'ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேராமல் ஜனநாயக மக்கள் முன்னணி தனித்து அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டால் அக் கட்சியில் உள்ள சில தமிழ் உறுப்பினர்களுக்கு ஒருவிதமா காய்ச்சல் பிடிக்கும். இந்தக் காய்ச்சலுக்கு ஒருவிதமான மனோ வியாதிதான் காரணம். இந்த மனோ வியாதியின் பெயர் மனோ கணேசன் வியாதி ஆகும். ஆனாலும் அதற்கு மனோ வைத்தியர்தான் மருந்து கொடுக்க முடியும். இந்த மனோ கணேசனால் ஒன்றும் செய்ய முடியாது' என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
'ஐக்கிய தேசிய கட்சி விதிக்கும் நிபந்தனைகளுக்கு இணங்கி அவர்களுடன் சேர்ந்து நாம் தேர்தல்களில் போட்டியிட்டால் சரி, இல்லாவிட்டால் நாம் தமிழ் வாக்குகளை உடைக்கின்றோம், அரசாங்கத்துடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளோம் என்றெல்லாம் வாய்கூசாமல் பதுளையிலிருந்தும், கொழும்பிலிருந்தும், நுவரேலியாவிலிருந்தும் கூச்சல் எழுப்புவது இவர்களது வாடிக்கை.
இந் நாட்டில் அதிலும் குறிப்பாக தென்னிலங்கையில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களின் வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எழுதி பட்டா போட்டு கொடுத்து விட்டதைப் போல்தான் இந்த ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் நினைக்கிறார்கள். இவர்கள் கண்ணை திறந்து பார்க்கவும், காது கொடுத்து கேட்கவும், அறிவை பயன்படுத்தி சிந்திக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் தலைமையில் கொழும்பு பாமன்கடை பணிமனையில் நடைபெற்ற ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், எனக்கும் இடையிலான நல்லுறவு இன்றும் இருக்கிறது. இந்த தேர்தலில் நாம் எடுத்த முடிவு தொடர்பில் அவருக்கு நாம் எடுத்துக்கூறி இருக்கிறோம். இந்த நிலைப்பாடு எதிரணி கூட்டமைப்பில் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்பதில் நாம் இருவரும் உறுதியாக இருக்கிறோம்.
எதிரணி செயற்பாடு என்பதற்காக எமது மக்களின் பிரதிநிதித்துவ உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதையும், அதற்கு சப்ரகமுவையில் நாம் சமர்பித்துள்ள பொதுப்பட்டியல்தான் ஒரே வழி என்ற எமது நிலைப்பாடு பற்றியும் நான் அவருக்கு புள்ளி விபரங்களுடன் எடுத்துக்கூறி விட்டேன். அத்துடன் அந்த பிரச்சினை முடிந்துவிட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியில் சில தமிழர்கள் இருக்கிறார்கள். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் தவிர ஏனையவர்களுக்கு எங்கள் மீது படும் எரிச்சல். அதற்குத்தான் இந்த மனோ கணேசன் வியாதி என்று பெயர். அதனால்தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள். கடந்த கொழும்பு மாநகரசபை தேர்தலின் போதும் இவர்கள் இப்படிதான் பேசினார்கள்.
கொழும்பில் வாழும் தமிழ் வாக்குகளை உடைத்து எடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாகம் கொழும்பு மாநகரசபையில் ஏற்படாவண்ணம் நாம் தடை செய்கிறோம். அரசாங்கத்துக்கு இரகசியமாக துணை போகிறோம் என்று சொன்னார்கள். பத்திரிக்கைகளில் தொலைகாட்சிகளில் இத்தகைய கருத்துகளை தெரிவித்தார்கள்.
ஆனால் இறுதியில் இன்று என்ன நடந்துள்ளது? தேர்தல் முடிந்ததும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எனக்கு எழுத்து மூலமாக எழுதி எமது கட்சியின் ஆதரவை கொழும்பு மாநகர சபையில் கோரினார். அதை நாம் கொள்கை அடிப்படையில் வழங்கியுள்ளோம்.
கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சி தனது நிர்வாகத்தை கொண்டு செல்வதற்கு தேவையான மிக முக்கியமான பெரும்பான்மை பலத்தை எமது கட்சிதான் இன்று வழங்குகிறது. அதை கொழும்பு மேயர் முசாமில் பகிரங்கமாக விசேட ஊடகவியலாளர் மாநாடு நடத்தியே கூறிவிட்டார். 53 உறுப்பினர்கள் இருக்கும் மாநகரசபையில், ஐக்கிய தேசிய கட்சியின் பலம் 24. இன்று எமது 06 உறுப்பினர்களின் ஆதரவுடன் 30 பேர் கொண்ட பெரும்பான்மை பலத்தை, ஐக்கிய தேசிய கட்சி மேயர் நண்பர் முசாமில் பெற்றுள்ளார்.
இதன்மூலம் இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி வசம் உள்ள ஒரேயொரு மாநகரசபையில் அக் கட்சியின் நிர்வாகத்தை நாமே உறுதிபடுத்தியுள்ளோம்.
அரசாங்கத்துக்கு ஆதரவாக நாம் தமிழ் வாக்குகளை உடைக்கிறோம் என்று பலர் சொன்னார்கள். நிதி கைமாறிவிட்டது, தேர்தல் முடிந்ததும் இதோ, மனோ கணேசன் அரசாங்கத்துக்கு ஆதரவாக கொழும்பு மாநகரசபையை சீர்குலைக்க போகிறார் என பத்திரிக்கைகளில் பொறுப்புவாய்ந்த சிலர் எழுதினார்கள். அவ்விதமாக எம்மை பார்த்து அபாண்டமாக பேசி எழுதியவர்களுக்கு இன்று தாங்கள் சொன்ன அந்த வார்த்தைகளையே பொறுக்கி சாப்பிடும் பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் நான் ஒரு நெருப்பு. எமது கட்சியில் இருந்து எவர் போனாலும், எவர் வந்தாலும் நான் எமது கட்சியின் தலைவன் என்ற முறையில் எனது கட்சியை தன்மானத்துடன் வழி நடத்துகிறேன். கொடும் யுத்தம் செய்து தமிழர்களை கொன்று குவித்து, இன்று இந்த நாட்டிலே காட்டாட்சி நடத்திவரும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை நான் ஒருபோதும் ஓய மாட்டேன்.
கொழும்பு இலங்கையின் தலைநகரம். இதன் ஆட்சியதிகாரம் அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது. மிகப்பெரியவர்களும், இடைத்தூதர்களும் என்னிடம் பேரம் பேசி பார்த்தார்கள். ஆனால் நான் உடன்படவில்லை. ஏனென்றால் துரோக அரசியல் செய்ய எனக்கு தெரியாது. நான் முஸ்லிம் மக்களின் நண்பன். நண்பர் முசாமில், கொழும்பு வாழ் முஸ்லிம் மக்களின் ஒரு முக்கியமான தலைவர். அவருக்கு அளித்த வாக்குறுதி நான் முஸ்லிம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியாகும். ஐக்கிய தேசிய கட்சி எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் இழைத்துள்ளது. ஆனால் நான் ஒருபோதும் வாக்கு தவறமாட்டேன்.
எமது கட்சி தமிழ் மக்களுக்கு எது சரியோ அந்த முடிவை, ஏனைய சகோதர மக்களுக்கு பாதகம் ஏற்படாவண்ணம் துணிச்சலாக எடுக்கும். அதுதான் தலைமை. இன்று இரத்தினபுரியிலும், கேகாலையிலும் நமது கட்சி இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளுடன் இணைந்து முன்னெடுக்கும் தேர்தல் செயற்பாடு மிக சரியானது. இதன்மூலம் மாத்திரமே அங்கு அரசியல் அனாதைகளாக வாழும் நமது மக்களுக்கு சொந்த பிரதிநிதித்துவம் கிடைக்கும். வேறு வழி கிடையாது. தேர்தலின் பின் தமிழ் பிரதிநிதித்துவம் கிடைத்தவுடன், இன்று எம்மை ஏளனம் செய்பவர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்பதை நாம் இருந்து பார்க்கத்தான் போகிறோம்' என மனோ கணேசன் மேலும்; தெரிவித்துள்ளார்.