யதீந்திரா
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களின் அண்மைய நாடாளுமன்ற உரை தொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுவரும் சூழலில் இக்கட்டுரை வெளியாகிறது. சம்பந்தனின் உரை குறித்த மாற்றுக் கருத்துகளுக்கு பொங்குதமிழ் இடம்தரும். – ஆசிரியர்
***
இம்மாதம் 7ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் அரசியல் தலைவராகவும் கருதப்படும், இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆங்கிலத்தில் இடம்பெற்ற இவ்வுரையில் சம்பந்தர் பயன்படுத்திய சில சொற்களே அவர் மீதான விமர்சனங்களுக்கான காரணமாகும். குறிப்பாக புலம்பெயர் சூழலில் தங்களை புலிகளின் அனுதாபிகள் என்று கருதிக் கொள்ளுவோர் இவ்வாறான விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமர்சனங்களுக்கு அப்பால் சம்பந்தர் ஒரு துரோகி என்னும் வகையிலும் இவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் சூழலில் துரோகி என்பது நகைச்சுவைக்குரிய ஒன்றாக இருப்பதால், அது குறித்து இப்பத்தி அலட்டிக் கொள்ளவில்லை. சம்பந்தர் முன்னரும் புலிகளின் துரோகிப் பட்டியலில் இருந்த ஒருவர்தான். நீலன் திருச்செல்வம் துரோகி என்னும் அளவுகோலின்படி படுகொலை செய்யப்பட்ட பின்னர், அடுத்த இலக்கு சம்பந்தர்தான் என்னும் நிலைமை அன்றிருந்தது. சம்பந்தர் விடுதலைப்புலிகளுக்கு பயந்து, தனது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பலமான பாதுகாப்புடன் இருந்த கதை பலரும் அறிந்த கதையும் கூட.
ஆனால், அதே இரா.சம்பந்தன் பின்னர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து பேசுவது போன்ற புகைப்படங்கள் ஊடகங்களில் அடிக்கடி பிரசுரமாகிக் கொண்டிருந்தன. எந்த பிரபாகரனுக்கு பயந்து சம்பந்தன் குண்டு துளைக்காத வாகனத்தில் பயணித்தாரோ, பின்னர் அதே பிரபாகரனுக்கு அருகில் இருந்து, சம்பந்தன் அரசியல் பேசும் நிலைமை தோன்றியது. அரசியலை ஒரு சினிமா போன்று பார்த்துப் பழகிய தமிழ் சனங்களோ, தம்பியும் ஐயாவும் - அண்ணையும் ஐயாவும் - என்று சாதாரணமாக கடந்து சென்றனர். 'சம்பந்தர் ஒரு பெறுமதியான ஆள், இவரை நாங்கள் பாதுகாக்க வேண்டும்' என்று பிரபாகரன் சொன்னதாகவும் அன்று கதைகள் உலவின. வன்னிச் சூழலில் குறிப்பாக புலிகளின் அரசியல் பிரிவினர் மத்தியில் சம்பந்தன் சரக்குள்ள ஆள் என்னும் அபிப்பிராயம் நிலவியது. இதன் தொடர்ச்சி அதுவரை புலிகளால் துரோகியாக பார்க்கப்பட்ட மிதவாத தலைவரான சம்பந்தன் ஐயா தேசாபிமானியாக உருமாறினார். இதன் பின்னர் தெற்கின் அரசியல் அரங்கிலோ மிதவாதத் தலைவரான சம்பந்தன் விடுதலைப் புலியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இன்றுவரை அது தொடர்கிறது. இத்தகையதொரு பின்புலத்தில்தான், சம்பந்தர் மேற்படி சர்ச்சைக்குரிய உரையை ஆற்றியிருக்கிறார். எனது பார்வையில் அது ஒரு சர்ச்சைக்குரிய உரையல்ல, ஆனால் குறித்த உரையை சிலர் சர்ச்சைக்குரிய ஒன்றாக நோக்குவதன் காரணமாகவே நான் அதனை இங்கு அழுத்தியிருக்கின்றேன்.
