Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் - இணைந்தோ, தனித் தனியாகவோ நடாத்துவதில் என்ன தவறு?

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் - இணைந்தோ, தனித் தனியாகவோ நடாத்துவதில் என்ன தவறு?
பா.செயப்பிரகாசம்

 

'புலம்பெயர் தமிழர்களைப் பிரிக்கும் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்காதீர்கள்.' இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது ஒரு புலம்பெயர் இணையம்.

'முள்ளிவாய்க்கால் பேரழிவின் 3 -ஆம் ஆண்டு நினைவுப் பேருரை நிகழ்வு' என பிரிட்டனிலும் பிரான்சிலும் நடைபெறவுள்ள நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளின் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, இதைப் புறக்கணிக்கவும் எனக் கேட்டுள்ளார்கள்

முள்ளிவாய்க்கால் நினைவினை தமிழின உணர்வுள்ள எவரும் புலப்படுத்திக்கொள்ள உரித்தானவர்கள். இன்னார், இவரார் என்ற வேறுபாடோ வெறுப்போ தேவையற்றது. எதிரி நினைவு நிகழ்வு எடுக்கமாட்டான். பால் பாயசமும் பால் சோறும் வழங்கி அன்றைய நாளில் கொண்டாடிய சிங்கள எதிரி, மூன்றாம் ஆண்டு வெற்றிவிழாவாகக் கொண்டாடுகிறான். அதனை அரசு நிகழ்வாக நடத்தப் போகிறான். நமக்குள்ளே நாம் இதற்கு முன் ஒன்றுபட்டு புலம்பெயர் நாடுகளில் கொண்டாடினோம்.

விடுதலைப் போருக்கான அடிவைப்புகளை எவ்வகையாய் இடுவது என்பதில் இப்போது வித்தியாசங்கள் எழுந்துள்ளன. நடைமுறையிலான வித்தியாசங்களாகவும் உருக்கொண்டு விட்டன. கருத்து அளவிலான வேறுபாடுகளை அங்கீகரித்துக் கொண்டே அனைவரும் இணைந்தோ, தனித் தனியாகவோ நிகழ்வை நடாத்துவதில் என்ன தவறு உள்ளது? கருத்து வித்தியாசமோ செயல் வழியோ அல்ல பிரச்சினை. உலக அளவிலானதும் உள்ளூர் அளவிலானதுமான தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதே பிரச்சினை. மக்களுக்கு இதில் எந்தக் கூட்டத்துக்குப் போவது? யார் சார்பாக இயங்குவது? என்பதை தீர்மானிக்கிற உரிமையுண்டு.

விளங்கப் பண்ணி விமர்சனம் வைப்பது எல்லோருக்குமான உரிமை. விளங்கப் பண்ணுவதை நிறைவு செய்துவிடின் மக்கள் முடிவு எடுத்துக் கொள்வார்கள். விளங்கிக் கொள்ளுதலும் புரிதலும் அவரவர் சுய சிந்தனைக்கு விடப்பட வேண்டியவை. அதன் அடிப்படையில் முடிவினை அவர்கள் எடுப்பார்கள். ஆனால் இந்த இந்தக் கூட்டங்களை புறக்கணிக்கவும் என முடிவையும் நாமே தீர்மானிக்கிற உரிமை எவருக்கும் கிடையாது. சுய சிந்திப்பின் நியாயத்தை மறுப்பதோடு, சிந்திப்பின் சனநாயகததையும் மறுதலித்து வன்முறையைப் பிரயோகிப்பதாகவே கருதப்படும். இணையமாக இருப்பதால் இதற்கு மேல் வன்முறையைப் பயன்படுத்த வாய்ப்பில்லை. இதெல்லாம் நாம் கட்டளையிடும் இடத்திலேயே இன்றும் இருக்கிறோம் என்ற கண்ணோட்டத்திலிருந்து - முந்திய மனோபாவத்திலிருந்து பெறப்படுவது. நாம் சுயவிமர்சனக் கால கட்டத்தில் இருக்கிறோம் என்ற நினைவிலியாக இருப்பதிலிருந்து வருவது.

