Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ் அரசியலில் ஒரு முக்கிய ஆண்டாக 2013 இருக்கும்

தமிழ் அரசியலில் ஒரு முக்கிய ஆண்டாக 2013 இருக்கும்
சந்திப்பு: ரூபன் சிவராஜா

 

நோர்வே கற்கை மையத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட 'தமிழர் தேசியப் பிரச்சினையைக் கையாளல்' தொடர்பான கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காக ஒஸ்லோ வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சுமந்திரன் அவர்களை பொங்குதமிழுக்காக சந்தித்து உரையாடினோம்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் சிறிலங்கா நாடாளுமன்றத்திலே நிகழ்த்திய சர்ச்சைக்குரிய உரையின் தாக்கம் அடங்குதவற்கு முன்னர் இடம்பெற்ற இச்சந்திப்பில் சம்பந்தன் அவர்களின் உரைகுறித்தும் தற்போதைய அரசியல் நிலைகுறித்தும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் சுமந்திரன் அவர்களுடன் விரிவாகப் பேசியதிலிருந்து...

***

நோர்வே கற்கை மையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வின் முக்கியத்துவம் என்ன?

நோர்வேயில் இரு நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இன்றைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புகள் சம்பந்தமாகவும் பலவிதமான ஐயப்பாடுகள், கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. இன்றைய சூழலிலே, விசேடமாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு சம்பந்தமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் அங்கே வாழ்கின்ற மக்களுக்கும் உடந்தையாக என்ன விதமான செயற்பாடுகளில் ஈடுபடலாம் என்பதைக் குறித்து ஆக்கபூர்வமான பல கருத்துக்களை நாங்கள் பரிமாறக்கூடியதாக இருந்தது.

அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை குறித்து காரசாரமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. விடுதலைப் புலிகள் அரசியல் அரங்கில் இல்லாத ஒரு புறநிலையில் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திப் பேசவேண்டிய அவசியம் என்ன? இது யாரைத் திருப்திப்படுத்துவதற்கான முனைப்பு?

சம்பந்தன் ஐயாவின் பேச்சிலே விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று அவர் வர்ணிக்கவில்லை. ஒருபோதும் அந்த வர்ணிப்பை அவர் செய்யவில்லை. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டதற்கான காரணங்கள் என்ன என்பதை அவர் விபரித்துக் கூறியிருந்தார்.

நாங்கள் பாராளுமன்றத்திலே உரையாற்றுகின்ற வேளைகளில் தொடர்ச்சியாக எங்களை புலிகள் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருப்பார்கள். 'புலிகள் தோற்றவர்கள், நீங்கள் இங்கு வந்து என்ன பேசுகிறீர்கள்' என்ற தோரணையிலே எங்களோடு உரையாடுவார்கள். இந்தப் பின்னணியிலே விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று ஏன் பலராலும் முத்திரை குத்தப்பட்டார்கள். பலநாடுகளில் பயங்கரவாதிகள் நிரலிலே ஏன் சேர்க்கப்பட்டார்கள் என்று விபரித்துக் கூறியிருந்தாரே தவிர, தன்னுடைய கருத்திலே அவர்கள் பயங்கரவாதிகள் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை.

தமிழ் அரசியலில் ஒரு முக்கிய ஆண்டாக 2013 இருக்கும்

நீங்கள் தர்க்கரீதியாக சொல்லாடல்களை நியாயப்படுத்துகின்றபோதும், அந்த உரை வெளியில் மக்களால் புரிந்துகொள்ளப்பட்ட அடிப்படையில் அது மக்களுடைய உணர்வுகளை காயப்படுத்துவதான ஒரு பார்வை இருக்கிறது. உங்களை புலிகளோடு இணைத்து பேசப்படும் ஒரு சூழலிலே, அதிலிருந்து வெளிவருவதற்கான ஒரு முனைப்பாக இதனைக் கருதலாமா?

