இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை சிறிலங்கா அரசாங்கம் வழங்காது விட்டால், தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான நடவடிக்கைகளின் ஊடாக அதன் ஆட்சி முறியடிக்கப்படும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தாம் உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் கேட்கும் அதிகாரப் பகிர்வை வழங்க மறுக்கும் சிறிலங்கா அரசாங்கம், வடக்கிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கேட்காத புனர்வாழ்வை அவர்களுக்குக் கொடுக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள அஸாத் ஸாலி நிலையத்தில் நேற்று இடம்பெற்ற 'அதிகாரத்தை பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இன்று நாட்டில் இருப்பது ஒரு புதுமையான அரசு என்பதை சிங்கள மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து அவர்களை புனர்வாழ்வு முகாம்களில் அடைக்கிறார்கள். இது பற்றி கேட்டால், மாணவர்கள்தான் தாமாகவே இந்த புனர்வாழ்வை விரும்பிக் கேட்டார்கள் என்று அரசு கூறுகிறது.
இவ்வாறு கூறும் அரசு, தமிழ் மக்கள் தொடர்ந்து கோரிவரும் அரசியல் தீர்வை தர மறுக்கிறது. ஒரே நாட்டுக்குள் அதிகாரத்தை பகிர்ந்து வாழ்வோம் என நாம் கேட்பதைத் தர மறுக்கிறது.
இன்றைய அரசியல் சட்டத்தில் இருக்கின்ற 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபை முறைமையைக் கூட வடக்கில் ஏற்படுத்த அரசு மறுக்கிறது. தமிழர்கள் தமிழ் மொழியில் தங்கள் கருமங்களை ஆற்றிக் கொள்ளும் உரிமையைத் தர மறுக்கிறது.
இந்த அரசு தமிழ் மக்கள் கேட்பதை கொடுக்காமல், கேட்காததை கொடுக்கிறது. நமது இந்த மேடை தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாகப் பேச உருவாக்கப்பட்ட மேடை. நாட்டின் ஏனைய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு எத்தனையோ கட்சிகளின் மேடைகள் உள்ளன.
பலதும் இங்கே பேசினாலும், அரசியல் அதிகாரத்தை பகிர்வோம், நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற செய்தியைச் சிங்கள மக்களுக்கு சொல்வதற்கே பிரதானமாக நாம் இந்த மேடையை உருவாக்கியுள்ளோம்.
தென்னிலங்கையில் இன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த அரசின் மகிந்த சிந்தனையை அனுசரிக்க வேண்டும். வேறு அரசியல் சிந்தனைகளை கருத்திற்கொள்ளக் கூடாது.
பல்கலைக்கழக மாணவர்கள் தமது மூளைகளை பூட்டி வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த தலைமைத்துவப் பயிற்சி நடத்தப்படுகிறது.
வடக்கில் புனர்வாழ்வு என்பது பெரும்பான்மை இன ஆதிக்கத்தை தமிழ் இளைஞர்கள் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. தமிழர்கள் இந்த நாட்டில் அதிகாரத்தை கோரக்கூடாது.
இந்த நாடு சிங்கள இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடு என்ற சிந்தனையை தமிழ் இளைஞர்கள் தலையில் புகுத்துவதற்காக இந்த புனர்வாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாமாக விரும்பி புனர்வாழ்வை கேட்டார்கள் என அரசு கூறுகிறது. அதனால் மாணவர்கள் கேட்டதை அது கொடுக்கிறதாம்.
இவ்வாறு கேட்பதை எல்லாம் கொடுக்கும் அரசுக்கு, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுள்ள ஜனநாயக பிரதிநிதிகளான நாம் கேட்பது காதில் விழவில்லை.
நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாகாணசபையை முதலில் வழங்குங்கள் என்றும், நாட்டின் அரசமைப்பிலுள்ள 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துக என்றும் நாம் கேட்பது அரசின் காதில் விழவில்லை.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிந்தவுடன் இன்று பொருளாதார யுத்தம் நடத்தப்படுவதாகவும், அதனால் வடக்கில் பொருளாதார அபிவிருத்தி நடைபெறுவதாகவும் அரசு கூறுகிறது. யுத்தத்தால், உடைந்து நாசமாகியுள்ள பாதைகளையும், கட்டடங்கள் சிலவற்றையும் நிர்மாணிப்பது எப்படி பொருளாதார அபிவிருத்தியாகும்? உடைந்தவைகளை திருத்தம் செய்வது அபிவிருத்தி அல்ல. அது புனர்நிர்மானமாகும். அதுவும் இன்று ஒழுங்காக நடைபெறவில்லை.
உண்மையில் தமிழ் மக்கள் கோருவது கொழும்பிலிருந்து எடுக்கப்படும் முடிவுகளை அல்ல. இங்கிருந்து முடிவெடுத்து சென்று வடக்கில் அமுல் செய்ய நினைக்காதீர்கள். திருத்த வேலைகளைக்கூட இதன்மூலம் ஒழுங்காக செய்ய முடியாது. பாலம் கட்டவும், வீதி அமைக்கவும், அவற்றை எங்கே, எப்படி, எவ்வாறு என்ற முடிவுகளை எடுக்கும் அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படையுங்கள். இதுதான் உண்மையான அரசியல் அதிகார பகிர்வு. இதன் மூலம் தான் உண்மையான பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் என மனோ கணேசன் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.