Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மாவீரர்தின அரசியல்

மாவீரர்தின அரசியல்
யதீந்திரா

 

2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது பெயரை அடையாளப்படுத்தும் அனைத்து நினைவுகளுக்கும் மகிந்த அரசு தடைவிதித்திருந்தது. அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளால் நிறுவப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தையும் இடித்தழித்தது. இதற்கான உத்தரவுகளை அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சவே பிறப்பித்தாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறு மாவீரர் துயிலுமில்லங்கள் இடித்தழிக்கப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அது தொடர்பில் எவ்வித கண்டனத்தையும் பதிவுசெய்திருக்கவில்லை. இது தொடர்பில் சம்பந்தன் மீது தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் எவ்வித அழுத்தத்தையும் பிரயோகித்திருக்கவில்லை. எப்படி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் தொடர்பில் சம்பந்தன் அமைதியாக இருந்தாரோ அவ்வாறானதொரு நிலைப்பாட்டைத்தான் யுத்தத்திற்கு பின்னரும் கூட கடைப்பிடித்தார். ஆனால் மகிந்த அரசு மாவீரர் துயிலுமில்லங்களை இடித்தழித்தமை தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கண்டித்து பேசியிருக்கின்றனர். ஆனால் அவற்றை கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த ஏழு வருடங்களில் மாவீரர் தினத்தின் போது ஏதாவது பிரச்சினைகள் தலைதூக்கியிருப்பதே வழக்கம். ஆங்காங்கே மாவீரர் தினத்தை நினைவுகொள்ள சிலர் முயன்றதாகவும் இதனால் இராணுவம் அதில் தலையிட்டதாகவும் செய்திகள் பதிவாகியிருக்கின்றன. ஆனால் இம்முறை எவ்வித கெடுபிடிகளும் இன்றி மாவீரர் தினத்தை, அதற்குரிய துயிலுமில்லங்களிலேயே நினைவுகொள்ள முடிந்திருக்கிறது. தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அடக்கம்செய்த இடத்தில் ஒன்றுகூடி, தங்களின் உள்ளக் குமுறல்களை ஆற்றிக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இது அவர்களுக்கு ஆறுதலான ஒரு விடயமே. இதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் இதில் ஆச்சரியப்படத்தக்க ஒரு விடயமும் இடம்பெற்றிருக்கிறது. அதாவது மாவீரர் தின நிகழ்வுகளில் இலங்கை தமிழரசு கட்சியினரே முன்னுக்கு நின்றிருக்கின்றனர். முழங்காவில் துயிலுமில்லத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுடரேற்றியிருக்கிறார். இதேபோன்று தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோரும் மாவீரர் துயிலுமில்லங்களில் சுடரேற்றியிருக்கின்றனர்.

இதே மாவை சோனாதிராஜாவும் தமிழரசு கட்சியினரும் எழுக தமிழ் நிகழ்வு தெற்கில் பதட்டங்களை அதிகரிக்கும் என்று கூறியதுடன், அது மகிந்த ராஜபக்சவிற்கு சாதகமாகிவிடும் என்றும் கூறி எழுக தமிழ் ஏற்பாட்டாளர்களை கடுமையாக விமர்சித்தவர்கள். இது தருணமல்ல என்று கூறி எழுக தமிழை பகிஸ்கரித்தவர்கள். அதற்கும் மேலாக அதற்கு முட்டுக்கட்டை போட்டவர்கள். ஆனால் அவ்வாறான தமிழரசு கட்சியினர் திடீரென்று தற்போது மாவீரர் தினத்தை கையிலெடுத்திருப்பதும் அது தொடர்பில் இராணுவத்தின் கெடுபிடிகள் எதுவும் இல்லாமலிருப்பதும் ஒரு புதிராகவே தெரிகிறது. அதேவேளை எழுக தமிழ் நிகழ்வை எதிர்த்த அரசாங்க அமைச்சர்கள் எவரும் மாவீரர் தினம் தொடர்பில் எவ்வித அப்பிராயங்களையும் தெரிவித்திருக்கவில்லை.

