முஸ்லிம் சமூகம் தனது சமயத்துக்கும் இருப்புக்கும் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூக நலனை முன்வைத்து அரசுடன் முரண்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அதனை நாம் வரவேற்கலாம். ஆனால், வேட்பாளர் பட்டியலுக்காக மு.கா. முரண்பட்டு தனித்து போட்டியிடுகிறது என்றால் இக்கட்சி சமூகத்துக்கான கட்சியா?
இவ்வாறு உலமா கட்சித் தலைவரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருமான முபாறக் அப்துல் கேள்வி எழுப்பியுள்ளர்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
குறுநில மன்னரான அதாவுல்லாவிடம் தோற்றுப்போன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் அமைச்சுப் பதவியில் ஒட்டியிருப்பது பாரிய வங்கரோத்து நிலையாகும். அதுவும் ஒரு பிரதேசத்தில் மட்டும் செல்வாக்குள்ள அதாவுல்லாவின் முன்பாக முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குப்பலம் கொண்ட தேசிய கட்சி எனக் கூறிக்கொள்ளும் மு.காவின் (முஸ்லிம் காங்கிரஸின்) தலைமை தோற்றுப்போயுள்ளது என்பது பரிதாபமானது.
இந்த அரசில் அதாவுல்லா, ரிசாத் பதியுதீனை விட ஹக்கீமுக்கே மதிப்பு அதிகம் என பெருமையாக கூறி தம்மையும் மக்களையும் ஏமாற்றிக்கொண்டிருந்த மு.கா.வினருக்கு இதன் மூலம் பாரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய அவமானப்படுத்தலுக்கு பிறகும் ஹக்கீம் ஏதோ ஒன்றில் ஒட்டிய 'ஈ' போன்று அமைச்சரவையில் ஒட்டியிருப்பது முஸ்லிம் சமூகத்துக்கும் பாரிய தலைகுனிவாகும்.
இதனையும் சமாளிக்கும் வகையில் ஹக்கீம் அரசிலிருந்து விலகினால் மு. கா எம்.பிக்கள் சிலர் அரசில் ஒட்டிக்கொள்வார்கள் எனப் பயப்படுவதாக இவர்கள் சொல்வதன் மூலம் இவர்களின் கட்சிக்கு அடித்தளமாக மக்கள் இல்லை என்பதையும் சில தனிநபர்களும் அமைச்சுப் பதவிகளும்தான் கட்சியை தாங்கிக்கொண்டிருக்கின்றன என்று இவர்கள் ஏற்றுக்கொள்வதாக அர்த்தமாகும்.
அவ்வாறெனில் அதாவில்லா, ரிசாத், பாயிஸ் போன்றோர் மு. காவிலிருந்து பிரிந்து அரசில் ஒட்டிக்கொண்டபோது இவர்கள் எவ்வளவு துரோகமிழைத்தாலும் மக்கள் எம்மோடு இருக்கிறார்கள் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் பேசிய வார்த்தையில் அவர்களுக்கே இன்று நம்பிக்கை இல்லை என்பதுதான் தெளிவாகின்றது.
எம்மைப் பொறுத்தவரை தம்புள்ள தொடக்கம் தெஹிவளை வரையான பேரினவாத அத்துமீறல்களை முஸ்லிம் சமூகம் எதிர்க்கிறது என்ற செய்தியை இந்தத் தேர்தல் மூலம் நாம் ஜனநாயக முறைப்படி சொல்ல வேண்டுமாயின் வெற்றிலைக்கு அல்லது அரசில் ஒட்டியிருக்கும் மு. காவின் மரத்துக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு போதும் முடியாது.
மாறாக நமது வாக்குகளை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்குவதன் மூலமே முஸ்லிம்களின் வாக்குகள் ஏன் திசை திரும்பின என்ற பலத்த கேள்வியை தோற்றுவித்து இனியும் பள்ளிவாசல்கள் மீது கை வைக்கும் நிலையைக் கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு உலமா கட்சித் தலைவரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளருமான முபாறக் அப்துல் தெரிவித்துள்ளார்.