பொதுமலான மண்ணில் புதைக்கப்பட்ட சடலம் மழையில் கரைந்து மண் சரிய மேலே தெரிய வருவது போல் விடுதலைப் போரின் தவறுகளும் வெளிப்படத் தொடங்கியுள்ளன. அறவழிப் போராட்டத்தின் காலத்தில் முழு மூச்சாய் விடுதலை என்பதை நோக்கியதாக பயணம் இல்லை. அவ்வப்போது போராட்டம், அவ்வப்போது சமரசம், சிலர் எதிரியின் கையாளாய் உள்மடங்குதல் - இப்படி ஜிக்-ஜாக் ஆகவே நீண்ட காலம் கடந்துள்ளது.

மற்றொரு அரசியல் ஆய்வாளர் குறிப்பிடுவதுபோல் ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் யாரும் முழுநேர ஊழியர்களாக இருந்ததில்லை. வழக்குரைஞர்களாக, வேறுவேறு தொழிலில் ஈடுபடுபவர்களாக, ஜி.ஜி.பொன்னம்பலம் போல் தொழிலதிபர்களாக - என இருந்துகொண்டு பகுதி நேரப் பணியாக அரசியல்பணி செய்து வந்துள்ளதைக் காணுகிறோம். அமிர்தலிங்கம்தான் எதிர்க்கட்சித் தலைவரானதும் முதல் முழுநேர அரசியலாளராகிறார். ஆனால் சிங்களத் தலைமைகளின் அரசியல் நுழைவே முழுநேரப் பணியாய் தொடங்கி தொடர்ந்தது. 'தொழிலாளி எப்போதாவது தூங்குவான். முதலாளி ஒருபோதும் தூங்குவதில்லை' என்கிற வாசக உண்மை போல் சிங்கள இன ஆதிக்கவாதிகள், அடக்குமுறைச் சிங்கத்தையும் வாளையும் மேலே மேலே உயர்த்திக் கொண்டே செல்ல வேண்டியிருந்ததால் தூங்கினார்களில்லை. அதுவே அவர்களின் பெரு நோயாகவும் பெருங்களிப்பாகவும் மாறிற்று.

ஈழத்தில் ஆயுதம் ஏந்திய காலம் உலகம் முழுவதும் ஆயுதப் போராட்ட எழுச்சிகளின் காலமாக இருந்தது. கியூபா, வியட்நாம், கினிபிஷா, அங்கோலா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலைப் போர்கள் ஆயுத வடிவத்தில் முன்னும் பின்னுமாக வரலாற்று நிகழ்வு நிரலில் ஏறிக்கொண்டிருந்தன. அரசியல் களப்பணிகளுக்கு முதன்மை தந்து மக்களை அரசியல்படுத்தி மக்கள் படையைக் கட்டாமலும், ஐக்கிய முன்னணி உத்தியைக் கையாளாமலும் ஆயுதக் கையாளலே பிரதானமாக அமைந்தது. இது இராணுவக் கலாச்சாரமாக உருவெடுத்தது. இராணுவ அமைப்பில் சனநாயகம் இல்லை. தேவையும் இல்லை. அனைத்துப் போராளிக் குழுக்களும் இராணுவக் கலாச்சாரத்திலேயே முங்கி முழுகி நீராடி மேலெழுந்து நடந்தன.

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் - இணைந்தோ, தனித் தனியாகவோ நடாத்துவதில் என்ன தவறு?

'விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கப்பட்டதன் பின் அனைத்தையும் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கலின் அவசியம் உணரப்படும் இவ்வேளையில், விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினரது செயற்பாடுகளும் மறுபரிசீலனைக்கு உட்பட்டே ஆகவேண்டும்' என்பார் மு.புஷ்பராசன்.

இந்தப் பார்வையில் கடந்த காலத்தினது அனைத்துச் செயல்பாடுகளையும் விமர்சிக்கவேண்டிய காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம். நமது நிர்க்கதி இந்த அவசியத்தைக் கோருகிறது. இன்னும் இன்னும் வீரமரபினராக காட்டிகொள்வதும் ஒற்றை பிம்ப வழிபாடும் நம்மைக் கடைத்தேற்றாது. தலைமைக்கும் அப்பால் சிந்திப்பது அநீதியானது என்ற ஆபத்தான உள்மடங்களையும் அது கொண்டிருக்கிறது. அதேவேளையில் சுயசிந்தனையற்ற மக்கள் தொகுதியை உருவாக்கவும் செய்கிறது. தலைவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற பொதுப் புத்திக்கு இதுவே அடித்தளமிடுகிறது. ஆனால் ஒவ்வொரு காலத்துக்குப் பின்னும் மற்றொரு காலம் வருகிறது. அது மாறாத் தன்மையுடையது அல்ல. காலமாற்றத்தை கணக்கில் கொள்ளாததின் விளைவு- நாம் காலத்தை இழப்போம் என்பது தான்.

