'கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் இரத்தினபுரியிலும், கேகாலையிலும் குறைந்த பட்சமாக 20,000 வாக்குகளைப் பெறவேண்டி இருந்தது. இந்த வாக்குத் தொகையை இரத்தினபுரி, கேகாலை ஆகிய குறைந்த தமிழ் வாக்காளர் தொகை கொண்ட மாவட்டங்களில் ஒருபோதும் பெற முடியாது. எனவே, பெரிய தேசிய கட்சிகளின் பட்டியல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரத்தினபுரியிலும், கேகாலையிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெறவும் முடியாது.
ஆனால் ஜேவிபி இரத்தினபுரியில் 9,703 வாக்குகளையும், கேகாலையில் 9,365 வாக்குகளையும் பெற்று இந்த இரண்டு மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆசனங்களை வென்று இரண்டு ஆசனங்களை சப்ரகமுவ மாகாண சபையில் கொண்டிருந்ததது.
இந்த இரண்டு ஆசனங்களும், சிறிய கட்சிகளுக்கு சாதகமான மிகுதி வாக்கு தெரிவு என்ற அடிப்படையில் பெறப்பட்டன. இதுதான் இன்று நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டம். இந்த உண்மைகள் நமது கண்களைத் திறக்க வேண்டும்' என தன்னைச் சந்தித்த இரத்தினபுரி மாவட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் ஆசிரியர் எம். சந்திரகுமார் தலைமையிலான இரத்தினபுரி மாவட்ட ஆசிரியர் குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
'இந்தப் புள்ளிவிபரங்களை நான் தரவில்லை. இவை தேர்தல்கள் திணைக்களம் தருகிறது. இதைவிட விளக்கம் தேவையா? எனவேதான் நான் சொல்கிறேன், இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் சுமார் 10,000 வாக்குகளை பெற்றாலும் நாம் வெற்றி பெறலாம். இந்த அடிப்படை உண்மையை சப்ரகமுவவை சேர்ந்த ஆசிரியர்கள் தமிழ் வாக்காளர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
கடந்தமுறை ஐ.தே.க சின்னத்தில் ஐக்கிய தேசிய முன்னணியாக நமது கட்சி போட்டியிட்டது. சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்பட்டவுடன், ஐ.தே.க பொதுச் செயலாளர் எம்மைத் தொடர்பு கொண்டு இம்முறையும் அந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அதை நாகரிகமான முறையில் மறுத்து தவிர்த்துக் கொண்டோம். இதுவெல்லாம் அக்கட்சியில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாது. அதற்கு நாம் ஒன்றும் செய்யவும் முடியாது.
உண்மையில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் எமது ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் இருவர், கடந்தமுறை ஐ.தே.க சின்னத்தில் போட்டியிட்டார்கள். இருவரும் இரண்டு மாவட்டங்களிலும் ஆளுக்கு சுமார் 10,000 விருப்பு வாக்குகள் எடுத்தார்கள். தமிழ் வேட்பாளருக்கு அளிக்கப்படும் ஒரு விருப்பு வாக்குப் போக மீதமாகும் தமிழ் வாக்காளர்களின் மற்றைய இரண்டு விருப்பு வாக்குகளை எடுப்பதில் ஐ.தே.க.வின் பெரும்பான்மை இன வேட்பாளர்கள் மும்முரமாக இருந்தார்கள். எமக்கு சிங்கள வாக்காளர்களின் விருப்பு வாக்குகள் கிடைக்கவில்லை. தமிழ் வேட்பாளர்களுக்கு சிங்கள மக்களின் விருப்பு வாக்குகளையும் பெற்றுத் தருவதாக சொன்ன ஐ.தே.க தலைவர்களாலும் அதைச் செய்ய முடியவில்லை. அவர்கள் முயன்றாலும் அது நடக்கவில்லை. ஏனெனில் விருப்பு வாக்கு போட்டியில் அவரவர் வெற்றி பெறுவதையே, ஐ.தே.க.வின் பெரும்பான்மை இன வேட்பாளர்கள் ஒரே நோக்கமாக கொண்டிருந்தார்கள்.
எனவே நமது வேட்பாளர்கள் விருப்புவாக்கு வரிசையில் கீழே இருந்ததால் வெற்றி பெறவில்லை. பெரும்பான்மை இன வேட்பாளர்களுக்கு வாக்கு வாங்கி கொடுத்ததுதான் மிச்சம். தமிழ், சிங்கள வாக்காளர்களின் வாக்களிக்கும் முறைமைபற்றி நாம் அனுபவரீதியாக அறிந்து கொண்டோம். இதன்மூலம் எமக்கும் பட்டறிவு இருக்கிறது.
இந்த முறையும் ஐ.தே.க.வில் அல்லது ஆளும்கட்சியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு அந்தக் கட்சி அரசியல்வாதிகள் சிங்கள வாக்காளர்களின் விருப்பு வாக்குகளையும் முடியுமானால் பெற்று கொடுத்து அவர்களை வெற்றி பெற வைக்கட்டும். நமது பட்டியலிலும், ஐ.தே.க மற்றும் ஆளும்கட்சி பட்டியலிலும் என ஒன்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் வெற்றி பெறட்டுமே. யார் வேண்டாம் என்கிறார்கள்?
ஆனால் ஐ.தே.க அல்லது ஆளும் கட்சி பட்டியலில் ஆக, தமிழ் வாக்குகளை மாத்திரம் பெற்று தமிழ் வேட்பாளர்கள் வெற்றிபெற முடியும் என உண்மைக்கு மாறான தகவல்களைத் தர வேண்டாம் என்றுதான் நான் சொல்கிறேன். அங்கே, 20,000 வாக்குகளுக்கு மேலே எடுத்தால்தான் வெற்றி பெற முடியும். ஆனால் நமது தனித்துவமான சின்னத்தில் 10,000 வாக்குகள் எடுத்தாலும் வெற்றி பெறலாம். இந்த உண்மையை எடுத்து சொன்னால் என்னைச் சிலர் விமர்சிக்கிறார்கள்.
இந்த சிலரது தவறான வழிகாட்டல் காரணமாக நமக்கும், ஆளும் கட்சிக்கும், ஐ.தே.க.வுக்கும் என தமிழ் வாக்குகளைப் பிரித்து அளித்தால் எந்த ஒரு தமிழரும் வெற்றி பெற முடியாத நிலைமைதான் உருவாகும். இரத்தினபுரி, கேகாலை ஆகிய குறைந்த தமிழ் வாக்குகளைக் கொண்ட மாவட்டங்களில் இதுதான் யதார்த்தம் என்பது எம்மை விமர்சிக்கும் தேசியக் கட்சி தமிழர்களுக்கும் நன்கு தெரியும்.
எனவேதான் தமிழ் கட்சிகளை இணைத்துக் கொண்டு பொதுப் பட்டியலில் தனித்துவமாக போட்டியிடுவதுதான் தமிழ் பிரதிநித்துவம் பெறுவதற்கு ஒரே வழி என்று சொல்கிறோம். அதைத்தான் நாம் இந்தமுறை செய்கிறோம். எனவே இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தமிழ் மக்கள் எமது பொதுச் சின்னமான சேவல் சின்னத்துக்கு வாக்களித்து எமது தமிழ் இனத்தின் பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்' என மனோ கணேசன் இதன்போது தெரிவித்துள்ளார்.