வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் உள்ள சிறிலங்கா படைத்தரப்பினரின் ஆதிக்கம் ஒழியும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய நிலத்தில் நாங்கள் உரிமையுடன் வீடுகளைக் கட்டி வாழவும், எங்கள் நிலத்தை நாங்கள் ஆள்வதற்குமான அத்தனை உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக இந்தப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம் என அவர் கூறியுள்ளார்.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிறிலங்கா அரச இயற்திரத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நேற்று திருமுறிகண்டி ஆலய முன்றிலில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் பொதுமக்களின் காணிகள், வீடுகளில் எல்லாம் சிறிலங்கா படைத்தரப்பினர் இருக்கின்றார்கள். மக்களின் வயல் காணிகள், விவசாய நிலங்கள் மற்றும் கடற்பகுதி என நிலங்கள் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சிறிலங்கா படைத்தரப்பினர் நிலை கொணடுள்ளனர்.
உண்மை இவ்வாறிருக்க பொதுமக்களின் காணிகளில் இருந்து படைத்தரப்பினர் வெளியேறி விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
சுயநிர்ணய உரிமைக்கான உரித்துடைய குடிசனப் பரம்பலை தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள் என்பதை இல்லாமல் செய்வதற்காகவே, சிறிலங்கா அரசாங்கம் படைத்தரப்பினர் ஊடாகவும், பௌத்த விகாரைகளை அமைப்பதன் ஊடாகவும் எமது காணிகளையும் நிலங்களையும் கையகப்படுத்தி எமது மக்களை இன்னும் அகதிகளாக்கிக் கொண்டிருக்கின்றது.
அத்துடன் எமது வாழ்வுரிமையை படைத்தரப்பு ஊடாகவும், பௌத்த மத குருமார்களின் ஊடாகவும் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு அழித்து வருகின்றது. எங்களுடைய காணிகளை ஆக்கிரமித்து, தங்களுக்கான குடியிருப்புக்களையும், பௌத்த விகாரைகளையும், படை முகாம்களையும் அமைத்து வருகின்றார்கள். இதனால் இலட்சக் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தமது சொந்த நிலங்களில் மீளக்குடியேற முடியாமல் இருக்கின்றனர்.
தமிழ் மக்களுடைய பண்பாடு, கலாசாரம், அவர்களுடைய நில உரிமை, வாழ்வுரிமை, ஜனநாயக உரிமைளை இல்லாமல் செய்கின்ற இன அழிப்பு நடவடிக்கைகளில் படைத்தரப்பின் ஊடாகவும், பௌத்த குருமார்களின் ஊடாகவும் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது.
சிறிலங்கா அரச இயந்திரத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் வாழ்வுரிமை மாநாட்டைக் கூட்டி, இவ்வாறான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் இல்லாமல் ஒழியும் வரை நாங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்போம்.
எங்கள் நிலத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும். எங்கள் நிலத்தில் இருந்து சிறிலங்கா படைத்தரப்பு வெளியேற வேண்டும். எங்கள் நிலத்தை நாங்கள் ஆள வேண்டும் என்பதற்காக நாம் மிகப்பெரிய அளவில் வாழ்வுரிமை மாநாடு ஒன்றை விரைவில் நடத்தப் போகிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்லாமல், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், ஜனநாயகவாதிகள், முற்போக்குவாதிகள் எல்லோரையும் அழைத்து இந்த மாநாட்டைக் கூட்டி அதிலே முடிவெடுத்துவிட்டு அது குறித்து நாங்கள் சர்வதேசத்திற்கு அறிவிப்போம்' என மாவை சேனாதிராஜா தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.