Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கிழக்கு மாகாணசபை தேர்தலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்

கிழக்கு மாகாணசபை தேர்தலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்
யதீந்திரா

 

மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடலாமா, இல்லையா என்னும் விவாதங்கள் அனைத்தும் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டன. மாகாணசபையில் த.தே.கூட்டமைப்பு போட்டியிடக் கூடாது, அது தமிழர்களின் தேசியப் பிரச்சனைக்கு பலவீனமானதொரு தீர்வை திணிப்பதற்கே வழிவகுக்கும் என்னும் வாதத்தை சிலர் முன்வைத்தனர் – எனவே கூட்டமைப்பு இதில் பங்குகொள்ளக் கூடாது, மாறாக பிறிதொரு பொருத்தமான கட்சியை அல்லது சுயேட்சைக் குழுவை நிறுத்தி அவர்களை கூட்டமைப்பு ஆதரிக்கலாம் - என்னும் யோசனையை அவ்வாறானவர்கள் முன்வைத்து வந்தனர்.

ஆனால் இவ்வாறான வாதங்கள் அனைத்தும் இன்றைய பலமான அரசை முன்னிறுத்தி சிந்திப்போமானால் - மிகவும் பலவீனமான வாதங்களாகவே இருக்கின்றன. சுயேட்சைக் குழுக்களை அரசு கையாளுவது மிகவும் இலகுவானது என்பதுடன், அதன் மீதான கூட்டமைப்பின் கட்டுப்பாடும் நிரந்தரமான ஒன்றல்ல. எனவே மாகாணசபை தேர்தல் தொடர்பில் த.தே.கூட்டமைப்பின் முடிவு மிகவும் காலப் பொருத்தமானதும், யதார்த்தபூர்வமானதுமாகும் என்பதே இப்பத்தியின் கணிப்பாகும். முன்னர் கூட்டமைப்பு மாகாணசபை தேர்தலை நிராகரித்ததை குறிப்பிட்டு சிலர் இதனை நோக்கலாம். ஆனால் முன்னைய அரசியல் நிலைமை வேறு தற்போதைய சூழல் வேறு. இந்த அடிப்படையான சூழ்நிலை வேறுபாட்டை கருத்தில் கொண்டே, இன்றைய அரசியல் முன்னெடுப்புக்களை விளங்கிக்கொள்ள வேண்டும்.

முன்னர் த.தே.கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளின் விருப்பு வெறுப்புக்களை மக்கள் மத்தியில் பிரதிபலிக்கும் ஒரு அமைப்பாகவே இருந்தது. புலிகள் விரும்பாத ஒன்றை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆற்றலை அப்போதைய கூட்டமைப்பு கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அரசியலில் தீர்மானகரமான சக்தியாக விடுதலைப்புலிகள் இருக்க, அந்த தீர்மானகரமான சக்தியின் முடிவுகளை மக்களின் முடிவாகக் காட்டும் பிரச்சார அமைப்பாகவே அப்போது த.தே.கூட்டமைப்பு இருந்தது. இதுவே த.தே.கூட்டமைப்பு, 2008 இல் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலை புறக்கணித்ததன் பின்னணியாகும்.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் - அவர்கள் தேர்தல்களை, தங்களின் இராணுவ நகர்வுகளுக்கான ஒரு முன்னகரும் அல்லது ஒரு இளைப்பாறும் உக்தியாகவே பயன்படுத்தி வந்தனர். இராணுவ வெற்றிகளுக்கூடாக அரசியலை கையாள முடியும் என்று நம்பிய விடுதலைப்புலிகளின் பார்வையில் அது சரியானதொரு அணுகுமுறைதான். ஆனால் ஒரு ஜனநாயக அமைப்பு அவ்வாறு சிந்திக்க முடியாது. ஜனநாயக அரசியல் அமைப்பு ஒன்றின் பிரதான கருவி, அந்த ஜனநாயகத்தை பிரதிபலிக்;கும் கட்டமைப்புக்களாகும்.

