டெசோ மாநாட்டில் தமிழீழத்தை வலியுறுத்தி தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாது என தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி அறிவித்திருந்த நிலையில், ஈழத்தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம் என்ற தீர்மானத்தையாவது அந்த மாநாடு குறைந்த பட்சம் நிறைவேற்ற வேண்டும் என பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், துயரங்களுக்கும் மருந்து போடவே டெசோ மாநாடு நடத்தப்படுவதாக கருணாநிதி நேற்றுக் கூறியிருந்தார்.
இந் நிலையில், டெசோ மாநாடு குறைந்தபட்சம் கீழ்வரும் தீர்மானங்களையாவது நிறைவேற்ற வேண்டும் என பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி வலியுறுத்தியுள்ளார்.அத் தீர்மானங்களாவன:
1. ஈழத்தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம்
2. தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரிமை அவர்களுக்கு உண்டு.
3. 2009ஆம் ஆண்டு இறுதிப் போரில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே.
4. இனப்படுகொலைகள் நடந்த நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையே முன்முயற்சி எடுத்து வாக்கெடுப்பு நடத்தியதைப் போல் ஈழத்தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழத்தமிழ் மக்களுக்கு பயன்தரும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளையாவது டெசோ மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டும் என கொளத்தூர் மணி வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாநாடு தொடர்பாக பல விமர்சனங்கள் வந்தாலும் நம் கடன் தமிழர்க்கு பணி செய்து கிடப்பதே என்று தி.மு.க.வால் முடிந்தவரை ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம் என கருணாநிதி நேற்றுக் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, டெசோ மாநாட்டுக்கு தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் மற்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.