Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

காலத்தை விளங்காது போனால் ஒரு கவனிப்பாரற்ற சிறுபான்மையாகி விடுவோம்..

காலத்தை விளங்காது போனால் ஒரு கவனிப்பாரற்ற சிறுபான்மையாகி விடுவோம்..
நேர்காணல்: யதீந்திரா

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவருமான சித்தார்த்தனின் பிரத்தியேக நேர்காணல்

***

புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னரான அரசியல் ஒரு வகையான வெற்றி மனோபாவத்துடன் நகர்த்தப்பட்டது. நீங்கள் தற்போது அங்கம் வகிக்கும் த.தே.கூட்டமைப்பு கூட அத்தகையதொரு மனோபாவத்துடன்தான் இருந்தது. இலக்கை நெருங்கிவிட்டதான ஒரு தோற்றமே எல்லோராலும் காண்பிக்கப்பட்டது. ஆனால் 2009 இல் புலிகளுக்கு ஏற்பட்ட அதிர்சிகரமான அழிவு எல்லாவற்றையும் தலைகீழாக்கியது. புலிகளின் வீழ்சிக்குப் பின்னரான அரசியல் என்பது ஆழ்ந்து நோக்கினால், அடுத்தது என்ன என்ற கேள்வியுடன்தான் நகர்கிறது. இதுதான் இன்றைய நிலைமையின் சுருக்க வரைபு – நீங்கள் தமிழர் அரசியல் மிதவாத அரசியலிருந்து ஆயுத விடுதலைப் போராட்டமாக பரிணமித்த காலத்திலிருந்து இயங்கிவரும் ஒரு சிரேஸ்ட நபர். தற்போது நீங்கள் தலைவராக இருக்கும் முக்கிய போராட்ட அமைப்புக்களில் ஒன்றான புளொட், பின்னர் ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டது. இந்தப் பின்னணியில் பார்த்தால், இன்றைய சூழலில் நீங்கள் ஒரு சிரேஸ்ட தமிழ் அரசியல் தலைவரும் கூட. உண்மையில் இன்றைய சூழலை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

யுத்தத்திற்கு பின்னைய சூழல் பற்றி கூறுவதானால், உண்மையில் தமிழ் மக்கள் மிகவும் பலவீனமடைந்திருக்கின்றனர். இங்கு பலவீனம் என்று நான் கூறுவது அரசியல் அர்த்தத்திலும்தான். ஆனால் எங்களுடைய பார்வையில், முன்னர்கூட நாங்கள் மிகவும் பலமாக இருப்பதான ஒரு மிகை மதிப்பீடே (Overestimate) நிலவியது. எல்லாவற்றையும் இராணுவ வெற்றிகளுக்கூடாக அடைய முடியுமென்னும் நம்பிக்கையே இருந்தது. இதுதான் அப்போது எங்களளவில் ஒரு பிரச்சனையாகவும் இருந்தது. ஏனெனில் நாங்கள் அப்படிக் கருதியிருக்கவில்லை. அதற்கான உலக நிலைமையும் இல்லை என்றே நாங்கள் கருதினோம். நாங்கள் கருதினோம் என்பதற்கு அப்பால் அதுதான் உண்மை.

அன்றைய சூழலில் விடுதலைப் புலிகளிடம் இருந்த இராணுவ பலத்தை, ஒரு தீர்வு நோக்கிய அரசியலுக்கான வாய்ப்பாக பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் விடுதலைப்புலிகள் அதற்கு முயற்சித்திருக்கவில்லை. எனது தனிப்பட்ட அவதானத்திலும் அனுபவத்திலும் சொல்வதானால், இங்கு விடுதலைப் புலிகள் என்று சொல்வதிலும் பார்க்க பிரபாகரன் என்றே நான் சொல்வேன். பிரபாகரன் - அவர் 'தனிநாடு' என்பதில் தனக்கிருந்த உறுதிப்பாட்டுக்கும் (Determination), அர்ப்பணிப்புக்கும்தான் (Dedication) முன்னுரிமை அளித்திருந்தாரேயொழிய வேறு எதனையும் அவர் கருத்தில் எடுத்திருக்கவில்லை. எனவே அவர் அரசாங்கத்துடன் பேசினாலும், சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் கூட - அவர் ஒரு தனியான வழியில்தான் (Single minded approach) சென்று கொண்டிருந்தார். ஆனால் இலங்கையில் ஒரு பிரிவினையை இந்தியா எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொள்ளாது என்ற உண்மை, 1980 களிலேயே எங்களுக்கு (இந்தியாவால்) தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது. நிட்சயமாக இந்த உண்மை பிரபாகரனுக்கும் தெரிந்திருந்தது. எங்களுக்குச் சொல்லப்பட்ட உண்மை நிட்சயமாக அவருக்கும் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அவர் அந்த உண்மையை புறம்தள்ளி, தன்னால் முடியுமென்ற நம்பிக்கையுடன் இயங்கிக் கொண்டிருந்தார். உண்மையில் பிரபாகரனின் இந்த நிலைப்பாடு, ஒரு தந்திரோபாய (Tactical) நோக்கில் சரியானது அல்ல என்றே நான் கருதுகிறேன். இதுதான் புலிகள் அத்தகையதொரு அதிர்ச்சிகரமான அழிவை சந்தித்ததற்கு காரணம்.

