Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மத்திய வளைகளில் குடிபுகும் மாகாண எலிகள்! வழிகாட்டினார் அமைச்சர் ஹக்கீம்!!

மத்திய வளைகளில் குடிபுகும் மாகாண எலிகள்! வழிகாட்டினார் அமைச்சர் ஹக்கீம்!!
மாறவர்மன்

 

வெற்றி யாருக்கு?

ஆளுங்கட்சிக்கான ஆதரவுத் தீர்மானத்தை எடுப்பதில் பத்து நாட்களாக இருந்துவந்த இழுபறி நிலையானது மாகாண மட்டத்திலான தேசிய அரசு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விடுத்த பிரமாஸ்திரத்துடன் உடனடியாக முடிவுக்கு வந்து விட்டது. சம்பந்தரின் அரசியல் சாணக்கியம் அமைச்சர் ஹக்கீமின் பூரண சரணாகதியை துரிதகதியில் அம்பலப்படுத்திவிட்டது. இனிப் பேரப்பேச்சுக்கு ஆளுங்கட்சியின் கதவு திறந்திருக்காது என்ற நிலையை கூட்டமைப்புத் தலைவரின் அறிவிப்பு நாசூக்காக வெளிப்படுத்திய பின்னர் எலிகள் வளைக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. 

முதலமைச்சர் பதவி ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸூக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் ஆகக் குறைந்தது மாகாண அமைச்சரவையில் இரண்டு அமைச்சர் பதவிகளைக் கேட்டு இறுதியில் அவர் ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியமே உள்ளதென்றும் எனது முன்னைய கட்டுரையில் ஊகம் தெரிவித்திருந்தேன். தற்போது கூட்டமைப்பு விடுத்த முதலமைச்சர் அழைப்பின் புண்ணியத்தினால் அவர் இரு அமைச்சர் பதவிகளை மாகாண சபையில் பெற முடிந்தது. இதைவிட, முஸ்லிம் காங்கிரஸ் என்னதான் சாதிக்கப் போகின்றது என்பதை எதிர்வரும் வருடங்கள் பட்டவர்த்தனமாக்கும்.

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் யார் வென்றார்கள், தோற்றார்கள் என்பது ஒருபுறமிருக்க, நடந்தவை யாவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நினைத்தபடிதான் என்பது அவரது தனிப்பட்ட அதிஷ்டத்தின் உச்சத்தைக் காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சேர்ந்து தேர்தல் களம் இறங்குவது பற்றிய பேச்சுவர்த்தைகளில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஈடுபட்டபோது, அதற்கு இரண்டு விடயங்கள் அரசாங்கத்தினால் தெளிவாக்கப்பட்டன. முதலமைச்சர் பதவி காங்கிரஸூக்குக் கிடையாது, அத்துடன் மூன்று மாவட்டங்களிலும் மொத்தத்தில் எண்ணிக்கையில் கூடுதலான முஸ்லிம் வேட்பாளர்களை ஆளுங்கட்சியே களமிறக்கும் என்பதே இவ்விரு நிபந்தனைகளாக இருந்தன. ஒருவாறு தனது கட்சியினரைச் சமாளித்து இந்நிபந்தனைகளுக்கு அமைவாக கூட்டமைக்க காங்கிரஸ் தலைவர் விரும்பியிருந்தாலும், பின்னர் அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர் எண்ணிக்கைத் தெரிவில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கவில்லை. இதனைச் சாதகமாகப் பாவித்து ஹக்கீம் கௌரவமாகப் பிரிந்து நின்று தேர்தலைச் சந்தித்தார்.

