சிரியாவில் இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என உடன்பாடு காணப்பட்டுள்ளதாக சிரிய விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரேபிய லீக்கின் சிறப்புத் தூதுவர் கொபி அனான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறு அமைக்கப்படும் இந்த இடைக்கால அரசாங்கத்தில் அரச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற முக்கிய வல்லரசு நாடுகளுக்கு அடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் கொபி அனான் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஆறு அம்சத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் உடனடியாக போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'சிரியாவில் இடம்பெறும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளும், மனிதவுரிமை மீறல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
சிரியாவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்கள் அனுமதி வழங்கப்படுவதுடன், சர்வதேச ஊடகவியலாளர்கள் சிரியாவுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது என அமெரிக்க இராஜங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, முன்மொழியப்பட்ட இடைக்கால அரசாங்கம் தொடர்பாக எந்தவித முன்நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜெல் லவ்ரோ கூறியுள்ளார்.
சிரிய தொடர்பான நடவடிக்கை குழுவின் மாநாட்டில் மேற்கத்தேய வல்லரசு நாடுகளுடன் ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் இந்த ஜெனிவா மாநாட்டில் கலந்து கொண்டன.
இதனிடையே சிரிய தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியொன்றில் படைத்தரப்பினர் மேற்கொண்ட மோட்டார் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
சிரியாவின் அரசியல் நெருக்கடி தொடர்பில் வெளியாரின் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அந்நாட்டு ஜனாதிபதி பசார் அல் அசாத் நேற்று முன்தினம் ஈரானிய தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
சிரிய ஜனாதிபதி அல் பசார் அசாத்துக்கு எதிராக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இடம்பெற்று வரும் கிளர்ச்சிகளில் சுமார் 15,800 பேர் வரை இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக மனிதவுரிமை ஆர்வலர்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.