இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்டு இதுவரை உரிமை கோரப்படாத ஆயிரக்கணக்கான வாகனங்கள் தொடர்ந்தும் மாவட்ட செயலகத்தின் பொறுப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களை தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து பெற்றுச் செல்வதற்காக கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரை ஏற்கனவே காலஅவகாசம் வழங்கியிருந்தது.
ஆயினும் இந்த காலப்பகுதிக்குள் ஒருசிலர் மாத்திரமே ஆதாரங்களை சமர்ப்பித்து வாகனங்களை பெற்றுச் சென்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் உரிமை கோரப்படாத வாகனங்களை பெற்றுக் கொள்வதற்கான காலஎல்லை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அதிகாரிகளுடன் நடாத்தப்படும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
அதேவேளை, உக்கிரமான போர் காரணமாக கைவிடப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் அடையாளம் காணமுடியாதவாறு சேதமடைந்துள்ளதால், அவற்றை உரிமை கோருவதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2010ஆம் ஆண்டு முதல் இதுவரை மாவட்ட செயலகத்தின் பொறுப்பில் இருந்து 14,000க்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகளும், 2000க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் உரிமையாளர்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இதனைத் தவிர கனரக வாகனங்கள், உழவு இயந்திரங்கள், பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட மேலும் பல வாகனங்கள் உரிமையாளர்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.