அரவிந்த கிருஷ்ணா
துயரங்கள் விடிவின்றி நீளும்
கறை நம் எல்லோர் கைகளிலும்
என் கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்
இன்று மனிதனாக இருப்பதே குற்றம்
- சுகுமாரனின் கவிதை வரிகள்
***
இந்தியாவில் தினமும் ஏதேனும் ஒரு மூலையில் யாராவது ஒரு பெண் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள். இந்தத் துன்புறுத்தல்கள் செயல் சார்ந்ததாகவும் சொல் சார்ந்ததாகவும் இருகின்றன. சமீப காலங்களில் பெண்கள் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக படித்தவர்கள் அதிகமாக வசிக்ககூடிய மெட்ரோ நகரங்களில் அதிகரித்திருப்பது பலரைக் கலக்கமடையவைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியத் தலைநகர் தில்லியில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றுக்கெதிராக நாடெங்கிலும் உள்ள மக்களைப் போராடவைத்த நிகழ்வு ஒன்று சமீபத்தில் நடந்தது.
சில வாரங்களுக்கு முன் தில்லியில் தனியார் பேருந்து ஒன்றில் இரவு ஒன்பது மணியளவில் 23 வயது மனநல மருத்துவ மாணவியும் அவரது ஆண் நண்பரும் பயணித்திருக்கிறார்கள். அப்போது பேருந்து ஓட்டுநர் கிளீனர் உட்பட மது அருந்தியிருந்த ஆறு பேர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதைத் தடுக்க முயன்ற நண்பரை ஓர் இரும்புக் கம்பியால் தாக்கி, அவர்கள் இருவரையும் ஓடும் பேருந்திலிருந்து வீசியெறிந்திருக்கிறார்கள். பாதிக்கப்படட் மாணவி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருகிறார்.
காவல்துறை இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட ஐவரை ஒரு வாரத்துக்குள் கைதுசெய்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவியுடன் பேருந்தில் பயணித்த நண்பர் அவர்களை அடையாளம் காட்டினார். பிடிபட்ட குற்ற்வாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வாங்கிக்கொடுகக வேண்டியதுதான் பாக்கி. ஆனால் இத்துடன் மறக்கப்படும் சம்பவமாக இது கடந்துபோகவில்லை. பெண்களுக்கெதிரான வன்முறை, பாலியல் வன்கொடுமை ஆகியவை குறித்த தேசிய விவாதத்தையும் போராட்டங்களையும் இது தூண்டியுள்ளது.
நடந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின. சமாஜ்வதி கட்சி உறுப்பினர் ஜெயா பச்சன் இந்த சம்பவத்தைத் தடுக்க தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதற்கு வெட்கப்படுவதாக பாராளுமன்றத்தில் அறிவித்துக் கண்ணீர் சிந்தினார். மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தார்.
நாளிதழ்கள் அனைத்தும் இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்தன. தலையங்கங்களையும் சிறப்புக் கட்டுரைகளையும் வெளியிட்டன. ஹிந்து நாளிதழில் பாலியல் குற்றங்களைத் தடுக்க பெண்களை சக மனுஷியாகவும் சமமானவளாகவும் பார்க்க ஆண்களுக்குக் கற்றுத்தரப்பட வேண்டும் என்ற ரீதியில் தலையங்கமும் கட்டுரைகளும் எழுதப்பட்டன. தினமணியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அஜாக்கிரதையும் குற்றத்துக்குக் காரணம் என்ற தொனியில் எழுதப்பட்ட தலையங்கத்துக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
அரசியல் அரங்கிலும் ஊடகங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் பெண்களைத் தாக்கும் பாலியல் வன்முறைக்கெதிராக நாடெங்கிலும் உள்ள இளைஞர்களையும் பெண்களையும் போராட்டக் களத்தில் குதிக்கவைத்திருக்கிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களும் பல்வேறு இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளும் நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தையும் ஜனாதிபதியின் வசிப்பிடமான ராஷ்டிரபதி பவனையும் முற்றுகையிட்டன. இந்தியா கேட்டில் மாபெரும் இளைஞர்கள் கூட்டம் போராடிக்கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் தனிநபர்களும் பங்கேற்கிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு யாரும் தலைமை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் மத்தியிலும் இந்தச் சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மைய நீரோட்டத்தின் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு உடனடியாக மரண தண்டனையோ பால் நீக்கமோ செய்ய வேண்டும் என்ற குரல் எழுகிறது. தண்டனைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்றும் அது மரண தண்டனையாக இருக்க வேண்டும் என்றும் பேசுகிறார்கள். பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் ஆண்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகளை வழங்கும் அரேபிய தேசங்களின் வழக்கத்தை இது போன்ற சம்பவங்களில் பின்பற்ற வேண்டும் என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.
