'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காகப் பல்வேறு சூழ்ச்சிகள் அரச தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏழு ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்ப்பிருந்தது. அத்துடன், போனஸ் ஆசனங்களையும் பெறக்கூடிய வாய்ப்பிருந்தது. ஆனால், இவை இறுதி நேரத்தில் திட்டமிட்ட வகையில் அரச தரப்பினரால் தடுக்கப்பட்டுள்ளன.'
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கிழக்கு மக்கள் அமோக வெற்றியீட்டச் செய்துள்ளனர். கிழக்கில் தமிழ் மக்களின் பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை மக்கள் மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வாக்கு எண்ணும் மோசடி நடந்துள்ளது.
முதற்கட்ட வாக்கு கணக்கெடுப்பில் ஒரு இலட்சத்து இருபது ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்திருந்தன. அதனைத் திரும்பவும் கணக்கிடவேண்டும் என அரச தரப்பால் அறிவித்ததையடுத்து வாக்கு எண்ணும் நிலையங்களில் மோசடிகள் மறைமுகமாக இடம்பெற்றுள்ளன.
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகளை அங்கு நின்ற அதிகாரிகளும், அரச தரப்பினரும் செய்துள்ளனர். இதன் பின்னர் ஒரு இலட்சத்து நாலாயிரத்து அறுநூற்று எண்பத்திரண்டு வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்ததாக அறிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 7 ஆசனங்கள் கிடைக்க இருந்த நிலையில் இந்த மோசடியின் மூலம் ஒரு உறுப்பினர் குறைக்கப்பட்டு அரச தரப்புக்கு ஒரு ஆசனம் கூட்டப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அபகரிக்கப்பட்ட அந்த வாக்குகள் மூலம் கிடைத்த உறுப்பினர் பதவி தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என அரச மேலிடம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அரச தரப்பில் அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஆறாவது இடத்திலிருந்த பிள்ளையான் திடீரென முதலாம் இடத்திற்கு கொண்டுவரப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிள்ளையானால் எப்படி இருபது ஆயிரத்திற்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற முடிந்தது? ஆறாம் இடத்தில் இருந்த பிள்ளையான் எப்படி முதலாம் இடத்திற்கு வந்தார் என்ற சந்தேகம் மட்டக்களப்பில் உள்ள பெரும்பாலான முஸ்லிம், தமிழ் மக்களிடம் காணப்படுகிறது.
பிள்ளையான் விருப்பு வாக்கில் தோற்றுப்போனதைக் கண்டவுடன் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து அதாவது தேர்தல் தினமான சனிக்கிழமை இரவே வெளியேறியிருந்தார். பின்னர் முதலாம் இடத்திற்கு வெல்லவைக்கப்பட்ட பின்னர் கொழும்பிலிருந்து அரச உயர்மட்டம் தொலைபேசியில் கூறியதன் பின்னரே அவர் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வந்தார் என எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியான பின்னரே தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்கள் ஊடாக இதனை நாம் அறிந்துகொண்டோம். முன்னர் நமக்கு தெரிய வந்திருந்தால் தேர்தல் ஆணையாளருடன் தொடர்புகொண்டு உடனே நாம் பெறுபேறுகளை நிறுத்தி வைத்திருப்போம்.
மட்டக்களப்பில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்புக்கு ஏழு ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்ப்பிருந்தது. அத்துடன், போனஸ் ஆசனங்களையும் பெறக்கூடிய வாய்ப்பிருந்தது. ஆனால், இவை இறுதி நேரத்தில் திட்டமிட்ட வகையில் அரச தரப்பினரால் தடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கிழக்கு மக்கள் அமோக வெற்றியீட்டச் செய்துள்ளனர். கிழக்கில் தமிழ் மக்களின் பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை மக்கள் மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளனர்.
இதன்மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, அவர்களின் அபிலாஷைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கிழக்கு தமிழ் மக்கள் கோரியுள்ளனர்.
இராஜதந்திர ரீதியிலான விடுதலைப் போராட்டத்துக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் தங்களது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.
கூட்டமைப்பை ஆட்சியமைக்கச் செய்யவிடாமல் திட்டமிட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிக ஆசனங்கள் வருவதும் தடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சந்தர்ப்பம் வரும்போது மக்களுக்குத் தெரிவிப்போம்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இந்த அரசுக்கு சிறந்த செய்தியை வழங்கியுள்ளது. தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வுத்திட்டத்தை வழங்கவேண்டும் என்ற செய்தியை இந்த அரசுக்கு வழங்கியுள்ளது.
அத்துடன், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாக்களிப்பு நிலையம் சென்று வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் ஆதரவாளர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.