யுத்தத்திற்கு பின்னரான நிலைமை முற்றிலும் வேறுபட்டது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், அவர்கள் ஒரு வகையான வெற்றி மனோபாவத்துடன் இருக்கின்றனர். நாங்கள் வென்றவர்கள் - நீங்கள் தோற்றவர்கள் என்னும் புரிதல்தான் அவர்களிடம் இருக்கிறது. இது வெற்றி பெற்றவர்களிடம் இருக்கக் கூடிய மனோபாவம்தான். அவர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு பயங்கரவாதப் பிரச்சனை. அவர்களுக்கு இருந்த ஒரேயொரு பிரச்சனை, புலிகள் குறிப்பாக பிரபாகரன் என்பதுதான். இன்று அது இல்லை. எனவே இனி தீர்வு குறித்துப் பேச வேண்டிய தேவையில்லை என்னும் புரிதலே அவர்களிடம் இருக்கிறது. இது மிகவும் தெளிவாகவே தெரிகிறது. சில மாறுபட்ட கருத்துக்கள் அங்கும் இருக்கலாம். ஆனால் ஒரு அரசு என்று நோக்குமிடத்து ஒட்டுமொத்தமாக அவர்களின் கருத்து அவ்வாறுதான் இருக்கிறது.

அடுத்தது, வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களை எடுப்போமானால், அவர்கள் ஒரு வகையான தடுமாற்றத்தில் (Desperation) சீவிக்க வேண்டிய இக்கட்டு நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். அடுத்தது என்ன என்பதில் குழம்பிப் போயுள்ளனர். அவர்கள் அனுபவித்த கஸ்டங்கள் வேறு எதனையும் சிந்திக்க முடியாத நிலைக்குள் அவர்களைத் தள்ளியுள்ளது. அதற்காக அவர்கள் தங்களின் உரிமைசார் கோரிக்கைகள் அனைத்தையும் கைவிடத் தயராக இருக்கின்றனர் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் அதில் இப்போதும் உறுதியாகவே இருக்கின்றனர். ஆனால். அதேவேளை அவர்களது கஸ்டங்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது எங்களது கடமையாகும். நாங்கள் தீர்வு குறித்துப் பேசி அறுபது வருடங்களை செலவழித்திருக்கிறோம். ஆனால் இப்படியானதொரு அழிவை நாங்கள் முன்னர் ஒருபோதும் கண்டதில்லை. எனவே இப்போதும், போராடாத எந்தவொரு இனமும் வெல்லாது என்று நாங்கள் வசனம் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் சாதாரண மக்கள் அப்படியில்லைதானே! சாதாரண மக்களும் வாழத்தானே வேண்டும். எனவே எனது நோக்கில், இன்றைய நிலைமைகளை இரண்டு நிலையில் நாம் கையாள வேண்டும்.

சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று பார்க்க வேண்டும். சின்னச் சின்ன விடயங்களையாவது செய்ய வேண்டும். உதாரணமாக நாங்கள் எங்களுக்கிருக்கும் புலம்பெயர் தொடர்புகளுக்கு சொல்லிவருகிறோம். நீங்கள் பணத்தை எங்களுக்கு, நேரடியாக அனுப்ப வேண்டாம் நாங்கள் இங்குள்ளவர்களின் விபரங்களை தருகிறோம், நீங்கள் அவர்களுக்கு நேரடியாக உதவுங்கள். ஏனெனில் பாதிக்கப்பட்டு, அடுத்தது என்ன என்னும் கேள்வியுடன் வாழ்வை எதிர்கொண்டுள்ள அந்த மக்கள், தங்களது காலில் எழுந்து நிற்குமாறு சில பணிகளை அரசியல்வாதிகளாகிய நாங்கள் செய்ய வேண்டும்.

இன்று அரசு அபிவிருத்தி பற்றி பேசிவருகிறது. அது பாரிய வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. நிட்சயம் உட்கட்டமைப்பு வசதிகள் தேவை. நான் மறுக்கவில்லை, ஆனால் இதனால் பாதிக்கப்பட்டு கிடக்கும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. உதாரணமாக ஒரு விதவைத் தாயின் பார்வையில் இது அர்த்தமற்ற ஒன்று. எனவே இன்றைய சூழலில் பாதிக்கப்பட்டு சமூகவாழ்விலிருந்து பின்தள்ளப்பட்டிருக்கும் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு பிரதானமானது. அதனை நாங்கள் தட்டிக்கழிக்க முடியாது. இதற்காக நான் தீர்வு இப்போது முக்கியமல்ல என்று கூற வரவில்லை. ஒரு நியாயமான அரசியல் தீர்வின் மூலம்தான் எங்களுடைய கருமங்களை நாங்களே கையாளக் கூடிய வாய்ப்பு உருவாகும். எனவே என்னைப் பொறுத்தவரையில் - பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்துவது – அவர்களுக்கான அரசியல் தீர்வு - இரண்டுமே முக்கியம்தான். இதில் ஒன்று முன்னர் - மற்றைய பின்னர் - என்பதல்ல விடயம். இதற்கான முயற்சிகளை அரசியல்வாதிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு மேற்கொள்ள வேண்டும். அரசு ஒன்றும் செய்யாது என்று கூறிக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க முடியாது.

