Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இந்தியாவிடம் சொல்லுதல்

இந்தியாவிடம் சொல்லுதல்
யதீந்திரா

 

இந்தக் கட்டுரை எழுதப்படும் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கையில் இருக்கிறார். உலக வெசாக் தின நிகழ்வுகளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் முகமாக அவர் இலங்கை வந்திருக்கிறார். இது அவரது இரண்டாவது விஜயமாகும். ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து 2015 மார்ச் மாதத்தில் அவரது முதலாவது விஜயம் இடம்பெற்றது. கடைசியாக ராஜீவ் காந்தியே இலங்கைக்கு விஜயம் செய்த இறுதிப் பிரதமராவார். அதன் பின்னர் 28 வருடங்களில் எந்தவொரு இந்திய பிரதமரும் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கவில்லை.

இந்த 28 வருடங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன. தற்போதைய இந்திய வெளிவிவகாரச் செயலர் கலாநிதி.ஜெயசங்கரின் வார்த்தையில் கூறுவதானால், பாலத்திற்கு கீழாக அதிகம் தண்ணீர் ஓடிவிட்டது. இப்படி பல விடயங்கள் நடந்து முடிந்திருந்தாலும் கூட, 'இந்தியாவிடம் சொல்லுதல்' என்னும் விடயம் மட்டும் அப்படியே அதன் முக்கியத்துவத்தை எந்தவகையிலும் இழக்காமல் நீடித்து நிற்கிறது. இந்திரா காந்தியிடம் சொல்லுல் என்பதாக ஆரம்பித்த இந்தியாவிடம் சொல்லும் மரபு இப்போது மோடியிடம் சொல்லுவதாகவும் நீண்டு செல்கிறது. அது நாளை பிறிதொரு பிரதமரிடம் சொல்லுவதாகக்கூட நீண்டு செல்லலாம்? அது நீண்டு செல்லுமாக இருந்தால் இலங்கைத் தீவின் ஒரு தேசமான தமிழ் மக்களின் பிரச்சினையும் தொடர்கிறது என்பதே பொருள்.

தற்போது மோடியால் ஆரம்பித்து வைக்கப்படும் உலக வெசாக் தினம் 1999இல் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அப்போதைய இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர்தான் வெசாக் தினத்தை ஒரு உலக தினமாக அங்கீகரிக்க வேண்டுமென்னும் பிரேரணையை ஐ.நாவில் சமர்ப்பித்தார். அதற்கு இந்தியா ஆதரவாக இருந்தது. தற்போது 14 வருடங்களுக்கு பின்னர்தான் அது இலங்கையில் கொண்டாடப்படுகிறது. கொழும்பு, வெசாக் தினத்தை கொண்டாடி மகிழும் இந்த மே மாதம் என்பது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் அரசியலின் குறியீடாக மாறியிருக்கும் முள்ளிவாய்க்கால் அவலங்களை நினைவுகொள்ளும் மாதமாகும்.

இவ்வாறானதொரு சூழலில்தான் மோடி தனது இலங்கைக்கான இரண்டாவது விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார். மோடியிடம் தமிழர் பிரச்சினை தொடர்பில் எடுத்துரைக்கப் போவதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியிருந்தார். இந்தக் கட்டுரை எழுதப்படும் போது கூட்டமைப்பிற்கும் மோடிக்குமான சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை. எனினும் சம்பந்தன் என்ன கூறுவார் என்பதும் ஊகிக்கக் கடினமான ஒன்றல்ல. இந்தியா தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். இதுவே சம்பந்தன் மோடிக்கு சொல்ல எண்ணியிருக்கும் விடயங்களின் சாரமாகும்.

இதேவேளை, வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மோடியிடம் தெரிவிக்குமாறு இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெயசங்கரிடம் சில விடயங்களை தெரிவித்திருக்கின்றார். இந்த சம்பவம் ஜனாதிபதியின் இராப்போசன நிகழ்வில் இடம்பெற்றிருக்கிறது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர், சம்பந்தன் ஆகியோருடன் விக்கினேஸ்வரனும் பங்குகொண்டிருந்தார். இதன்போதே நீங்கள் பிரதமருக்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா என்று ஜெயசங்கர் கேட்ட போது, விக்கி சில விடயங்களை தெரிவித்திருக்கிறார். அதன்படி, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன் வடக்கின் அபிவிருத்தியை வலுப்படுத்தும் வகையில், பலாலி விமான நிலையத்தை புனரமைத்து அதனை ஒரு பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கு இந்தியா உதவவேண்டும். அத்தோடு கே.கே.எஸ் துறைமுகத்தையும் புனரமைத்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் விக்கி வலியுறுத்தியிருக்கின்றார்.

அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் இந்தியாவிடம் சொல்லுதல் என்பது ஒரு பொதுவான விடயம். ஆனால், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவை தொடர்பில் வடக்கு முதலமைச்சர் கவனம் செலுத்தியிருப்பது முக்கியமானது. ஏனெனில் இதனை சில தென்னிலங்கை சக்திகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் வடக்கு முதலமைச்சர் அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை காண்பித்திருப்பது அரசியல்ரீதியில் அதிக கனதியுடையதாகும். உண்மையில் இதனைத்தான் கூட்டமைப்பின் தலைமை செய்ய வேண்டும். தெற்கின் இந்திய எதிர்ப்பு சக்திகள் எதனை செய்யக் கூடாது என்று கூறுகின்றனரோ அதனை வடக்கு கிழக்கிலிருந்து ஆதரிக்க வேண்டும். இதனைத்தான் இந்தியாவும் தமிழர் தரப்பிடமிருந்து எதிர்பார்க்கும். ஆனால் சம்பந்தன் அரசியல் தீர்வு தொடர்பில் இந்தியாவின் அனுசரணையை கோருவதுடன் நிறுத்திவிடுகின்றார். இந்தியாவின் ஏனைய கரிசனைகள் தொடர்பில் அக்கறை செலுத்துவதில்லை.

கடந்த முறை மோடி கூட்டமைப்பை சந்தித்த போது – உங்களுடைய சிந்தனையாளர் குழாமை (Think Tank) அழைத்து புதியதொரு தந்திரோபாயத்தை வகுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். ஒருவேளை இம்முறை சந்திக்கும் போது 'நீங்கள் உங்கள் சிந்தனையாளர் குழுவுடன் கலந்துரையாடினீர்களா?' என்று கேட்டால் சம்பந்தனால் என்ன கூற முடியும்? ஏனெனில் கூட்டமைப்பிற்கென்று அப்படியொரு சிந்தனையாளர் குழு இல்லை. இந்தியாவுடன் பணியாற்றக் கூடிய அனுபவமுள்ள தலைவர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களைக் கூட கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றுவதிலேயே சமபந்தன் கரிசனை செலுத்திவருகின்றார்.

உண்மையில் அப்படியொரு சிந்தனையாளர் குழு சம்பந்தனிடம் இருந்திருந்தால், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சரவணபவன் இந்தியாவை கடுமையாக தாக்கி பேசும் நிலைமை ஏற்பட்டிருக்காது. அதிலும் இந்திய ராஜதந்திரி நடராஜனின் பெயரைக் குறித்து மிக மோசமாக பேசும் நிலைமை ஏற்பட்டிருக்காது. இந்திய ராஜதந்திரி ஒருவரது பெயரை குறித்து இவ்வாறு பேசியிருப்பது இதுவே முதல் தடவை. ஏனெனில் அது ஒரு நாகரிகமான அணுகுமுறையும் அல்ல. இந்தியாவை கடுமையாக விமர்சிக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் கூட இந்தளவிற்கு இந்திய ராஜதந்திரி ஒருவரைப்பற்றி இவ்வாறு பேசியதில்லை. அதிலும் முக்கியமானது, இந்தியாவின் உதவியை நாடிவரும், கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒருவர் அவ்வாறு கூறியிருப்பதுதான். அதிலும் இந்தியாவின் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பேசுவதானது, சம்பந்தன் கூட்டமைப்பில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்னும் கேள்வியையே எழுப்புகின்றது. ஆகக் குறைந்தது தனது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட கட்டுப்படுத்த முடியாத மாவை சேனாதிராஜா, பிறிதொரு கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை விசாரிப்பதற்காக குழு ஒன்றை நியமிப்பது சரியான ஒன்றா? அந்தக் குழுவை சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒரு விடயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேறுவிடயம்.

இந்தியாவிடம் சொல்லுதல்

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து சீன உளவுத்துறை இலங்கையை எந்தவகையிலும் விடுவதில்லை என்னும் அடிப்படையில் செயற்பட்டு வருகிறது. எம்.எஸ்.எஸ் (Ministry of State Security (MSS)) என்று அழைக்கப்படும் சீன உளவுத்துறையின் செயற்பாடுகள் மிகவும் வேகமானது என்று இந்திய ஆய்வாளர்களே எழுதிவருகின்றனர். சீனா, வடக்கில் ஒரு துணைத் தூதரகத்தை நிறுவுவதிலும் முன்னர் ஆர்வம் காண்பித்திருந்தது. இந்த நிலையில் சீன உளவுத்துறை கூட்டமைப்பையும் இலக்கு வைக்கின்றதா என்னும் சந்தேகங்களும் எழுந்திருக்கின்றன. சம்பந்தன் இந்த விடயங்களை எவ்வாறு கையாளப் போகின்றார்?