அப்படியல்ல. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடைய விடுதலைக்காக முழு அர்ப்பணத்தோடு செயற்பட்டவர்கள் என்பதிலே எந்தவிதமான ஐயப்பாடும் கிடையாது. அந்த நிலைப்பாட்டில் நாங்கள் வேறுபட்டதும் இல்லை. ஆனால் அவர்களுடைய நடவடிக்கைகள் பலவற்றிலே அவர்கள் இப்படியாக பயங்கரவாதிகள் என்று வர்ணிப்பதற்கு ஏதுவான செயற்பாடுகள் இருந்தன. விசேடமாக பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்கிய சில சம்பவங்கள், வணக்க தலங்களை தாக்கிய சம்பவங்கள் போன்றன அவர்களைப் பயங்கரவாதிகள் என்ற துரதிஷ்டமான வர்ணிப்புக்கு உள்ளாக்கியது என்பது உண்மையான விடயம்.

இதை சொல்லுகிறபோது, அது எங்களையே நாங்கள் உள்நோக்கிப் பார்த்து, நாங்களும் தவறுகள் இழைத்திருக்கக் கூடும். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய மனப்பக்குவம் எங்களுக்கு இருக்க வேண்டும். எவருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பதல்ல எமது நோக்கம். எங்களையே நாங்கள் திருத்திக் கொள்ளவும் இனி வருகிற காலங்களிலே நாங்கள் பாடங்களைக் கற்றுக்கொள்கிற ஒரு சந்தர்ப்பமாகக்கூட அது இருக்கும்.

ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து 4 ஆண்டுகள் நெருங்கிவிட்டன. சிறிலங்கா அரசு தரப்பில் இனப்பிரச்சனை தொடர்பாக எந்தவிதமான நல்லெண்ண முயற்சிகளும் இடம்பெறவில்லை. சர்வதேச அரங்கில் அரசின் இந்த கடும்போக்கை அம்பலப்படுத்தாது மீண்டும் மீண்டும் விடுதலைப் புலிகளையே குற்றம்சாட்டுவது அரசின் நிலைப்பாட்டை மறைமுகமாக பலப்படுத்துவதாக அமையாதா?

நாங்கள் கடந்த மூன்றரை வருடங்களாக அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் எங்கும் தவறிழைக்கவில்லை, மாறாக சிறிலங்கா அரசாங்கம்தான் இதிலே தவறிழைத்திருக்கிறது எனவும் ஒரு தீர்வைக் காண்பதில் அவர்கள் பின்நிற்கிறார்கள் என்ற தீர்மானத்திற்கும் சகலரும் வந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் நாங்கள் உண்மையோடு இதிலே ஈடுபட்டமைதான்

விடுதலைப் புலிகளின் காலத்திலே ஒரு குறித்த நோக்கோடு அவர்கள் செயற்பட்டு, மக்களுடைய விடுதலைக்காக அவர்கள் இயங்கினார்கள் என்பது உண்மை. ஆனால் அது கைகூடவில்லை. ஆயுதப் போராட்டம் தோல்வியிலே முடிவடைந்த பிறகு, 'ஆயுதப் போராட்டத்திலே நாங்கள் வெற்றிபெற்று விட்டோம் - எனவே எந்தவிதமான அரசியல் தீர்வையும் கொடுக்க வேண்டியதில்லை' என இலங்கை அரசாங்கம் நினைக்கிறது. அரசியல் பிரச்சனை என்பது ஆயுதப்போராட்டம் ஆரம்பமாவதற்கு 30 வருடங்களுக்கு முன்னரே உருவான ஒன்று. அது எங்களுடைய மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கை. அது அவர்களின் உரிமை. அதனை எப்படியாவது பெற்றே தீரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கிறோம்.