தமிழ் நடிகை அமலா பால் இந்தக் கருத்தை வெளிப்படையாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் அமீர் தவறு செய்தவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று அறிக்கை விடுத்திருக்கிறார். உடனடிச் சட்டங்கள், உடனடித் தீர்ப்புகள், உடனடி நடவடிக்கை இதுவே இன்றைய இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்பது இந்த சம்பவத்தின் மூலம் வெளிப்படுகிறது. தில்லி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் சுய நினைவை அடைந்த போது தன்னைச் சிதைத்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
குற்றவாளிகளை தண்டிப்பதோடு பிரச்சினை தீர்ந்துவிடாது என்ற தெளிவுடன் பேசுபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைத்துவிதமான வன்முறைகளிலிருந்தும் பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களையும், அரசு நடவடிக்கைகளையும் சமூக மாற்றத்தையும் கோருகிறார்கள். டெல்லியில் நடக்கும் போராட்டத்துக்குத் துணை நிற்கும் தேசிய பெண்கள் பாதுகாப்பு அமைப்பு மரண தண்டனை தங்கள் கோரிக்கை அல்ல என்பதை திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. எழுத்தாளர் ஞாநி, நடிகர் கமல் ஹாஸன் ஆகியோர் தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது என்று இந்தக் கொந்தளிப்பான சூழலிலும் நிதானம் தவறாமல் பேசியிருக்கிறார்கள்.
போராடுபவர்களின் கோரிக்கை குற்றவாளிகளுக்கான உடனடி தண்டனை என்பதோடு நின்றுவிடவில்லை. பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க அரசையும் சட்ட அமைப்புகளையும் வலியுறுத்தும் போராட்டமாக இது மாறியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
***
தன்னை எதிர்ப்பவர்களைக் காவல்துறையின் பலம்கொண்டு அடக்கும் அரசின் வழக்கம் இதிலும் தெரிந்தது. டெல்லி காவல்துறையினருக்கும் போராடும் இளைஞர்களுக்கும் நடந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள். காவல்துறையினர் போராடும் பெண்கள் மீது தடியடி நடத்தும் காட்சிகள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகவும் முதல் பக்கப் படங்களாகவும் இடம்பெறுகின்றன. பெண்களுக்கெதிரான வன்முறையைத் தடுக்க நடக்கும் இந்தப் போராட்டத்திலும் பெண்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் வேதனையளிப்பவை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் கல்வீச்சு, வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறைச் செயல்களைச் செய்திருக்கிறார்கள். தாக்குதலில் சிக்கிய காவல்துறை ஊழியர் சுபாஷ் சந்த் டோமர் உயிரிழந்திருக்கிறார். அவரது மரணத்துக்குக் காரணம் போராட்டத்தில் ஊடுருவிய கலகக்காரர்கள்தான் என்றும் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒருவர் உயிரை பலிவாங்கியிருப்பதில் மிகுந்த வருத்தம் அடைந்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மத்திய அரசின் தலைவரான சோனியா காந்தி, போராடுபவர்களிடம் 'நான் உங்களில் ஒருத்தி' என்று கூறியிருக்கிறார். போராட்டத்தைக் கைவிட வைப்பதற்கும் அமைதியான சுழலை ஏற்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் குறித்து பிரதமரின் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பங்கேற்றார்கள்.
குற்றவாளிகளுக்கு தண்டனையும், பாலியல் வன்முறைகளுக்கு எதிரான கடுமையான சட்டங்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தும் வரை இந்தப் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் போராடும் இளைஞர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இந்தப் போராட்டம் மற்ற மாநிலங்களிலும் பரவியிருக்கிறது. குறிப்பாகச் சென்னையில் அண்ணா ஹசாரே கடந்த ஆண்டு உண்ணாவிரதம் இருந்தபோது அவருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த இளைஞர்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு எதிரான போராட்டங்களையும் சென்னையில் முன்னெடுத்தார்கள். சென்னை கடற்கரையில் இது தொடர்பாக ஒரு சில பேரணிகளும் வீதி நாடகங்களும் நடந்திருக்கின்றன. திரைத்துறையினரும் சென்னையில் நடந்த போராட்டங்களில் பங்கேற்றார்கள்.
