ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 21வது கூட்டத் தொடரில் சிறிலங்காவின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும், மனிதவுரிமைகள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தலைமையில் அரச உயர்மட்டக் குழு ஒன்று கலந்து கொள்ள தயாராகி வருவதாக தெரிய வருகின்றது.
ஜெனிவாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 20வது கூட்டத் தொடரில் சிறிலங்காவின் சார்பில் அமைச்சர்கள் மட்ட குழு கலந்து கொண்டிருக்கவில்லை. மாறாக சிறிலங்காவின் அதிகாரிகள் மட்ட குழுவே இந்த அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தது.
இந் நிலையில், ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 21வது கூட்டத் தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய செயற்றிட்டம் குறித்தும் விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தேசிய செயற்றிட்டம் குறித்து சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் ஏற்கெனவே கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் மனிதவுரிமைகள் தொடர்பிலான மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் சிறிலங்கா அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற போரின் பின்னரான மனிதவுரிமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்று ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை எதிர்வரும் 09ஆம் திகதிக்கு முன்னர் ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 22வது கூட்டத் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.