Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அரசாங்கத்தின் கால அவகாசம் கோரலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்

அரசாங்கத்தின் கால அவகாசம் கோரலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்
யதீந்திரா

 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பேசியிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரண்டு பக்கங்களிலும் உள்ள கடும்போக்குவாதிகள் ஏற்படுத்தும் குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் தாம் பயணத்தில் முன்னேறிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலம் முன்னேற்றங்களை மேலும் முன்னேற்றங்களாக மாற்றுவதற்கு கால அவகாசம் தேவை என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. அரசாங்கத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே விடயங்களும் நடைபெறவிருக்கின்றன. இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொள்கை ரீதியில் எதிர்ப்பவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?

தமிழ்ச் சூழலை உற்றுநோக்கினால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதைவிடவும் தங்களுக்குள் அடிபடுவதிலேயே தமிழ் அரசியல் தரப்புக்கள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் அரசாங்கத்தின் குறைபாடுகளை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவதிலிருந்து தமிழர் தரப்பு தவறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசாங்கமோ இவ்வாறு தமிழர் தரப்பு தங்களுக்குள் மோதிக் கொண்டிருக்கும் போது, அதனது கருமங்களை மிகவும் திறம்பட முன்னெடுத்து வருகிறது. அரசாங்கம் கால அவகாசம் கோருகின்றது. அதனைக் கொடுக்கலாமா அல்லது இல்லையா என்பதில் தமிழர் தரப்பு தங்களுக்குள் மோதிக் கொண்டிருக்கிறது. கால அவகாசம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன் முதலாக அதற்குள் ஒரு தெளிவான பிளவை அடையாளம் காட்டியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் இருக்கின்றன என்பது வெள்ளிடைமலை. ஆனால் இதுவரை இருந்து வந்த முரண்பாடுகளின் போது தமிழரசுக் கட்சியின் முடிவுகளுடன் ஒத்துப் போவதையே தங்களின் பிரதான அரசியலாக கைக்கொண்டிருந்த தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கூட அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கும் விடயத்தில் தமிழரசு கட்சியுடன் நிற்கவில்லை. சம்பந்தனின் முடிவுக்கு எதிராகவே டெலோ செயற்பட்டிருக்கிறது.

சம்பந்தன், கால அவகாசம் கொடுக்கலாம், ஆனால் அந்த கால அவகாசம் ஐ.நாவினால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் என்னும் நிலைப்பாட்டையே கூட்டமைப்பின் நிலைப்பாடாக வெளியிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு பத்திரிகையாளர் அமைப்பை சந்தித்திருந்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும், தாம் கால அவகாசம் வழங்குவதை எதிர்க்கவில்லை, அரசாங்கம் இணங்கியதை அமுல்படுத்த அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட வேண்மென்று தாம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும் உறுப்பு நாடுகளையும் கோரியுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார். சுமந்திரன் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போதே, கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏனைய மூன்று கட்சிகளின் தலைமைகளும் கால அவகாசம் வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தும் ஆவணமொன்றில் கையெழுத்திட்டிருக்கின்றனர். அந்த ஆவணத்தில் இலங்கை நிலமைகள் வடகொரியாவுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. வடகொரியா மனிகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்திருக்கிறது. ஆனால் இலங்கையோ யுத்தக் குற்றங்கள் அத்துடன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகிய இரண்டு குற்றங்களையும் இழைத்திருக்கிறது. இந்த நிலையிலேயே, ஐ.நா மனித உரிமைகள் பேரவை வடகொரியாவின் விவகாரத்தை பொதுச் சபைக்கு பிரேரித்திருந்தது.

இதன் மூலம் குறித்த ஆவணம் இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பதை விடுத்து, விடயம் பொதுச் சபைக்கு கொண்டு செல்லப்பட வேண்டுமென்றே வாதிடுகின்றது. இது சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறானது. இவ்வாறானதொரு ஆவணத்திலேயே கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் டெலோ, ஈ.பி.ஆர்,எல்.எப், டி.பி.எல்.எப். (புளொட்) ஆகிய மூன்று கட்சிகளும் கையெழுத்திட்டிருக்கின்றன. டெலோவின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டிருக்கின்றனர். மேலும் தமிழரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உட்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டிருக்கின்றனர்.

இப்போது கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று சம்பந்தன் கூறும் நிலைப்பாடு யாருடைய நிலைப்பாடு? சுமந்திரன் யாருடைய பேச்சாளர்? உண்மையில் கூட்டமைப்பிற்குள் தமிழரசு கட்சியின் நிலைப்பாடே இதுவரை கூட்டமைப்பின் நிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது என்பது இதன் மூலமாக தெட்டத் தெளிவாகியுள்ளது. இதுவரை சம்பந்தனின் முடிவுகளுக்கு நிபந்தனையில்லாத ஆதரவை வழங்கிவந்த டெலோவும், ஜெனிவா விவகாரத்தில் சம்பந்தனிலிருந்து விலகிவிட்டது. டெலோ தன்னுடைய நிலைப்பாட்டிற்கு மாறாக எதிர்காலத்தில் நடந்துகொள்ள முற்பட்டால் மக்கள் மத்தியில் பிழையாக நோக்கப்பட வாய்ப்புண்டு. 