இலங்கையின் ஜனநாயக அரசியல் அமைப்பு முறைமை, மூன்று தளங்களின் இயங்குகின்றது. பாராளுமன்றம், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் - இந்த மூன்றிலும் பங்கு கொள்வதன் மூலமே, ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பு தனது அரசியலை முன்னெடுக்க முடியும். த.தே.கூட்டமைப்பு பாராளுமன்றத்திலும், உள்ளூராட்சி சபைகளிலும் பங்குகொண்டு வருகிறது. மாகாண சபையை மட்டும் தனித்து பிரித்து நோக்குவதில் என்ன அரசியல் இருக்க முடியும்? ஆனால் மாகாணசபையில் பங்கு கொள்வதுடன் கூட்டமைப்பின் பணி முடிந்துவிடப் போவதில்லை. ஏனெனில் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் உரிமைகளை வெற்றி கொள்வதற்கான அமைப்பு. எனவே ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு ஜனநாயக அமைப்பு என்னும் வகையில், சட்டபூர்வமான ஜனநாயக அமைப்புக்களை கையாளும் அதே வேளை, அந்த அமைப்புக்களின் போதாமையை, அந்த அமைப்புக்களுக்கு வெளியில் அம்பலப்படுத்தி செயற்பட வேண்டிய பொறுப்பும் கூட்டமைப்பிற்கு உண்டு. இந்த இடத்தில்தான் சர்வதேச ஆதரவை தமிழ் மக்களின் கோரிக்கை சார்ந்து கையாளும் விடயம் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலான தமிழர் அரசியல் செயற்பாடுகளில், தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில், செயல் வடிவம் பெற்ற ஒரேயொரு தீர்வு ஆலோசனை மாகாணசபை முறைமை மட்டும்தான். மாகாணசபை முறைமையில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றது என்பதில் பிறிதொரு விவாதத்திற்கு இடமில்லை. ஆனால் எந்தவொரு தீர்வும் முதலில் பயன்படுத்தப்பட (Exercise) வேண்டும், பின்னரே அதன் போதாமைகளை முதன்மைப்படுத்தி செயலாற்ற முடியும். துரதிஸ்டவசமாக இவ்வாறானதொரு புரிதல் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்த முன்னைய தலைமைகளிடம் இருந்திருக்கவில்லை. அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய முடிவு ஒரு முன்னேறிய நடவடிக்கையாகும் என்பதே இந்த பத்தியாளரின் கருத்தாகும். மாகாணசபையை கையாண்டு கொண்டே, அதன் போதாமைகளை அம்பலப்படுத்தும் அரசியலை செய்ய வேண்டிய சூழலுக்குள் த.தே.கூட்டமைப்பு களமிறங்கியிருக்கின்றது.

இப்போதுள்ள அடுத்த கேள்வி, கிழக்கு மாகாணசபை தேர்தலை த.தே.கூட்டமைப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது? கிழக்கின் நிலைமைகளின்படி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதில் தற்போது சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆளும் கூட்டணி அரசின் பிரதான சிறுபான்மை பங்காளியான முஸ்லிம் காங்கிரஸ், தனித்து போட்டியிடும் முடிவை அறிவித்ததைத் தொடர்ந்து தேர்தல் முடிவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில், முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே தற்போது மு.காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கான பிரதான காரணம் ஆகும்.

அண்மைக்காலமாக முஸ்லிம்கள் தொடர்பில் அரசு கடைபிடித்துவரும் சில விடயங்களில் அதிருப்தியடைந்துள்ள இஸ்லாமிய அமைப்புக்களின் கடும் விமர்சனங்களே, முஸ்லிம் காங்கிரசுக்குள் அரசுடன் இணைவது தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்படக் காரணமாகியது. அத்தகைய அதிருப்திகளை புறம்தள்ளி அரசுடன் இணைவதால் முஸ்லிம் காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகலாம் என்னும் அச்சத்தின் காரணமாகவே அதன் தலைமை இத்தகையதொரு முடிவை எடுத்திருக்கிறது. இதனை வரவேற்றிருக்கும் தமிழர் தரப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சிறந்ததொரு முடிவு என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