டெல்லியிலும் மற்ற மெட்ரோ நகரங்களிலும் அதிகரித்துவரும் பாலியல் பலாதகார நிகழ்வுகள் சென்னையில் மிகக் குறைவாகவே நடக்கின்றன. இதனால் ஒப்பீட்டளவில் சென்னை பெண்களுக்குச் சற்று பாதுகாப்பானது என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் சென்னையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் நடக்கும் பல பாலியல் பலாத்கார நிகழ்வுகள் பதிவாவதில்லை. இதனால்தான் சென்னை பெண்களுக்கு பாதுகாப்பானது என்ற மாயை ஏற்பட்டிருக்கிறது என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள்.
***
தில்லி சம்பவத்தையடுத்து நடைபெறும் போராட்டங்கள் ஒருபுறம் கனன்றுகொண்டிருக்க இந்தப் போராட்டங்களை நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஒவ்வொர் ஆண்டும் ஏதேனும் ஒரு பிரச்சினையைக் கையிலெடுத்துக்கொண்டு அதைப் பற்றி மேலோட்டமாகப் போராடுகிறார்கள். பிரச்சினையின் ஆழத்தையும் பன்முகத்தன்மையையும் இவர்கள் கவனிப்பதில்லை. குற்றவாளிகளை தண்டிப்பது, கடுமையான சட்டங்களை இயற்றுவது, காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பது ஆகியவை மட்டும் பெண்களுக்கெதிரான வன்முறையைத் தடுத்துவிட முடியாது. நம் சமூகமும் குடும்ப அமைப்பும் பெண்களை அணுகும் முறையை போதிப்பதிலிருந்து பிரச்சினை தொடங்குகிறது. சினிமாவும் ஊடகங்களும் அதேபோன்ற போதனைகளை முன்னெடுக்கின்றன.
இவற்றால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை 'கற்பை இழந்தவள்' என்று அவர் செய்யாத தப்புக்காக இழிவுபடுத்துவது இன்னும் தொடர்கிறது. பெண்கள் அணியும் உடை மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்குதற்கான குரல்களும், பெண்கள் வீட்டுக்குள் அடங்கிக் கிடந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற வாதங்களும், ஆண்களையும் பெண்களையும் பிரித்துவைக்கும் பழமைவாதமும் இதுபோன்ற பாலியல் பலாத்கார சம்பவங்களால் வலுப்பெறுகின்றன. அவற்றைக் கேள்விக்குட்படுத்தாமல் சட்டங்களையும் தண்டனைகளையும் பற்றி மட்டும் பேசுவது நீடித்து நிலைக்கும் தீர்வைப் பெற்றுத் தராது என்று முற்போக்குச் சிந்தனையாளர்கள் சிலர் கருதுகிறார்கள்.
தில்லி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இந்த வாதத்தின் தர்க்கத்தை நிரூபிப்பதுபோலப் பேசியிருக்கிறார்: 'அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவு நேரத்தில் நெருக்கமாக இருந்ததார். அதற்குப் பாடம் புகட்டவே இவ்வாறு செய்தோம்.'
நாளுக்கு நாள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் தலித் மற்றும் ஏழைப் பெண்களைப் பற்றி இதுநாள்வரை வாய்திறக்காமல் தலைநகரில் ஒரு படித்த நடுத்தர வர்க்கப் பெண் பாதிக்கப்பட்டதற்கு மட்டும் போராடுவது எந்த வகையில் நியாயம் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
ஈழ யுத்தத்தின் போது தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவத்தினர் கொடூரமான சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரமும் செய்தபோது ஒரு எதிர்ப்புக் குரலைக்கூட எழுப்பாத இந்திய இளைஞர்கள் டெல்லியில் நடந்த சம்பவத்துக்கு மட்டும் இத்தனை ஆக்ரோஷமாகப் போராடுவது ஏன் என்ற ஈழ ஆதரவாளர்களின் விமர்சனத்திலும் நியாயம் இருக்கிறது. .
