Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

முடிவுற்றது சம்பந்தனின் 2016 - தோல்வியை பதிவுசெய்தவாறு

முடிவுற்றது சம்பந்தனின் 2016 - தோல்வியை பதிவுசெய்தவாறு
யதீந்திரா

 

தோல்வியை பதிவுசெய்தவாறு சம்பந்தனின் நம்பிக்கைக்குரிய ஆண்டு நிறைவுபெறுகிறது. சம்பந்தன் மற்றும் அவர் மீது பக்திகொண்ட விசுவாசிகள் அனைவரதும் நம்பிக்கையை எள்ளி நகையாடிவிட்டு 2016, ஆண்டுகளுக்கே உரிய தன்மையுடன் சாதாரணமாக கழிகிறது. 2016இல் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதே சம்பந்தனின் நம்பிக்கையாக இருந்தது. பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் அது தனது ஊகம் மட்டுமே என்று சம்பந்தன் தெரிவித்திருந்தாலும் கூட, உண்மையில் சம்பந்தன் தனது பயணத்தில் தோல்வியடைந்துவிட்டார் என்பதை அவர் நன்கறிவார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, 2016 முடிவதற்குள் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை சம்பந்தன் தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கள் முழுவதுமாகவே பொய்த்துவிட்டது. அவரது எதிர்பார்ப்புக்கள் நிச்சயம் தோல்வியடையும் என்பதை ஏலவே சிலர் எதிர்வு கூறியிருந்தனர். இப்பத்தியாளரும் அது தொடர்பில் அறிவுறுத்தியிருந்தார். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த, சமஸ்டி கட்டமைப்பின் கீழான அரசியல் தீர்வு. ஆனால் 2016இல் இடம்பெற்ற அரசியல் விவாதங்களின் முடிவில் ஒரு பதில் வெள்ளிடைமலையாகியுள்ளது. அதாவது, அவ்வாறானதொரு தீர்வு நிச்சயம் இல்லை. அவ்வாறானதொரு தீர்வை புதிய அரசியல் யாப்பின் மூலம் உறுதிப்படுத்துவதற்கான ஏதுநிலை தெற்கில் இல்லை.

இவ்வாறானதொரு நிலையில்தான் எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரையில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது மேலும் சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்படலாம். நாடு ஒரு பதட்ட நிலைக்குள்ளும் செல்லலாம். ஆனால் அவ்வாறான பதட்டங்களுக்குரிய விடயங்கள் அரசியல் யாப்பில் இல்லையெனின் அவ்வாறான பதட்டங்களுக்கு தேவையில்லாமல் போகும். இலங்கை அரசியல் வரலாற்றை பொறுத்தவரையில் ஆளும்கட்சி முன்மொழிவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்னர், எதிர்க்கட்சி முன்மொழிவதை ஆளும் கட்சி எதிர்ப்பதும் ஒரு அரசியல் பழக்கதோசமாகும். ஆனால் 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னரான சூழலில் அந்தப் போக்கில் ஒரு சடுதியான மாற்றம் தெரிந்தது. ஆனால் அது ஒரு மாற்றமாக தெரிந்ததே தவிர மாற்றமாக பரிணமிக்கவில்லை. தென்னிலங்கை முற்றிலும் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி நகரவில்லை. வெளியில் நல்லாட்சிக்கான அரசாங்கமாக காண்பித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் முடிவுகளை எடுப்பதில் வழமையான ஆளும் கட்சி எதிர்க்கட்சி மனோபாவத்துடன்தான் இரு பிரதான கட்சிகளும் தொழிற்பட்டன.

ரணில் முன்மொழியும் திட்டங்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்க்கும் போக்கொன்று மெதுவாக மேலெழுந்தது. ஆரம்பத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குறிப்பிட்ட தரப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் இணைந்திருந்த சிறு கட்சிகளுக்குள் மட்டுமே காணப்பட்ட மேற்படி போக்கு, பின்னர் படிப்படியாக மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் பரவத் தொடங்கியது. அதன் பின்னர், நான் மேலே குறிப்பிட்ட பொதுவான 'அந்த' அரசியல் பழக்கதோசத்திலிருந்தே விடயங்கள் நோக்கப்பட்டன. நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் கதையும் ஏறக்குறைய 'பழைய குருடி கதவை திறடி' என்றானது. பழைய குருடி கதவைத் திறந்த போது, சம்பந்தனின் நம்பிக்கையும் சிதையத் தொடங்கியது. ஆனாலும் சம்பந்தன் ஏதும் நடைபெறாதது போல் வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் தீர்வு பற்றியே பேசிக் கொண்டிருந்தார். இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்னொரு பக்கத்தில் சுமந்திரன் வடக்கு- கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியமில்லை என்னும் உண்மையை போட்டுடைத்தார். இவ்வாறு கூறிய சுமந்திரனே பின்னர் தமிழீழத்தை தவிர வேறு எதனையும் நாங்கள் விட்டுவிடப் போவதில்லை என்றும் கூறுகிறார்.

ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட புலனாய்வு அதிகாரிகள் விடுவிக்கபட்ட பின்னணியில் அது பற்றி அப்பிராயம் தெரிவித்திருக்கும் சுமந்திரனோ இவ்வாறு கூறுகின்றார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிகட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்பதையே மேற்படி தீர்ப்பு எடுத்துக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார் சுமந்திரன். ஆனால் இதே சுமந்திரன்தான் முன்னர் சர்வதேச விசாரணை முடிவுற்றுவிட்டதாகவும் அபிப்பிராயம் வெளியிட்டவர். சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் அது தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, அது ஒரு சட்டவிவகாரம் என்றும், அது எல்லோருக்கும் விளங்காது என்றவாறும் பதிலளித்தவர். ஆனால் அவரே தற்போது சர்வதேச விசாரணை பற்றி பேசியிருக்கிறார். இது தொடர்பில் எவரேனும் கேள்வி எழுப்பினாலும் அதற்கும் அவரது சட்ட மூளையிடம் பதில் இருக்கலாம். வாதத்திறமையால் எதற்கும் பதிலளிக்க முடியும். அது ஒரு பெரிய காரியமல்ல.

உண்மையில் இவ்வாறான முன்னுக்குப் பின் முரணான அபிப்பிராயங்கள் ஒரு செய்தியை தெளிவாக எடுத்தியம்புகின்றது. அதாவது, சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் கட்டுப்பாட்டிலிருந்து நிலைமைகள் முற்றிலுமாக விடுபட்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தின் விளைவாகவே மேற்படி கருத்துக்கள் வெளிவருகின்றன. இதற்கு முன்னரும் குமாரபுரம் வழக்கில் அறங்கூறும் சபையின் மூலமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அங்கும் இவர்கள்தான் கொலை செய்தனர் என்பதை சாட்சிகள் திட்டவட்டமாக அடையாளம் காண்பித்தபோதும் கூட, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது சர்வதேச விசாரணை பற்றி சுமந்திரன் பேசவில்லை. ஆனால் தானே எடுத்து நடத்திய வழக்கில் தோல்வியடைந்த போதுதான் அவருக்கு சர்வதேச விசாரணையின் ஞாபகம் வந்திருக்கிறது. இந்தத் தீர்ப்புக்கள் ஆச்சரியமானவையல்ல. இன்னொரு வகையில் பார்த்தால் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஏனெனில் அவர்கள் வெறும் அம்புகள் மட்டுமே. எய்தவன் இருக்க அம்புகளை எப்படி நோவது? எய்தவர்களை இத்தீவில் தண்டிக்க முடியாது. ஏனெனில் அதற்கு சிங்கள மனச்சாட்சி இடமளிக்காது. இதுதான் நிலைமை. ஆனால் இந்த நிலைமைகளை முன்கூட்டியே கணிக்காமை எவருடைய தவறு?

ஆட்சி மாற்றத்தின் போது ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏலம்விட்ட போது இந்த தெற்கின் யதார்த்த நிலையை எண்ணிப்பார்த்து செயலாற்றாமை எவருடைய தவறு? ஆட்சி மாற்றத்தின் போது நம்பிக்கையளித்த தெற்கின் தலைவர்கள் ஏன் தற்போது மௌனம் காக்கின்றனர்? அவர்களெல்லாம் சிங்கள மனச்சாட்சியை உடைத்துத் தள்ளிக் கொண்டு தமிழ் மக்களின் நியாயத்திற்காக நிற்பார்கள் என்று எண்ணியது எவருடைய தவறு? அனைத்து விடங்களையும் தொகுத்து நோக்கினால் தெற்கின் தலைவர்கள் எவரையுமே தவறென்று சொல்ல முடியாது. அவர்கள் அவர்களது சமூகத்திற்கு உண்மையான தலைவர்களாக இருக்கின்றனர். இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்று எண்ணினால், சம்பந்தனின் முகமே பள்ளிச்சென்று தோன்றும்.

