Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சுமந்திரன் மீதான கொலை முயற்சி? - கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?  

சுமந்திரன் மீதான கொலை முயற்சி? - கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?  
யதீந்திரா

 

அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை இலக்கு வைத்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஒருபுறம் அதற்கான வீட்டு வேலைகளை செய்து கொண்டும், மறுபுறம் பேரவையின் உறுப்பு நாடுகளுடனான இராஜதந்திர நெருக்கங்களை அதிகரித்தும் வருகிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஆபிரிக்காவின் கொம்பு என்று வர்ணிக்கப்படும் எதியோப்பியாவில் புதிய தூதரகம் ஒன்றை திறந்திருக்கிறது. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இவ்வாறானதொரு நகர்வை முன்னெடுத்திருக்கிறது. அரசாங்கத்தின் இராஜதந்திர நகர்வுகள் தொடர்பில் விரிவாக நோக்குவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. அதனை பிறிதொரு சந்தர்ப்பத்தில் இப்பத்தி பதிவு செய்யும்.

இந்தக் கட்டுரை முன்னிறுத்த முற்படும் விடயம் வேறு. அதாவது இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்னிறுத்தி பலவாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. மக்கள் நலன் சார்ந்து கூட்டமைப்பை விமர்சிப்பவர்களும் உண்டு. அரசியல் கொள்கை சார்ந்து கூட்டமைப்பை விமர்சிப்பவர்களும் உண்டு. இந்த இரண்டு வகையான விமர்சனங்களும் கூட்டமைப்பை எப்போதுமே உள்முரண்பாடுகள் மிக்க அமைப்பாகவே காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு வித நிகழ்ச்சிநிரலுடன்தான் இயங்கிக் கொண்டிருந்தன – இப்போதும் அவ்வாறே இயங்கி வருகின்றன. இந்த முரண்பாடுகள் தொடர்பில் எவரேனும் கேள்வி கேட்டால் அதற்கு சம்பந்தனிடம் இருந்த ஆகச் சிறந்த பதில் ஒரு ஜனநாயக அமைப்பென்றால் அங்கு பல கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களை கூர்ந்து நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். அதாவது, அவை பெரும்பாலும் ஏதோவொரு வகையில் இரண்டு நபர்களை தொட்டுச் செல்வதாகவே அமைந்திருக்கும். ஒன்றில் அது சம்பந்தனை தொட்டுச் செல்லும் அல்லது சுமந்திரனை தொட்டுச் செல்வதாக இருக்கும். ஆனால் அண்மைக்காலமாக கூட்டமைப்பை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் பெரும்பாலும் சுமந்திரனை மையப்படுத்தியதாகவே இருந்தது. இவ்வாறான விமர்சனங்கள் ஒரு விடயத்தை மறைமுகமாக ஏற்றுக் கொண்டன. அதாவது, கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புக்களில் சுமந்திரன் எவராலும் தவிர்த்துச் செல்ல முடியாதவொரு இடத்தில் இருக்கிறார் என்பது.

இவ்வாறானதொரு இடத்திற்கு சுமந்திரன் எவரையும் வீழ்த்தி அல்லது மற்றவர்களுக்கு குழிபறித்து வரவில்லை. சம்பந்தனே அவருக்கு இவ்வாறானதொரு இடத்தை கொடுத்திருந்தார். சம்பந்தன் கொடுத்த இடத்தை சுமந்திரன் தனது தனப்பட்ட திறமைகளுடன் இணைத்து, சம்பந்தனால் கூட தன்னைத் தவிர்த்துச்செல்ல முடியாதவாறானதொரு சூழலை உருவாக்கிக் கொண்டார். ஆனாலும் சுமந்திரனின் சில அணுகுமுறைகள் மற்றும் அவர் அவ்வப்போது வெளிப்படுத்திவரும் கருத்துக்கள் என்பன வெகுசனப்பரப்பில் சுமந்திரன் தொடர்பில் மாறுபாடான பார்வைகள் ஏற்படுவதற்கே வழிவகுத்தன. குறிப்பாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் மத்தியில் சுமந்திரனின் அணுகுமுறைகள் அதிருப்பதியை ஏற்படுத்தியது. ஆனாலும் சுமந்திரன் அது தொடர்பில் எப்போதுமே கரிசனை கொள்ளவில்லை. சம்பந்தனை தவிர வேறு எவருக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு தனக்கில்லை என்னும் மனோபாவத்துடனயே விடயங்களை அணுகினார். சம்பந்தனும் அதனையே விரும்பினார்.