தில்லி சம்பவத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பும் போராட்டமும் பாலியல் குற்றம் புரிவோரைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாட்டின் பல பகுதிகளிலிருக்கும் அப்பாவிப் பெண்களும் சிறுமிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் திருவைகுண்டத்தில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். பெண்களும், சிறுமிகளும் குழந்தைகளும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவது அன்றாட நிகழ்வாகத் தொடர்கிறது..
***
தில்லி மாணவிக்கு இழைக்கப்பட்ட வன்முறை இந்திய ஆண்களின் மனநிலை பற்றிய ஆழமான விவாதங்களையும் எழுப்பியுள்ளது. ரத்னா கவுர் என்ற பெண்ணியச் சிந்தனையாளர் ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில், வீட்டுக்குள் ஆண்களுக்கு அடங்கிக் கிடந்த பெண்கள் கல்வி பயில்வது, பணிக்குச் செல்வது, அதிகார மையத்தில் இடம்பிடிப்பது போன்ற விஷயங்களில் ஆண்களுடன் போட்டிபோடத் தொடங்கிவிட்டார்கள். இது ஆண்களுக்கு ஒரு விதமான் அச்ச உணர்வைத் தூண்டுகிறது. இதனால் பெண்களை மீண்டும் வீட்டுக்குள் பூட்டிவைக்கும் முயற்சியாக இந்த நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்.
இதழியல் மாணவர்கள் இருவர் ரத்னா கபூருக்கு ஆற்றியிருக்கும் எதிர்வினை மிகவும் நுட்பமான தளத்தில் இந்தப் பிரச்சினையை அணுகுகிறது. பெண்களுக்கு நிகழ்த்தப்படும் வன்முறைக்கு இந்த ஒரு காரணம்தான் இருக்க முடியும் என்று சொல்ல முடியாது என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். பெரும்பாலான பாலியல் வன்முறைகள் குடும்பங்களுக்குள் நடக்கின்றன. தலித்துகள், பள்ளிச் சிறுமிகள், இருபால் குழந்தைகள் மீதும் பாலின சிறுபான்மையினர் மீதும் ஏவப்படும் பாலியல் வன்முறைக்கு இந்தக் காரணம் பொருந்தாது. அவர்கள் ஏற்கனவே ஆண்களுக்கு அடங்கிதான் நடக்கிறார்கள். பிறகு அவர்களைக் கண்டு ஆண்கள் அச்சம் கொள்ள வேண்டிய காரணம் என்ன? என்று அந்த மாணவர்கள் கேட்கிறார்கள்.
பாலியல் பலாத்காரச் சம்பவங்களின் பின்னணியில் பன்முகக் காரணிகள் இருக்கின்றன என்பது பற்றிய புரிந்துணர்வுடன் இதை அணுக வேண்டும் என்பதையே இந்த விவாதங்கள் உணர்த்துகின்றன.
நம் சமூகத்தின் புறத் தோற்றம் நவீனமடைந்துவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன் கடிதம் அனுப்பிக்கொண்டிருந்தோம். 10 ஆண்டுகளுக்கு முன் மின்னஞ்சல் பரவலானது. இப்போது அலைபேசியில் அனுப்பப்படும் குறுந்தகவல்களுக்கு அனைவரும் பழகிவிட்டார்கள். இது புறத்தோற்றத்தில் நிலைபெற்றுள்ள நவீனத்துவத்துக்கு ஒரு சான்று.
ஆனால், நமது அகத்தோற்றம் அதாவது ஆழ்மனச் சிந்தனையும் மனப்போக்குகளும் பழமையில் ஊறியதாகவே உள்ளன. நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளையும் ஆண்மையச் சிந்தனைகளையும் அவை கொண்டிருக்கின்றன. ஆணுக்குப் பெண் அடிமை என்று நினைப்பவர்கள் படிக்காதவர்கள் மட்டுமல்ல, படித்த இளைஞர்களும்தான். ஆன்ட்ராய்ட் அலைபேசி பயன்படுத்தும் இன்றைய நவநாகரீக இளைஞன்தான் - பெண்கள் கணவனுக்குப் பணிவிடை செய்வதுதான் பெண்களின் தலையாய கடமை என்று வெட்கமின்றிப் பேசும் முகநூல் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து அங்கீகரிக்கிறான்.
