Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கூட்டமைப்பின் மீதான அதிருப்திகளை வாக்குகளாக்கும் ஆற்றல் மாற்றுத் தரப்பினரிடம் இருக்கிறதா?

கூட்டமைப்பின் மீதான அதிருப்திகளை வாக்குகளாக்கும் ஆற்றல் மாற்றுத் தரப்பினரிடம் இருக்கிறதா?
யதீந்திரா

 

எவரிடம் பேசினாலும் அவர்கள் ஒரு விடயத்தை சொல்லாமல் விடுவதில்லை. கூட்டமைப்பில் வேலையில்லை. அவர்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. குறிப்பாக மட்டக்களப்பில் உள்ளவர்களிடம் பேசினால் அனைவருமே அங்குள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கடும் அதிருப்தியுள்ளவர்களாக இருக்கின்றனர். அங்குள்ளவர்கள் மிகவும் சாதாரணமாகச் சொல்லுகின்றனர், முஸ்லிம்கள் காணிகளைப் பிடித்துக்கொண்டே இருக்கின்றனர், ஆனால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியானால் இவர்கள் எதற்கு? மக்களின் பெயரால் பதவிகளுக்கு வந்தவர்கள் அனைவரும் நல்ல செல்வச்செழிப்புடன் இருக்கின்றனர். ஆனால் வாக்களித்த மக்களோ எவரிடம் முறையிடுவது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். இப்படிச் சொல்லுபவர்கள் எவரும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கட்சிக்காரர்கள் அல்ல. மாறாக தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கரிசனையுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் மட்டுமே!

இந்தப் பத்தியாளரின் அவதானத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் கூட்டமைப்பிற்கு, முக்கியமாக அதன் தலைமைக்கு கல்லெறி விழுவது உண்மைதான். மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்திகளுக்கு பல காரணங்கள் உண்டு. சாதாரண மக்கள் பொதுவாகவே தங்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர். அதனை பெற்றுத் தருவார்கள் என்னும் நம்பிக்கையுடன்தான் தங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றனர். மக்கள் தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது அவர்களின் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யவில்லை. தெரிவுகளில் தாங்கள் தெளிவில்லாமல் இருக்கிறோம் என்பதைக் கூட மக்கள் அறிந்துகொள்வதில்லை. இது தேர்தல் அரசியலில் உள்ள ஒரு மிகப்பெரிய சிக்கல்.

எனது நண்பர் ஒருவர் முன்னர் கூறிய விடயம் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. ஜனநாயகத்தில் பேராசிரியர் சிவத்தம்பிக்கும் ஒரு வாக்கு, பாடசாலைப் பக்கமே செல்லாத ஒரு கூலித் தொழிலாளிக்கும் ஒரு வாக்கு. சிவத்தம்பி போன்ற ஒருவர் தனது வாக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்னும் தெளிவுடன் வாக்களிப்பார். ஆனால் அந்தக் கூலித் தொழிலாளியோ அதன் பெறுமதியை உணராது எல்லாரும் போல் வாக்களிப்போம் என்னும் மனநிலையில் வாக்களிப்பார். ஆனால் அவரைப் போன்றவர்கள்தான் சமூகத்தின் பெரும்பான்மை. இந்தப் பெரும்பான்மையை தொடாத எந்தவொரு வாதமும் தேர்தலில் வெற்றிபெறாது. ஆனால் இந்தப் பெரும்பான்மையை இனவாதம், மதவாதம் போன்றவை கொண்டு மிகவும் இலகுவாகத் தீண்டிவிடலாம். இதுவும் ஒரு தேர்தல் உத்திதான். 

