Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வெற்றியைக்கொண்டாடுவோம்! போராட்டத்தைத் தொடர்வோம்! ம.செந்தமிழன்

வெற்றியைக்கொண்டாடுவோம்! போராட்டத்தைத் தொடர்வோம்! ம.செந்தமிழன்

 

தைப் புரட்சி நாயகர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு நூற்றாண்டில் நிகழாத சமூகக் கிளர்ச்சியை நாம் செய்துள்ளோம். புவியெங்கும் உள்ள மரபு மீட்பர்கள், இயற்கை விரும்பிகள், பன்னாட்டு நிறுவன எதிர்ப்பாளர்களுக்குப் பாடம் நடத்தும் வகையிலான போராட்டத்தை அரங்கேற்றியுள்ளோம். ஒன்றுக்கும் உதவாத சட்டமன்றத் தீர்மானத்தையே மாபெரும் சாதனையாகப் பேசி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளை ஓரங்கட்டி, ஒரே நாளில் அவசரச் சட்டத்தையே இயற்றச் செய்துள்ளோம்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலையைக் கண்காணிப்பதையும், அதைப் பற்றி இந்திய அரசுக்கு அறிக்கை தருவதையும் தனது கடமை எனக் கருதும் ஆளுனரை அந்தச் சட்டத்தில் கையொப்பமிடச் செய்துள்ளோம். ‘இந்திய அரசே உன் ஆதிக்கத்தை நிறுத்து. நாங்கள் தமிழர்கள். ஏறு தழுவல் எம் உரிமை’ என்றெல்லாம் தமிழினத்தின் உரிமை முழக்கங்களைத் துணிச்சலாக எழுப்பினோம், எழுதினோம், பேசினோம், பாடி ஆடினோம். ஆனாலும் ஆளுனர் தன் உரையில், ‘இளைஞர் போராட்டம்தான் இந்தச் சட்டத்தை உருவாக்குவதற்கான காரணம். அவர்களைப் பாராட்டுகிறேன்’ என்று குறிப்பிடும் நிலையை உருவாக்கிவிட்டோம்.

‘இந்தியா ஒரே தேசம். இங்கே தமிழர்களுக்கென தனிப் பண்பாடு இல்லை. இந்தியப் பண்பாடு, இந்துப் பண்பாடு’ என்றெல்லாம் வாய்ச் சவடால் அடிக்கும் இந்துத்துவ வெறியர்களின் தலைவர் மோடி, ‘தமிழர்களின் பண்பாட்டை எண்ணி வியக்கிறேன், மதிக்கிறேன்’ எனத் தலைவணங்கும் வாசகங்களை வெளியிடச் செய்தோம்.

புரட்சி என்றால் என்ன? அதன் அங்க அடையாளங்கள் யாவை? என்று வகுப்பெடுக்கும் பலருக்கு நாம் மிக அழகாகப் பாடம் நடத்திக் காட்டியுள்ளோம்.

’திரைப்பட அடிமைகளின் கூட்டம் இது’ என்று நம்மை நாமே இகழ்ந்துகொண்ட காலம் இருந்தது. திரைப்பட நடிகர்கள் முகத்தை மூடிக்கொண்டு வந்து நம்மை வேடிக்கை பார்க்கும் விகிதத்தை இயற்றினோம். ‘அரசியல்வாதிகளிடம்தான் இந்தச் சமூகத்தை அடக்கி ஆளும் சக்தி இருக்கிறது’ என்ற கட்டுக் கதையை அனைவரும் சேர்ந்துகொளுத்தி விட்டோம்.

நாம் இலட்சக் கணக்கில் கூடினோம். நமது வாழ்க்கை, மருத்துவம், உணவு, நீர், வேளாண்மை, கல்வி ஆகியவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டோம். நமது எதிர்காலத்தை நிதானமாகத் திட்டமிட்டோம், நம்பிக்கை பகிர்ந்தோம். இனம், மொழி, பண்பாடு, மரபு ஆகிய அனைத்துப் பாடங்களையும் நம் குடும்பத்துப் பிஞ்சுகளுக்கு நடத்தினோம். உணவு பரிமாறினோம், தாகம் தணித்தோம், துப்புரவு செய்தோம், கண்ணியம் காத்தோம். தமிழர்கள் என்றால் பண்பாடு மிக்க மனிதர்கள் என்ற நற்பெயரைக் காலத்தின் கல்வெட்டில் பதித்தோம். இன்னும் பல ஆண்டுகளுக்கு நம் பெருமையை இந்த பூமியின் சமூக இயக்கங்கள் பாடும்.

பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து நாட்டு மாடுகளை அழிக்கும் சதியை அம்பலப்படுத்தினோம். விந்து ஊசி என்ற பேரில் சீமைக் காளைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தோம். நமது மரபுக் கால்நடைச் செல்வங்களைக் காப்பதற்கான மனவுறுதியை ஏற்றோம். நமது நிலம் இனி நமக்கான உரிமைக் களம் என்ற விதியை வகுத்தோம்.

