இலங்கையர்கள் உள்ளிட்ட 211 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த படகொன்று இந்தோனேசியாவை அண்மித்த கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இவ்விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் காப்பாற்றியதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இப்படகில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாகவே படகிற்குள் நீர் நிரம்பியதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான படகில் இலங்கை, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இருந்ததாக அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு அமைச்சர் கிறிஸ் பொவன் அந்த நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெரும் எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒரே படகில் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்ததாகக் கூறப்படும் 13 பேர் நேற்று இரவு சிறிலங்கா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வென்னப்புவ, தும்மோதரை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவ்வீட்டை முற்றுகையிட்ட சிறிலங்கா பொலிஸார் சந்தேக நபர்களையும், அவ்வீட்டு உரிமையாளரையும் கைது செய்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும் சிறிலங்கா பொலிஸார் கூறியுள்ளனர்.