Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

போராட்டங்களும் போராட்டக்காரர்களும்

போராட்டங்களும் போராட்டக்காரர்களும்
யதீந்திரா

 

இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது வவுனியாவில் காணாமல் போனவர்கள் தொடர்பில் உண்ணாவிரதப் போராட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வு இடம்பெறுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான், வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பிலும் தமிழ் இளைஞர்கள் வழக்கத்தைவிடவும் மிகவும் உற்சாகமாக ஜல்லிக்கட்டு தொடர்பில் தங்கள் தமிழ் உணர்வைக் காண்பித்திருந்தனர். பொதுவாக தமிழர் அரசியல் விவகாரங்களை முன்வைத்து நடைபெறும் போராட்டங்களின் போது பங்குகொள்ளாத பெருந்தொகையான இளைஞர்கள் இதில் பங்குகொண்டதாகவே இதனை அவதானித்தவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டு அரசு, ஜல்லிக்கட்டு விவகாரத்தை எவ்வாறு கையாளும் என்பது தொடர்பில் இப்பத்தியாளரிடம் ஒரு கணிப்பிருந்தது. எதிர்பார்த்தது போலவே அது நடந்தேறியது. உண்மையில் தமிழ்நாட்டு அரசாங்கம் போராட்டக்காரர்களை மதித்து நடந்தது. அவர்களின் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டது. அந்த இடத்தில் போராட்டம் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு சரியான தலைமைத்துவம் இல்லாமையால், போராட்டத்தை தொடரப் போவதாக குறித்த குழுவினர் அறிவித்தனர். இது அவர்கள் செய்த தவறாகும். எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்ததையே இங்கு மீளவும் நினைவுபடுத்துகின்றேன். போராட்டங்கள் நிறுத்த வேண்டிய தருணத்தில் நிறுத்தப்படாவிட்டால் அதனை மற்றவர்கள் நிறுத்திவிடுவார்கள். மற்றவர்கள் என்பதன் கீழ், ஒரு நாட்டின் அரசு தொடக்கம் பல்வேறு சக்திகளும் தொழிற்படும். விடுதலைப் புலிகள் தலைமையிலான போராட்டத்திற்கு நடந்ததும் அதுவே.

இது போராட்டத்தின் தன்மையையும், அப்போராட்டம், அப்பிராந்தியத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகளையும் கொண்டு மதிப்பிடப்படும். இன்று ஜல்லிக்கட்டிற்காக போராடியவர்களை தமிழ்நாட்டு பொலிசார் கடுமையான முறையில் கலைத்து, நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். பொலிசார் உத்தரவின்றி அதனை செய்யவில்லை. எவ்வழியிலாவது நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறான உத்திரவொன்றையே பொலிசார் நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர். ஏனெனில் பொலிசார் ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை விரட்ட வேண்டுமென்று எண்ணியிருந்தால் அதனை ஆரம்பத்திலேயே செய்திருக்க முடியும்.

இங்கு கவனிக்க வேண்டியவை படைத்துறை என்பது ஆளும் பிரிவினரின் நலன்களை பாதுகாப்பதற்கான ஒரு இயந்திரமாகும். அந்த இயந்திரத்தை இயக்குவதற்கான சாவி ஆளும் வர்கத்திடமே உண்டு. அதனை எப்போது இயக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கின்றனர். ஆனாலும் ஜனநாயக ரீதியாக நடைபெறும் போராட்டங்களை கையாளுவது தொடர்பில் ஆளும் வர்க்கங்கள் எப்போதுமே மிகுந்த நிதானத்துடன் இருக்கும். அந்த நிதானத்தை அரசின் பலவீனமாக கருதிவிடக் கூடாது. உண்மையில் ஜனநாயகம் தொடர்பில் அரசு கடைப்பிடிக்கும் நிதானத்தைத்தான், போராட்டக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தங்கள் போராட்டத்தின் மூலம் ஆகக் கூடிய நன்மைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். 'அடைந்தால் மகாதேவி இல்லாவிட்டால் மரண தேவி' என்பதாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால், அதன் விளைவு ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை மிக மோசமாக பாதிக்கலாம். அதன் பின் அவர்களுக்கு முன்னால் எந்தவொரு தெரிவுகளும் இல்லாமல் போகலாம்.