சுமந்திரன் இந்த நிலைமைகளை புரிந்துகொண்டாலும் கூட, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கின்றார் என்பதே உண்மை. ஆனால் இப்படியொரு நிலைமை ஏற்பட்டதற்கு கூட்டமைப்புக்குள் விடயங்களை கையாளுவது தொடர்பில் ஒரு கலந்துரையாடல் இல்லாமையே காரணமாகும். இது தொடர்பில் முடிவெடுப்பதற்கு முன்னர், அனைத்து கட்சிகளையும் அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தால் இவ்வாறு முரண்பாடான நிலைப்பாடுகள் வெளிப்பட்டிருக்க மாட்டாது. இந்த விடயத்திலேயே குழம்பிக் கொண்டிருந்தால் இனி நிகழப் போகும் விடயங்களை கூட்டமைப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? கூட்டமைப்பு உடன்பட்டாலும் சரி உடன்படா விட்டாலும் சரி – ஏனைய தமிழ் தரப்புக்கள் எதிர்த்தாலும் சரி எதிர்க்காவிட்டாலும் சரி, அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்படுவது என்பது உறுதியாகிவிட்ட ஒன்றாகும். ஆனால் அவ்வாறானதொரு கால அவகாசத்தை அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தப் போகிறது? அதனை மேற்பார்வை செய்வதற்கு எவ்வாறானதொரு ஏற்பாட்டை கூட்டமைப்பு மேற்கொள்ளப் போகிறது?

கால அவகாசம் வழங்கலாம், ஆனால் அதனை ஐ.நா கிரமமாக மேற்பார்வை செய்ய வேண்டுமென்றும் ஒரு கோரிக்கை உண்டு. இது தொடர்பில் ஏற்கனவே வடக்கு கிழக்கிலுள்ள சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளடங்கலாக, தென்னிலங்கை அமைப்புக்கள் புத்திஜீவிகள் பலரும் கையெழுத்திட்டிருக்கும் ஒரு ஆவணமும் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் கால அவகாசம் வழங்கலாம், ஆனால் அதனை ஐ.நா மேற்பார்வை செய்ய வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நிலைப்பாடும் கிட்டத்தட்ட அப்படியான ஒன்றாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சரின் நிலைப்பாடுதான் தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு. இதில் கையெழுத்திட்டுள்ள சிலருடன் பேசிய போது, அவர்கள் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுகின்றனர். கால அவகாசம் வழங்க வேண்டாம் என்று கூறுபவர்களிடம் ஒரு மாற்று ஏற்பாடு இல்லை. நாங்களும் அவ்வாறு கூறினால், அதன் பின்னர் ஐ.நாவின் தொடர் நடவடிக்கைகளில் பங்குகொள்ள முடியாமல் போய்விடும். அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகளை நாம் எடுக்க முடியாது என்கின்றனர் அவர்கள்.

ஒரு வகையில் பார்த்தால் அவர்கள் சொல்லுவதிலும் உண்மை இருக்கிறது. கால அவகாசம் வழங்கப் போகின்றார்கள் என்பதை அறிந்த பின்னரும் அதனை எதிர்த்தால், அடுத்தது என்ன என்னும் கேள்விக்கு பதில் இருக்க வேண்டும். சிலர் இதனை கொள்கை நிலைப்பாடு என்று வர்ணிக்கலாம். கொள்கை நிலைப்பாடு இருக்கலாம், ஆனால் அந்த கொள்கை நிலைப்பாட்டின் நடைமுறைப் பயன்பாடு என்ன என்னும் கேள்விக்கு பதிலிருக்க வேண்டும். அண்மையில் இந்திய வெளிவிவகாரச் செயலர் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு அழுத்தம் வழங்க மாட்டோம் என்று கூறியிருந்தார். சிலர் அதனை கடுமையாக விமர்சித்தனர். இங்கும் விடயம் இதுதான். இந்தியாவுடன் நிற்க வேண்டுமென்னும் கடப்பாடு இல்லை. ஆனால் இந்தியா இல்லாமல் வடக்கு கிழக்கு இணைப்பை சாத்தியப்படுத்துவதற்கான வழி என்ன என்பதை சொல்வதில்தான் நமது விமர்சனத்தின் இலக்கு இருக்க வேண்டும். இதே போன்றுதான் ஐ.நாவின் நிலைப்பாட்டை எதிர்க்கலாம், ஆனால் அதன் பின்னர் என்ன என்பதற்கு பதிலிருக்க வேண்டும்.

