Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புதிய அரசியல் யாப்பு: தமிழ் மக்கள் இலகுவில் ஏமாறக் கூடியவர்களா? 

புதிய அரசியல் யாப்பு: தமிழ் மக்கள் இலகுவில் ஏமாறக் கூடியவர்களா? 
யதீந்திரா

 

புதிய அரசியல் யாப்பு தொடர்பான முதலாவது இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கின்ற நிலையில், அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முன்னரைவிடவும் அதிகரித்திருக்கின்றன. அடுத்த மாதம் 10ம் திகதி வெளிவரவுள்ள இரண்டாவது இடைக்கால அறிக்கையுடன் புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான இடம் என்ன என்பதும் தெட்டத் தெளிவாகிவிடும். கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சித்தார்த்தன் தலைமை வகித்த உப குழுவின் அறிக்கை ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றது. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே அடுத்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கையில் இலங்கையில் தற்போது நடைமுறையிலிருக்கின்ற ஒற்றையாட்சி முறைமை தொடர்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது:

மாகாண சபைகளின் வினைத்திறனான செயற்பாட்டிற்கு அரசியலமைப்பின் ஒற்றையாட்சித் தன்மையும் ஒரு தடையாக இருப்பதாக தவிசாளர், சில குழு உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்டோர் குறிப்பிட்டார்கள். இதன் மூலம் ஒற்றையாட்சி முறைமை தொடர்பான விவகாரம் மிகவும் மேலோட்டமாகவும், இரண்டாம்பட்சமான ஒன்றாகவுமே எடுத்தாளப்பட்டிருப்பதை காணலாம். ஆனால் குழுவின் தலைவரான சித்தார்த்தன் அறிக்கை வெளியாகிய பின்னர் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்கு சமஸ்டிதான் தீர்வு என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, சித்தார்த்தன் தான் சார்ந்த கட்சியின் அரசியல் கொள்கை நிலைப்பாட்டை, அவர் தலைமை வகித்த குழுவின் அறிக்கையில் உட்புகுத்த முடியவில்லை. அவ்வாறாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற மக்கள் ஆணைக்கு அமைவான அரசியல் தீர்வை இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ள இடைக்கால அறிக்கையில் எவ்வாறு உள்நுழைக்கப் போகின்றது? இவ்வாறானதொரு கேள்விக்கு சம்பந்தனிடம் இருக்கும் ஆகச்சிறந்த பதில் ‘நிதானமாக இருங்கள்’ என்பதுதான். இதற்கு மட்டுமல்ல இன்னும் பல கேள்விகளுக்கும் கூட அவரிடம் இருக்கின்ற ஒரே பதில் நிதானம் என்னும் ஒரு சொல்தான்.

அண்மைக்காலமாக சம்பந்தன் ஒரு விடயத்தை தொடர்சியாக கூறி வருகின்றார். அதாவது, 1972இல் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவின் முதலாவது குடியரசிற்கான அரசியல் யாப்பு, மற்றும் அதன் பின்னர் 1978இல் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம்கொண்ட அரசியல் யாப்பு ஆகிய இரண்டும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஏனெனில் மேற்படி இரண்டு அரசியல் யாப்புக்களையும் அப்போது தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமைகளாக இருந்த இலங்கை தமிழரசு கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் அங்கீகரித்திருக்கவில்லை. அந்த வகையில் நோக்கினால் சிறிலங்கா பிரித்தானியர் ஆட்சியிலிருந்து விடுபட்ட கடந்த 68 வருடகாலமாக, சிறிலங்காவை தீர்மானித்த அரசியல் சாசனமானது, சிறிலங்காவின் ஒரு பகுதி மக்கள் கூட்டமான தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களின் பங்குபற்றலோடு வெளிவரவுள்ளதாக சம்பந்தன் கூறிவருகின்றார்.