புறத் தோற்றத்தில் நவீனமும் அகத்N தாற்றத்தில் பிற்போக்குத்தனமும் நிலவும் முரண்தான் இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டிருப்பதற்குக் காரணம் என்று சொல்லலாம். இந்த முரணின் மோசமான வடிவம் நடந்த வன்முறைக்கு பாதிக்கப்பட்ட பெண்ணைக் காரணமாக்குவது. டெல்லி சம்பவத்தைப் பற்றிப் பேசுபவர்களில் சிலர் அந்த நேரத்தில் ஒரு ஆண்மகனுடன் பேருந்தில் ஏன் பயணிக்க வேண்டும் என்று கேட்பது இதனால்தான். அதாவது 'நான் செய்தது தப்புதான் அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் என்னைத் தப்பு செய்யவைத்தது நீதான். விளைவுகளுக்கான் பழியை நீயும் ஏற்க வேண்டும்' என்று சொல்லாமல் சொல்லும் போக்குதான் இது. சிலர் இதை வெளிப்படையாகச் சொல்லவும் செய்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் அனு தினமும் கொட்டிக் குவிக்கப்படும் பெண்களுக்கெதிரான கருத்துக்களும் பெண்கள் படித்து பணிக்குச் செல்வது அதிகரித்துவிட்டதால் அவர்கள் சுயநலவாதிகளாகவும் திமிர்பிடித்தவர்களாகவும் ஆகிவிட்டார்கள் என்ற தொனியில் பேசப்படும் கருத்துகளும் பெண்களுக்கு எதிரான வன்முறைதான். பெண்ணைப் பாலியல் வேட்கையைத் தணித்துக்கொள்வதறகான பொருளாகவும் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டிய அடிமைகள் என்றும் நினைக்கும் சிந்தனைதான் இவற்றில் வெளிப்படுகிறது. இந்தச் சிந்தனையின் நீட்சிதான் பெண்ணை உடல் ரீதியாகத் துன்புறுத்த வைக்கிறது. உடல் ரீதியான துன்புறுத்தலின் உச்சமாக ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துவதும் அதன் பின் அவர்களைக் கொலைசெய்வதும் நடக்கின்றன.
பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் எண்ணம், பெண்கள் உடலைக் காமப் பொருளாகப் பார்ப்பது, இந்தப் பார்வையை ஊட்டி வளர்க்கும் சமூக மற்றும் ஊடகச் சூழல், ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தினால் அவளையோ அவள் சார்ந்திருக்கும் அமைப்பையோ (குடும்பம்ஃசமூகம்ஃநாடு) இழிவுபடுத்திவிட முடியும் என்ற சிந்தனை எனப் பல்வேறு காரணிகளை அலச வேண்டும். இத்தகைய மனப்பான்மைகளை விமர்சனபூர்வமாக ஆராய்ந்து சீரமைக்க வேண்டும்.
இனக் கவர்ச்சி, பாலியல் வேட்கை ஆகியவை இயற்கையின் நியதிகள். ஆனால் பெண்களை போகப் பொருளாகக் கருதுவதும் பலவந்தமாக அவர்களை அடைய நினைப்பதுமான ஆண்களின் சிந்தனை ஆணாதிக்கச் சூழலின் செயற்கையான விளைவு. அறவுணர்வற்ற வலிமையின் அதிகாரச் செயல்பாடு. மற்றவர்களின் விருப்பத்தை மீறி எதை அவர்கள் மீது திணித்தாலும் அது வன்முறைதான். இயற்கை நியதியும் நாகரிகம் சார்ந்த விழுமியங்களும் நமக்குக் கற்பிப்பது இதைத்தான். இத்தகைய போக்கில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று தோன்றுகிறது. ஆண்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டால்தான் அவர்கள் போக்கு மாறும்.
சக மனிதர்களின் உரிமைகளை மதிக்கும் பண்பை அனைவரிடமும் பெண்களையும் தங்களைப் போன்ற சம உரிமை படைத்த மனித உயிர்களாக மதித்து நடந்துகொள்ளும் பண்பை ஆண்களிடமும் சிறு வயதிலிருந்தே ஊட்டி வளர்ப்பதற்கான சூழல் சமூகத்தில் உருவாக வேண்டும். குடும்பங்கள், பள்ளிகள், பொது அமைப்புகள் ஆகிய அனைத்திலும் இதற்கான ஏற்பாடுகள் இருக்க வேண்டும். இதுபோன்ற ஏற்பாடுகளிலேயே மாற்றத்துக்கான விதைகள் உள்ளன.