அப்படியென்ன சம்பந்தர் தனது உரையில் குறிப்பிட்டுவிட்டார்? - சம்பந்தர் தனது உரையின்போது குறிப்பிட்டிருந்த, விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாக நோக்கப்பட்டனர் மற்றும் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை முழுமையாக வெளியேறச் சொல்லிக் கோரவில்லை ஆகிய இரண்டு விடயங்களே இன்று சிக்கலானதாக நோக்கப்படுகிறது. 2013இற்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றியபோது மேற்படி விடயங்களை சம்பந்தர் தெரிவித்திருந்தார். மேற்படி பாராளுமன்ற விவாதம் பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் இடம்பெற்றிருந்தது. சம்பந்தரும் உரையை ஆரம்பிக்கும் போதே பாதுகாப்பு விவகாரம் ஒன்றுடனேயே தனது பேச்சை ஆரம்பித்திருந்தார்-
'…. இங்கு சிலர் மத்தியில் ஒரு தவறான நம்பிக்கை (Mistaken believes) நிலவுகிறது. அதாவது தமிழ் மக்கள் இராணுவம் வடக்கு கிழக்கிற்கு வெளியில் செல்ல வேண்டுமென்று கூறிவருவதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் அது தவறானது. இராணுவம் இந்த நாடு முழுவதும் எவ்வாறு இருக்கிறதோ அப்படி இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை ஒடுக்கும் (oppressive) மற்றும் கட்டுப்படுத்தும் (subjugate) நோக்கத்துடன் இராணுவம் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கக் கூடாதென்றே நாங்கள் கூறிவருகின்றோம். தமிழ் மக்கள் தாங்கள் இந்த நாட்டில் சமத்துவமான பிரஜைகளாக (Equal citizens) நடத்தப்படவில்லை என்றவாறு உணராத வகையிலும், தாங்கள் தரக்குறைவான பிரஜைகளாக நடத்தப்படுவதாகவும் உணராத வகையில் இராணுவப் பிரசன்னம் அமைந்திருக்க வேண்டும். தமிழ் மக்கள் தங்களது சுயகௌரவத்தையும் சுயமரியாதையையும் பிரயோகித்து வாழக்கூடிய சூழல் இருக்க வேண்டும். எனவே இதனைக் கருத்தில்கொண்டு வேலைகளுக்கு தேவையான அளவிலும், ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அளவிலும் இராணுவத்தினர் நிலைகொள்ளலாம் - இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருப்பது போன்ற அடிப்படையில்…'
இராணுவ வெளியேற்றம் தொடர்பாக சம்பந்தர் கூறிய விடயங்கள் இவ்வளவே! அடுத்து சம்பந்தர் தெரிவித்த கருத்துக்கள் விடுதலைப்புலிகள் தொடர்பானவை –
'…தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. எங்களது போராட்டத்தின் பின்னால் மிகவும் நியாயபூர்வமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான மனக்குறைகள் இருந்தன. அவைகள் இந்த நாட்டின் முன்னோடி தலைவர்களாகக் கருதப்படும், எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அன்று மேற்கொள்ளப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்குமானால் இந்த நாடு இன்றிருக்கும் நிலையில் இருந்திருக்காது. நாங்கள் ஒருபோதும் வன்முறையான மக்களாக இருந்திருக்கவில்லை. ஆனால் வன்முறை தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது. எங்களது நியாயமான ஏற்றுக்கொள்ளக் கூடிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதொரு சூழலில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் வெளிவந்தனர் (Emerged).
தமிழ் மக்களால் சாத்வீக வழியில் முன்வைக்கப்பட்ட நியாயபூர்வமான கோரிக்கைகள் இலங்கையை ஆட்சிசெய்த வெற்றிகரமான ஆட்சியாளர்களால் உள்வாங்கிக் கொள்ளப்படாமையின் காரணமாகவே புலிகள் உருவாகினர். மாறாக விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் உருவாக்கவில்லை. விடுதலைப்புலிகளின் வெளிவருகைக்கு நியாயபூர்வமான காரணங்கள் இருந்தன. இதனை எவரும் நிராகரிக்க முடியாது. விடுதலைப்புலிகள் சாதாரண மக்கள் (Civilians) மீது தாக்குதல் மேற்கொண்டபோது, அவர்கள் பயங்கரவாத அமைப்பு என்னும் (In terms of terrorist organization) கருத்து வகைக்குள் வந்தனர். அவர்கள் சாதாரண தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை கொன்றுள்ளனர். மக்கள் தலைவர்களை கொன்றுள்ளனர். இதன்போது அவர்கள் பயங்கரவாத வகைப்படுத்தலுக்குள் கொண்டு வரப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மதித்து நடக்கவில்லை. சிலர் விடுதலைப்புலிகளை அழித்ததாக பறைசாற்றுகின்றனர். ஆனால் நான் சொல்லுவேன் - விடுதலைப்புலிகள் தங்களை தாங்களே அழித்துக் கொண்டனர். அவர்கள் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் அவதானித்து நடக்காமையின் காரணமாகவே