இந்த இடத்தில் யுத்தத்திற்கு பின்னரான, சர்வதேச புரிதலை எடுத்து நோக்கினால் - அவர்கள் ஒன்றை தெளிவாகச் சொல்லுகின்றனர். நானும் இந்திய, அமெரிக்க தரப்பினர் பலருடன் பேசியிருக்கிறேன் - அவர்கள் ஒன்றை தெளிவாகச் சொல்லுகின்றனர். நாங்கள் சில அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எனவே இன்று கனிந்துள்ள சூழலை முடிந்தவரை பயன்படுத்தி எடுக்கக்கூடியதை எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இந்த நிலைமை தொடர்ந்தும் இருக்காது. இதனை விட பெரியதொரு பிரச்சனை வருமென்றால் நாங்கள் இங்கிருந்து சென்றுவிடுவோம். எனவே இன்றைய அழுத்தங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நான் சந்தித்த தூதரக மட்டத்தினர் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து வரும் இராஜதந்திர மட்டத்தினரும் இதனையே கூறுகின்றனர். எனவே நாங்களும் இன்றைய சூழலை துல்லியமாக மதிப்பிட்டு சில நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் இப்போது மிகவும் பலவீனப்பட்டிருக்கிறோம், மேலும் பலவீனமடைந்து கொண்டு செல்கின்றோம். எங்களுடைய தேசியம் என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒன்று. எங்களுடைய தேசியம் மட்டுமல்ல உலகின் பல தேசியங்களும் அப்படித்தான். சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்று ஒரு கருத்துண்டல்லவா! சுவரில்லாமலும் நாங்கள் சித்திரம் வரையலாம், அது கற்பனையில் மட்டுமே சாத்தியப்படும். எனவே இன்றைய சூழலை சாதகமாகக் கைக்கொண்டு நாங்கள் ஒரு தீர்வை எடுக்காது விடுவோமானால், எங்களுடைய இனம் ஒரு கவனிப்பாரற்ற சிறுபான்மையினமாக மாறிவிடும் ஆபத்துண்டு.

கிழக்கின் சனத்தொகை மாறிவிட்டது. வடக்கினதும் மாறலாம். வடக்கின் பல இடங்களிலும் அத்தகைய நடவடிக்கைகளுக்கான முஸ்தீபுகள் தெரிகின்றன. ஆனால் ஆழ்ந்து பார்த்தால் இதிலும் ஒரு நியாயத்தை அவர்கள் சொல்ல முற்படலாம். இன்று தமிழ் மக்கள் அனேகர் வெளிநாடு சென்றுவிட்டனர். இன்னும் பலர் வடகிழக்கிற்கு வெளியில் வாழ்கின்றனர். யாழ் குடாநாட்டின் சனத்தொகை 5 லட்சமாகச் சுருங்கிவிட்டது. எனவே நிலப்பரப்பிற்கு ஏற்ப சனத்தொகை இல்லை என்னும் போது பிற இடங்களிலில் இருந்து மக்கள் குடியேற்றப்படலாம் என்ற வாதங்கள் மேலெழக் கூடும். சமீப காலமாக சிங்கள புத்திஜீவிகள் பலரும் இத்தகையதொரு பார்வையே வெளிப்படுத்தி வருகின்றனர். அரசும் அத்தகையதொரு சிந்தனையை உள்வாங்கியிருப்பதாகவே தெரிகிறது. நான் சமீபத்தில் சந்தித்த சில தூதுவர்கள் கூட, இவ்வாறானதொரு பார்வையைத் தவறாகப் பார்க்கவில்லை. போதிய மக்கள் தொகை இல்லாவிட்டால் மற்றவர்கள் வருவதில் என்ன பிரச்சனை என்று கேட்கின்றனர். இவ்வாறு அவர்களது சிந்தனையிலும் கூட மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே நிலைமைகள் முற்றிலும் மாறுவற்கு முன்னர் ஒரு தீர்வை நோக்கி நாங்கள் போக வேண்டியிருக்கிறது. எல்லாம் இல்லாவிட்டால் ஒன்றுமில்லை (All or Nothing) என்னும் நிலைப்பாட்டில் இனியும் நாம் பயணிக்க முடியாது. அவ்வாறு சிந்திப்போமாயின் எங்கள் நிலைமை மேலும் மோசமடையலாம்.