ஆனால் ஏற்கனவே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் யாப்புக்களில் காணப்பட்ட குறைபாடுகள் புதிய அரசியல் யாப்பில் நீக்கப்பட்டால்தானே, தமிழ் மக்கள் அதனை ஆதரிக்க முடியும்? தற்போது நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பின் அனைத்து குறைபாடுகளுக்கும் அதில் உள்ளடங்கியிருக்கும் ஒற்றையாட்சித்தன்மையே பிரதான காரணமாகும். ஒற்றையாட்சி முறைமை இருக்கின்ற வரையில் ஒரு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்பதும் சாத்தியமில்லை. அடிப்படையில் மாகாண சபை முறைமை பிரச்சினைக்குரிய ஒன்றல்ல, ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அது இருப்பதுதான் பிரச்சினை. ஒற்றையாட்சியின் கீழ் பகிரப்படும் எந்தவொரு அதிகாரத்தையும் என்னேரமும் கொழும்பால் திருப்பி எடுத்துக்கொள்ள முடியும். இதனை கருத்திற் கொண்டே ஒற்றையாட்சி முறைமை நீக்கப்பட வேண்டுமென்னும் கோரிக்கை தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கையாக இருந்துவருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த சவாலை கூட்டமைப்பு எவ்வாறு வெற்றிகொள்ளப் போகிறது? இவ்வாறானதொரு சூழலில்தான் சம்பந்தன் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பொதுசன வாக்கெடுப்பு அவசியம் என்று வலியுறுத்தியிருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்கவிடமும் பொதுசன வாக்கெடுப்பிற்கு ஆதரவான நிலைப்பாடே காணப்படுகிறது. ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் பொதுசன வாக்கெடுப்பிற்கு ஆதரவான நிலைப்பாடு இல்லை. அவ்வாறாயின் ரணில் ஏன் பொதுசன வாக்கெடுப்பை கோருகின்றார்? உண்மையில் பொதுசன வாக்கெடுப்பை ஆதரிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் பின்னால் வேறுபட்ட அரசியல் உள்நோக்கங்கள் உண்டு. பொதுசன வாக்கெடுப்பை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் சிங்கள தரப்புக்கள் இருவருமே இறுதியில் ஓரிடத்தில் சந்தித்துக் கொள்வதில் பெரிய சிக்கல்கள் எதுவுமில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கும் என்பதை தெரிந்தே ரணில் பொதுசன வாக்கெடுப்பிற்கு ஆதரவாக பேசுகின்றார். இந்த எதிர்ப்பு மற்றும் ஆதரவிற்கு பின்னால் ஒரு இணங்கிப் போகும் நிகழ்சிநிரல் உண்டு. அதாவது, பொதுசன வாக்கெடுப்பிற்கு செல்வதாயின் விட்டுவிட வேண்டிய விடயங்கள் சிலவற்றில் இறுதியான ஒரு உடன்பாட்டிற்கு மேற்படி இரு பிரதான கட்சிகளும் வரும். ஒற்றையாட்சியை பாதுகாத்தல், புத்த சமயத்திற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் தேசியக் கொடி விவகாரம் ஆகியவற்றிற்கு பங்கம் ஏற்படாத வகையில் ஒரு பொது இணக்கப்பாடு ஏற்படும். இதனை சம்பந்தனும் நன்கறிவார். ஒற்றையாட்சி மற்றும் புத்த சமயத்திற்கு முன்னுரிமையளித்தல் விவகாரத்தில் சிங்கள தரப்புக்கள் எவ்வித விட்டுக்கொடுப்பையும் செய்யப் போவதில்லை.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். அவ்வாறாயின் சம்பந்தன் ஏன் பொதுசன வாக்கெடுப்பை கோருகின்றார்? சம்பந்தன் பொதுசன வாக்கெடுப்பை கோருவதற்கு பின்னாலும் ஓர் உள்நோக்கம் உண்டு. அதாவது, புதிய அரசியல் யாப்பில் தான் எதிர்பார்க்கும் விடயங்கள் முழுமையாக வரப்போவதில்லை என்னும் நிலையில் அதனை எதிர்கொள்வதற்கான உபாயங்கள் தொடர்பிலேயே சம்பந்தன் தற்போது கவனம் கொள்கின்றார். அதாவது அரைகுறையான ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும், ஆனால் அதனால் ஏற்படப்போகும் பழியிலிருந்தும் தான் தப்ப வேண்டும். அது எப்படி சாத்தியப்படும்? முதலில் புதிய அரசியல் யாப்பு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பொரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இப்பத்தி மேலே குறிப்பிட்டவாறான அரசியல் யாப்பின் சிக்கலான பகுதிகள் எதுவும் நீக்கப்படாத நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயமேயல்ல. எனவே அது இலகுவில் கடக்கக் கூடிய தூரம். ஆனால் ஒற்றையாட்சியை பாதுகாக்கும், புத்த சமயத்திற்கு முன்னுரிமையளிக்கும் ஒரு அரசியல் யாப்பிற்கு கூட்டமைப்பு எவ்வாறு ஆதரவளிக்க முடியும்? இந்த இடத்தில்தான் சம்பந்தன் பொதுசன வாக்கெடுப்பு ஒன்று இடம்பெறுமாயின் அனைத்து விமர்சனங்களையும் மக்கள் மீது திருப்பிவிட்டுவிட்டு, தான் தப்பிக் கொள்ளலாம் என்று யோசிக்கின்றார். எந்தவொரு விடயமும் அதன் இறுதியில் பங்குபற்றுவர்களைக் கொண்டே அளவிடப்படும். சம்பந்தன் மிகவும் துல்லியமாக கணக்கொன்றை போடுகின்றார்.