தனித்துப் போட்டியிட்டாலும் தலைவரின் தணியாத தாகமாக இருந்தது இரண்டு பிரதான விடயங்களாகும். எவ்விதத்திலும் ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கக் கூடாது, காங்கிரஸில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை எட்டுக்கும் குறையைக் கூடாது. இது இரண்டும் நிறைவேறுவதாக இருந்தால் கூட்டமைப்பு மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். தானில்லாமல் ஆளுங்கட்சி மாகாண சபையில் அரசாங்கத்தை அமைக்கக் கூடாது என்பதில் மட்டுமே அவரது முதல் கவனம் இருந்ததே தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைப்பது என்பது அவரைப் பொறுத்தவரையில் இரண்டாம் பட்சமான விடயமாகவே இருந்தது. கூட்டமைப்பு எப்படியும் முதலமைச்சர் பதவியை விட்டுத் தரும் என்பது அமைச்சர் ஹக்கீமுக்கு முன்கூட்டியே சந்தேகமறத் தெரிவிக்கப்பட்டிருந்துது. ஆனால் அது மட்டும் அவருக்குத் தேவைப்படும் விடயமாக இருக்கவில்லை என்பது காங்கிரஸின் உள்வீட்டுப் பிள்ளைகளுக்கு நன்கு தெரியும்.

கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் என்பது பிராந்தியத் தலைமையை நாளடைவில் உருவாக்கிவிடும். ஏற்கனவே முணுமுணுப்புகளுக்கு முகங்கொடுத்து வரும் காங்கிரஸ் தலைமைக்கு இது பெரியதொரு சவாலாகும். எனவே தலைமைக்குப் பலம் சேர்ப்பதானால் மத்தியில் தலைமையின் சொல்லுக்கு மதிப்பேற்படுத்த வேண்டும். இதை வைத்துத்தான் கிழக்கு ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்தலாம் என்பது ஹக்கீமின் கணக்கு. தலைமைக்கு உதவாத முதலைமைச்சர் பதவி என்பதால்தான் அவர் ஆரம்பத்திலிருந்தே அது பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பக்க விளைவாக அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை தனது எதிரணி முஸ்லிம் கட்சிகளிலிருந்து யாரும் முதலமைச்சரானால் கட்சியைக் காப்பாற்ற முடியாது என்பது. அதையும் ஒருவாறு சமாளிக்க உதவினார் ஜனாதிபதி. எனவே தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகி விட்டார். ஜனாதிபதிக்கு நிறையவே நன்றிக்கடன்பட்டுள்ளது காங்கிரஸ் தலைமை. 

ஆனால் இவை யாவற்றுக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கொடுத்த விலை என்ன? முதலமைச்சர் பதவியும் இரண்டு அமைச்சர்கள் பதவியும் தரத் தயாராக இருந்த கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைத்தால் கிழக்கு முஸ்லிம்கள் பெற்றிருக்கக் கூடிய வாய்ப்புக்களை விட, காங்கிரஸ் எதை அதிகமாகப் பெற்றுள்ளது? அதுவும் எதைக் கொடுத்து எதைப் பெற்றுள்ளது என்பதை ஆழமாகச் சிந்தித்து கிழக்கு முஸ்லிம்கள் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வரவேண்டும்.

காங்கிரஸ் தலைமையின் காட்டில் மழை 

மத்திய வளைகளில் குடிபுகும் மாகாண எலிகள்! வழிகாட்டினார் அமைச்சர் ஹக்கீம்!!