நீங்கள் கூறிய விடயங்களுக்கு மேலதிகமாக, இன்றைய சூழலில் உள்ள ஒரு நம்பிக்கையான பக்கம் என்று எதைச் சொல்வீர்கள்.

இன்றைய சூழலில் நம்பிக்கையான பக்கம் என்று ஒன்றைச் சொல்வதானால், அது சர்வதேச கவனம் எங்கள் மீது திரும்பியிருப்பதைத்தான் சொல்ல முடியும். அதனை அக்கறை என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு பார்வை என்று சொல்லலாம். அதாவது யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் பார்க்க அதிகமான சர்வதேச கவனம் இப்போது இலங்கை மீது திரும்பியிருக்கிறது. முக்கியமாக ஐ.நா தீர்மானம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கின்ற அழுத்தங்கள் ஆகியவற்றின் மூலம் இலங்கை கவனிக்கப்படுகிறது. ஆனால் இவைகள் நிரந்தரமா என்ற கேள்வியும் மறுபுறமாக எழுகிறது. எனவேதான் அவர்களது கவனம் எங்கள் மீது திரும்பியிருக்கும் போதே நாங்கள் ஒரு தீர்வை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. அடுத்த விடயம் புலம்பெயர் சமூகங்களின் இருப்பு. இதுவும் இன்றைய சூழலில் ஒரு பலம்தான். குறிப்பாக மேற்கு நாடுகளில் இயங்கக் கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கும் புலம்பெயர் தரப்பினர், தங்களுக்கிருக்கின்ற  தொடர்புகளையும் (Contacts) வாய்ப்புக்களையும் (Opportunities) களத்தில் ஒரு நியாயமான தீர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். அதற்கான ஒரு பொறிமுறையை வகுக்க வேண்டும். தீவிர நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதற்கு மாறாக ஒரு நிதானமான முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் வரக்கூடியதொரு நீதியான, நிரந்தரமான தீர்விற்கு மேற்குலகின் ஆதரவை பெறும் வகையில் அவர்களது பொறிமுறை அமைந்திருக்க வேண்டும். மாறாக அவர்கள் அங்கு தீவிர (Extreme) நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பார்களாயின், அது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தீர்வை தட்டிக் கழிப்பதற்கும் பிற்போடுவதற்குமான வாய்ப்புக்களையே வழங்கும். எனவே இன்றைய சூழலில் புலம்பெயர் ஆதரவு சக்திகள் இதனைச் சரியாக கையாளுவார்களாயின், களத்தில் தீர்வு நோக்கிய எங்களது முன்னெடுப்புக்களுக்கு அது பேருதவியாக இருக்கும்.

தற்போது உங்களது அமைப்பு, பிரதான தமிழ் தேசிய சக்தியான தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றது. ஆனால் நீங்கள் ஆரம்பத்தில் த.தே.கூட்டiமைப்பில் ஒரு அங்கமாக இருந்திருக்கவில்லை. குறிப்பாக அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் த.தே.கூட்டமைப்பை நீங்கள் நிராகரித்திருந்தீர்கள். ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டிருக்கின்றீர்கள். இந்த பின்புலத்தில் உங்கள் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன – நீங்கள் ஆரம்பத்தில் புலிகளுக்கு எதிர்நிலையில் இருந்துவிட்டு, யுத்தம் முவடைந்த பின்னர் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டுதான் கூட்டமைப்புடன் இணைந்திருக்கின்றீர்கள். இது உங்களின் பழைய பாவங்களை கரைத்துக் கொள்வதற்கான ஒரு புனித யாத்திரை என்றெல்லாம் சிலர் விமர்சிக்கின்றனர். - குறிப்பாக புலம்பெயர் சூழலில் உள்ளவர்களும் ஏன் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இத்தகைய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இதற்கான உங்களது தர்க்க நியாயம் என்ன?

நாங்கள் த.தே.கூட்டமைப்பில் வெற்றி வாய்ப்புக்காக இணைந்து கொள்ளவில்லை என்பதை இந்த இடத்தில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நாங்கள் கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போதுதான் கூட்டமைப்பில் இணைந்து கொண்டோம். இதன்போது எந்தவொரு ஆசனங்களையும் நாங்கள் கோரியிருக்கவில்லை. வடக்கிலும் கூட நாங்கள் ஆசனங்களுக்கான பேரம் பேசலில் ஈடுபடவில்லை. அவர்களும் யாழ்ப்பாணத்தில் எங்களுக்கென எந்தவொரு ஆசனங்களையும் தரவில்லை. வன்னியில் மட்டும் சில ஆசனங்களைத் தந்திருந்தனர். ஆனாலும் வடக்கில் இடம்பெற்ற கூட்டங்களில் அதிகம் பேசியவன் நானாகத்தான் இருக்க முடியும்.