இவ்வாறான விடயங்கள் மிகவும் பாரதூரமானவை. இந்தியா தேவையில்லையென்று சம்பந்தன் முடிவெடுத்தால், இந்த விடயங்களை அவர் கண்டும் காணாமல் விடமுடியும். ஆனால் இந்தியா எங்களுக்குத் தேவை என்பதில் சம்பந்தன் தெளிவாக இருந்தால், இவ்வாறான விடயங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவசியம். ஏற்கனவே சம்பூர் அனல்மின் நிலைய விடயத்திலும் சம்பந்தனது அணுகுமுறை புதுடில்லிக்கு மகிழ்சியளிக்கவில்லை. இந்தியாவை பொறுத்தவரையில் கூட்டமைப்பு எந்தவொரு விடயத்தையும் முதலில் தங்களிடமே சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறது. இதில் சில ஆய்வாளர்கள் பிறிதொரு அபிப்பிராயத்தை கொண்டிருக்கின்றனர். அதாவது இது இலங்கை அரசின் சதி. இலங்கை அரசு தான் விரும்பாததை சம்பந்தன் விரும்பவில்லை, விக்கினேஸ்வரன் விரும்பவில்லை என்றவாறு காண்பிக்க முற்படுகிறது. ஒருவேளை கொழும்பு அவ்வாறு நடந்து கொள்ளலாம். ஆனால் கேள்வி, கொழும்பின் அந்தச் சதி முயற்சிக்குள் நீங்கள் ஏன் அகப்படுகின்றீர்கள்? நீங்கள் அதிலிருந்து விலகி நிற்கலாமே!

ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து இலங்கை பலம்பொருந்திய சக்திகளின் அதிகாரப் போட்டிக்கான ஒரு களமாக மாறியிருக்கிறது. இப்போதும் கூட, சீன அரசு தங்களது நீர்மூழ்கி கப்பலொன்றை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரியதாகவும், ஆனால் அரசாங்கம் அதற்கு அனுமதி மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற வேளையில் ஏன் சீனா அவ்வாறானதொரு கோரிக்கையை விடுக்க வேண்டும்? இப்போது நீர்மூழ்கி கப்பலை அவசரமாக நகர்த்த வேண்டிய தேவைதான் என்ன? தெற்காசியாவில் யுத்தமா நடைபெறுகிறது? இதுதான் நான் மேலே குறிப்பிட்ட இலங்கையை மையப்படுத்தி சீனாவின் நகர்வுகள். இதே நீர்மூழ்கி விடயத்தில்தான் முன்னைய ஆட்சியாளர் ராஜபக்சவிற்கும் இந்தியாவிற்கும் முரண்பாடுகள் தீவிரமடைந்தன. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. எவர் விரும்பினும் விரும்பாது விட்டாலும் இந்தியா இதில் தலையீடு செய்தேயாகும். இதுதான் ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்திலும் நிகழ்ந்தது. மகிந்த ராஜபக்ச காலத்திலும் நிகழ்ந்தது. இனியும் நிகழும். இதில் தமிழர் ஆதரவு அல்லது விரோதம் என்று ஒன்றுமில்லை. அதேபோன்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திலும் சீனாவே அதிகம் ஆயுதங்களை வழங்கியிருந்தது. இது பற்றி கோத்தபாயவே பகிரங்கமாக கூறுயிருக்கிறார். இதுவும் தமிழர் தொடர்பான ஒன்றல்ல. இலங்கையை மையப்படுத்திய சீன நகர்வின் ஒரு அங்கம்தான் அதுவும்.

இவ்வாறான பல விடயங்களையும் கருத்தில் கொண்டுதான் இலங்கைத் தீவின் அரசியலை உற்றுநோக்க வேண்டும். இந்த விடயங்களை விளங்கிக்கொள்ள மறுத்தால் கூட்டமைப்பால் ஒரு அடி கூட முன்நோக்கி வைக்க முடியாது. அரசாங்கத்தின் விளையாட்டை வெறுமனே வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும். எல்லாவற்றுக்கும் முன்னால் சம்பந்தனுக்கு இந்தியா தேவையா அல்லது இல்லையா என்பதில் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும். எனவே மோடியுடன் பேசுவதற்கு முதல் சம்பந்தன் கட்சிக்குள் இந்தியா தொடர்பில் தெளிவான உடன்பாட்டுக்கு வருவது அவசியம். ஒரு ஜனநாயக அமைப்பு என்றால் இப்படித்தான் பலரும் பல விதமாக பேசுவர்தான் என்றவாறான சப்பைக்கட்டு கதைகளை தொடர்ந்தும் கூறிக்கொண்டிருக்க முடியாது. ஏனெனில் பலம் பொருந்திய சக்திகளுக்கு பல கண்களும் பல வழிகளும் உண்டு. 

5/13/2017 11:46:13 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்