கிழக்கு மாகாணசபை தேர்தலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்

ஆனால் இது சிறந்த முடிவா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகளின் பின்னரேயே தீர்மானிக்க முடியும். முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால், அதனால் தனித்து கிழக்கு மாகாணசபையை கைப்பற்ற முடியாதுள்ளது. தற்போதைய நிலையில், கிழக்கு மாகாணசபை த.தே.கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி – ஆகிய நான்கு பிரதான தரப்பினரால் பங்கு போடப்படவுள்ளது. இதில் த.தே.கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரசோ அல்லது அரசுடன் முஸ்லிம் காங்கிரசோ இணைவதன் மூலமே, கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்ற முடியும். இதற்கான வாய்ப்பே அதிகமுள்ளது. இதில் முஸ்லிம் காங்கிரஸ் எத்தகைய முடிவைக் கொண்டுள்ளது என்பதை பொறுத்திருந்தே நோக்க வேண்டியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் த.தே.கூட்டமைப்புடன் இணைவதற்கான வாய்ப்புள்ளதாக சிலர் ஆசைப்பட்டாலும், மு.காங்கிரசின் முதன்மையான தெரிவு அரசாகவே இருக்கலாம். தேர்தல் முடிவுகளின் பின்னர் அரசுடன் பேரம் பேசுவதன் மூலம் தங்களது இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள மு.காங்கிரஸ் முயற்சிக்கலாம். முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் கதிரையை வழங்குவதாக அரசு ஒப்புதல் அழிக்குமாயின் மு.காங்கிரஸ் அரசுடன் கைகுலுக்கிக் கொள்வதில் பெரியளவில் சிக்கல்கள் இருக்கப் போவதில்லை. பெரும்பாலான முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பும் கிழக்கின் முதலமைச்சர் ஆசனமாகவே இருக்கிறது. எனவே இத்தகைய விடயங்களை ஒரு ஓரமாக வைத்துவிட்டு த.தே.கூட்டமைப்பு தனது வெற்றி குறித்தே இப்போது சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே அவரசப்பட்டு முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டுச் சேருவதற்கான வாய்ப்புக்கள் பற்றி கூட்டமைப்பினர் இப்போது பிரஸ்தாபிக்க வேண்டியதில்லை.

இந்த தேர்தலில் கூட்டமைப்பிற்கு சில சாதகமான வாய்ப்புக்களும் உண்டு. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் சில முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. அதில் முதலாவது வெடிப்புத்தான் முஸ்லிம் காங்கிரசின் தனித்துச் செல்லும் முடிவு. அதேவேளை விமல் வீரவன்சவும் வேட்பாளர்களை ஒதுக்கீடு செய்வதில் முரண்பட்டிருக்கின்றார். ஆளும் தரப்பினருக்குள் முரண்பாடுகள் அதிகரித்துச் செல்லும் சூழலில், த.தே.கூட்டமைப்பு ஒன்றுபட்ட தமிழ் அரசியல் சக்தியாக தேர்தலை எதிர்கொண்டிருப்பது ஒரு சாதகமான அம்சமாகும். அதே ஒற்றுமையுடன் உள்முரண்பாடுகளை ஓரப்படுத்தி கூட்டமைப்பு தேர்தல் வெற்றியில் கவனம் செலுத்துமாயின் அதிக ஆசனங்களை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாமலில்லை.

ஆனால் இதற்கு தாக்குதிறனுள்ள திட்டமிடல் கூட்டமைப்பினருக்கு அவசியம். வேட்டி கசங்காத பழைய அரசியலை கூட்டமைப்பு இம்முறையும் செய்யுமாயின் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போகலாம். அரசியலில் இரண்டு வழிகளில் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. ஒன்று, புறநிலைமைகளால் உருப்பெறும் வாய்ப்புக்கள். இரண்டு, குறிப்பிட்ட அரசியல் அமைப்பொன்று தனது புத்திசாதுர்யமான நடவடிக்கைகளால் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள். தங்களது சொந்த நடவடிக்கைகளால் சாதகமான வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஏது நிலை த.தே.கூட்டமைப்பை பொறுத்தவரையில் இப்போது இல்லை. எனவே புறநிலைமைகளால் கனிந்துவரும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வதற்கான தயாரிப்பு நிலையில் கூட்டமைப்பு இருப்பது அவசியம். இது ஒன்றுதான் இன்றைய சூழலில் த.தே.கூட்டமைப்பின் பிரதான அரசியல் பணியாகும்.

7/20/2012 5:03:06 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்