அமைச்சர் ஹக்கீம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததைப் போலவே ஆளுங்கட்சிக்கு ஆசனங்களின் எண்ணிக்கை குறைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன எண்ணிக்கை அதிகரித்து விட்டது. தனது பேரம்பேசும் சக்தியை அதிகரிப்பதற்கு இதைவிட வாய்ப்பானதொரு தருணத்தை அவர் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார். 'போனால் போ' என்று சொன்ன ஆளுங்கட்சி இப்போது 'வா ராசா வா' என்று 'வெற்றிலை' வைத்து அழைக்கின்றது. முதலமைச்சர் பதவி பற்றி அலட்டிக் கொள்ளாத காங்கிரஸ் தலைவரை அதுபற்றிப் பேசும்படி நிர்ப்பந்தித்தது காங்கிரஸ் வாக்குகளல்ல. கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்றதாலும் ஆளுங்கட்சி அம்பாறையில் கோட்டை விட்டதாலுமே, விரும்பாத பதவியைக் கேட்டு நின்றார் அமைச்சர் ஹக்கீம். தான் கணக்கிட்ட எட்டு ஆசனங்களைப் பெறாத தோல்வியை மற்ற இரு பிரதான கட்சிகளின் செயற்பாட்டால் சமாளிக்கும் நிலைக்கு வந்துவிட்டார் அவர். இதுதான் காட்டில் மழை என்பதோ தெரியவில்லை.

முஸ்லிம் தேசியம் பற்றி உரத்துக் குரல் கொடுக்கும் முக்கிய புள்ளிகள் எவரையும்  மாகாணத்திலோ அல்லது மத்தியிலோ ஏதாவதொரு 'பசையான' பதவி என்ற உமலுக்குள் போட்டுச் சுருட்டிக் கொண்டால் ஐந்து வருடங்களுக்குச் சுருண்டு கிடப்பார்கள் என்பது அரசாங்கத்தின் கணக்கு மட்டுமல்ல, அமைச்சர் ஹக்கீமின் கணக்குந்தான்.

சிறுபான்மை இனமொன்று தனது அடையாளத்தை வரித்து நிற்பதற்கு அவசியமானதும் நிர்ப்பந்திப்பதுமான விடயங்கள் குறித்து துணிவானதொரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முதற்தேவை ஆள்புல ஆதரவுத் தளமே என்று எனது முன்னையதொரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அங்ஙனம் பார்ப்பின் காங்கிரஸைப் பொறுத்தளவில் பாராளுமன்றத் தேர்தலைவிட மாகாண சபைத் தேர்தல் முக்கியத்துவம் கூடியதாகும். இந்த முக்கியத்துவத்தை இல்லாமற் செய்யவே காங்கிரஸ் தலைமை முதலில் ஆளுங்கட்சியுடன் சேர்ந்து களமிறங்கத் திட்டமிட்டது. ஆனால் களமுனை எதிர்ப்பால் அத்திட்டம் மறுபரிசீலனைக்கு உட்பட்டது நாமறிந்ததே. பிராந்தியத் தலைமை ஏன் தேவை என்பதற்கு இப்போது பதில் கிடைத்து விட்டது. அந்தப் பதில் காங்கிரஸின் தெற்கத்தைய தலைமைக்கு உவப்பானதல்ல என்பதால்தான், முதலமைச்சர் பதவியைத் தரும்படி தலைவர் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் நிலை உருவானது. ஆனால் அந்த நெருக்கடிக்கு பகடைக்காயாக அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பாவித்ததுதான் வேடிக்கையானதும் வருத்தத்துக்கு உரியதுமாகும்.

கிழக்கைப் பொறுத்தவரையில் மக்கள் ஆணை எது என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. தனித் தமிழ் வாக்குகளை மட்டும் பெற்ற கூட்டமைப்பு, மூவின மக்களதும் வாக்குகளைப் பெற்ற ஆளுங்கட்சியைவிட 6,127 வாக்குகளே குறைவாகப் பெற்றுள்ளமை தமிழ் மக்களது ஆணை எது என்பதைத் தெளிவாக்குகின்றது. ஆளுங்கட்சி பெற்ற அந்த 6,217 வாக்குகளும் வடக்கு-கிழக்கு இணைப்பை விரும்பாதவர்களின் வாக்குகள் என்றுகூடக் கற்பனை பண்ண முடியாது. ஆளுங்கட்சிக்கு உண்மையில் எத்தனை தமிழர்கள் வாக்களித்தார்களோ தெரியாது. ஆனால் அங்ஙனம் வாக்களித்தவர்கள் யாவரதும் முக்கிய இலக்காக இணைப்பு – எதிர்ப்பு இருந்திருக்கும் என்றும் கூறுவதற்கில்லை. 