ஒரு குறிப்பிட்ட சிறுபான்மைதான் அரசியல் நிலைப்பாடுகள், கட்சியின் கொள்கை தொடர்ப்பிலெல்லாம் தங்களுக்குள்ளும், மற்றவர்களை நோக்கியும் விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்களில் பெரும்பான்மைக்கோ அரசியல் நிலைப்பாடுகள் என்பது ஒரு விடயமேயல்ல. ஏனெனில் அவர்களின் அன்றாட பிரச்சனைகள் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலெல்லாம் சிந்திக்குமளவிற்கு அவர்களுக்கான அவகாசத்தை வழங்குவதில்லை. தேர்தல்கள் என்றதும்தான் அவர்கள் மத்தியில் அரசியல் தொடர்பில் சிறிதளவாவது உரையாடல்கள் நடக்கின்றன. அதுவும் தாங்கள் விரும்புகின்ற ஒருவருக்கு வாக்களித்தவுடன் அந்த அரசியல் ஆர்வம் முடிந்துவிடுகின்றது. இவ்வாறான மக்கள்தான் பின்னர் அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை. இவர்கள் எல்லாம் திருடர் கூட்டம் என்றும் ஏசுகின்றனர். ஆனால் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையிலோ இவ்வாறான ஏச்சுக்கள் எல்லாம் எருமை மாட்டில் பெய்த மழை.

அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளை பொறுத்தவரையில், அவர்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கின்றனர். அதாவது, மக்கள் தங்களை படுமோசமாக திட்டினாலும் கூட, அவர்கள் இறுதியில் தங்களிடம்தான் அடைக்கலம் தேடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு எங்களை விட்டால் வேறு வழியில்லை. இறுதியில் தேர்தல் என்றதும் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு எங்களின் சின்னத்துக்குத்தான் வாக்களிப்பார்கள். இதுதான் கூட்டமைப்பின் பலமாகவும் இருக்கிறது. மக்களை சரியாக வாசிக்கத் தெரிந்தால் மட்டுமே கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு வலுவான அரசியல் கூட்டை உருவாக்க முடியும். ஆனால் அரசியல் கூட்டுக்கள் தொடர்பில் உரையாடிவரும் எவருக்கும் மக்கள் தொடர்பில் சரியான வாசிப்பு இல்லை. இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழரசு கட்சி கூட்டங்களை நடத்திவருகிறது. சம்பந்தன் ஒவ்வொரு கூட்டங்களிலும் தவறாமல் பங்குகொள்கின்றார். கூடவே சுமந்திரனும் பங்குகொள்கிறார். உண்மையில் சம்பந்தன் இடைக்கால அறிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக கூட்டங்களில் பங்குகொள்ளவில்லை. மாறாக மக்களின் நாடித் துடிப்பை அறிய முற்படுகின்றார். கூடவே தமிழரசு கட்சி அல்லது கூட்டமைப்பு தன்னை தேர்தலுக்கும் தயார்படுத்துகிறது.

இடைக்கால அறிக்கை தொடர்பிலான கூட்டங்களில் பங்குகொண்ட கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் எழுப்பிய கேள்விகளைத்தான் இங்கு கவனிக்க வேண்டும். எவரும் சுயநிர்ணய உரிமை தொடர்பில் கேள்வி எழுப்பவில்லை. இடைக்கால அறிக்கையின் கனதி தொடர்பில் கேள்வி எழுப்பவில்லை. அவர்கள் நினைத்தால் கூட, அது பற்றி கேள்வி எழுப்ப முடியாது. ஏனெனில் அது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர் – வாக்குவாதப்பட்டிருக்கின்றனர் – எதைப்பற்றி? அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களை பார்த்தே அவர்கள் கோபப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? ஏன் உங்களால் இவற்றையெல்லாம் செய்ய முடியவில்லை? இப்படித்தான் அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்களின் அதிருப்திகளை கொட்டியிருக்கின்றனர்.

கூட்டமைப்பிற்கு மாற்றான அணியொன்றை உருவாக்க முயல்பவர்கள் அல்லது கூட்டமைப்பிற்கு தாங்கள்தான் மாற்று என்று எண்ணுபவர்கள் இந்த இடத்திலிருந்து தங்களின் இதுவரையான சிந்தனை முறையை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. மக்களை சரியாக வாசித்து விடயங்களை கையாளாவிட்டால் மேலும் பலமடையப் போவது கூட்டமைப்பாகவே இருக்கும். கூட்டமைப்பின் மீது அதிருப்திகள் இருக்கிறது முக்கியமாக தமிழரசு கட்சி தொடர்பில் கடும் அதிருப்தி இருக்கிறது என்பது எந்தளவு உண்மையோ அந்தளவு உண்மை அந்த அதிருப்தியை அரசியலாக்குவதில் மற்றையவர்கள் பலவீனமாக இருக்கின்றனர் என்பதும்.

