Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே?

ஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே?
யதீந்திரா

 

ஆட்சிமாற்றம் இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. ஆனால் இதிலுள்ள ஆச்சரியமான பக்கம் என்னவென்றால் ஆட்சிமாற்றம் தொடர்பில் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்த எவருமே தற்போது அது தொடர்பில் வாய்திறப்பதில்லை. இதில் சில தமிழர்களும் அடக்கம். இவர்களில் கொழும்பை மையப்படுத்தி வாழ்பவர்களும் மற்றும் கொழும்பு மைய உயர்குழாம் ஒன்றுடன் தொடர்புகளை பேணுவதை பெருமையாகக் கருதும் சில வடக்கு கிழக்கு தமிழர்களும் அடங்குவர். இவர்களில் அனேகர் அரசுசாரா நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணிவருபவர்கள். அரசு சாரா நிறுவனங்களின் நிதியின் அளவுக்குத்தான் இவர்களது செயற்பாடுகளும் நீண்டு செல்லும்.

ஆட்சிமாற்றமொன்றை ஏற்படுத்துவதில் கொழும்பின் உயர் குழாம் ஒன்று பெரிதும் ஈடுபாடு காட்டியிருந்தது. அவர்களில் ஒரு சிலர் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உயர் பதவிகளை வகித்துவருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்கலாக பல்வேறு மேற்குலக கொடை நிறுவனங்களிடமிருந்து நிதியை பெற்ற ஒருவர் தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமொன்றில் உயர்பதவி வகித்து வருகின்றார். ஆட்சிமாற்றத்திற்கு தமிழ் வாக்குகள் அவசியம் என்னும் அடிப்படையில் இவ்வாறானவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவானவர்களாகவே தங்களை காண்பித்துக் கொண்டனர். இவ்வாறானவர்களே அரசின் நல்லிணக்க முயற்சிகளின் பங்காளர்களாவும் செயற்பட்டனர் – செயற்பட்டும் வருகின்றனர். 

அரச நல்லிணக்க முயற்சிகளை ஆழமாக நோக்கினால் அதில் ஒரு தெற்குமைய வாதத்தை காணலாம். தெற்குமைய வாதத்தை கொழும்புமைய வாதம் என்றும் சொல்லலாம். கொழும்புமைய வாதம் என்பது அடிப்படையில் ஒரு சிங்கள வாதம்தான். கொழும்புமைய வாதத்திற்குள் அடங்கும் தமிழர்களும் சிங்கள வாதத்தின் காவலர்களாகத்தான் செயற்படுவர். அவ்வாறுதான் அவர்களால் செயற்படவும் முடியும். இதற்கு மனோ கணேசன் ஒரு நல்ல உதாரணம். இதில் எவரேனும் விதிவிலக்காக செயற்பட முயற்சித்தால் அவர்களை கொழும்புமைய அரசியல் நிராகரிப்பதுடன், கடுமையாக எதிர்க்கவும் செய்யும். வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதற்கு ஒரு நல்ல உதாரணம். விக்னேஸ்வரன் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட போது, அவர் கொழும்புமைய அரசியலின் அங்கத்தவராகத்தான் இருந்தார். இதன் காரணமாகவே கொழும்பின் புத்திஜீவிகள் பலர் விக்னேஸ்வரனின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றிருந்தனர். சம்பந்தன் மிகவும் சரியானதொரு முடிவை எடுத்திருப்பதாக அவர்கள் சம்பந்தனை போற்றினர். ஆனால் நாளடைவில் விக்னேஸ்வரன் தமிழ் நிலைப்பாடொன்றில் உறுதியை காண்பித்தபோது, முன்னர் விக்னேஸ்வரனை ஆதரித்தவர்களே பின்னர் அவரை கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர்.

தன்னையொரு சிவில் சமூக செயற்பாட்டாளராகக் காண்பித்துக் கொள்ளும் நிமல்கா பெனான்டோ கூட, விக்னேஸ்வரனை எதிர்த்து அறிக்கை விடுமளவிற்கு நிலமைகள் தலைகீழாக மாறின. இன்று அதே நிமல்கா பெனாண்டோவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை கையாளுவதற்கென நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் ஒரு அங்கத்தவராக இருக்கின்றார். திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போது கூட, விக்னேஸ்வரன் இந்த விடயங்களை வேறு விதமாக சுட்டிக் காட்டியிருந்ததை இந்த இடத்தில் நினைவுகொள்ளலாம். தான் அரசியலுக்கு வந்த ஆரம்பத்தில், கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கிவந்த ஒரு சில சிந்தனைக் குழாம்கள் தனக்கு தொடர்ச்சியாக வாரந்த ஆலோசனைக் குறிப்புக்களை அனுப்பி வந்ததாகவும், ஆனால் தானோ ஒரு கட்டத்துடன் அவற்றை வாசிப்பதை நிறுத்திவிட்டதாகவும் விக்கி தெரிவித்திருந்தார்.