நாங்கள் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டபோது எங்களிடம் இருந்த நோக்கம் ஒன்றுதான் - தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்கின்றனர் - ஒரு நியாயமான தீர்வுக்காக அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன – என்பதைக் காட்ட வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கம்தான் அப்போது எங்களிடம் இருந்தது. இப்போதும் அந்த நோக்கத்திற்காகக்தான் கூட்டமைப்புடன் இணைந்து நிற்கிறோம். இந்த தேர்தலிலும் கூட, நாங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இரண்டு இடங்களில்தான் போட்டியிடுகின்றோம். இவைகள் எல்லாம் எங்களுடைய தனிப்பட்ட வெற்றி வாய்ப்புக்களுக்கான முடிவுகளல்ல. நாங்கள் முன்னர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை இலக்காகக் கொண்டு போட்டியிட்ட போது, நாங்கள் தனித்துத்தான் போட்டியிட்டிருந்தோம். அப்போது மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பிருந்தது. அவர்களின் எதிர்பார்ப்புக்கு அப்பால் நாங்களும் யோசித்திருந்தோம். இந்த அரசாங்கத்தின் போக்கிற்கு எதிராக நாங்கள் ஓரணியில் நிற்க வேண்டும் என்பதில் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்தோம். இதுதான் நாங்கள் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டதற்கான காரணம்.

ஒவ்வொருவரும் தங்களது விருப்பங்களிலிருந்தும் தேவைகளிலிருந்தும் எங்களை விமர்சிக்கின்றனர். இன்று முன்னர் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்தவர்கள் சிலரே சொல்லுகின்றனர் – நாங்கள் விடுதலைப்புலிகளை ஒரு போதுமே ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டிருக்கவில்லையென்று. நாங்கள் அப்போதே இந்த விடயத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தோம். நாங்கள் ஏகப்பிரதிநிதித்துவ வாதத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. காரணம் - அது ஜனநாயகத்திற்கான அடிப்படையை இல்லாமல் செய்துவிடும் என்பதற்காக. விடுதலைப்புலிகள் எங்களை நேரடியாக அணுகிய போது கூட, இதனை நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டு மறுத்திருந்தோம். நாங்கள் எங்களுக்கு பதவிகள் மட்டும்தான் முக்கியம் என்று கருதியிருப்போமானால், விடுதலைப்புலிகளின் கோரிக்கைக்கு இணங்குவது போன்று பாசாங்கு செய்துவிட்டு இணைந்திருக்கலாம். ஆனால் நாங்கள் அப்படிச் செய்திருக்கவில்லை.

தவிர, 90களுக்கு பின்னர் நாங்கள் ஒரு விடயத்தை தெளிவாகக் குறிப்பிட்டு வந்திருக்கிறோம் -  தனிநாடு என்பது, இன்றைய சர்வதேச சூழலில் சாத்தியமில்லை. குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடு, அதனை அடியொற்றிய சர்வதேச நிலைப்பாடு ஆகியவற்றை கணிப்பிட்டே நாங்கள் அதனைக் கூறியிருந்தோம். எனவே தனிநாட்டுக்கான போர் என்பது இறுதியில் ஒரு பேரழிவையே கொண்டு வருமென்றும் எச்சரித்தோம். இவ்வாறு நாங்கள் கூறியபோது, விடுதலைப்புலிகளின் பார்வையில் நாங்கள் எதிரானவர்களாகத் தெரிந்தோம். எங்களை எதிரிகள் என்று கருதி, விடுதலைப்புலிகள் செயற்பட்டபோது, நாங்களும் எங்களை தற்காத்துக் கொள்வதற்காக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. எங்களைப் பொறுத்தவரையில் அது ஒரு தந்திரோபாய நடவடிக்கை. விடுதலைப்புலிகள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அவ்வப்போது பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றனர். அப்படித்தான் அவர்கள் பிறேமதாசவுடனான உறவுக்கும் விளக்கம் கற்பித்திருந்தனர்.

ஆனால் நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளின் தனிநாட்டு முயற்சிக்கு குறுக்காக நின்றிருக்கவில்லை. ஆனால் நாங்கள் ஒன்றைச் சொன்னோம் - நாங்கள் இதனை நம்பவில்லை. ஆனால் உங்களால் எடுக்க முடியுமென்றால் எடுங்கள். 2004இல் த.தே.கூட்டமைப்பில் இணையுமாறு அவர்கள் நேரடியாக எங்களை அணுகியபோதும் இதனைத்தான் குறிப்பிட்டிருந்தோம் - நீங்கள் ஒரு தீர்வுக்காக முயற்சிக்கப் போவதில்லை. நீங்கள் மீண்டும் போரைத்தான் தெரிந்தெடுப்பீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் பிரபாகரனை நான் நன்கு அறிவேன். எனவே ஒரு பேரழிவிற்கு நாங்கள் உடந்தையாக இருக்க விரும்பவில்லை. நாங்கள் உங்களது முயற்சிக்கு குறுக்காக இருக்கவில்லை. ஆனால் எங்களால் உங்களது செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருக்க முடியாது என்றே கூறியிருந்தோம். ஏனெனில் நாங்கள் மட்டுமல்ல, பலருக்கும் ஒன்று தெரிந்திருந்தது - இந்தியாவை மீறி விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு ஒரு போதுமே வெற்றி பெறப்போவதில்லை. எனவே இத்தகைய பின்னணியை கருத்தில் கொண்டுதான், நாங்கள் முன்னர் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதை தவிர்த்திருந்தோம். இன்று நாங்கள் அஞ்சியது போன்றே, ஒரு பேரழிவிற்கு நாங்கள் சாட்சியாகியிருக்கிறோம். ஆனால் அதற்கு நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உடந்தையாக இருந்திருக்கவில்லை. அந்தவகையில் எங்களளவில் நாங்கள் சரியாக இருந்திருக்கிறோம்.