ஆயுதப் போராட்டத்தை நல்லது என்றோ கூடாது என்றோ வர்ணிக்கிற வலைக்குள் சிக்க விரும்பாமல் மக்களுடைய நியாயமான அரசியல் அபிலாசையை எடுத்துச் சொல்கிற கருமத்தில் நாம் ஈடுபட்டிருக்கிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருவகையில் இணக்க அரசியலை முன்னெடுப்பதான ஓர் அவதானம் இருக்கிறது. நீங்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட ஒவ்வொரு முறையும், இனப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் போன்ற சமிக்ஞையை வெளிப்படுத்தி வருகிறீர்கள். இந்தியாவின் அனுசரணையுடன் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள். இந்த முயற்சி எந்தளவிற்கு பயன்தருவதாக கருதுகிறீர்கள்?

இனப்பிரச்சனை தீர்வுக்கு இனி ஆயுதப் போராட்டமொன்றின் ஊடாக நாம் முனையக்கூடாது என்பது எனது தனிப்பட்ட எண்ணம். எமது கோரிக்கை நீதியானது, நியாயமானது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலே எங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒன்று. எனவே அதனைப் பெறுவதற்கு இராஜதந்திர வழிகளில் நாம் செயற்படவேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே இது கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

இலங்கை அரசோடு நேரடியாகப் பேசுகின்ற முயற்சி பலன் தராவிட்டாலும், நாம் சரியான முறையிலே செயற்பட்டு அதற்கான பிரதிபலன் இல்லாமற் போகின்ற வேளையிலே, சர்வதேச சமூகத்தின் அனுசரணையோடு அடுத்த கட்டத்திற்கு நாம் நகர்வதற்கு அது உதவியாக இருக்கும். எங்களால் இயன்ற எல்லாவற்றையும் நாம் செய்யாத நிலையிலே அப்படியான ஒரு சூழ்நிலைக்குள் செல்வது கஷ்டமானதாக இருக்கும்.

இணக்க அரசியல் என்பது பலர் அங்கே ஈடுபட்டிருக்கின்ற ஒன்று. நாம் இணக்க அரசியலில் ஈடுபடவில்லை என்பது என்னுடைய கருத்து. எங்களை இலங்கை அரசாங்கத்தின் நோக்கிலேயும் இலங்கையிலே வாழ்கின்ற பெரும்பான்மை சமூகத்தின் நோக்கிலேயும் நாம் தொடர்ச்சியாக எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது அவர்களது குற்றச்சாட்டு. எனவே எந்தக் கோணத்தில் இருந்து இதனைப் பாhக்கிறோம் என்பதுதான் கேள்வியே தவிர, நாம் ஒரு இணக்கமாக முறையிலே சென்று எம் மக்களுடைய உரிமைகள் மழுங்கடிக்கப்படக்கூடிய நிலையிலே செயற்படவில்லை.

பேச்சுவார்த்தைகளில் தொடர் தோல்விகள் ஏற்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக தீர்வு மறுக்கப்பட்டு வருகின்ற புறநிலையில் எதிர்காலத்தில் ஒரு காத்திரமான அரசியல் தீர்வை அடைவதற்கான மாற்றுத் திட்டம் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?

பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக பயன்தராத நிலையிலே, சர்வதேச சமூகத்துடன் கடந்த ஒரு வருடமாக நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் எல்லாவற்றிலும் அவர்கள் கேட்பது 'இனி நாம் என்ன செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்' என்று. அதற்கான சில உத்திகளை சில சிந்தனைகளை நாம் அவர்களோடு பகிர்ந்திருக்கிறோம். அவர்கள் இவ்வாறு எம்மிடம் கேட்பதற்குக் காரணமே நாம் இந்த வியடத்தில் உண்மையோடு ஈடுபட்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே அதன் வழியிலே நாம் எதிர்காலத்திலும் செயற்படமுடியும் என்பது எனது நம்பிக்கை.