தென்னிலங்கையின் பார்வையில் எழுக தமிழை விடவும் பாரதூரமானது மாவீரர் தினம்தான். ஏனெனில் மாவீரர் தினமென்பது விடுதலைப் புலிகளை அடையாளப்படுத்தும் நிகழ்வாகும். 1989இலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டுவந்த இந்நிகழ்வு விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் ஒரு சாதாரண நிகழ்வல்ல. உண்மையில் மாவீரர் தினம் என்பதே இலட்சியத்திற்காக வீழ்ந்தவர்களின் தியாகத்தை நினைவுகொள்வதுடன், அவர்களது இலட்சியத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக உறுதி பூணும் புனிதநாள். இதனை பிரபாகரனின் வார்த்தையில் சொல்வதானால் 'புனிதமான தமிழீழ இலட்சியத்திற்காக உயிர்நீத்தவர்களை நினைவுகொண்டு உறுதிபூணும் நாள்'. அவ்வாறாயின் இப்போது மாவீரர் துயிலுமில்லத்தில் சுடரேற்றிய மாவை, சிறிதரன் போன்றவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி என்ன?

அரசியல் செயற்பாடுகளில் சில சூழ்நிலை நிர்ப்பந்தங்கள் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பது உண்மையே! அது தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் அது வெறும் சுயநலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது. மாவீரர் தினத்தில் சுடரேற்றும் இதே மாவையின் முன்னிலையிலேயே தமிழரசு கட்சியின் முன்னணி தலைவரான சுமந்திரன் முப்பது வருடங்கள் போராடி என்னத்தை கண்டீர்கள் என்று கேள்வியெழுப்பியிருந்தார்! அது ஆச்சரியப்படத்தக்க ஒரு கூற்றல்ல என்பதை அப்போது இப்பத்தியாளர் பதிவுசெய்துமிருந்தார். ஆனால் அன்று அமைதியாக சுமந்திரனின் கூற்றை ஆதரித்திருந்த மாவை, எவ்வித குற்றவுணர்வும் இன்றி, அந்த முப்பது வருடகால போராட்டத்தில் தங்களின் உயிர்களை தியாகம் செய்தவர்களை அடக்கம் செய்திருக்கும் துயிலுமில்லத்தில் சுடரேற்றியிருப்பது அரசியல் எந்தளவிற்கு அசிங்கமாகிவிட்டது என்பதையே நிரூபித்திருக்கிறது. ஒரு பிரயோசனமும் இல்லாமல் முப்பது வருடங்களாக போராடி வீழ்ந்தவர்களை ஏன் தமிழரசு கட்சி நினைவுகொள்ள வேண்டும்? அவர்களை மதிப்பவர்கள் நினைவு கொள்வது வேறு விடயம். ஆனால் பிரயோசனமற்றவர்கள் என்று கருதுபவர்கள் எதற்காக அவர்களை மதிக்க வேண்டும்? வெறும் சுயநல அரசியல் இலாபத்திற்காகவா?

மாவீரர்தின அரசியல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் மறைவுக்கு பின்னர் மாவீரர் தினத்தை முன்னெடுப்பது தொடர்பில் இன்றுவரை ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியாத நிலைமையே தொடர்கிறது. புலம்பெயர் நாடுகளில் மக்கள் பெருவாரியாக பங்குகொள்ளக் கூடிய ஒரேயொரு நிகழ்வாக இன்றுவரை மாவீரர் தினம் ஒன்றே இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்கள் கடந்த ஏழு வருடங்களாக மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்து வருகின்றன. ஆனால் இன்றுவரை ஒரு இணக்கப்பாட்டுடன் அதனை முன்னெடுப்பதில் பெரியளவில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினத்தின் பெயரால் முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுகின்றன. பல்வேறு விடயங்களால் பிளவுண்டு கிடக்கும் தமிழ்ச் சமூகம் மாவீரர் தினத்தின் பெயராலும் பிளவுறுவது மிகவும் துரதிஸ்டவசமானதே. இவ்வாறானதொரு சூழலில்தான் புதிய அரசாங்கம் வடக்கு கிழக்கில் மாவீரர் தினத்தை நினைவுகொள்ள அனுமதித்திருக்கிறது. வாய்ப்பு கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே கட்சியரசியலுக்கான முதலீடாகவே மாவீரர் தினம் காட்சியளிக்கிறது. அடுத்த ஆண்டு இது மேலும் கோஸ்டி வாதங்களை அதிகரிக்கலாம்.