இராணுவ வல்லமையை இராசதந்திர வல்லமை வெல்லும் என்பது உண்மை. இராஜபக்சே மட்டுமல்ல, இவனுக்கு முந்திய இலங்கை அதிபர்கள் அனைவருமே இராசதந்திரக் கலையில் விருது பெரும் திறனாளிகள். முதலில் இராஜபக்சே 2006 முதல்

1. இது உள்நாட்டுப் போர். இதில், வெளிநாட்டுத் தலையீடு கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்தான். இப்போது சிரியா, எகிப்து, லிபியா, ஏமன் -போன்ற நாடுகளில் அரசுக்கு எதிராக நடக்கும் ஆயுதந் தாங்கிய போராட்டமும் உள்நாட்டுப் போர் தான். ஆனால் அவை மக்கள் எழுச்சிகளாகவும் இலங்கையில் நடப்பது உள்நாட்டுப் போராகவும் அனைத்துலகம் ஏற்றது.

2. உள்நாட்டுப் போராதலால் இலங்கை அரசு தன்னை தற்காத்து கொள்ள உரிமையுடையது எனவும் இலங்கை அரசு ஒற்றைத் தனி அலகு எனவும் அனைத்துலகு ஏற்றுக் கொண்டது.

3. தன்னைத் தற்காத்துக் கொள்ளலில் ஏற்புடைய அளவில் வன்முறையைப் பிரயோகிப்பது ஏற்கப்படுகிறது.

4. செப்டெம்பர் 11, 2001 அமெரிக்கா கையளித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற சிந்தனை உலகமயமானபோது, இலங்கை அதை தனது தத்துப் பிள்ளையாக்கிக் கொண்டு சொந்தப் பிள்ளைகளை கொலையாடத் துணிந்தது. பயங்கரவாதிகள் என்ற அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்தபோது, அதை பெரு வாய்ப்பாக இராஜபக்சே தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டான். எனவே பயங்கரவாதிகளை ஒழித்தல், சட்டம் ஒழுங்கை நிலைப்படுத்துதல் என்ற அடிப்படையில் இனஅழிப்பு நியாயப்படுத்தப்பட்டது.

இதனை - மானுடத்துக்கு எதிரான குற்றம் என பொதுவான வார்த்தைகளிலேயே சித்தரிக்கிறது சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International). போர்க்குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றம் - இரண்டும் ஒன்றே என டப்ளின் தீர்ப்பாயம்-2010 தெளிவுபடுத்தினாலும் நோக்கம் எதுவெனக் காணவேண்டும் என்று அழுத்தமாகப் பேசுகிறது. ஒருவரை அல்லது ஒருவருக்கும் கூடுதலான மக்கள் கூட்டத்தை கொலை செய்வது எந்த நோக்கத்தின் அடிப்படையில் எனப் பார்க்கிறபோது, பெரும்பான்மை மக்கள் கொலைபடக் காரணமான இலங்கை அரசே குற்றவாளி என டப்ளின் தீர்ப்பாயம் சுட்டிக் காட்டுகிறது. இலங்கை அரசு ஒரு பேரினவாத அரசு. தன் நாட்டுக்குள் வாழும் உரிமை கொண்ட சொந்த மக்களை இன வேற்றுமை பாராட்டி அழித்துள்ளது. ஆகையால் இது இனப்படுகொலை என இந்த அமைப்புக்கள் எதுவும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

இல்லினாயஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் மனித உரிமைகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரான்சிஸ் பாயில்ஸ் மட்டுமே முதன் முதல் இந்தக் கொடூரத்தை இனப்படுகொலை என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார். இனப்படுகொலைக்கு உள்ளான எந்த ஒரு இனமும் தனி நாடாக ஆகிக் கொள்வதற்கான தகுதி கொண்டோராவர் என தெளிவுபடுத்தினார்.