அவ்விதமே முஸ்லிம் வாக்காளர்களில் பெரும்பாலோனோர் அடையாள விருப்பில் உந்தப்பட்டவர்களே தவிர, அபிவிருத்தியில் அல்லது அமைச்சர் பதவியில் பந்தயங்கட்டி வாக்களித்திருக்கவில்லை. எனவேதான் கிழக்கின் முஸ்லிம் குரல் கூட்டமைப்புடன் அணிசேருமாறு அமைச்சரை வலியுறுத்தியது. என்னதான் நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லி ஆளுங்கட்சியுடன் கூட்டமைக்க காங்கிரஸ் தலைமை விரும்பியபோதிலும் இம்முறை ஒரு விடயம் கள்ளங் கபடமற்ற முறையில் வெளிப்படுத்தப்படுகின்றது.

பேரினவாத சக்திகளுக்கு எதிராக சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஒன்றுபட வேண்டியதன் அவசியமும் அதற்குத் தேவையான விட்டுக் கொடுப்பும் தமிழ்த் தரப்பிலிருந்தும் கிழக்கு முஸ்லிம் தரப்பிலிருந்தும் நேர்மையான முறையில் வெளிப்படுகின்றது. இது பல வகைகளிலும் மிக ஆரோக்கியமானதொரு அரசியல் செல்நெறியாகக் கொள்ளப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல நீரூற்றி வளர்க்கப்பட வேண்டிய ஒற்றுமைப் பயிருமாகும்.

கிழக்கில் தெரியும் ஒளிக் கீற்று!

காங்கிரஸ் தலைமையிலிருந்து வேறுபட்டு பிராந்திய நலனை முன்னெடுக்க கிழக்கிலங்கை முஸ்லிம்கள் தயார் என்பது பல்வேறு மட்டங்களிலிருந்தும் தற்போது உணர்ச்சிபூர்வமாகத் தெரிவிக்கப்படுகின்றமை அமைச்சர் பதவிகளால் அமுக்கப்படக்கூடிய விடயமாகத் தெரியவில்லை. மிகக் குறுகிய காலத்தில் கிழக்கிலங்கையில் பிராந்திய அரசியலின் முக்கியத்துவம் தமிழர்களால் அன்றி, முஸ்லிம்களால் முன்னெடுக்கப்படவுள்ளமை இலங்கைத் தேசிய அரசியலில் புதிய பரிமாணத்தைத் தோற்றுவிப்பதற்கான வாய்ப்பினை அதிகரிக்கின்றது.

உண்மையில், இந்த நோக்கில்தான் காங்கிரஸின் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் கட்சியை ஆரம்பித்தார். முழுமையான ஒரு சுற்று வட்டத்தின் பின்னர் பழைய நிலைக்குக் கட்சி திரும்பவேண்டிய அவசியத்தைக் கட்சித் தலைமையே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மூன்றிலிரண்டு பங்கு வாக்குகளைப் பெற்ற கட்சிகள் எதிரணியில் இருக்க, மூன்றிலொரு பங்கு வாக்குகளைப் பெற்ற ஆளுங்கட்சிக் கூட்டணி ஆட்சியமைப்பது என்பது வேடிக்கை விநோதமே என்றாலும் இதற்குத் துணைபோகும் காங்கிரஸ் எதற்காக வாக்குகளைப் பெற்றது என்பதை, அமைச்சர் காங்கிரஸ் போராளிகளுக்கு முதலில் தெளிவுபடுத்த வேண்டும். எந்த வகையில் தான் அத்தாவுல்லாவிலிருந்து வேறுபட்டவர், எவ்விதத்தில் தான் ஹிஸ்புல்லாவின் அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அமைச்சர் திரும்பவும் கிழக்கு வாக்காளர்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டு ஆளுங்கட்சியுடன் சங்கமித்திருந்தால் அவரது அரசியல் நேர்மை ஓரளவு ஜீரணிக்கப்படலாம்.