இந்த இடத்தில் இதனை எவ்வாறு ஒரு இணக்கப்பாட்டுடன் முன்னெடுப்பது என்று சிந்திக்க வேண்டியது அனைத்து தரப்பினரினதும் பொறுப்பாகும். உண்மையிலேயே ஒரு இலக்கிற்காக உயிர்நீத்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மீது மதிப்பிருப்பது உண்மையாயின் முதலில் அதனை சுயநலத்திற்கு அப்பாற்பட்டு, அணுக வேண்டியதே முக்கியம். முதலாவது மாவீரர் தின உரையிலேயே பிரபாகரன் இவ்வாறு கூறுகின்றார்: வழமையாக எங்கள் மக்கள் மத்தியில் ஒரு பழக்கமுண்டு. பொதுவாக உயர்ந்த பதவியிலுள்ளவர்கள், வசதியானவர்கள் ஆகியோரையே பெரிதாக பார்க்கும் பழக்கமுண்டு. அது போல எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பெரிதாக பார்க்காமல் அனைத்து போராளிகளையும் சமமாக பார்க்கும், அதாவது தலைவர்கள் தொடங்கி சாதாரண போராளிகள் வரையில் அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும். அந்த நோக்கத்திற்காகவே வருடத்தில் ஒரு நாள் அனைவரையும் நினைவுகொள்ளும் வகையில் இந்த மாவீரர் தினத்தை முன்னெடுக்கின்றோம். பிரபாகரன் இருக்கும் வரையில் அவ்வாறுதான் மாவீரர் தினம் நினைவுகூரப்பட்டு வந்திருக்கிறது. இம்முறைதான் முதல் முறையாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுடரேற்றியிருக்கின்றனர். ஆனால் சம்பந்தனோ சுமந்திரனோ எந்தவொரு நிகழ்விலும் பங்குகொண்டிருக்கவில்லை.

சம்பந்தனை பொறுத்தவரையில் இதில் அவருக்கு உடன்பாடில்லாது விட்டாலும் இதனால் வரவுள்ள அரசியல் நன்மைகளை அவரே இறுதியில் அறுவடை செய்யவுள்ளார். அதாவது, புதிய அரசியல் யாப்பில் அவர் எதிர்பார்த்த விடயங்கள் நிகழப்போவதில்லை ஆனால் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் அதிருப்திகள் அதிகரிக்கலாம். இதனை சமாளிக்கும் ஓர் உத்தியாகவே அவர் இதனை கைக்கொள்கின்றார். மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான விடயங்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்படிப் பார்த்தால் மகிந்த அரசு இடித்தழித்த மாவீரர் துயிலுமில்லங்களை பயன்படுத்துவதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு அரசாங்கத்தின் மீதான மதிப்பையும் சம்பந்தனின் நகர்வுகள் மீதான நம்பிக்கையையும் மக்கள் மத்தியில் அதிகரிக்கலாம். இது மக்கள் மத்தியில் அனைத்து விடயங்களையும் விடவும், முதலில் இந்த அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டியதுதான் முதன்மையானது என்னும் பிரச்சாரத்திற்கு வலுச்சேர்க்கலாம்.

மாவீரர்தின அரசியல்

மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்திருக்கும் பின்புலத்தில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் பேசியிருப்பதையும் இந்த இடத்தில் கவனிக்கலாம். அதாவது, பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சம்பந்தனே சிறந்த தலைவர் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலம் வரவுள்ள புதிய அரசியல் யாப்பில் என்ன இருக்கிறதோ இல்லையோ இந்த அரசாங்கத்துடன் இணைந்து போவதே முக்கியம் என்னும் அடிப்படையிலேயே சம்பந்தனின் முடிவுகள் இருக்கப் போகின்றன. மேலும் இந்த நிலமைகளை அரச உளவுத்துறை துல்லியமக மதிப்பிடலாம். இதுபோன்ற விடயங்களை அனுமதிப்பதால் வரவுள்ள நன்மை தீமை என்ன, தடுப்பதால் வரக் கூடிய நன்மை தீமை என்ன? விளைவு பாதகமாக வரும் என்று அவர்கள் கணிப்பின் அடுத்த ஆண்டு இவ்வாறான நிகழ்கள் மீது சில இறுக்கங்களை ஏற்படுத்தலாம். தங்களுக்கு சாதகமெனின் மேலும் இறுக்கங்களை தளர்த்தலாம். ஆனால் அரசாங்கத்தை பொறுத்தவரையில் வரவுள்ள ஆண்டே மிகவும் முக்கியமானது. அதனை கருத்திற் கொண்டே அரசாங்கம் சில இறுக்கங்களில் சடுதியான தளர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.  