இந்திய விலங்குநல வாரியத்தின் திருவான்மியூர் அலுவலக வாசலுக்கே சென்றோம். அந்த அமைப்பைக் கண்டித்து முழங்கினோம். சீமைக் காளைகளை இறக்குமதி செய்து வைத்துள்ள இந்திய அரசின் பள்ளிக்கரணை மையத்துக்குச் சென்றோம். அந்த மையத்தின் மூத்த அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். உங்கள் துறை ‘நாட்டு மாடுகளை அழிக்கிறது, சீமைக் காளைகளையும் கொடுமைப்படுத்துகிறது’ என நேரடியாக்க் குற்றம் சாட்டினோம்.

சுருக்கமாகச் சொல்வதானால், ‘நாமெல்லாம் இணைந்து ஒரு புத்தம் புது சமூகத்தை உருவாக்கும் விருப்பத்தை’ ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டோம். அந்த விருப்பமும் எல்லாம் வல்ல இறையால் நிறைவேற்றப்படும்.

இந்த அவசரச் சட்டமல்ல நாம் கேட்டது. ஆனாலும், நமது போராட்டத்தின் பயணத்தில் ஒரு படி முன்னேற்றத்தை இச்சட்டம் காட்டி நிற்கிறது. இந்திய விலங்கு நல வாரியம் மற்றும் இந்திய அரசின் பால்வளத் துறை, சுற்றுச் சூழல் துறை ஆகியவற்றின் பிடியிலிருந்து தமிழ்நாட்டுக் கால்நடைச் செல்வங்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான இலக்கு. காட்சிப்படுத்தற்குரிய விலங்குகளின் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும். இதுதான் சட்டப்படி நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமை.

தமிழக அரசின் எந்தச் சட்டத்தையும் இந்திய அரசு மதிப்பதில்லை என்பதைக் கடந்த காலம் காட்டி நிற்கிறது. அதேபோல் இப்போதும் நிகழும் வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், இனியும் அவர்கள் நமது ஏறு தழுவலுக்கு எதிராகவோ நாட்டுக் கால்நடைகளுக்கு எதிராகவோ செயல்பட்டால் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் களத்தில் இறங்கி நிற்போம். இதை அவர்களும் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

’ஒன்று, இந்திய சட்டத்தைத் திருத்துங்கள் அல்லது தமிழர்களாகிய நாங்கள் உங்கள் சட்டத்தைப் பற்றிக் கவலைகொள்ளாமல் எங்கள் மரபு உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வோம்’ என்ற உணர்வை நம் மனதில் பதிக்க வேண்டும். இந்த உணர்வு நம்மைப் போராடத் தூண்டும். இதே உணர்வு நம் போராட்டத்தை வழி நடத்தும்.

மெரினாவில் இன்று காலையிலிருந்து கூடியிருந்த நம் மக்கள் பாதுகாப்பாகத் திரும்ப வேண்டும் என்ற பதட்டம் உங்களைப்போலவே எனக்கும் இருந்தது. மயிலாப்பூர் துணை ஆணையர் திரு.பாலகிருஷ்ணனிடம் ஒப்புதல் பெற்று, கடற்கரைக்குச் சென்றிருந்தேன். ஆன்ந்த் செல்லையா, திருமுருகன், பாவணகுமார் ஆகிய செம்மைக் குடும்பத்தினர் உடன் வந்தனர். எப்படியாவது நம் மக்களைப் பாதுகாப்பாக வீடு திரும்பச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் எங்களை அங்கே விரட்டியது. இறைச் செயலாக, நாங்கள் செல்லும்முன்பே அங்கிருந்த மக்களில் பெரும்பகுதியினர் கலைந்து வரத் துவங்கினர். உள்ளே இருந்த பால்கிரிகோரி, நரேஷ் ஆகிய செம்மைக் குடும்பத்தினரையும் பிறரையும் இன்முகத்துடன் கண்டபோது நிம்மதியடைந்தோம்.

இன்னும் பலர் கடற்கரையில் இருக்கிறார்கள். அவர்களும் நலமுடன் திரும்ப வேண்டும் என்பது நம் வேண்டுதல்.

அடுத்தடுத்த வடிவங்களில் நமது கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்புவோம். இத்தோடு முடித்துக்கொள்வதில் நமக்குச் சம்மதமில்லை, அது சாத்தியமும் இல்லை. நிச்சயமாக நம் அனைவருக்குள்ளும் நல் உணர்வுகள் இறங்கிவிட்டன. அந்த உணர்வுகள் நம்மைக் களத்திற்கு அழைத்துக்கொண்டுதானிருக்கும்.

இப்போது கிடைத்திருக்கும் சட்டம் வெற்றியல்ல. இந்தச் சட்டம் வரும் வரை நாம் அனைவரும் ஒன்று கூடி நின்றோமே அதுதான் மிகப் பெரிய வெற்றி. இந்த வெற்றியைக் கொண்டாடுவோம். நமது உண்மையான விருப்பங்களை நோக்கிப் போராடுவோம்!

1/23/2017 11:35:38 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்