ஆகையால் தமிழர் முன்னுள்ள மிகப்பெரிய பணி மனித உரிமை மீறல், போர்க்குற்றங்கள் - போன்ற சொல்லாடல்களிலிருந்து வேறுபடுத்தி, மிகமிகத் துல்லியமாக தமிழினப் படுகொலை புரிந்த அரசு என்ற இடத்துக்கு இலங்கையைக் கொண்டுபோய்  நிறுத்துவதாகும். கொலையாளிக்கு வெளிப்படையான பாதுகாவலனாய் இந்தியா, சீனா, பாகிஸ்தானும் மறைமுக காவலாளியாய் அமெரிக்க போன்ற மேலைத் தேயங்களும் கைலாகு கொடுக்கின்றன. இனப்படுகொலையினை நியாயப்படுத்தும் இழிவைச் செய்ய தேச சுய நலன்களின் பொருட்டு எல்லைகளற்று நடப்பார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே ஒன்றுபடுதலுக்கான இராசதந்திர முன்னகர்வுகளே இப்போதைய உடனடி அவசியம்.

கட்டளையின் காலம் முடிவடைந்து போனது. இது விமர்சனங்களின் காலம். அதிகாரத்தின்- குறிப்பாய் தலைமையின் அதிகாரம் முடிவு பெற்றுள்ளது. ஒவ்வொரு படி நிலையிலும் அதிகாரம் என்பது முதலாளித்துவ அதிகார கட்டமைப்பு. ஒவ்வொரு படிநிலையிலும் சனநாயகம் காத்தல் என்பது, அது என்ன விலையாயினும் காக்கப்படவேண்டும். சனநாயகம் ஒன்றே ஒன்றுபடுத்துவது. அதிகாரம், கட்டளை எல்லாமும் அச்சுறுத்துவது. வேற்றுமையை வளர்ப்பது.

கனரக ஆயதங்கள் பிரயோகம், ஷெல்லடி, விமானக்குண்டு வீச்சு, ஏவுகணை, கொத்துக் குண்டுகள் பயன்படுத்தியது மட்டுமே இனக்கொலை அல்ல. இப்போதும் இலங்கைத் தீவில் அடுக்கடுக்காக இன அழிப்பு திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறது. வடக்கில், கிழக்கில் பிப்ரவரி 27, 28 -நாட்களில் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கணிசமான தமிழ்மக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இரு நாடாளுமன்றத் தொகுதிகளை தமிழர்கள் இழக்கிறார்கள். அதேபொழுதில் சிங்களர், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இரு மடங்கு பெருகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் பலர் வெளிநாடுகளுக்கு பயணமாகி விட்டனர். பலர் கொழும்பில் குடியேறியுள்ளனர். அங்கும் வெளிநாடு செல்லும் தருணத்தை எதிர்நோக்கியே இருக்கிறது அவர்கள் காத்திருப்பு. இலங்கை அரசும் தாராளமாய் விசா வழங்கி தமிழர்கள் எண்ணிகையை கரைப்பதில் மூர்க்கம் கொண்டுள்ளது.

சிங்களக் குடியேற்றம், இராணுவக் குடியிருப்புகள், புத்த விகாரைகள் பெருக்கம் என்பன எல்லாமும் எதன் அறிகுறிகள்? சிங்களத்தின் அதிவல்லமையுடைய இராச தந்திரத்தைப் புரிந்து செயல்பட்டால் மட்டுமே, ஒன்றுபட்டு அதற்கு நிகரான இராசதந்திர வலயங்களை அவரவர் நாடுகளில் விரித்தால் மட்டுமே விடிவு. இப்போதுதான் விமர்சனங்களின் வெளி (space) உருவாகிவருகிறது. அதை முற்றாக அடைத்துவிட முயல வேண்டாம். இப்போதுதான் காலம் ஆகி வந்து கொண்டிருக்கிறது. காலத்தை, களத்தை பொதுமக்கள் வாக்கெடுப்பு வழி தனிநாடு நோக்கி நகர்த்துவோம்.

5/11/2012 5:59:53 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்