தற்போது, மாகாணசபை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். ஆனால் சில விமர்சனங்கள் எழுகின்றன - இந்த மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு போட்டியிடக் கூடாது. இதில் போட்டியிடுவதால், கூட்டமைப்பு வடகிழக்கு பிரிப்பை ஏற்றுக் கொள்வதுடன் ஒன்றுமற்ற மாகாணசபையை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஏற்றுக் கொள்வதான தோற்றமும் ஏற்படும் என்றவாறான விமர்சனங்களை இவர்கள் முன்வைத்து வருகின்றனர். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.

என்னைப் பொறுத்தவரையில் இந்த மாகாண சபையில் போட்டியிடுவதில் எனக்கு உடன்பாடுண்டு. இன்றைய சூழலில் அது சரியென்றே நான் கருதுகிறேன். நாங்கள் கடந்த அறுபது வருடங்களாக அரசியல் செய்து வருகிறோம். ஆனால் எங்களது அரசியல் முன்னெடுப்புக்களை திரும்பிப் பார்த்தால் ஒரு விடயத்தைக் காணலாம் - அடைந்தால் எல்லாம் இல்லாவிட்டால் ஒன்றுமில்லை (All or Nothing). இத்தகையதொரு மனோநிலையில்தான் எங்களது அனைத்து தலைவர்களும் செயற்பட்டு வந்திருக்கின்றனர். இதனால் நாங்கள் தொடர்ச்சியாக பலவற்றை இழந்து வந்திருக்கிறோம். அதேவேளை எங்களுடைய இந்த நிலைப்பாட்டையே, மறுபுறத்தில் பேரினவாத தரப்பினர் எங்களது உரிமைகளை தட்டிக் கழிப்பதற்கான வாய்ப்புக்களாகவும் பயன்படுத்திக் கொண்டனர் – பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக நாங்கள் 90 விடயங்களில் உடன்பட்டுவிட்டு. பத்து வீதத்தில் முரண்படும் போது, அவர்கள் ஒட்டுமொத்தமாக நூறையுமே நிராகரித்து விடுகின்றனர்.

இதனை நான் இப்போது கூறும் போது சிலர் முரண்படலாம். ஆனால் எங்களது இத்தகைய 'எல்லாம் இல்லாவிட்டால் ஒன்றுமில்லை' (All or Nothing) என்னும் நிலைப்பாடானது, இறுதியில் எங்களுடைய இனத்தை படுமோசமான நிலைக்குள் தள்ளியுள்ளதை எவராலும் மறுக்க முடியாது. இன்று மக்கள் அனைத்து வழிகளிலும் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். நாங்கள் முன்னைய நிலைமையை அடைவதற்கு, இன்னும் முப்பது வருடங்கள் உழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே நாங்கள் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் - எங்களால் அடைய முடியாத ஒரு இலக்குக்காக அதிக விலையை கொடுத்திருக்கிறோம். இதனை நாங்கள் முன்னரே தெளிவாக விளங்கிக் கொண்டு, எங்களது அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருப்போமானால், எங்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் நியாயமான முன்னேற்றத்தை கண்டிருக்க முடியும். அதேநேரம் எங்களுடைய மக்களையும் அழிவிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அவர்களது உயிர்களையும் உடமைகளையும் காப்பாற்றியிருக்க முடியும். 