அதைவிடுத்து, வெறுமனே சம்பந்தனுடன் பேச்சு என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு பேரம்பேசும் முயற்சியில் ஈடுபட்ட காங்கிரஸின் தலைமையினை முஸ்லீம் வாக்காளர்கள் மட்டுமன்றி ஆளுங்கட்சியினரும் ஏளனமாக நோக்கும் நிலைமையானது வாக்களித்தவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விட்டது.

இனத்தின் தனித்துவத்தைப் பேணுவதற்காகப் பெறப்பட்ட வாக்குகள் வேறு காரணங்களுக்காக அடைவு வைக்கப்படும்போது அது வாக்களித்தவர்களை இளிச்சவாயர்களாக்கி பேரினவாதிகள் முன்னிலையில் கேலிக்குரியவர்களாக்கி விடுகின்றது. இதைவிட வேறென்ன அவமானத்தை வாக்காளர்கள் கட்சியின் பெயரால் சுமந்திட முடியும்?

ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் இதுவேதான் நிலைமை என்றால் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பிடித்துக்கொண்டு தொங்குவதால் இனி எவ்வித பலனும் கிட்டாது என்ற முடிவுக்கு கிழக்கு முஸ்லிம் வாக்காளர்கள் வந்துவிட்டார்கள் என்பதுதான் களநிலைமை. இது பற்றியெல்லாம் தலைமை இப்போதைக்கு அலட்டிக் கொள்ளாது என்பதும் அடுத்த தேர்தல் வரும்போது மட்டுமே இனத்துவ உணர்வு தலைமைக்குப் பீறிட்டு எழும் என்பதையும் எல்லாத் தரப்பும் நன்கறியும்.

கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோர் மத்திய அமைச்சர் பதவிக் கனவுகளில் தொடர்ந்து மிதக்கும் வரை முஸ்லிம் தேசியம் என்பதும் கனவாகவே இருக்கும். ஆனால் தலைமைகள் தேர்தல் மேடைகளில் மட்டும் தேசியம் பேசிவிட்டு மீண்டும் கனவில் மிதக்கத் தொடங்கினால் அடிமட்டத் தொண்டர்கள் மாற்று வழி பற்றி சிந்திக்கத் தொடங்குவது தவிர்க்க முடியாததாகிவிடும். இந்த மாற்று வழிகளில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்ட பிராந்தியக் கட்சிகளின் கூட்டணி. இது கட்டாயமாக, அடையாளங்களைச் சமரசம் செய்து ஏற்படுத்தப்படும் கூட்டணி அல்ல.  

பின்னாளில் பிராந்திய சுயாட்சிக்கு வழிகோலக்கூடிய வகையில் ஓர் அரசியல் கூட்டணி உருவாகுதல் காலத்தின் கட்டாயம் போலும். தங்களது காணி, மொழி, மதம், கலாசாரத்தைப் பேணுவதற்கு தென்னிலங்கையில் தனிப்பட்ட நலன்களைக் கொண்டுள்ள தலைமைகள் விசவாசத்துடன் செயற்பட மாட்டா என்பதைப் பட்டுணர்ந்ததன் பின்னர் தமிழ்-முஸ்லிம் கூட்டு அரசியல் ஒன்றே விடிவைக் கொண்டு வரும் என்பது கிழக்கைப் பொறுத்தவரையில் நிதர்சனமாகிவிட்டது. இரு தரப்பிலும் உள்ள புத்திஜீவிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் பொதுமக்கள் மத்தியில் இத்தகைய ஒழுங்கமைப்பொன்றை ஏற்படுத்துவதில் அயராது பாடுபட வேண்டியது இன்றைய தேவையாகின்றது.