இவ்வாறானதொரு சூழலில்தான் சுமந்திரனை கொலை செய்வதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதனடிப்படையில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி பதிவாகியிருக்கிறது. இதனை சுமந்திரனும் உறுதிப்படுத்தியிருப்பதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. யுத்தம் நிறைவுற்ற கடந்த 7 வருடங்களில், தமிழ் அரசியல் தலைவர் ஒருவரை கொல்லுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதான செய்தியொன்று வெளியாகியிருப்பது, இதுவே முதல் தடவை ஆகும். இது உண்மையாக இருப்பின் மிகவும் பாரதூரமானது. ஒருவரது அரசியல் நிலைப்பாடுகளை நிராகரிப்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அந்தக் காரணங்களை பொது வெளிகளில் முன்வைப்பதற்கும், அந்த அடிப்படையில் தங்களது அரசியல் எதிராளிகளை ஜனநாயக ரீதியில் பலவீனப்படுத்துவதற்கும் ஒருவருக்கு உரிமையுண்டு. ஆனால் அரசியல் முரண்பாடுகளுக்காக ஒருவரது உயிரை இலக்கு வைப்பதை அல்லது அவரை உடல்ரீதியில் காயப்படுத்த முற்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு சமூகத்தை எந்த வகையிலும் முன்னோக்கி நகர்த்தப் பயன்படாது.

ஆனால், இந்த விடயம் தமிழ் சூழலில் எவ்வாறு நோக்கப்படும் என்பதும் கேள்வியே! சுமந்திரனை கொலை செய்வதற்கான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டதான தகவல் ஒன்றை இலங்கை அரசு சொல்வதற்கு முன்னரே, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களில் ஒருவரான சயந்தன் என்பவர் தெரிவித்திருக்கின்றார். அவர் சாவகச்சேரியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் இதனை குறிப்பிடும் போது சம்பந்தன் மற்றும் மாவை ஆகியோரும் உடனிருந்திருக்கின்றனர்.  மேற்படி நபர், சுமந்திரனுக்கு நெருக்கமான மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவராவார். இதனால் இந்த விடயம் பெரிதாக பொருட்படுத்தப்படவில்லை. அதேவேளை சுமந்திரனும் அதனை உறுதிப்படுத்தவில்லை. தற்போதுதான் சுமந்திரன் தனக்கு அவ்வாறானதொரு அச்சுறுத்தல் இருப்பதாக உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

சுமந்திரன் மீதான கொலை முயற்சி? - கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?  