இப்படி ஒரு கருத்தை முன்வைக்கும் போது, பிறிதொரு கேள்வி எழலாம். சம்பந்தனை மட்டும் குற்றம் சாட்ட முடியுமா? நிச்சயமாக இல்லை. சம்பந்தன் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் ஏனையவர்களும் செயற்படவில்லை. இங்கு அழுத்தம் என்பது வெறுமனே அறிக்கைகள் விடுவதோடு நின்றுவிடுவதல்ல. மாறாக தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை அணிதிரட்டி வீதியில் இறங்கி அரசியல் போராட்டங்களை நடத்துவது. 2016இல் இடம்பெற்ற ஒரேயொரு அரசியல் போராட்ட முயற்சியாக 'எழுக தமிழையே' குறிப்பிட முடியும். ஆனால் அதுவும் ஒரு ஒரு ‘வன் டே மச்சாக’ சுருங்கிவிட்டது. அதற்கு தலைமை தாங்கிய தமிழ் மக்கள் பேரவை அதன் பின்னர் ஆழ்ந்த நித்திரையில் உறங்கிவிட்டது. உண்மையில் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மத்தியில் சந்திப்புக்களை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் அறிக்கைகளை எழுதி வாசித்த அளவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் வீறாப்பான அரசியல் தலைமை ஒன்றிக்கான நம்பிக்கையை ஊட்டவில்லை. உண்மையில் அப்படியொரு தலைமைக்கான தேவை தொடர்பில் அவரிடமே சந்தேகங்கள் இருக்கலாம். அவர் லண்டனில் ஆற்றிய உரை அவரது தடுமாற்றத்திற்கு சான்று. இப்படியான நிலைமைகள் பிறிதொரு புறம் சம்பந்தனை ஆசுவாசகமாக இயங்குவதற்கே அனுமதித்தது. இவ்வாறானதொரு நிலையில்தான் 2016 தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் பல கேள்விளை விட்டுக் கழிகிறது.

முடிவுற்றது சம்பந்தனின் 2016 - தோல்வியை பதிவுசெய்தவாறு

2016இன் நிலைமைகளை ஒரு வரியில் குறிப்பிடுவதானால், நல்ல தீர்வும் இல்லை, அதேவேளை இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியாகவும் ஒப்பீட்டடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாகவும் இருந்த சர்வதேச அழுத்தங்களும் இல்லை என்னும் நிலைமையே 2016 பதிவு செய்திருக்கின்றது. இந்த நிலைமைகளில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என்பதுதான் 2017இன் அரசியலாக இருக்கப் போகிறது.

2017 சம்பந்தனுக்குக்கும் கூட்டமைப்பிற்கும் ஒரு சவாலான ஆண்டாகவே இருக்கப் போகிறது. ஒன்றில் சம்பந்தன் மக்கள் முன்னால் வெளிப்படையாக தன்னுடைய நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் அல்லது இந்த அரசியல் பொறியிலிருந்து விடுபடும் வகையில் வழமையான பாணியில் அரசாங்கத்திற்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும். நம்பினோம் ஏமாற்றி விட்டார்கள் என்றவாறு பதிலளிக்க வேண்டும். சம்பந்தன் இரண்டாவது நிலைப்பாட்டை தழுவிக் கொள்ளவே அதிக வாய்புண்டு என்பது சிலரது அபிப்பிராயம். ஒரு வேளை சம்பந்தன் உண்மையான நிலைமையை மக்கள் முன்வைத்து, இதுதான் தற்போதைய நிலைமை, இந்த நிலைமையை நாம் அனுசரித்துத்தான் பயணிக்க வேண்டும் என்று கூறினால் அதற்கு ஆதரவு இருக்காது என்றும் கூறிவிட முடியாது. ஆனால் அதற்குரிய தற்துணிபு சம்பந்தனிடம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. ஆனால் அதீத கடவுள் பக்தரான சம்பந்தனின் குரு பெயர்ச்சி அவரை ஒருவேளை காப்பாற்றிவிடக் கூடுமென்று அவர் நம்பலாம். ஏனெனில் அவரது குரு பெயர்ச்சி அவரை பல சந்தர்ப்பங்களில் காப்பாற்றியிருக்கிறது. அவரை ஒருவேளை குரு காப்பாற்றினால் அவரை எதிர்த்து நின்றவர்களுக்கெல்லாம் சனிதான். ஒட்டுமொத்தத்தில் 2017 பல அரசியல் மாற்றங்களின் ஆண்டாக இருக்கப் போகிறது. ஒரு மாற்றமும் இடம்பெற்றாது விட்டாலும் அதுவும் கூட இலங்கை அரசியலில் மாற்றம்தான். 2017 ஆம் ஆண்டை வரவேற்போம். 

12/31/2016 11:09:39 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்