அழிந்தனர். இதுதான் உண்மை. காலம்சென்ற வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் விடுதலைப்புலிகளின் சர்வதேச கட்டமைப்புக்களை பலவீனப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். விடுதலைப்புலிகளை அழிப்பதற்கான சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்வதில் முக்கிய பங்காற்றியவர். ஆனால் அவர் இன்று எங்களுடன் வாழ்ந்திருந்தால், இன்று நடைபெறும் பல்வேறு விடயங்களை எண்ணி மிகவும் பயங்கரமான உணர்வுக்கு ஆட்பட்டிருப்பார். இன்று நீங்கள் எங்களை விடுதலைப்புலிகளுடைய பதிலி (proxy) அமைப்பு என்று குறிப்பிடுகின்றீர்கள் - ஆனால் விடுதலைப்புலிகள் எங்களின் தலைவரை கொன்றவர்கள். எனது நண்பர்களை கொன்றவர்கள். நான் அவர்களது 'அழித்தொழிக்க வேண்டியவர்களின்' பட்டியலில் இருந்தவன். நாங்கள் எப்படி விடுதலைப் புலிகளின் பதிலி அமைப்பாக இருக்க முடியும். அன்றைய சூழலில் ஒரு அமைதியான சூழலுக்காக நாங்கள் ஒத்துழைத்திருந்தோம்.. '
இவைகள்தான் சம்பந்தரது உரையின் சர்ச்சைக்குரிய பகுதியாக நோக்கப்படுகிறது. முதலாவது வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது தொடர்பில் சம்பந்தர் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் மிகவும் யதார்த்த பூர்வமானது. போர் முடிவுற்ற சூழலில் குறிப்பிட்ட பகுதிகளில் இயல்புநிலையை ஏற்படுத்துவதில் இராணுவ நீக்கம் (de-militarization) முக்கியமானது. இங்கு இராணுவ நீக்கம் என்பது இராணுவமே வடக்கு கிழக்கில் இருக்கக் கூடாது என்பதல்ல. இதனைத்தான் சம்பந்தர் குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு ஜனநாயக நிர்வாக பொறிமுறையில் இராணுவத்திற்கு என்ன இடமோ, அத்தகையதொரு இடத்தில் இராணுவம் இருக்க முடியும் என்பதுதான் சம்பந்தரின் வாதம். இது தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் விடயத்தை கூர்ந்து கவனிக்கவில்லையா அல்லது எப்படியாவது சம்பந்தரை விமர்சிக்க வேண்டுமென்னும் உள்நோக்கத்துடன் விமர்சித்திருக்கின்றனரா? இராணுவ நீக்கம் என்பது, முழுமையான இராணுவ வெளியேற்றம் அல்ல என்பதை விளங்கிக் கொண்டவர்களுக்கு சம்பந்தரின் கூற்று பிரச்சனைக்குரிய ஒன்றாக இருக்காது.
அடுத்து சம்பந்தர் விடுதலைப்புலிகள் பற்றி குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் எவையும் ஆச்சரியமானதல்ல. சம்பந்தரின் பாராளுமன்ற உரையின் வீடியோ ஆவணத்தை உற்று நோக்கினால் ஒரு விடயத்தை கவனிக்கலாம். சம்பந்தர் மேற்படி கருத்துக்களை மிகவும் நிதானமாகவும் தெளிவாகவுமே முன்வைத்திருக்கின்றார். முன்கூட்டிய தயாரிப்புடன்தான் அவர் விவாதத்திலும் பங்குகொண்டிருக்கின்றார். விடுதலைப் புலிகள் ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பு என்பதுதான் சர்வதேச பார்வை. இது குறித்து தமிழர்கள் என்ன கருதுகின்றார்கள் என்பது வேறு விடயம். ஆனால் இங்கு சம்பந்தர் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக குறிப்பிடவில்லை. ஆனால் சாதாரண மக்கள்மீது தாக்குதல்களை மேற்கொண்ட போது, ஜனநாயக தலைவர்களை கொலைசெய்தபோது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு என்னும் வகைப்படுத்தலுக்குள் கொண்டு வரப்பட்டனர் என்றே குறிப்பிட்டிருக்கின்றார். இது ஒரு பாரதூரமான கருத்தாக நான் பார்க்கவில்லை. இத்தகையை கண்ணோட்டத்தில் ஏலவே பலரும் எழுதியிருக்கின்றனர். இங்கு ஒரு விடயத்தை கவனிக்கலாம் - சம்பந்தர் தன்னை புலிகளுடன் தொடர்புபடுத்துவதை கண்டிக்கும் வகையிலேயே தனது உரையை ஆற்றியிருக்கின்றார். அவர் மீண்டும் நாங்கள், நான் என்று சொல்வதிலிருந்து, அவர் தமிழரசுக் கட்சியினது நிலைப்பாட்டையே எடுத்தியம்பியிருக்கின்றார்.
சம்பந்தரின் உரை ஏற்படுத்தியிருக்கும் சலசலப்புக்களை உற்றுநோக்கும் போது ஒரு விடயம் தெளிவாகிறது – தமிழர்கள் இன்னும் திருந்தவில்லை அல்லது திருந்த விரும்பவில்லை. விடுதலைப்புலிகள் குறித்த உலகளாவிய பார்வை என்னவென்று பல தடவை இப்பத்தியாளர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். எனவே அதனைக் கருத்தில் கொண்டு சிந்தித்தால் இன்று எழுந்திருக்கும் சர்ச்சைகளும் விமர்சனங்களும் அர்த்தமற்றவை என்பதே இப்பத்தியின் கணிப்பு. விமர்சனங்கள் மிகவும் தேவை ஆனால் அவை யதார்த்த பூர்வமான விமர்சனங்களாக இருக்க வேண்டும். எனவே இங்கு உணர்ச்சிவசப்படுவதை விடுத்து சிந்தித்து செயல்படுவதே முக்கியமானது.