காங்கிரஸூக்கு கிழக்கிலங்கை முஸ்லிம்கள் தேவை. ஆனால், மறுவாறு அவர்களது இருப்புக்குக் காங்கிரஸ் தேவையில்லை. இதுவரை அவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்தி வந்த இனத்துவ உணர்வே அதற்குப் போதுமானதாகும். அதைத்தான் இந்தத் தேர்தலிலும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அதைப் பாவித்துவிட்டு தலைமையும் வழக்கமான அடைவு வைத்தலையே இம்முறையும் செய்துள்ளது.

அமைச்சர் ஹக்கீமைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தல் பற்றிய அவரது பிரதான குறைபாடாக இருந்தது, அமைச்சரவையில் தானிருந்தும் தனது சம்மதம் பெறாமல் மாகாண சபை கலைக்கப்பட்டது என்பதே. நோன்பு காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதையிட்டு எந்த முஸ்லிம் தலைமையும் பெரிதாகக் கவலைப்படாமல் உடனடியாகவே மேடைபோட்டுப் பிரச்சாரத்துக்குத் தயாராகிவிட்டார்கள்.

தென்னிலங்கையில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட சிறிது காலத்தின் பின்னரான தேர்தல் என்ற போதிலும் 'அப்படியொன்றும் நடக்கவேயில்லை' என்ற பாணியில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் கிழக்கில் மட்டும் இது பற்றிய கவலைகள் வெளியிடப்பட்டபோது பேரினவாத அரசென்று முழங்கியவர்களுக்கு கல்முனைக் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி உரிய பதிலளித்திருந்தார்.

'பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் பற்றிப் பெரிதாக இங்கு வந்து பேசுபவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் ஏன் எலிபோல அடங்கிக் கிடக்கின்றார்கள்'? என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு நேரடியான பதில் அமைச்சர் ஹக்கீமிடமிருந்து வெளிவரும் எனப் பலரும் எதிர்பார்த்த போதிலும் அமைச்சர் சுற்றிவளைத்து மழுப்பலான பதில் சொன்னாரே தவிர, அமைச்சர் பதவியைப் பணயம் வைத்து நியாயம் கேட்டதாக அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. இத்தனைக்குப் பிறகும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள அத்தனை தொகுதிகளிலும் காங்கிரஸூக்கே நம்பிக்கையுடன் வாக்களித்தார்கள் கிழக்கு முஸ்லிம்கள். ஆனால் இறுதியில் நடந்ததென்ன?

போராளிகள் எலிகளாக மாட்டார்கள்!

அமைச்சுப் பதவிகளிலுள்ள எலிகள் என்று வர்ணிக்கப்பட்ட பின்பும் புதிதாக எதையோ தம்மால் பாதுகாக்க முடியும் என்று தாங்களே நம்பாததை, தமது வாக்காளர்கள் நம்புவார்கள் என்ற நப்பாசையில் கூட்டுச் சேர்ந்திருக்கும் காங்கிரஸ் தலைமை என்னதான் கரடியாகக் கத்தினாலும் அல்லது அப்படிக் கத்துவதாகக் காட்டிக் கொண்டாலும் அதற்கு முதலமைச்சர் பதவி கிடைக்காது என்பது எப்பவோ முடிந்த காரியமாயிற்று.