இவை போராட்டங்கள் தொடர்பில் இப்பத்தியாளரின் அவதானம். நமது சூழலில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பிலான பிறிதொரு அவதானத்தையும் இந்த இடத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தை இனியும் அனுமதிக்க முடியாதென்று முடிவெடுத்த பின்னர், பொலிசார் நடவடிக்கைகளில் இறக்கிவிடப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளை சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. ஒரு புறம் மாணவர்களும் ஏழைகளும் பொலிசாரால் தாக்கப்படுவதான காட்சிகள் காண்பிக்கப்பட்டன. சில பகுதிகளில் அன்றாடம் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்பவர்கள் தங்களை பொலிசார் வீடுபுகுந்து தாக்கியதாக கூறிக்கொண்டிருந்தனர். இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்னர் இடம்பெற்ற போராட்டங்களின் போதும் கூட, போராட்டங்களை அடக்குவதற்கான முடிவை எடுத்த பின்னர் பாதிக்கப்படுவது ஏழைகளாவே இருக்கின்றனர் – அது ஏன்?

ஜல்லிக்கட்டு விவகாரத்தின் போது தமிழ் நாட்டு பிரபலங்கள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்திருந்தனர். சிலர் ஒரு படி மேல் சென்று, தாமே தமிழ் பாரம்பரியத்தை காப்பாற்றுபவர்கள் போன்றும் பேசியிருந்தனர். ஆனால் பொலிசார் தாக்கிய போது ஜல்லிக்கட்டுக்காக பேசிய எந்தவொரு பிரபலமும் மக்களுடன் நிற்கவில்லை. தாக்குதலை எதிர்கொள்ளவில்லை. இது போன்றுதான் முன்னர் கூடங்குளம் தொடர்பான போராட்டத்தின் போதும் நிகழ்ந்தது. பொதுவாக ஏன் ஏழைகள் மட்டுமே அதிகாரத்தின் தண்டனைக்கு ஆளாகின்றனர்? இந்தக் கேள்வி நீண்டநாட்களாக இப்பத்தியாளரை குடைந்து கொண்டிருக்கிறது. தியாகங்கள் என்றால் அதனை ஏழைகள் மட்டும்தானா செய்ய வேண்டும்?

வவுனியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் இதே விடயத்தைத்தான் அவதானிக்க முடிகிறது. வாழ வழியின்றி தங்கள் உறவுகளைத் தேடியலையும் ஏழைகள்தான் உண்ணாவிரதமிருக்கின்றனர். போராட்டம் தேவையென்றும், அதற்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் வசதிபடைத்த எவரும் மேற்படி உண்ணாவிரத்தில் பங்குகொள்ளவில்லை. ஏழைப் பெண்கள் சிலர் பசியில் சாவதற்கு விளக்கமளிக்கும் வேலையைத்தான் அனைவருமே செய்து கொண்டிருக்கின்றனர். இப்படியான போராட்டங்கள் தொடர்பில்தான் இப்பத்தி கேள்வியெழுப்புகின்றது, மாறாக போராட்டங்களின் நியாயம் தொடர்பிலல்ல. அரசை சமநிலைப்படுத்த போராட்டங்கள் அவசியம். ஆனால் அதற்கு ஏழைகள்தானா உயிரைக் கொடுக்க வேண்டும்? ஒருவேளை இதில் உண்ணாவிரதமிருக்கும் ஒரு ஏழை உயிர்நீத்தால் அவரது குடும்பத்தின் நிலை என்ன?