அதாவது ஒன்றை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது – நாங்கள் சொல்லுவது மட்டும்தான் சரியென்றவாறு நாங்கள் தொடர்ந்து இயங்க முடியாதல்லவா! – எங்கெங்கு மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அதற்கு ஏற்ப மாற்றங்களை செய்துகொண்டு நாங்கள் முன்னேற வேண்டும். இன்றைய சூழலில் இத்தகையதொரு நிலைப்பாட்டைத்தான் த.தே.கூட்டமைப்பு இலங்கையில் பின்பற்ற எத்தனிக்கிறது - இன்று சம்பந்தன் அண்ணனாக இருக்கலாம், கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களாக இருக்கலாம், அவர்கள் ஒரு விடயத்தை குறிப்பிடுகின்றனர் – முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் இன்றைய சூழலில், த.தே.கூட்டமைப்பு ஒரு தனிப்பெருங் கட்சியாக வருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே நாங்கள் கருதுகிறோம் - கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் ஆட்சிமைக்கக் கூடிய சூழலும் நிலவுகின்றது. ஆகவே இதனை நாங்கள் ஒரு திட்டமாக யோசிக்கவில்லை. மாறாக கிழக்கு மாகாணசபையை கைப்பற்றி நடத்த முடியுமா என்று பார்க்கப் போகின்றோம். கிழக்கு மாகாணசபையை எங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து நடாத்த முடியுமா என்று பார்க்கப் போகின்றோம். எனவே இது 1977இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் போன்றதல்ல.

நாங்கள் முன்னர் வடக்கு-கிழக்கு இணைப்பில் மிகவும் உறுதியாக இருந்திருக்கிறோம். ஆனால் இன்றைய சூழலில் அதனை தளர்த்தி கிழக்கு மாகாணசபையில் போட்டியிடுகின்றோம். ஆனால் இதில் கிடைக்கும் மக்கள் ஆணையை வைத்துக் கொண்டு வடக்கு-கிழக்கு இணைப்பை சாத்தியப்படுத்தலாம். தவிர கூட்டமைப்பானது இதில் பங்குகொள்வதற்கு முன்வந்திருப்பதன் மூலம், கூட்டமைப்பு ஒரு சிந்தனை மாற்றத்தை காட்டியிருக்கிறது. அதாவது தமிழர் தலைமை ஐக்கிய இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வைக் காண்பதற்கான அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்னும் செய்தியை, நாம் சர்வதேசத்திற்கும் இலங்கையின் ஆட்சியாளர்களும் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்.

ஆனால் மாகாணசபையை எங்கள் பிரச்சனைக்கான ஓர் இறுதித் தீர்வாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் சொல்லவில்லை ஆனால் நாங்கள் மாகாணசபையில் பங்கு கொள்வதன் மூலம் இதுவரை கொழும்பின் ஆட்சிபீடம் எங்கள் மீது சுமத்தி வந்த ஒரு குற்றச்சாட்டை செயல்ரீதியாக தோற்கடித்திருகின்றோம். இனிவரும் காலத்தில் கூட்டமைப்பு பிரிவினை கோருவதாக எவரும் இலகுவாக எங்கள் மீது குற்றம்சாட்ட முடியாது. த.தே.கூட்டமைப்பு எனப்படும் ஒன்றுபட்ட அரசியல் தலைமையானது, சர்வதேச ஜனநாயக ஒழுங்குகளை மதித்துச் செயலாற்றும் ஒரு அரசியல் அமைப்பு என்னும் உண்மையை நாங்கள் மாகாண ஆட்சிமுறையில் பங்குகொள்வதன் மூலம் நிரூபித்திருக்கிறோம். இலங்கையின் ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்துவரும் சர்வதேச சமூகம், மேலும் எங்களது பிரச்சனை குறித்துப் பேசுவதற்கான ஒரு ஏது நிலையை தோற்றுவித்திருக்கிறோம். எனவே எல்லாவற்றையும் எதிர்நிலையில் பார்க்காமல் காலத்தை விளங்கிக் கொண்டு, பொருத்தமான விடயங்களை பொருத்தமான சூழலில் மேற்கொள்ள வேண்டியதே ஒரு மக்கள் தலைமையின் கடமையாகும். அதனையே தற்போது த.தே.கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கிறது.

மாகாணசபை என்பது இந்தோ-சிறிலங்கா உடன்பாட்டின் மூலமாக கிடைத்த ஒன்று. ஆயினும் அது இதுவரை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. இந்த பின்புலத்தில் இந்தியா யுத்தத்திற்கு பின்னரான குறிப்பாக, புலிகள் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்டதன் பின்னரான சூழலில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை எவ்வாறு நோக்குகின்றது. நீங்கள் இந்திய தரப்பினருடன் நீண்டகாலமாக தொடர்பிலிருப்பவர் என்ற அடிப்படையில்தான் இந்த கேள்வியை கேட்கிறேன்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அதற்கு ஈழத் தமிழ் மக்கள் மீது கரிசனை உண்டு. அதனை நாங்கள் மறுக்க முடியாது. ஆனால் அந்த கரிசனை என்பது அவர்களது நலனோடு பிணைந்துள்ளது என்பதையும் நாங்கள் மறுக்க முடியாது. அந்த வகையில் இந்தியாவின் நிலைப்பாட்டை நாங்கள் யுத்தத்திற்கு முன்னர் – பின்னர் என்ற அடிப்படையில் பிரித்து நோக்க முடியுமென்று நான் நினைக்கவில்லை. ஆனாலும் யுத்த காலத்தை விட தற்போது இந்தியாவிற்கு ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று சொல்லலாம். இன்றைய தலைமையான த.தே.கூட்டமைப்புடன் உரையாடுவதற்கும், தங்களது கருத்துக்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதற்குமான ஒரு வாய்ப்பு இந்தியாவிற்கு இப்போது இருக்கிறது. யுத்த காலத்தில் அத்தகையதொரு வாய்ப்பு இந்தியாவிற்கு இருந்திருக்கவில்லை.

