இலங்கையில் இடம்பெற்ற போரின் போது கணவனை இழந்த தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து விவாதிக்கும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை ஆரம்பமாகின்றது.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள், உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்களை எதிர்த்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19வது அகில இந்திய மாநாடு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பத்மாராவ் மஹாலில் நடைபெறுகிறது.
நாளை முதல் 11ஆம் திகதி வரை தொடர்ந்து 04 நாட்கள் நடைபெறவுள்ள இம் மாநாட்டை எங்கள் அமைப்பின் அகில இந்திய தலைவர் அருணா ராய் ஆரம்பித்து வைக்கின்றார். இத் மாநாட்டில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் சமுதாயத்தில் பெண்கள் சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகள், பொது நவீன கொள்கை, கல்வி, சுகாதாரம், தொழில் ஆகியவற்றில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், 33 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் இரண்டாவது நாள் இலங்கையில் இடம்பெற்ற போரின் போது கணவனை இழந்த தமிழ் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல் ஆகியவை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.