புத்திசாலியான அமைச்சர் ஹக்கீம், கேட்குமாற்போல் கேட்டு பின்னர் அது கிடைக்கவில்லையே எனக் காட்டிக்கொண்டு சுருதியை மாற்றி, காங்கிரஸ் முதலமைச்சர் என்பதை விடுத்து, முஸ்லிம் முதலமைச்சர் என்று பேசத் தொடங்கினார். காங்கிரஸூடன் முதலமைச்சர் பதவியினைப் பங்கிடத் தயார் என்று தேர்தல் மேடைகளிலேயே வைத்து உத்தரவாதமளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் புறந்தள்ளிவிட்டு, ஒப்புக்கு ஒரு பேரப்பேச்சு நடாத்தி முதலமைச்சர் பதவி கேட்டுப், பின்னர் முஸ்லிம் முதலமைச்சர் நியமிக்கப்பட உதவியதாக மார்தட்டப் போகின்றது காங்கிரஸ் தலைமை. ஆனால் உண்மையில் அமைச்சர் ஹக்கீம் தனது கட்சியினருக்கே முதலமைச்சர் பதவி வேண்டும் என்று மனதார விரும்பி நின்றாரா?

சகுனப்பிழை ஏற்படுத்துவதற்காக அத்தாவுல்லாவின் ஆதரவாளரோ அன்றி ஹிஸ்புல்லா, றிச்சார்ட் பதூர்டீன் போன்றோரது ஆதரவாளரோ முதலமைச்சர் ஆகாதபடி பார்த்துக் கொண்டதால் கிழக்கில் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு எதிர்காலத்தில் பெரிதாக அச்சுறுத்தல் எதுவும் இருக்காது என்ற உத்தரவாதமே காங்கிரஸ் போராளிகளுக்கு எஞ்சியுள்ளது.  அம்பாறை மாவட்டத்திலிருந்தோ அன்றி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தோ முஸ்லிம் முதலமைச்சர் எவரும் இம்முறை நியமிக்கப்படவில்லை என்பதைக் காங்கிரஸ் தனது வெற்றியாகப் பறைசாற்றப் போகின்றது.

முஸ்லிம் தேசியம் இப்படிக் கூனிக்குறுகிப் போவதற்காகவா காங்கிரஸ் என்ற தனிக்கட்சி, தேசியக் கட்சி முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியில் உருவாக்கப்பட்டது? மத்திய எலிகளால் சாதிக்க முடியாததை மாகாண எலிகள் சாதிக்கும் என்ற நம்பும் அளவுக்கு முட்டாளல்ல அமைச்சர் ஹக்கீம். (பதவிப்) பசை பூசிய தட்டில் தானாக வந்து ஒட்டிக்கொண்ட எலிகள், இனி எடுத்து வீசப்படும் வரை நகர முடியாது.

எலிகளை உருவாக்குவதற்கு வாக்குச் சீட்டுக்களைப் பாவிக்கும் பரிதாப நிலையிலிருந்து சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீள வேண்டும். கிழக்கைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்கள், தமிழ் மக்களுடன் சேர்ந்து கூட்டு அரசியல் அமைப்பொன்றை உருவாக்கிட வேண்டும். தேசிய அரசியலுக்குள் சங்கமிக்காத அல்லது விலைபோகாத விதத்தில் தனித்துவத்தைப் பாதுகாப்பதில் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஒரே குரலில் பேசுவதற்கு அவர்கள் தயாராக வேண்டும். ஆள்புலத்தையும் இன, மத, கலாசார அடையாளங்களைப் பேணுவதில் தங்களுக்குள்ள பொதுவான அக்கறைகளே அவர்களை வழிகாட்ட வேண்டும். இந்த ஒற்றுமையும் புரிந்துணர்வும் வடக்கில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களின் அரசியல் இருப்புக்கு நிறுவன ரீதியான உத்தரவாதத்தை வழங்குவதாகவும் வடிவம்பெற முடியும்.

இதற்கான முன்னெடுப்பு கிழக்கிலுள்ள சிறுபான்மை இனங்களின் மத்தியில் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பில் முஸ்லிம் பிரமுகர்களுடனும் முஸ்லிம் கட்சிகளிலுள்ள சில முக்கியஸ்தர்களுடனும் உடனடிப் பேச்சுவார்த்தையினை ஆரம்பிப்பது காலத்தின் கட்டளை ஆகின்றது. 

9/22/2012 2:01:18 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்