Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புதிய அரசியல் யாப்பு தொடர்பான விவாதங்கள் சொல்லும் செய்தி என்ன? 

புதிய அரசியல் யாப்பு தொடர்பான விவாதங்கள் சொல்லும் செய்தி என்ன? 
யதீந்திரா

 

புதிய அரசியல் யாப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதங்கள் நிறைவுபெற்றிருக்கின்றன. வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை முன்வைத்து விவாதிப்பதாக கூறப்பட்ட போதிலும் கூட, ஒவ்வொருவரும் வழமையாக பேசுவது போன்றே பேசியிருக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பலர் பேசியிருந்தாலும் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோரது உரையே கவனிப்புக்குரியது. சுமந்திரன் மிகவும் தர்க்கபூர்வமாக விடயங்களை பேசியிருக்கின்றார்.

சுமந்திரன் தனதுரையில் ஒரு புது வாதத்தை முன்வைத்திருக்கின்றார். 2015இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின்போது நாட்டின் 97 சதவிகிதமான மக்கள் புதிய அரசியல் யாப்பு ஒன்றிற்கான ஆணையை வழங்கியிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். சுமந்திரன், தனது தர்க்கத்திற்கு ஆதாரமாக 2015இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மகிந்த ராஜபக்ச முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை காண்பித்திருக்கின்றார். அந்த விஞ்ஞாபனத்தில், பரந்தளவிலான அரசியல் மறுசீரமைப்பின் ஊடாக ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்திற்கு வித்திடப் போவதாக மகிந்த அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் பொருத்தமான விவாதங்கள் அல்லது கலந்துரையாடல்கள் இன்றி கடந்த 36 வருடங்களாக நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பிற்கு பதிலாக, புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை நான் எடுப்பேன் என்று ராஜபக்ச தெரிவித்திருந்தார். இதனையே தற்போது சுமந்திரன் தனதுரையில் சுட்டிக் காட்டியிருக்கின்றார். அதாவது மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்த மக்களும், மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்த மக்களும் ஒரு புதிய அரசியல் யாப்பிற்கான ஆணையை வழங்கிய மக்களாவர் என்பதே சுமந்திரனின் தர்க்கம். இந்த தர்க்கம் வலுவானது என்பதில் ஐயமில்லை. ஆனால் இவ்வாறான வாதங்களை சிங்கள – பௌத்த தேசியவாத சக்திகள் எவ்வாறு விளங்கிக் கொள்வர் என்பதுதான் கேள்விக்குரியது.

ஆனால் இந்த விவாதத்தில் பேசிய ரணில் விக்கிரமசிங்கவின் உரையோ சுமந்திரன் மற்றும் சம்பந்தனின் உரைகளை பலவீனப்படுத்துவதாகவே இருக்கிறது. புதிய அரசியல் யாப்பு தொடர்பாக பௌத்த மதபீடங்களின் மகா நாயக்கர்களுடனும் ஏனைய மதத் தலைவர்களுடன் பரந்துபட்ட கலந்துரையாடல்களை நடத்தப்போவதாக ரணில் குறிப்பிட்டிருக்கின்றார். ஏனைய மதத்தலைவர் என்று பொதுவாக குறிப்பிட்டிருந்தாலும் கூட அதன் பொருள் பௌத்த பீடங்களின் ஆசியை பெற வேண்டும் என்பதுதான். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கும் கருத்துக்களையும் ரணில் தனதுரையில் மேற்கோள் காட்டியிருக்கின்றார். அதாவது, மகாநாயக்க தேரர்களையும் ஏனைய மதத் தலைவர்களையும் பொதுமக்களையும் சந்திக்கவுள்ளோம் என்று மைத்திரிபால குறிப்பிட்டிருக்கின்றார். அப்படியானால் மக்கள் கருத்தறியும் குழுவின் ஊடாக பொதுமக்களோடு கலந்துரையாடிய விடயங்களின் பெறுமதி என்ன?

