கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் இன்று மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று நண்பகல் இடம்பெற்ற அக்கட்சியின் அதியுயர் பீடத்தின் கூட்டத்தின் போதே, இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்தின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், இத்தீர்மானம் தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன், அக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்திருந்தனர்.
அத்துடன், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் எடுத்த முடிவு தொடர்பில் அக்கட்சிக்குள் கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தது.
இத்தகையதொரு பின்னணியிலேயே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்தின் கூட்டம் இன்று நண்பகல் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் வேட்பாளர் தெரிவின் போது கலந்து கொள்ளாமலிருந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹாசன் அலியும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது என இரண்டாவது தடவையாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்படலாம் என எதிபார்க்கப்படுகின்றது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹாசன் அலியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவும் கைச்சாத்திடவுள்ளதாக கூறப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அம்பாறை மாவட்டத்தில் ஆறு இடங்களும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா மூன்று இடங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும் இக்கூட்த்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்த அதியுயர் பீடத்தின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் அக்கட்சியின் தலைவலும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டமும் இடம்பெற்றிருந்தது.
இதனிடையில், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது என்ற முடிவை அடுத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கரஸின் அதியுயர் பீட கூட்டத்திலிருந்து வெளியேறிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹாசன் அலியுடன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசி மூலம் கலந்துரையாடியிருநதமை தெரிந்ததே.
2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்த்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரவூப் ஹக்கீம் தனது பதிவியை இராஜினாமாச் செய்துவிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.