ஆனாலும் இந்த விடயத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவர் ஆங்கில பத்திரிகையாளரான டி.பி.எஸ்.ஜெயராஜ் ஆவார். (Overseas LTTE-backed plot to assassinate TNA MP Sumanthiran in Jaffna revealed. http://www.dailymirror.lk/article/Overseas-LTTE-backed-plot-to-assassinate-TNA-MP-Sumanthiran-in-Jaffna-revealed-122886.html) கடந்த 28.01.2017 அன்று டெயிலிமிரர் பத்திரிகையில் டி.பி.எஸ். எழுதிய கட்டுரை ஒன்றிலேயே வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் சுமந்திரனை படுகொலை செய்வதற்கான முயற்சி ஒன்றில் ஈடுபட்டதான தகவலை வெளியிட்டிருந்தார். தமிழ் பரப்பில், இதன் உண்மைத்தன்மை தொடர்பில் கேள்வி எழுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மேலும் எடுத்த எடுப்பிலேயே வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள்தான் இதனை திட்டமிட்டனர் என்றும், அதற்கு உசாத்துணையாக சில நபர்களின் பெயர்களையும் டி.பி.எஸ்.குறிப்பிட்டிருக்கின்றார். ஜெயராஜ் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தவர் என்பது அரசியல் அரங்கில் நன்கறியப்பட்ட விடயம். எனவே விசாரணை முடிவடைவதற்கு முன்னரே திடீரென்று வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள்தான் இதனைச் செய்தனர் என்று ஜெயராஜ் குறிப்பிட்டிருப்பது தொடர்பில் சந்தேகங்கள் எழுவது இயல்பே. ஒருவேளை டி.பி.எஸ் இதனை தெரிவிக்காமல், வேறு எவரேனும் அல்லது சுமந்திரனே ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்கு செய்து தகவலை தெரிவித்திருந்தால், அது தமிழ் சூழலில் வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக ஜெயராஜ் தொடர்பான மதிப்பீடுகளிலிருந்து, மேற்படி விடயத்தின் கனதியை குறைத்து மதிப்பிட முடியாதென்று ஒருவர் கூறினால் அதுவும் சரியே!

இது ஒரு பாரதூரமான பிரச்சினை என்பதில் ஐயமில்லை. ஆனால் இது தொடர்பில் சம்பந்தன் இதுவரை எதுவும் கூறவில்லை. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் எவரும் இது தொடர்பில் பேசவில்லை. சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, கூட்டமைப்பின் பேச்சாளர். அதற்கும் மேலாக கூட்டமைப்பின் சார்பில் அரசாங்கத்துடன் உரையாடி வருபவர். அவ்வாறான ஒருவருக்கு உயிராபத்து இருக்கின்றதென்றால் அது ஒட்டுமொத்த கூட்டமைப்பின் மீதான அச்சுறுத்தலாகும். அனைத்து ஜனநாயக வழித் தலைவர்கள் மீதான அச்சுறுத்தலாகும். எனவே சுமந்திரன் இலக்கு வைக்கப்படுகின்றார் என்றால் அது சுமந்திரன் மீதான இலக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புக்கள் மீதும் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல். அந்த வகையில், சம்பந்தன் தொடங்கி சம்பந்தனுடன் கைகோர்த்து நிற்கும் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் மீதான அச்சுறுத்தல்.

ஆனால் இதுவரை கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக எதனையும் குறிப்பிடவில்லை. வழமையாக கருத்துக்களை அவசரப்பட்டு வெளியிடும் மாவை சேனாதி கூட, இது தொடர்பில் பேசவில்லை. இதன் காரணமாகவே, மேற்படி விடயம் தமிழ் ஊடகங்கள் மத்தியில் கூடுதல் கரிசனையை பெறவில்லை. இந்த விவகாரம் சரணடைந்து, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் அனைவரையுமே மிகவும் மோசமாக பாதிக்கக்கூடியது. பிடிபட்டவர்கள் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்கள் என்பதற்காக, அவர்கள் அனைவரும் அப்படியான எண்ணத்துடன்தான் இருக்கின்றனர் என்று பொதுமைப்படுத்த முற்படுவது, வேலியால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாகவே அமையும். பொதுவாக அனைத்து விடயங்களுமே இலகுவில் பாதிக்கப்படக் கூடிய தரப்பினரையே பாதிப்பதுண்டு. அதே வேளை புலம்பெயர்ந்து வாழும் அரசியல் செயற்பாட்டாளர்களும் நிதானத்துடனும், சமூகப் பொறுப்புடனும் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

2/4/2017 11:06:35 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்