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்குமான யுத்தம் தீவிரமடைந்த நிலையில், தமிழ் நாட்டில் முத்துக்குமார் என்னும் இளைஞர் தன்னை தானே எரியூட்டி இறந்து போனார். அவரது இறப்பை ஈகம் என்று சொன்ன – சொல்லும் எந்தவொரு தமிழ்நாட்டு அரசியல் தலைவரது பிள்ளைகளோ அல்லது அவர்களோ அவ்வாறு எரியூட்டி மாண்டதுண்டா – ஆகக் குறைந்தது அதற்கு முயற்சியாவது செய்ததுண்டா? தம்பி பிரபாகரன் மீது ஒரு கீறு விழுந்தால் தமிழ் நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்றார் வை.கோபாலசாமி. அப்படி ஏதாவது நடந்ததா? யுத்தத்தில் கணவனை இழந்த ஒரு ஈழத் தமிழ் பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கப் போவதாக சீமான் கூறினார் – அப்படி ஏதாவது நடந்ததா? இவற்றிலிருந்தெல்லாம் ஈழத் தமிழர்கள் எதனையும் கற்றுக்கொள்ள மாட்டார்களா? உண்மையில் தங்கள் அரசியல் இருப்புக்காக அரசியல்வாதிகள் பலதும் சொல்வார்கள். அவர்களில் தவறில்லை. ஆனால் அதிலிருந்து எதனைக் கற்றுக்கொள்வது? எந்தளவு தூரத்திற்கு அரசியல்வாதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் எங்களிடம் தெளிவிருக்க வேண்டும்.

போராட்டங்களும் போராட்டக்காரர்களும்

அண்மைக்காலமாக பிறிதொரு போக்கையும் இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. அதாவது, பிரச்சினைக்குரிய பிரதான காரணங்களை விடுத்து ஒரு சிலரை எதிர்ப்பதற்காக நிகழ்வுகளை நடத்துவது. மேலும் தங்களுக்கு அரசியல்வாதிகள் தேவையில்லை என்று கூறுவது. அரசியல் கலப்பற்று தாங்கள் செயற்படப் போவதாக கூறுவது. உண்மையில் அப்படிச் செயற்பட முடியுமா? அரசியல் கலப்பற்று ஒரு விடயம் இருக்கிறதா? ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களது கோசங்களும் இப்படித்தான் இருந்தன. ஆனால் பொலிசாரின் தாக்குதலுக்கு பின்னர் தாக்கப்பட்டவர்களுக்காக இன்று அரசியல்வாதிகள்தான் குரல் கொடுக்கின்றனர். அதனை கண்டிக்கின்றனர். ஊடகங்களில் பேசுகின்றனர். அதுவே ஆட்சியாளர்களுக்கு ஒரு அழுத்தமாக மாறியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் இரு மாணவர்கள் பொலிசாரால் சுடப்பட்டு இறந்த போது, அதனை கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். இதன் போதும் எந்தவொரு அரசியல்வாதிகளுக்கும் அனுமதியில்லை என்றனர். ஆனால் இப்படியான நிகழ்வுகளின் போது மாணவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்காக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்தான் பிரச்சன்னமாகின்றார். அவ்வாறாயின் அரசியல்வாதிகளே எங்களுக்கு தேவையில்லை என்பதில் ஏதாவது பொருளுண்டா?

இங்கு விடயம் அரசியல்வாதிகளை எவ்வாறு கையாளுவதென்று போராட்டக்காரர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இன்று உண்ணாவிரதம் இடம்பெறும் இதே வவுனியாவில், முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் உருவப்படம் எரிக்கப்பட்டது. ஆனால் நாளை இவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்காகவும் சம்பந்தர்தான் பேச வேண்டியிருக்கும். ஒருவர் மீதான விமர்சனம் என்பது வேறு, அவரை இலக்கு வைத்து செயற்படுவதென்பது வேறு. இவ்வாறான காரணங்களினால்தான் போராட்டத்தில் நியாயம் இருக்கின்ற போதிலும் கூட, அதற்காக குரல் கொடுப்பதற்கு பலரும் தயங்குகின்றனர். அரசியல்வாதிகள் என்பவர்கள் ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம். அந்த அதிகாரத்தை எந்தளவிற்கு பயன்படுத்திக் கொள்வது என்பதில் போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