எனவே இந்தியா முன்னரும் தனது நலனில் நின்றுதான் எங்களது பிரச்சனைகளை நோக்கியது, தற்போதும் அவ்வாறுதான் நோக்குகின்றது. இந்தியா மட்டுமல்ல எந்தவொரு நாடும், அது அமெரிக்காவாக இருக்கலாம், ஜப்பானாக இருக்கலாம், எந்தவொரு நாடும் தங்களது நலனை உதாசீனம் செய்து எங்களுக்கு உதவமாட்டாது. இது எங்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மையும் கூட. எனவே இந்தியா தனது நலனை முதன்மைப்படுத்துவதாக நாங்கள் விமர்சித்துக் கொண்டிருப்போமாயின் அவர்களது உதவியை நாங்கள் பெற முடியாமல் போகும். தவிர ஒரு விடயம் நன்கு தெரிந்த பின்னர் அதனை விமர்சித்துக் கொண்டிருப்பதில் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. இந்தியாவின் ஆதரவு எங்களுக்கு உண்டு. அது முன்னரும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆனால் அதற்காக இந்தியா தனது நலன்களை புறம்தள்ளிவிட்டு எங்களுக்கு உதவும் என்று எவராவது நினைப்பாராக இருப்பின், அது அவரது அறியாமையாகவே இருக்க முடியும். இந்தியாவின் நலன்களை நாங்கள் நிராகரிப்பதாயின், எங்களது பிரச்சனைக்காக அவர்களது உதவியை நாங்கள் கோரக் கூடாது. நாங்கள் எங்களது பிரச்சனையை எங்களுக்குள்ளயே தீர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறில்லாது அவர்களது ஆதரவை நாங்கள் கோருவதாயின் அவர்களது நலனையும் நாங்கள் விளங்கிக் கொள்ளத்தான் வேண்டும். 

மீண்டும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்-முஸ்லிம் உறவுகள் பற்றிப் பேசப்படுகிறது. தமிழ்-முஸ்லிம் உறவு குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டாலும் அது ஒரு ஒட்டாத விடயமாகவே இன்றுவரை இருக்கிறது. இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கிழக்கில் போட்டியிடுகின்ற சூழலில் மீண்டும் இந்த விடயம் பேசுபொருளாகியிருக்கிறது. இதனை நிங்கள் எவ்வாறு பார்க்கின்றிர்கள்.

இன்று திருகோணமலையில் கூட்டமைப்பு, வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் ஒருவருக்கு இடம் கொடுத்திருக்கிறது. ஆனால் இதனால் தமிழ்-முஸ்லிம் உறவு ஏற்பட்டுவிடப் போவதில்லை. உண்மையில் இங்கு உறவு என்பது அரசியல் அர்த்தத்தில் என்பதை நாங்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே இன்றைய சூழலில் ஒரு வாய்ப்பு உண்டு – தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் சூழலில், த.தே.கூட்டமைப்பும் - முஸ்லிம் காங்கிரசும் கிழக்கில் இணைந்து ஆட்சியமைக்கக் கூடியதொரு சூழல் உருவாகுமாயின், அது நிட்சயமாக தமிழ்-முஸ்லிம் உறவை படிப்படியாக வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும். ஆனால் அப்படியானதொரு சந்தர்ப்பம் உருவாகுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்குமென்றே நம்புகிறேன். எது எவ்வாறாக இருப்பினும் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு புரிதல் ஏற்படாத வரைக்கும் வடகிழக்கிற்கான ஒரு நியாயமான தீர்வை காண்பது கடினமாகவே இருக்கும். கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அவர்கள் மத்தியில் அண்மைக்காலமாக தங்களை ஒரு தேசிய இனமாகப் பார்க்கும் போக்கொன்றும் உருவாகியுள்ளது. அதனை நாங்கள் இலகுவாக புறம்தள்ளிவிடவும் முடியாது. அதனையும் கருத்தில் கொண்டு உரையாட வேண்டும். எனவே தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையே ஏற்படப் போகும் உடன்பாடே சிறந்ததொரு தீர்வை வடகிழக்கிற்கு கொண்டு வரும். எனவே தேர்தல் பெறுபேறுகளுக்கு பின்னர் ஏற்படப் போகும் நிலைமை ஒரு சாதகமான சூழலை தருமாயின், அது ஒரு வேளை இந்த இலக்கு நோக்கிப் பயணிப்பதற்கு உறுதுணையாக அமையும்.

8/11/2012 4:45:13 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்