இலங்கையின் பிரச்சினையை மட்டுமன்றி, இந்தியாவின் பிரச்சினையையும் தீர்த்து வைத்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியா உயர் விருது வழங்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா படைத்தரப்பின் படைத்துறைக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்குச் சென்றுள்ள சுப்பிரமணிய சுவாமி அலரி மாளிகையில் நேற்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது தீவிரவாதத்துக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் பெற்ற வெற்றி 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றி எனவும், இதன் மூலம் இலங்கையின் பிரச்சினையை மட்டுமன்றி, இந்தியாவின் பிரச்சினையையும் தீர்த்து வைத்துள்ளதாக மகிந்த ராஜபக்சவுக்கு சுப்பிரமணிய சுவாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
இச்சந்திப்பில் சிறிலங்கா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சரும், ஈ.பி.டி.பி.யின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையும் சுப்பிரமணிய சுவாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்துடன் நெருங்கிய உறவுகளைப் பேணிவரும் சுப்பிரமணிய சுவாமி, கொழும்பு கலதாரி விடுதியில் இடம்பெற்று வரும் படைத்துறைக் கருத்தரங்கில் இன்று உரையாற்றவுள்ளமை தெரிந்ததே.