உண்மையில் கொழும்பின் ஒரு உயர்குழாம் ஆட்சிமாற்றத்தின் மீது கவனம் செலுத்தியதற்கு பின்னால் பிறிதொரு காரணம் இருந்தது. மகிந்த ராஜபக்ச அரசின் தலைமையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் இவர்கள் எவரிடமும் மாறுபட்ட அப்பிராயங்கள் இருந்திருக்கவில்லை. அனைவருமே அதனை வரவேற்றதுடன், அதனை தங்களுக்குள் மது அருந்திக் கொண்டாடக் கூடிய மனோநிலையில்தான் இருந்தனர். எனவே ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்ச தொடர்பில் இவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால் யுத்த வெற்றியின் பின்னர் மகிந்த ராஜபக்சவைச் சுற்றி பிறிதொரு உயர்குழாம் ஒட்டிக் கொண்டது. அது மெதமுல்லவை தளமாகக் கொண்ட ஒரு புதிய அணி. அவர்கள் அனைவரும் அதுவரை கொழும்பின் உயர் குழாமிற்குள் நுழையும் தகுதியில்லாமல் இருந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மகிந்தவினதும் அவரது மனைவியினதும் உறவினர்கள். இந்த இடம்தான் கொழும்பின் நீண்டகால மரபான உயர் குழாமிற்கு முன்னால் மகிந்த ராஜபக்ச ஒரு எதிரியாகத் தெரிந்ததன் காரணம். இந்த பின்புலத்தில்தான் மகிந்தவின் வெளியேற்றம் இவர்களுக்குத் தேவைப்பட்டது. இவர்களுக்கு மேற்குலக அரசுசார நிறுவனங்கள் அள்ளிக் கொடுத்ததும் மேற்படி பின்புலத்தில்தான்.

ஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே?

ஒருவேளை ராஜபக்ச மேற்குலக நிகழ்ச்சிநிரலோடு ஒத்துப் போயிருந்தால் நிலமை வேறுவிதமாக அமைந்திருக்கலாம். 2009இல் யுத்தம் நிறைவுற்றதும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பலரும் மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் நிலமைகள் பின்னர் சடுதியாக மாற்றமடைந்தன. இதற்கு பின்னால் இருந்தது ஓரேயொரு காரணம்தான். மகிந்த ராஜபக்சவின் வெளிவிவகாரக் கொள்கை இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலோடு நேரடியாக மோதியது. ஒருவேளை மகிந்த அவ்வாறானதொரு தெரிவை மேற்கொள்ளாதிருந்தால் மகிந்ததான் இப்போதும் இலங்கைத் தீவின் ஆட்சியாளராக இருந்திருப்பார். தன்னுடைய நலன்களுக்கு பாதகமில்லாவிட்டால் பிசாசுகளையும் ஆராதிப்பதுதான் உலக அரசியல். அமெரிக்காவின் முன்னைய ஜனாதிபதி புஷ்சினால் தீமைகளின் கூட்டு (axis of evil ) என்று வர்ணிக்கப்பட்ட வடகொரியுவுடன் தற்போதைய ஜனாதிபதி ரம்ப் உடன்பாடு செய்திருக்கிறார். ஏனெனில் இங்கு பரஸ்பர நலன்கள் மட்டும்தான் முக்கியம் பெறுகிறது. ஒருவர் முன்னர் என்ன பேசினார் – என்ன கொள்கையை கடைப்பிடித்தார் என்பதெல்லாம் இங்கு ஒரு பிரச்சினைக்குரிய விடயமல்ல. நலன்களை வெற்றிகொள்வதற்கு சூழ்நிலை கருதி முடிவெடுப்பதுதான் அரசியல். அவ்வாறான முடிவை கண்டடைவதற்குத்தான் ஒரு மக்கள் கூட்டத்திற்கு அரசியல் தலைமையொன்று தேவைப்படுகிறது.

எனவே விடயங்களை எப்போதும் தமிழர் நலனில் நின்று சிந்திப்பது மட்டும்தான் இங்கு முக்கியமானது. இந்தப் பத்தி ஏன் இதனை அழுத்திக் குறிப்பிடுகிறது என்றால், மீண்டும் விடயங்கள் ஒரு 'யு' வடிவத்தில் திரும்பப் போகிறது. மீண்டும் 2020இல் இடம்பெறப் போகும் தேர்தல் முன்னரைப் போன்று முக்கியத்துவம் பெறப் போகிறது. அப்போதும் முன்னரைப் போன்று பலரும் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் போன்று பேசுவார்கள். அவ்வாறான சூழலில் அவ்வாறான பசப்பு வார்த்தைகளுக்கு வசியப்படாமல் முடிவெடுக்கும் ஆற்றல் தமிழர் தரப்பிடம் இருக்க வேண்டும். ஏனெனில் அரசியலில் ஆற்றைக் கடக்கும் வரையில்தான் அண்ணனும் தம்பியும் இணைபிரியாதவர்கள். ஆற்றைக் கடந்துவிட்டால் பின்னர் இருவரும் யார் யாரோ. 2015இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு அவ்வாறானதொரு அனுபவத்தைத்தான் கொடுத்திருக்கிறது. தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் - கிடைத்துக் கொண்டிருக்கும் அனுபவங்கள் கற்றலுக்கான வாய்ப்பை வாரி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் கற்றுக் கொண்டு முன்நகரக் கூடிய தலைமைகள்தான் தமிழ்ச் சூழலில் இல்லாமல் இருக்கின்றனர். 

6/16/2018 3:26:48 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்