கூட்டமைப்பை நோக்கி, இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று கேட்பவர்கள் எவரிடமும் அவர்கள் செய்வார்கள் போல இருக்குது என்று சொல்லும் நிலைமையில்லை. இந்த இடம்தான் கூட்டமைப்பிற்கான மாற்று தாங்களே என்று கருதுபவர்கள் சிந்திக்க வேண்டிய இடம். ஒரு கட்சியின் மீதான அல்லது நபர்கள் மீதான அதிருப்திகளை பிறிதொரு கட்சி வாக்குகளாக அறுவடை செய்வதென்பது வெறுமனே கொள்கை சார்ந்தல்ல, மாறாக அது அதிகம் தந்திரோபாயம் சார்ந்தது. ஆனால் கூட்டமைப்பு தவறு செய்கிறது என்று கூறும் அரசியல்வாதிகள் தந்திரோபாயங்கள் சார்ந்த வேலைத்திட்டங்களில் மிகவும் பலவீனமாக இருக்கின்றனர். இதன் காரணமாகவே அவர்களால் கூட்டமைப்பை பலவீனப்படுத்த முடியவில்லை. கூட்டமைப்பை பலவீனப்படுத்துவது என்பது அதன் தலைமையை விமர்சித்துக் கொண்டிருப்பதல்ல, மாறாக அந்த விமர்சனங்கள் சரி என்பதை சாதாரண மக்களை ஏற்றுக் கொள்ள வைப்பதாகும். எந்தவொரு விமர்சனமும் மக்கள் மயப்பட்டால் அன்றி அதனை வாக்குகளாக்க முடியாது.

கூட்டமைப்பின் மீதான அதிருப்திகளை வாக்குகளாக்கும் ஆற்றல் மாற்றுத் தரப்பினரிடம் இருக்கிறதா?

அரசியல் நிலைப்பாடு என்பது சாதாரண மக்கள் மத்தியில் ஒரு பிரச்சனைக்குரிய விடயமாக இல்லாதபோது அந்த ஒரு அம்பைக் கொண்டு மட்டும் ஒரு இலக்கை வெற்றிகொள்ள முடியாது. வேறு பல அம்புகளும் தேவைப்படும். அந்த அம்புகளைக் கொண்டு எந்த விடயத்தை தாக்குவது என்பது தொடர்பில் மாற்று அணியினர் சிந்திக்க வேண்டும். சாதாரண மக்களின் பிரச்சனைகளைப் பற்றி கரிசனை கொள்ளாமல் வெறும் கொள்கை என்னும் ஒரு அம்பினால் ஒரு போதுமே கூட்டமைப்பை அசைக்க முடியாது. ஒரு வாள் வெட்டில் விழுத்த முடியாத எதிரியை ஆயிரம் சிறு காயங்களை ஏற்படுத்துவதன் ஊடாக வீழ்த்த முடியும் என்பது ஒரு இராணுவ தந்திரோபாயம். மாற்று தொடர்பில் சிந்திப்பவர்கள் அல்லது தங்களை ஏற்கனவே ஒரு மாற்றாக உணர்பவர்கள் சிந்திக்க வேண்டிய உபாயமும் இதுதான். கூட்டமைப்பை வெறும் விமர்சனங்களால் வீழ்த்த முடியாது. அதேவேளை இப்போதும் தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமைக்கான தேவை தொடர்பில் உள்ளார்ந்த கரிசனை உண்டு. அது தேர்தல் காலங்களில் விழிப்படையலாம். அதுவும் கூட மாற்று அணியினருக்கு ஒரு சவாலாக அமையலாம். இதற்கான தெளிவான பதில்களை மாற்று என்போர் கண்டடைய வேண்டும். ஆனால் கூட்டமைப்பு கொள்கையில் தவறிவிட்டது என்னும் ஒரு வாதம் மட்டும் நிச்சயமாக இதற்குப் போதாது.  

12/4/2017 12:59:39 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்