நில அபகரிக்குப்புக்கு எதிரான மக்களின் குரல்களை இரும்புக்கரம் கொண்டு முடக்க முனைந்த சிங்கள அரசின் செயற்பாடுகளுக்கு மத்தியில் தமிழர் தாயகத் தலைவர்களது குரல்கள் திருமுறிகண்டியில் ஒங்கி ஒலித்துள்ளன.
சிங்கள அரசின் நில அபகரிப்புக்கு எதிராக தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் மேலெழும் செயற்பாடுகள் சிறிலங்கா அரசினை அச்சங்கொள்ள வைத்துள்ளது.
இந்நிலையில் திருமுறிகண்டியில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தினை முடக்க பல்வேறு வகையிலும் சிறிலங்காவின் அரச இயந்திரம் செயற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.
இரவோடு இரவாக திருமுறிகண்டிப்பகுதியில் இருந்து மக்கள் பலவந்தமாக சிறிலங்கா இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட நிலையில், இராணுவ அச்சுறுத்தல்களுக்குப் பயந்து பல ஆண்கள் வெளியிடங்களுக்கு தப்பித்துச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பொதுமக்கள் எவரும் கலந்துகொள்ளக் கூடாது என அச்சுறுத்தும் வகையில் அப்பகுதி முழுவதும் இராணுவத்தினரையும், காவற் துறையினரையும் மற்றும் புலனாய்வாளர்ளையும் சிங்கள அரசு களமறிக்கிறயிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக யுத்த காலத்தில் களமிறக்கியிருந்த சிறப்பு அதிரடிப்படையினரை இறக்கி மக்களை உளவியலரீதியான அச்சுறுத்தலுக்கு சிறிலங்கா அரசு உள்ளாக்கியிருந்ததாக அறியமுடிகின்றது.
இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் உள்ளிட்ட பலரும் தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை இரவோடு இரவாக முறிகண்டியில் பலவந்த வெளியேற்றப்பட்ட மக்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் எனத் அறியமுடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெனிக்பாம் முகாமுக்கு அவர்கள் கொண்டு செல்லபடுவார்கள் தெரிவிக்கப்பட்ட போதும் அதனை உறுதிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாயகத்தின் இப்போராட்டத்திற்கு வலுவூட்ட புலம்பெயர் நாடுகளில் தமிழர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்கான அழைப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்திருந்தமை தெரிந்ததே.