அரசாங்கத்தின் கால அவகாசம் கோரலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்

கூட்டமைப்பிற்குள் இவ்வாறான முரண்பாடுகள் நிலவுகின்ற போது, கூட்டமைப்பை எதிர்ப்பதை முக்கியமாக சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை எதிர்ப்பதையே பிரதான கோசமாக வைத்திருக்கும் அரசியல் தரப்புக்கள், முக்கியமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு, கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்பதாகவே இருக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் இங்கும் ஒரு முரண்நகையான விடயமுண்டு. அதாவது, இவ்வாறானவர்கள் 2015இல் கொண்டுவரப்பட்ட அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்திருக்கவில்லை. கூட்டமைப்பை பொறுத்தவரையில், அவர்கள் அதனை முற்றிலுமாக ஆதரித்திருந்தனர். எனவே அவர்கள் ஆதரித்த ஒன்றைப்பற்றி இரு வேறுபட்ட நிலைப்பாடுகளை அவர்கள் எடுக்க முடியும். ஆனால் ஆதரிக்காதவர்கள் இது தொடர்பில் நிலைப்பாடுகளை எடுக்க முடியுமா என்னும் கேள்வியை ஒருவர் எழுப்பினால், அது சரியான கேள்வியே! ஒரு தீர்மானத்தை ஆதரிக்காது விட்டால், பின்னர் அதன் அமுலாக்கம் தொடர்பிலும் அவர்கள் கருத்துக் கூற முடியாது. மொத்தத்தில் ஜெனிவாவை எதிர்கொள்ளுவதில் தமிழ்த் தரப்பினர் மத்தியில் ஒரு தெளிவான வேலைத்திட்டம் இல்லை என்பதுதான் உண்மை. தங்களுக்குள் எவ்வாறு அடிபடலாம் என்பதே அனைவரதும் முதன்மையான நோக்கமாக இருக்கிறது. தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு முன்னால் எத்தனை வாய்ப்புக்கள் இருந்தாலும் அதனால் அதனை மக்களுக்கு பயனுடைய வகையில் கையாள முடியாது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையை பொதுவாக மனித உரிமைகளுக்கான சபை என்று கூறிக் கொண்டாலும் கூட, அது நாடுகளின் சபை. இதனை நவிப்பிள்ளையே தனது ஓய்வுக்கு பின்னர் பகிரங்கமாக கூறியிருக்கிறார். எனவே அங்கு சென்று மனித உரிமைகள் ஆணையாளருடன் சேர்ந்து படம்பிடிப்பதாலும், பேரவையின் லொபியிலிருந்து அங்கு வந்திருப்பவர்களோடு பேசுவதாலும் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை.

இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது கூட உலகளாவிய அமெரிக்க யூதர்கள் சேவை (American Jewish world service) என்னும் அமைப்பின் அனுசரணையில் வடக்கு கிழக்கிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சிலர் ஜெனிவாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறான அனைவரும் குறித்த அமைப்பின் நிதி உதவியை பெறும் உள்ளூர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆவர். இவர்கள் அங்கு சென்று என்ன செய்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது? உண்மையில் ஜெனிவாவிற்கு வெளியில் தொடர்ச்சியான பிரச்சாரங்களை முன்னெடுப்பதுதான் ஓரளவு ஜெனிவாவிற்குள் பிரச்சினைகளை கொதிநிலையில் வைத்திருப்பதற்கான ஒரே வழி. மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளை இலக்கு வைத்து செயற்படுவதானது ஒப்பீட்டளவில் அதிக பயனுடையது.

கனடாவில் இடம்பெற்ற சிவலிங்கம் ஞாபகார்த்த நினைவுரையில் பேசுகின்ற போது நவிப்பிள்ளை, புலம்பெயர் சமூகம் அவர்கள் வாழும் நாடுகளில் தொடர்ச்சியாக ஏற்படுத்திவந்த அழுத்தங்கள்தான், இந்த விவகாரத்தில் தாங்கள் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்தியது என்கிறார். இன்றைய சூழலில் பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் பிரித்தானிய அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து, குறிப்பாக அந்த நாட்டின் எதிர்க்கட்சியை இலக்கு வைத்து பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதே போன்று ஏனைய நாடுகளிலுள்ளவர்களும் அவ்வாறு பணியாற்றுவதன் ஊடாக, உறுப்பு நாடுகளை ஓரளவு எங்கள் பக்கமாக வளைக்கலாமா என்று பார்க்கலாம். இதுவும் கூட எழுதுவது போன்று இலகுவான காரியமல்ல. ஆனால் ஆகக் குறைந்தது இவ்வாறான முயற்சிகளாவது மேற்கொள்ளப்பட வேண்டும். கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னராவது அரசாங்கத்தை மேற்பார்வை செய்வதிலாவது ஒரு கூட்டு தமிழ் வேலைத்திட்டம் தேவை. அவ்வாறில்லாது விட்டால், இன்னும் இரண்டு வருடங்களின் பின்னரும் இதே விடயங்கள் தொடர்பில்தான் மீளவும் பேசிக் கொண்டிருக்க நேரிடும். 

3/4/2017 3:15:08 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்