அரசியல் யாப்பு தொடர்பாக கூட்டு எதிரணி முன்வைத்த பல யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கும் ரணில், மக்களின் சம்மதம் இன்றி பாராளுமன்றத்தால் பலவந்தமாக மாகாணங்களை இணைக்க முடியாது எனவே மக்களின் சம்மதம் இன்றி வடக்கு கிழக்கு மாகாணங்களை எம்மால் இணைக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். ரணில் தனது உரையின்போது ஒற்றையாட்சியை யாரும் எதிர்க்கவில்லை – யாரும் எதிர்க்கின்றீர்களா, இல்லைதானே - இவ்வாறு கேட்ட போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில்தான் இருந்தனர். ஆனால் எவருமே வாய்திறக்கவில்லை. இந்த இடத்தில் சுமந்திரனது கெட்டித்தனமான தர்க்கம் அதன் பெறுமதியை முற்றிலுமாக இழந்துபோகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறுக்கிட்டு நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லும் துணிவுநிலை ஏன் வரவில்லை? கூட்டமைப்பால் வழங்கப்பட்ட பின்னிணைப்பில் கூட ஒற்றையாட்சிக்கு பதிலாக சமஸ்டி முறைமையே வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்களது பின்னிணைப்பிற்கு மாறான ஒரு கருத்து பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது அதனை ஏன் எதிர்கொள்ள முடியாமல் போகிறது? ஒரு விடயத்தில் நாங்கள் உறுதியாக இருந்தால் அதனை வலியுறுத்துவதில் ஏன் தயக்கம் காண்பிக்க வேண்டும்?

அதேவேளை கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசுவதற்கு இடமளிக்கப்படவில்லை என்னும் தகவலும் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பில் அவர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறியிருப்பதாகவும் தனக்கு நேரம் வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் வாதிட்டிருக்கின்றார். சம்பந்தன் உரையாற்றும்போது இடைமறித்தே இதனை அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது இவ்வாறானதொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். இடைக்கால அறிக்கை தொடர்பில் தனது கட்சியின் தனித்துவமான நிலைப்பாட்டை தெரிவிக்கக் கூடும் என்னும் அடிப்படையிலேயே தனக்கான நேரம் மறுக்கப்பட்டிருப்பதாக ஆனந்தன் குறிப்பிடுகின்றார். ஆனால் இது போன்ற விடயங்களை சம்பந்தர் தவிர்த்திருக்கலாம். இவ்வாறான விடயங்கள் சம்பந்தரது அனுபவத்திற்கும் ஆற்றலுக்கும் பொருத்தமான ஒன்றாக இல்லை.

நாடாளுமன்ற விவாதங்களை உற்று நோக்கும்போது ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, தென்னிலங்கையின் அரசியல் தலைவர்கள் எவருமே தங்களின் கட்சி நலன்களை புறந்தள்ளிவிட்டு, தூய்மையான எண்ணத்தோடு விவாதங்களில் பங்குகொள்ளவில்லை. சம்பந்தரை பொறுத்தவரையில் எப்படியாவது ஒரு விடயத்தை செய்து முடித்துவிடலாம் என்று எண்ணுகின்றார் போலும். ஆனால் நிலைமைகளோ அவருக்கு சாதகமாக இருப்பதாக தெரியவில்லை. இதற்கிடையில் எதிர்வரும் ஜனவரியில் ஒரு உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ரணிலின் தகவலின்படி இந்த விவாதங்கள் அடுத்த ஆண்டின் சிங்களப் புத்தாண்டு வரை நீடிக்கும். ஒருவேளை அதனையும் தாண்டியும் செல்லலாம். இதற்கிடையில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மகிந்தவிற்கு சாதகமாக இருந்தால் இந்த விவாதங்கள் அனைத்தினதும் ஆயுளும் முடிந்துவிடும். இதற்காகவே அரசாங்கம் முடிந்தவரை தேர்தலை பிற்போடும் முயற்சியில் இறங்கியிருந்தது. ஆனாலும் அது முடியவில்லை.