இந்த இடத்தில் எழும் பிறிதொரு கேள்வி, அவ்வாறாயின் அரைகுறையான ஒர் அரசியல் தீர்விற்கு சாதகமாக தமிழ் மக்கள் வாக்களிப்பார்களா? தற்போதிருக்கின்ற நிலையில் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ் மக்கள் மத்தியில் உண்மையான நிலமைகளை எடுத்துக் கூறி அவர்களை அணிதிரட்டக் கூடிய வலுவான அரசியல் சக்தியொன்று இல்லை. இரண்டு மகிந்த தரப்பினரும் அவர்களுடன் அணிசேரும் சில தென்னிலங்கை சக்திகளும் ஓரணிசேர்ந்து, அரசியல் தீர்வு தொடர்பான குறைவான விடயங்களைக் கூட எதிர்க்கலாம்.

இந்த நிலமையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சம்பந்தன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீண்டும் மகிந்த வருவதை தடுக்க வேண்டுமானால் தமிழ் மக்கள் இதனை ஆதரித்து வாக்களிப்பதை தவிர வேறு தெரிவுகள் இல்லை என்றவாறான பிரச்சாரமொன்றை முன்வைக்கலாம். இது தர்க்க ரீதியில் மிகவும் பலவீனமான பிரச்சாரமாக இருக்கின்ற போதிலும் கூட, தமிழ் மக்கள் இதன் பின்னால் போகவே அதிக வாய்ப்புண்டு. ஏனெனில் 2009இல் யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்தியே கையாளப்பட்டிருக்கின்றனர். மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்தி பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தனர். அதே மகிந்தவை முன்னிறுத்தியே மைத்திரிபாலவிற்கு வாக்களித்தனர். எனவே ஒரு பொதுசன வாக்கெடுப்பு இடம்பெறுமாயின் அதன் போதும் மகிந்தவை முன்னிறுத்தி தமிழ் மக்கள் வாக்குகளை மிகவும் இலகுவாக ஏமாற்றிவிடலாம். இதனை கணக்குப் போட்டே சம்பந்தன் தன்னுடைய அரசியல் ஆட்டத்தை ஆட முயற்சிக்கின்றார்.

புதிய அரசியல் யாப்பு: தமிழ் மக்கள் இலகுவில் ஏமாறக் கூடியவர்களா? 

ஆனால் இது பிழைத்துப் போகவும் இடமுண்டு. ஒருவேளை பொதுசன வாக்கெடுப்பு ஒன்றிற்கு போவது அரசியல் பதட்டங்களை ஏற்படுத்தலாமென்று எண்ணி, பாராளுமன்ற பொரும்பான்மையுடன் விடயங்களை கையாளும் முடிவை எடுத்தால் சம்பந்தன் நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும். அவ்வாறானதொரு நிலையில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏனைய கட்சிகளும் வாக்களிப்பு தொடர்பில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறானதொரு சூழலில் சம்பந்தன் வாக்களிப்பை பகிஸ்கரிக்கும் முடிவையும் எடுக்கலாம். அவ்வாறில்லாது போனால் விமர்சனங்களை கருத்திற்கொள்ளாமல் ஆதரிக்கும் முடிவைக் கூட சம்பந்தன் எடுக்கலாம். சம்பந்தன் அத்தகையதொரு முடிவை எடுக்கும் பட்சத்தில் சம்பந்தனின் முடிவுடன் ஏனைய கட்சிகளான டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவையும் உடன்பட்டுச் செல்லுமா அல்லது வாக்களிப்பிலிருந்து விலகிக் கொள்ளுமா? இது தொடர்பில் ஊகங்களைச் செய்வதைவிடவும் இன்னும் சில வாரங்கள் பொறுமை காப்பதே சாலவும் சிறந்தது. எவ்வாறாயினும் கூட்டமைப்பிற்கு ஒரு பாரிய சவாலுக்கு முகம்கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த விடயங்களை ஒரு புறமாக ஒதுக்கிவிட்டு தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் யாப்பு தொடர்பில் தொடர்ச்சியான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதே தற்போதைக்கு அரசியல் தீர்வு தொடர்பில் சிந்திக்கும் ஏனைய தரப்புக்கள் மேற்கொள்ள வேண்டிய உடனடி பணியாகும். 

11/26/2016 12:02:03 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்