கூட்டமைப்பை முழுமையாக நிராகரித்து எந்தவொரு நிகழ்வையும் வடக்கு கிழக்கில் முன்னெடுக்க முடியாது. இதற்கு வடக்கில் வெற்றிகரமாக இடம்பெற்றதாகச் சொல்லப்படும் எழுக தமிழே சிறந்ததொரு உதாரணம். எழுக தமிழை தனித்து பேரவையால் முன்னெடுக்க முடியாது என்பதால்தான், அவர்கள் அரசியல் கட்சிகளையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு அதனை முன்னெடுத்தனர். அதிலும் கூட்டமைப்பிலுள்ள இரண்டு கட்சிகள் அதற்கு ஆதரவழிக்காது போயிருந்தால் அது வெற்றியளித்திருக்காது. உண்மையில் எழுக தமிழின் வெற்றியென்பது கூட்டமைப்பினது வெற்றியும்தான். ஏனெனில் கூட்டமைப்பில்தான் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் இருக்கிறார். அவர் சில தினங்களுக்கு முன்னர் கூட களத்தில் கூட்டமைப்பாக நாங்கள் ஒற்றுமையாக இருப்பது போன்று, உலகளவிலும் ஒரு கூட்டமைப்பாக செயற்பட வேண்டுமென்று கூறியிருக்கிறார்.

மேலும் தற்போது இடம்பெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பிலும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிமொன்றையும் அனுப்பி வைத்திருக்கின்றார். குறித்த விடயம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர் விக்கி, உண்ணாவிரத்தில் பங்குகொண்டிருப்பவர்கள் மிகவும் பலவீனமான, வயது முதிர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், ஆகக் குறைந்தது ஜனாதிபதிக்கு அருகில் தன்னுடைய சிறுமி இருப்பதாக கூறி, புகைப்படத்துடன் இருக்கும் அந்தத் தாயாருடன், அவரது குழந்தையை சேர்ப்பிப்பதற்கான நடவடிக்கையாவது எடுக்குமாறும் குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் உயர்மட்ட அமைச்சர் ஒருவரை அனுப்பி, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவோருக்கு உறுதிமொழி வழங்குமாறும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்தக் கடிதத்தில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வெறும் பெயரே அன்றி, அது ஒரு செயற்திறனற்ற அமைப்பாகும். அது ஒருவேளை இயங்கினால் கூட அதனால் இராணுவத்தினருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் குறித்த கடிதத்தில் விக்கி வலியுறுத்தியிருக்கிறார். கூடவே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும் குறிப்பிட்டிருக்கின்றார். விடயம் உண்ணாவிரதம்தான், ஆனால் முதல்வர் இதனை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்? இது அரசியல் தலையீடில்லாமல் வேறென்ன?

எனவே அனைத்திலும் அரசியல்வாதிகள் இருக்கின்றனர். அரசியலை தவிர்த்து, அரசியல்வாதிகளை தவிர்த்து, போராட்டங்களை முன்னெடுக்கலாம் என்று எண்ணினால் அது அடிப்படையிலேயே தவறானது. போராட்டங்கள் அவசியம், ஆனால் அவற்றை சரியான திட்டமிடலுடன் நடத்தி, நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தாவிட்டால், அதன் விளைவுகள் பாதகமாகவே அமையும். அது மீண்டும் ஏழை தமிழ் மக்களையே பாதிக்கும். இதுதான், கடந்தகால போராட்ட அனுபவங்கள் எங்களுக்கு கற்றுத்தந்திருக்கும் பாலர் பாடமாகும். இப்போது ஆரம்பித்திருக்கும் உண்ணாவிரப் போராட்டம் கூட அரசுக்கு ஒரு செய்தியை சொல்வதற்கான ஒரு முயற்சியே. அந்த வகையில் போராட்டத்தின் நோக்கம் வெற்றியடைந்துவிட்டது. எனவே அந்த அளவிலேயே மேற்படி போராட்டம் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாது உண்ணாவிரதமிருக்கும் வயது முதிர்ந்த, பலவீனமான ஏழைகளை பலிகொடுப்பதாக இருக்கக் கூடாது. ஏழைகளை பலிகொடுத்தது போதும்.

 

1/28/2017 10:55:36 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்