யதீந்திரா
எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமது விருப்பங்களின் எல்லைகளுக்கு அப்பால் சில சர்வதேச சக்திகள் இருக்கின்றன. அவ்வாறான சக்திகளின் விருப்பங்கள், தேவைகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறே பெரும்பாலான விடயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் மீதான சர்வதேச ஈடுபாடு என்பது, அந்த நாடு அமைந்திருக்கும் புவியியல் பரப்பு, அதன் கேந்திர முக்கியத்துவம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.
1987 இல் இடம்பெற்ற இந்தியாவின் தலையீடு இதற்கு சிறந்த உதாரணமாகும். அப்போதைய அரசாங்கத்தின் தலைவரான ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் விருப்பங்களின் எல்லைகளுக்கு அப்பால் அது தீர்மானிக்கப்பட்டது. அந்த தலையீட்டை, ஏற்றுக் கொள்வதை தவிர அப்போதைய ஆட்சியாளர்களுக்கு வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை. சர்வதேச, அதாவது நான் மேலே குறிப்பிட்டவாறான சக்திகளின் அரசியல் சூத்திரம் மிகவும் இலகுவானது – ஏற்றுக் கொள்! இல்லாவிட்டால் ஏற்றுக் கொள்ளச் செய்யப்படுவாய்!! - இந்திய தலையீட்டை எண்ணிப் பார்க்கும் ஒருவர், இந்த எளிய சூத்திரத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
இலங்கையின் மீதான சர்வதேச தலையீடுகளை கவனமாக நோக்கினால், இத்தகையதொரு சித்திரத்தை ஒருவர் தெளிவாகக் காணலாம். நவீன இலங்கை அதன் மீதான சர்வதேச தலையீட்டின் மூன்றாம் பாகத்தை தற்போது எதிர்கொண்டிருக்கிறது. இதன் முதலாவது பாகம் இந்தியத் தலையீடாக அமைந்தது - இலங்கையின் கேந்திர முக்கியத்துவமும், அதன் மீதான இந்திய ஈடுபாடும்தான், இந்தியா அப்போது இலங்கையின்மீது நேரடியாக தலையீடு செய்ததற்கான காரணமாக அமைந்தது. அதன் பிற்கால விளைவுகள் என்ன என்பதை இங்கு விளக்கிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. புலிகள் மிகவும் பலம் பொருந்திய ஆயுத அமைப்பாக இருந்த காலத்தில் இலங்கை மீதான சர்வதேச தலையீட்டின் இரண்டாம் பாகம் நிகழ்ந்தேறியது. இதன்போது இலங்கையின் மீதான தலையீடு பிராந்திய – என்பதிலிருந்து சர்வதேச தலையீடு - என்னும் புதிய பரிமாணத்தை எடுத்தது.
இங்கு பிறிதொரு விடயத்தில் இப்பத்தி கவனம் கொள்கிறது. இந்தியாவின் தலையீடு புலிகளால் தோற்கடிக்கப்பட்டது. பிரபாகரன் இந்தியாவின் தலையீட்டை தோற்கடித்ததன் மூலம், ஈழத் தமிழர் அரசியல் என்பதே இந்தியாவின் நலன்களுக்கு எதிரான ஒன்றுதான் என்னும் தோற்றப்பாட்டை உருவாக்கினார். இந்தியாவும் பெரும்பாலும் அத்தகையதொரு முடிவுக்கே வந்திருந்தது. இந்தியா இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு காரணமாக இருந்தது, பின்னர் இந்திய ஆதரவு அமைப்புக்களை தடை செய்தது, ஆகிய காரணங்களால் பிரபாகரன் இந்தியாவின் நிரந்தர எதிரியானார். பின்னர் ராஜீவ்காந்தி கொலை இடம்பெற்றது. இதன் பின்னர் இந்தியாவைப் பொறுத்தவரையில் பிரபாகரன் எக்காலத்திலும் மன்னிக்க முடியாத எதிரியானார். இது ஓரு வகையில் அமெரிக்கா பின்லேடன் குறித்து கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு ஒப்பானது ஆகும்.
