2015ஆம் ஆண்டளவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகப் பெறுமதியை 10 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கான முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்திய வர்த்தகக் கண்காட்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
'இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளராக இந்தியா திகழ்கிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பெறுமதி இதுவரை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக அமைந்துள்ளது.
இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் பொறியியல் துறைக்கான உற்பத்தி மற்றும் வாகன உதிரிப்பாக துறைக்கான பயிற்சி நிலையம் ஒன்றை திருகோணமலையில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் இத்துறையில் இலங்கையர்களுக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்க முடியும். இத் திட்டம் தொடர்பில் இவ்விரு நாட்டு அரசுகளும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மருந்தாக்கல் துறையை சேர்ந்த தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு எதிர்வரும் 30 நாட்;களுக்குள் விஜயம் செய்யவுள்ளது. இவர்கள் இலங்கையில் மருந்தாக்கல் உற்பத்தி மையம் ஒன்றை நிறுவுவது குறித்து ஆராயவுள்ளனர்.
இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளர்களாக இந்தியா கடந்த ஆண்டு திகழ்ந்தது. அத்துடன், இலங்கையிலிருந்து தற்போது இந்தியாவுக்கு முதலீட்டுத் திட்டங்கள் உள்வந்த வண்ணமுள்ளன. எனவே இரு நாடுகளுக்கும் நன்மைகள் ஏற்படக்கூடிய வகையில் இலங்கையில் எமது முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவுள்ளோம்.
நாம் வெளிநாடுகளுடன் ஏற்படுத்தியுள்ள இருமுக வர்த்தக உடன்படிக்கைகளின் மூலம் இரு நாடுகளுக்கும் நன்மைகள் ஏற்பட்டுள்ளன. இலங்கையுடன் எமக்கு சுமூகமான வர்த்தக உறவுகள் காணப்படுகின்றன. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார பங்குடமை உடன்படிக்கை குறித்து ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மீண்டும் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது குறித்து சிறிலங்காவின் தொடர்புடைய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து இறக்குமதிகள் இந்தியாவுக்கு மேற்கொள்ளப்பட்டு, இந்தியாவின் உற்பத்தி நிறுவனங்களுடன் அவை தொடர்புபடுத்தப்படும்' என இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவுடன் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இடம்பெறும் இந்த வர்த்தகக் கண்காட்சியில் இந்தியாவின் உற்பத்திப் பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள், உணவு மற்றும் கலாசார பொருட்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில் உறவை வலுப்படுத்தும் வகையில் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கு இடையிலான ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த 20க்கும் அதிகமான பிரதம நிறைவேற்று அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.