தற்போதுள்ள நிலைமையின்படி, மைத்திரிபால தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், மகிந்த தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஓரணியில் வரும் நிலையில் இல்லை. அவ்வாறனதொரு கூட்டு உருவாகுவதை ரணிலும் சந்திரிக்காவும் ஏதோவொரு வகையில் தடுக்கவே முற்படுவர். அவ்வாறானதொரு கூட்டிற்கு வாய்ப்பு இல்லையென்றால், நிச்சயமாக மைத்திரிபால தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி பலவீனமடையும். இவ்வாறனதொரு நிலையில் புதிய அரசியல் யாப்பு தொடர்பான விவாதங்களை முன்கொண்டு செல்வதற்கான தார்மீக தகுதியை மைத்திரிபால இழந்துவிடுவார். அதன் பின்னரும் புதிய அரசியல் யாப்பு விவகாரத்தை முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின் மகிந்தவின் ஆதரவு கட்டாயமான ஒன்றாக இருக்கும். அவ்வாறானதொரு சூழலில் மகிந்தவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டியேற்படும். மகிந்தவின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் கட்டுப்பட்டால் வடக்கு கிழக்கு இணைப்பு உட்பட பல விடயங்களை கைவிடவேண்டிவரும். ஒருவேளை நான் இங்கு குறிப்பிடும் நிலைமைகளுக்கு மாறாகவும் விடயங்கள் இடம்பெறலாம். ஆனால் அரசியல் நிலைமைகள் மிகவும் சிக்கலாகவே தெரிகிறது.

இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிலைமையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? கூட்டமைப்பின் மீது முன்வைக்கப்படும் முக்கிய விமர்சனம் அது எந்தவொரு மாற்று திட்டமும் இன்றி வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் செயற்பட்டு வருகிறது. அதாவது அதனிடம் 'பி' பிளான் இல்லை. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் இந்தக் கேள்வியை கேட்டபோது அவர் அதனை மறுக்கவில்லை. ஆனால் விடயங்கள் எங்களது பக்கத்தால் குழம்பியதாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பான விவாதங்கள் சொல்லும் செய்தி என்ன? 

புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் தொடர்பில் இரண்டு வகையான பார்வைகள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, விடயங்கள் குழும்புமாக இருந்தால் அது பிரச்சினையில்லை. ஆனால் அது சிங்களவர்களின் பக்கத்திலிருந்து குழம்ப வேண்டும். இந்தளவிற்கு இறங்கியும் அவர்கள் எதனையும் செய்யவில்லை என்றால் அதுதான் எங்களின் அடுத்த கட்ட அரசியலுக்கான அத்திவாரமாக இருக்கும். இன்னொரு சாரார் அது சரியாக இருக்கலாம், ஆனால் அதற்காக எங்களது நிலைப்பாடுகளை நாங்கள் சொல்லாமல் இருக்கக் கூடாது. எங்களது நிலைப்பாடுகளை வெளிப்படையாக முன்வைக்கத்தான் வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு வாதங்களும் தவறானவையல்ல. ஆனால் தமிழ் சூழலில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை இவ்வாறான இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் எதிரிபோல் பாவனை செய்து கொண்டிருப்பதுதான். இந்த இரண்டு போக்கும் ஒன்றை ஒன்று சமநிலைப்படுத்தும் அரசியல் சக்திகள் என்பதை புரிந்துகொண்டால் ஏராளமான உள்முரண்பாடுகளை மிகவும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். சிங்கள தேசியவாத சக்திகள் எந்தக் காலத்தில் எவ்வாறான அரசியல் சக்திகளை முன்தள்ளுவது என்பதில் மிகவும் குயுக்தியுணர்வுடன் செயற்பட்டு வந்திருக்கின்றனர். ஒரு புறம் அரசியல் சக்திகளையும், இன்னொரு புறம் பௌத்த மதபீடங்களையும் மிகவும் நுட்பமாக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். இப்போதும் அவர்கள் அவ்வாறுதான் செயற்பட்டு வருகின்றனர். ஆனால் எங்கள் மத்தியிலுள்ள அரசியல் சக்திகளோ இதனை சரியாக புரிந்துகொண்டு செயலாற்ற முடியாதவர்களாக இருக்கின்றனர்.  

11/4/2017 10:31:43 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்