நாட்டிலே பேச்சுவார்த்தை ஒன்றின் மூலமாக தீர்வொன்று வராமலிருக்கிற சூழலிலே வன்முறை அற்ற அகிம்சை வழியிலே போராட்டங்களை மேற்கொள்ளவும் அரசோடு ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை ஆரம்பிப்பதற்கும் நாம் இப்போது முன்னெடுப்புகளை செய்துகொண்டு வருகிறோம். அதற்கான அனுசரணையையும் சர்வதேச சமூகத்திடமிருந்து நாம் பெற்றுக்கொண்டும் இருக்கிறோம். அப்படியான ஒரு முன்னெடுப்பை நாம் செய்கிறபோது தனியாக அதனைச் செய்யாது அனைத்துலக சமூகமும் அதற்கு ஆதரவாக செயற்படவேண்டிய ஒரு சூழ்நிலை இருப்பதன் காரணமாக, இலங்கை அரசு மறுத்துவரும் உரிமைகளை நாம் பெறுவதற்கு வேறு வழியில்லை. இனி வீதியில் இறங்கிப் போராடவேண்டும். எங்கள் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறையற்ற சாத்வீக வழியிலான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, புதுவருடத்தில் அதனை ஆரம்பிப்பதற்கான திட்டங்களை நாம் செய்து வருகிறோம்.

ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். கடந்த மாவீரர் நாளிலிருந்து யாழ்ப்பாணத்தில் கைது நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் கூட்டமைப்பும் சில போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. இந்த மாணவர் கைதுகளுக்கு எதிராக சிங்கள மாணவர்கள்கூட போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இந்த வகையில் இதனை விரிவுபடுத்தி ஜனநாயக ரீதியான போராட்டத்தை மேற்கொள்வதற்கான திட்டமெதுவும் உள்ளதா?

ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டத்திலே இலங்கையில் வாழ்கின்ற சிங்கள சமூகத்தினரும் சேர்ந்து ஈடுபடவேண்டும் என்பது எங்களது விருப்பம். அதற்கான பல ஆயத்தங்களை நாம் செய்திருந்தோம். சில இடங்களில் நாம் சிறு சிறு போராட்டங்களை நடத்தியும் இருக்கிறோம். அவற்றில் சிங்களத் தலைவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போதும் பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தமான விடயத்திலே சிங்கள மாணவர்கள் தமது பல்கலைக்கழகங்களில் சில போராட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள். இது நல்ல அறிகுறி. இதனால்தான் நாம் இப்படியான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு காலதாமதமும் ஏற்பட்டிருந்தது. தற்போது அதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் சூழ்நிலையை சரியாக அவதானித்து எங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் வழங்குவதற்கு சிங்கள மக்களும் வெளியுலகத்திலே வாழ்கின்ற மக்களும் தயாராக இருக்கிறார்கள் என்ற நிலைக்கு வருகிறபோது நாம் இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்போம்.

கூட்டமைப்பை பொறுத்தவரை அது ஒரு அரசியல் கட்சியல்ல. பல கட்சிகளின் ஒரு கூட்டமைப்பான இயங்கி வருகிற நிலையில் கூட்டமைப்பிலிருந்து பல குரல்கள் வெளிவருகின்றன. இது கட்சிக்குள் உள்முரண்பாடு இருப்பதான ஒரு தோற்றப்பாட்டை வெளிப்படுத்துகிறதே?

கூட்டமைப்பு பல கட்சிகளின் ஒரு கூட்டமைப்பாகவே இன்றைக்கும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு பரந்த குறிக்கோளை அடிப்படையாக வைத்து ஒன்றாக செயற்படுகிறோமே தவிர ஒவ்வொன்றும் வித்தியாசமான அரசியல் கட்சிகளாகவே இருந்துகொண்டிருக்கின்றன. அதனால்தான் கூட்டமைப்பிலிருந்து வித்தியாசமான குரல்கள் வெளிவருவதை மக்கள் காணக்கூடியதாக இருக்கிறது.

