் மூவரையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

சமரசங்களும், சாமர்த்தியங்களும் சேர்ந்து உதவியதால், பொதிகளைப் பிரிக்காமலே எங்களைப் போக அனுமதித்தார்கள்.

வாசலில் எனது அண்ணன் எங்களுக்காகக் காத்து நின்றார். அவர் கொழும்பில் ஒரு சட்டத்தரணியாக இருப்பதால், அவரையே விமானநிலையத்துக்கு வரும்படி கேட்டிருந்தேன். ஏதாவது சிக்கல்கள் இருந்தால் வக்கீல் ஒருவர் தேவை என்ற முன் ஏற்பாடுடனேயே அந்த ஒழுங்கைச் செய்திருந்தேன்.

இருபது வருடங்களுக்கு முன்னர் பார்த்த அதே தோற்றம். மாற்றங்கள் பெரிதாகத் தெரியவில்லை. சகோதரப் பாசங்களைக் காட்டிவிட்டு கொல்கரை அண்ணனுக்கு அறிமுகப் படுத்தினேன்.

நாங்கள் மூவரும் தங்குவதற்கு ஒரு வீட்டை வெள்ளவத்தையில் ஒழுங்கு செய்திருந்தார்.

கொழும்பு நோக்கி வாகனத்தில் பயணம் செய்யும் பொழுதே அண்ணன் கேட்டார்,

'வன்னிக்குப் போறதுக்கு டிபென்ஸ் மினிஸ்ரியிடம் இருந்து பாஸ் எடுக்கோணும். யேர்மனியில் இருந்து வெளிக்கிடக்கை அப்பிளை பண்ணிப் போட்டே வந்தனீ?'

'இல்லை இங்கை உடனேயே எடுக்கலாம் எண்டு சொல்லிச்சினம்'

'நான் நினைக்கேலை குறைஞ்சது ஒரு கிழமையாவது வேணும். சில நேரங்களிலை ஒரு மாதமும் செல்லலாம்'

இருப்பதோ நான்கு கிழமைகள்தான். ஒருநாள் என்றால் ஓகே. ஆனால் அனுமதி கிடைக்க ஒரு கிழமையானால்? 

'உங்களைச் சந்திக்கிறதுக்கு ரி.ஆர்.ஓவில் இருந்து ஒருவர் கொழும்புக்கு வருவார். பாஸ் எடுக்கிறதிலை இருந்து உங்களை வன்னிக்குக் கூட்டிக் கொண்டு போற வேலை எல்லாம் அவர் பார்ப்பார்' ஆனந்தண்ணை சொன்னது நினைவில் வந்தது. அதை அண்ணனிடம் ஒப்புவித்தேன்.

'உங்கள் இரண்டு பேரிட்டையும் ஐடென்ரிக் கார்ட் இருந்தால் உங்களுக்குப் பாஸ் எடுக்கத் தேவை இல்லை. கொல்கருக்கு மட்டும் எடுத்தால் போதும்' அண்ணன் சொன்ன பொழுது மனைவியைப் பார்த்தேன். ஐடென்ரிக் கார்ட் இருப்பதாகச் சொன்னார்..

தொடரும்…

2/21/2015 12:30:32 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்