இதனை பிரபாகரன் தொடர்பாக நூல் எழுதிய நாராயண சுவாமியின் வார்த்தையில் சொல்வதானால், பிரபாகரன் மீளவும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட (Redoubtable enemy) எதிரி ஆனார். எனவே இலங்கையின் மீதான முதலாவது தலையீடு இலங்கை அரசை வழிக்கு கொண்டு வரும் நோக்கில் அமைந்திருக்க, இரண்டாவது தலையீடு, இந்தியாவின் நிரந்தர எதிரியான பிரபாகரனுக்கும் மேற்கிற்கு பிடித்தமான அரசாங்கத்திற்கும் இடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் இடைநிலையாளர் பாத்திரமாக அமைந்திருந்தது. இதிலுள்ள மிகவும் சுவாரசியமான விடயம் - முதலாவது தலையீட்டின் தோல்வி பிரபாகரனை வளர்த்தது. இரண்டாவது தலையீட்டின் தோல்வி பிரபாகரனை இல்லாமலாக்கியது.
இப்போது இலங்கை அதன் மூன்றாவது பாகத்தை எதிர்கொண்டுள்ளது. ஆனால் இப்போது இலங்கை எதிர்கொண்டுள்ள சர்வதேச தலையீட்டுக்கும் இதுவரை இலங்கை எதிர்கொண்டு வந்திருந்த தலையீட்டிற்கும் அடிப்படையிலேயே ஒரு வேறுபாடு உண்டு. இப்பொழுது இலங்கையில் இரண்டு பாத்திரங்கள் இல்லை. பயங்கரவாதி – ஜனநாயகவாதி என்று பிரித்து அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய அரசியல் சூழல் இலங்கைக்குள் இல்லை. எனவே இனி வரப்போகும் சர்வதேச அழுத்தங்கள் என்பவை இலங்கை அரசாங்கத்தின் மீதானதாக மட்டுமே இருக்கப் போகிறது. இந்த பின்புலத்தை கருத்திற் கொண்டுதான் இந்த பத்தி சமீபகாலமாக அதிகரித்து வரும் அமெரிக்க அழுத்தங்களை ஆராய விளைகிறது.
இதில் கவனிக்க வேண்டிய பிறிதொரு விடயமும் இருக்கிறது. முன்னைய சர்வதேச அழுத்தங்களுக்கும் தற்போதைய சர்வதேச அழுத்தங்களுக்கும் இடையில் ஒரு அடிப்படையான வேறுபாடு உண்டு. அதாவது இலங்கை இருமுனைப்பட்ட சர்வதேச அழுத்தங்களை ஒரே நேரத்தில் கையாள வேண்டிய நிலையில் இருக்கிறது. ஒரு புறம் இந்திய அழுத்தம். பிறிதொரு புறம் அமெரிக்க அழுத்தம். இந்தியாவின் பரம எதிரி பிரபாகரனுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் - இந்தியாவின் கவனம் முழுவதும் யுத்தத்தின் போக்கு குறித்தே இருந்தது. ஆனால் இப்போது யுத்தமற்ற சூழலில் சீனாவின் இராணுவ விரிவாக்கம் அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளே இந்தியாவிற்கு முக்கியமாகியுள்ளன. இந்த பின்னணியிலேயே இந்தியாவின் அழுத்தங்கள் அமையும். ஆனால் இந்தியாவின் அழுத்தங்கள் தீவிர நிலையில் இருக்கப் போவதில்லை. அந்த தீவிர நிலையைத்தான் தற்போது அமெரிக்கா எடுத்துக் கொண்டுள்ளது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளும் இடையில் இடம்பெற்ற, யுத்தத்தின் இறுதிகட்டம் பற்றிய சர்ச்சைகளில் இருந்தே இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தத்தின் மூன்றாவது பாகம் ஆரம்பித்திருக்கிறது. இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றில் அமெரிக்கா இலங்கை விடயத்தில் இத்தகைய தீவிரத்தை காண்பித்து வருவதும் இதுதான் முதல் தடவை. அமெரிக்கா தனது பிடிமானமாகக் கொண்டிருப்பது ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அகும். இதன் அடிப்படையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாணசபை தேர்தலை நடாத்துமாறும் தற்போது அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அரசின் மீதான அழுத்தங்களுக்கான ஒரு சர்வதேச நியாயத்தை உருவாக்கும் நோக்கில்தான் அமெரிக்கா இத்தகையெதாரு பிரேரணையை கொண்டு வந்தது. அதனை பிறிதொருவர் மூலம் கொண்டு வந்தால் அழுத்தங்களுக்கான உரிமையை (Ownership) அதிகம் எடுத்துக் கொள்ள முடியாமல் போகலாம் என்பதை மதிப்பிட்டே, தானே முன்னின்று பிரேரணையை கொண்டு வந்து வெற்றி பெறவும் வைத்தது. அமெரிக்கா மனித உரிமை பேரவையில், பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கும் செய்தி வெளியான தருணத்தில் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார் – அமெரிக்க பிரேரணை தோற்றதாக சரித்திரம் இல்லை – சுமந்திரன் கூறியது உண்மைதான். ஆனால் இதனை பிறிதொரு வகையிலும் சொல்லலாம் - வெல்ல முடியாத குதிரையில் அமெரிக்கா ஒரு போதுமே பணம் கட்டுவதில்லை. ஒரு இடத்தில் அமெரிக்கா தலையிடுகிறது என்றால் அதற்கான வெற்றி வாய்ப்புக்களை ஏலவே அது மதிப்பிட்டுவிட்டது என்பதுதான் பொருள். எனவே அமெரிக்கா தன்னால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் முன்மொழிவுகளை இலங்கை எவ்வாறு செவிமடுக்கின்றது என்பதை நிட்சயமாக அவதானித்துக்கொண்டே இருக்கும்.
ஆசியா நோக்கி தனது கவனத்தை திருப்பியிருக்கும் இராட்சத கழுகுவின் பார்வையில் இருந்து இலங்கை அவ்வளவு சுலமாக தப்பித்துக் கொள்ள முடியுமா? இலங்கை தொடர்பில் கருத்து தெரிவித்திருக்கும் ஜனநாயக கட்சியின் செனட்டர் றொபேட் ஹசி – 'இது தொடர்பில் இந்த உலகமானது தீர்வை எட்டும்வரை சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல் தொடர்பான அழுத்தம் முடிவுக்கு வராது'
அமெரிக்கா கொழும்பின் மீதான தனது கவனத்தை மேலும் தீவிரப்படுத்தப் போகின்றது என்பதை கோடிகாட்டும் வகையிலேயே, ஓபாமா நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் புதிய தூதுவரின் ஆரம்ப உரை அமைந்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய அனுபத்தைக் கொண்டிருக்கும் மிசேல் சீசன் (Michele Sison) அமெரிக்க வெளிவிவகார விடயங்களை கேட்டறியும் (Confirmation Hearing of US Senate Foreign Relations Committee) செனட் குழுவினர் மத்தியில் உரையாற்றும்போது, ஆரம்பத்திலேயே – சிறிலங்கா மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்துள்ள மூலோபாய ரீதியாக முக்கியத்துவமுள்ள இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ளது என்பதை வலியுறுத்திய சீசன் - நேர்மையான மீள் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை நம்பகமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அது இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்குமான, குறிப்பாக முன்னைய முரண்பாட்டு பகுதிகளில் வாழும் மக்களுக்கான நீதி மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இலங்கைக்கு வருவதற்கு முன்னரே இலங்கை தொடர்பில் சீசன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அவருடைய பிரதான பணி யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் நிலைமைகளை கண்காணிப்பதாகவே அமைந்திருக்கும் என்பதையே வலியுறுத்துகின்றது. இலங்கை எதிர்கொண்டுள்ள சர்வதேச தலையீட்டின் மூன்றாவது பாகம் பிறிதொரு வகை நாலாவது கட்டத்திற்கு இலங்கையை கொண்டு செல்லுமா? அமெரிக்க அழுத்தங்களை இலங்கை அரசு எவ்வாறு கையாளப் போகின்றது என்பதைப் பொறுத்தே இலங்கையின் எதிர்கால அரசியல் நிர்ணயிக்கப்படப் போகின்றது. அது இலங்கையின் அரசியல் மட்டுமல்ல தமிழர்களின் அரசியலும் கூட. உலகம் எட்ட விரும்பும் தீர்வு என்ன என்பதை இப்போதைக்கு எவராலும் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அது இலங்கையிலுள்ள அனைவரது விருப்பங்களின் எல்லைகளுக்கும் அப்பாலுள்ளது.