இது ஒரு ஜனநாயக அமைப்பிலே இருக்கவேண்டிய ஒன்று. ஒரே கட்சியாக இருந்தாலும்கூட உட்கட்சி ஜனநாயகம் என்ற ரீதியிலே பலருக்கும் பேச்சுச் சுதந்திரமும் பலருக்கும் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமையும் இருக்கத்தான் செய்யும். ஆனபடியால் ஒரு கூட்டமைப்பாக வெவ்வேறு அரசியல் கட்சிகள் சேர்ந்து இயங்குகிறபோது இது தவிர்க்க முடியாத ஒரு காரணியாக இருக்கிறது.

நாங்கள் இன்றைய சூசுலிலே தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் ஒரு அமைப்பாக இயங்குகிறோம். அதிலே எங்களுக்கு ஒரு வகிபாகம் இருக்கிறது என்ற உணர்வு எங்களுக்கு இருக்கின்ற காரணத்தினால்தான் பத்து வருடங்களுக்கு மேலாக பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றாக செயற்படக்கூடியதாக இருப்பதற்கான காரணமாகும். அந்த முக்கியமான பங்கு எங்கள் தலையிலே சுமத்தப்பட்டிருக்கிறது என்ற உணர்வே இதற்குக் காணரமாகும்.

2013 ஜனவரியில் கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதன் பின்னணி குறித்து கூறுவீர்களா? குறிப்பாக கடந்தமுறை நீங்கள் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்தீர்கள். அதன்போது பேசப்பட்ட விடயங்களை விட புதிதாக என்ன விடயங்களை இச்சந்திப்பின்போது பேச உள்ளீர்கள்?

சென்ற வருடம் ஒக்ரோபர் நவம்பர் மாதத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பிலே அமெரிக்கா சென்று ஒரு வார காலம் அங்கே தங்கியிருந்து நடத்திய பேச்சின் பிரதிபலனாகத்தான் இந்தவருடம் மார்ச் மாதம் ஐ.நா மனிதவுரிமை ஆணைக்குழு கூட்டத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்தது.

அப்படியான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, மார்ச் மாதம் நடைபெற இருக்கிற ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலே ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எவ்வாறு அமுல்செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஐநா மனிதவுரிமைகள் ஆணையாளர் ஓர் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறார். ஆணையாளரின் இவ் அறிக்கையின் அடிப்படையிலே, தொடர்ச்சியாக ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை என்ன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அமெரிக்கா சரியான ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். ஏனென்றால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா ஒரு துளியேனும் நிறைவேற்றவில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

இவ்விடயத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தை ஒரு தீர்மானகரமான முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஏதுவாக சில பேச்சுக்களை நாம் மேற்கொள்ள இருக்கிறோம். இது குறித்து அவர்களோடு பேசியிருக்கிறோம். அமெரிக்காவிலே தற்போதைய ஆட்சியின் அதிகாரிகள் மாற்றம் இடம்பெற்று வருகின்ற காரணத்தினால் அவை நடந்து முடிந்த பின்னர் நாம் ஒரு பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம்.

அடுத்தவருடம் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் 2013ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எவ்வாறான ஒரு ஆண்டாக அமையும் எனக் கருதுகிறீர்கள்.

2013 ம் ஆண்டு தமிழ் மக்களுடைய அரசியல் வாழ்விலே ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கப்போகிறது என்பது என்னுடைய சிந்தனை. அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் இலங்கை அரசு போரின் இறுதிக் கட்டங்களில் நிகழ்த்திய கொடுரங்களுக்கு பதில்கூறவேண்டிய கடப்பாட்டிலிருந்து விடுபட்டுக்கொண்டிருக்கிற சூழ்நிலையிலும் சர்வதேச சமூகத்தையும் ஒன்றிணைத்து, சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் பல போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஒரு தீர்மானமான செயற்பாட்டில் இறங்குதவற்கு இருக்கிறோம்.

அப்படியான ஒரு முன்னெடுப்பு மேற்கொள்ளும்போது புது வருடத்திலே பல விதமான மாற்றங்கள், குறிப்பாக எமது மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

12/27/2012 4:23:44 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்