மாவீரர் தினம் நினைவுகொள்ளப்பட வேண்டும் என்பதில் இப்பத்திக்கு எந்தளவு உடன்பாடு இருக்கிறதோ அதேயளவு அது மக்களால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நிற்கிறது. வடக்கு கிழக்கிலுள்ள சிவில் சமூக அமைப்புக்கள், மதத்தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுப்பதே சரியானது. ஒரு போராட்ட அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட நினைவுகளை ஒன்றில், அந்த போராட்ட அமைப்பு முன்னெடுக்க வேண்டும் அல்லது அந்த அமைப்பு எந்த மக்களுக்காக போராடியதோ அந்த மக்கள் அதனை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் போராடி வீழ்ந்தவர்களுக்கான சமூக அங்கீகாரம் உறுதிப்படுத்தப்படும். இல்லாவிட்டால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தன்னுடைய சுயநல அரசியல் லாபங்களுக்காகவே அதனை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும். 

இந்த இடத்தில் மாவீரர் தினத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பிலும் சில நட்பு சக்திகள் வேறுபட்ட அப்பிராயங்களை முன்வைக்கின்றனர். அதாவது, இதனை அனைத்து இயக்க உறுப்பினர்களுக்கான தினமாகவும் முன்னெடுக்க வேண்டும் என்பது அவ்வாறானவர்களின் கருத்தாக இருக்கிறது. அனைத்து இயக்க உறுப்பினர்களும் நினைவுகொள்ளப்பட வேண்டுமென்பதில் இப்பத்தியாளருக்கு முரண்பாடில்லை. ஆனால் அதனை மாவீரர் தினமாக முன்னெடுப்பது பொருத்தமான ஒன்றாக அமையாது. ஏனெனில் மாவீரர் தினம் என்பது விடுதலைப் புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு. எனவே அதற்குள் ஏனைய இயக்க உறுப்பினர்களை இணைப்பதாயின் அது எந்தக் காலம் வரையில் சேர்ப்பது என்னும் கேள்வி எழும்பும். ஏனெனில் 1990களுக்கு பின்னர் ஏனைய பிரதான இயக்கங்கள் அனைத்தும் தமிழீழ நிலைப்பாட்டிலிருந்து விலகிக்கொண்டுவிட்டன. அது தொடர்பில் அவர்களிடம் தர்க்க நியாயமிருக்கலாம். அதனை தவறென்று நிரூபிக்க முற்படுவதிலும் பயனில்லை. 

அந்தவகையில் விமர்சனங்களுக்கு அப்பால், விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்றே தமிழீழம் என்னும் நிலைப்பாட்டிற்காக இறுதிவரையில் போராடி வீழ்ந்த இயக்கம். எனவே மாவீரர் தினம் என்பதை பிறிதொரு வகையில் குறிப்பிடுவதானால், இறுதிவரையில் தமிழீழ நிலைப்பாட்டிற்காக உயிர்நீத்தவர்களுக்கான தினமாகவே அதனை கருத முடியும். அப்படித்தான் அது இதுவரை கருதப்பட்டும் வந்திருக்கிறது. எனவே இதற்குள் அரசுசாரா நிறுவன திட்டங்களை மேற்கொள்ள முடியாது. ஆனால் மே -19 அல்லது பிறிதொரு தினத்தை அனைத்து இயக்க போராளிகளையும், உயிர்நீத்த தமிழ் மக்களையும் நினைவுகொள்ளும் வகையிலான நிகழ்வொன்றை முன்னெடுக்க முடியும். முதலில் ஒன்றை முன்னெடுப்பதற்கான இணக்கப்பாடு அவசியம்.

மாவீரர் தினமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தவொரு நினைவு தினமாக இருந்தாலும் அது ஒரு தலைமுறையின் தியாகங்களை பிறிதொரு தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பிக்கும் உயர்ந்த நோக்கை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாது போனால் இவ்வாறான தினங்கள் வெறுமனே சடங்குகளாக மாறிவிடும் ஆபத்துண்டு. மேலும் சமூகத்தின் பிழையான சக்திகளின் கைகளுக்குள் அகப்பட்டு மலினப்படுத்தப்படவும் வாய்ப்புண்டு.  

12/3/2016 7:36:13 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்