Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழர் அரசியலும் மனச்சாட்சியும் - இராணுவத்தில் சேர்ந்த தமிழ் பெண்கள் மீதான அவதூறுகளை முன்னிறுத்தி...

தமிழர் அரசியலும் மனச்சாட்சியும் - இராணுவத்தில் சேர்ந்த தமிழ் பெண்கள் மீதான அவதூறுகளை முன்னிறுத்தி...
யதீந்திரா

 

சமீபத்தில் தமிழ் பெண்கள் 109 பேர் இலங்கை இராணுவத்தின் பெண்கள் படையணியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் 18 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். தமிழர்கள் (ஆண்களாக அல்லது பெண்களாக இருக்கலாம்) இராணுவத்தில் இணைந்து கொள்வதா அல்லது இல்லையா என்பது அவர்களது சொந்தத் தெரிவாகும். அதனை நிராகரிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. தவிர வற்புறுத்தலின் பேரில் எவரையும் எந்தவொரு ஆயுத படையணிகளிலும் சேர்க்கவும் முடியாது. ஆனால் இவ்வாறு இராணுவத்தில் இணைந்து கொள்வோரது பாதுகாப்பு குறித்து கரிசனை கொள்ளும் உரிமை தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு உண்டு. அரசாங்கமும் இந்த விடயத்தை போதிய கவனத்துடன் அணுகியிருக்கவில்லை. வர்த்தமானி அறிவித்தலின்றி அவசரமாக இந்த விடயத்தைக் கையாண்டிருந்தது.

தமிழ் சமூகத்தில் பெண்கள் தொடர்பான விடயங்கள் மிகவும் உணர்வு பூர்வமானவை. இதன் காரணமாகவே மேற்படி விடயம் சிக்கலான ஒன்றாக நோக்கப்பட்டிருந்தது. இத்தகைய பின்புலத்திலேயே குறித்த பெண்கள் தொடர்பான தவறான அபிப்பிராயங்கள் வெளிவந்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகவே அவர்களை பயன்படுத்தி (தமிழ் தேசியத்தின் பேரில்) அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளும் அநாகரிகமான செயல்களும் அரங்கேறின.

சில தினங்களுக்கு முன்னர், இவ்வாறு இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட பெண்கள் 15 பேர் உளவியல் ரீதியாக பாதிப்படைந்ததைத் தொடர்ந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டிருக்கலாம் - இதன் காரணமாகவே அவர்கள் மனோரீதியாக பாதிப்படைந்ததாகவும் புலம்பெயர் இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் பின்னர், இது குறித்து பி.பி.சி தமிழ்ச் சேவைக்கு கருத்துத் தெரிவித்திருந்த வவுனியா மருத்துவமனையின் உளநல மருத்துவரான சிவசுப்பிரமணியம் சிவதாஸ் இந்த குற்றசாட்டை முற்றிலுமாக நிராகரித்ததுடன், அத்தகைய அவதூறுகளை, ஊடக அத்துமீறலாகவும் அரசியல் அத்துமீறலாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது பற்றி சிவதாஸ் மேலும் தெரிவிக்கையில், தான் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்ததாகவும், அவர்கள் அனைவரும் தங்கள் மீது விழுந்துள்ள இந்த களங்கத்தை போக்கும் வகையில் உண்மையை சொல்லுமாறு மன்றாடியதாகவும் குறிப்பிட்டிருந்தார். தவிர, அவர்கள் எவரும் எந்தவொரு வற்புறுத்தலின் பேரிலும் இராணுவத்தில் இணைந்து கொள்ளவில்லை, மாறாக விரும்பியே இணைந்து கொண்டனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அந்தப் பெண்கள் அனைவரும் உள்மன முரண்பாடு என்னும் உளநோய்க்கு ஆளாகியிருப்பதாகவும், போருக்கு பின்னர் வன்னியில் இவ்வாறான பாதிப்புக்குள்ளான பலரை தான் கண்டிருப்பதாகவும் சிவதாஸ் குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலம் ஒரு அநாகரிகமான பழியில் இருந்து அப் பெண்களை வைத்தியர் சிவதாஸ் விடுவித்திருக்கிறார். தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிவரும் அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு வைத்தியர் செய்திருக்கின்றார். ஆனால் இதன் பின்னரும் கூட இத்தகைய அவதூறுகளை பரப்பியவர்கள் தங்கள் செயலுக்காக வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்புக் கோரவோ இல்லை. எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியும் இது குறித்து வாய்திறக்கவில்லை.

இச்சம்பவம் முன்னிறுத்தும் கேள்வி – தமிழ் அரசியல்வாதிகளுக்கும் மனச்சாட்சிக்கும் இடையிலான உறவு முற்றிலுமாக அறுந்துவிட்டதா? எப்படியாவது இலாபம் சம்பாதித்தால் சரி, என்னும் மனோநிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வியாபாரியின் மனோநிலையே இன்று தமிழ் அரசியல் சக்திகள் என்போரையும் பீடித்திருக்கிறது. அகப்பட்ட எல்லாவற்றையும் எந்தவொரு பொறுப்பும் குற்றவுணர்வும் இன்றி துருப்புச் சீட்டாக கையாளும் ஒரு சூழல் இன்று தமிழ் அரசியல் அரங்கில் வெளித்தெரிகிறது. இதன் வெளிப்பாடுதான் எந்தவிதமான பொறுப்பும் இன்றி, ஏழைப் பெண்களின் மானத்தை வைத்து அரசியல் செய்யும் இழி நிலைக்கு, இன்று தமிழர் அரசியல் தரம் தாழ்ந்திருக்கிறது.

இவ்வாறு அவமதிக்கப்பட்ட அனைத்து பெண் பிள்ளைகளும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் அடுத்தவேளை உணவுக்காக என்ன செய்வதென்று தெரியாத நிலையில்தான், இலங்கை இராணுவத்தில் இணைந்துகொள்ள தீர்மானித்திருக்கின்றனர். இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்ட பெண்களுக்கு மாதாந்தம் 30000 ரூபா சம்பளமாக வழங்கப்படவுள்ளது. இதுபற்றி அவர்கள் வைத்தியர் சிவதாசிடம் தெரிவித்தாகவும் அவர் மேற்குறிப்பிட்ட நேர்காணலில் பதிவு செய்திருக்கின்றார். அடுத்தவேளை கஞ்சிக்கு வழியில்லாத ஒரு சூழலில், இது தங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்று மேற்படி பெண்கள் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். எனவே பொருளாதார ரீதியான நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில்தான், அவர்கள் இத்தகையதொரு முடிவை எடுத்திருக்கின்றனர். எதிர்காலத்தில் இன்னும் பல இளம் ஆண்களும் பெண்களும் இந்த முடிவை எடுக்கக் கூடும். எனவே இந்த யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு, அவர்களது பிரச்சனைகளை கண்ணியத்துடன் கையாள வேண்டிய பொறுப்பு தமிழ்த் தலைமைகளுக்கு உண்டு.

இந்த இடத்தில் பிறிதொரு கேள்வியையும் கேட்டுக் கொள்ளலாம் - உண்மையில் இன்று எந்தவிதமான குற்றவுணர்வும் இன்றி மேற்படி பெண்களை கேவலப்படுத்திவர்கள், இவ்வாறானதொரு நிலைமை தங்களது பெண்பிள்ளைகளுக்கோ, அல்லது உறவினர்களது பிள்ளைகளுக்கோ ஏற்பட்டிருந்தால், இவ்வாறு பொறுப்பற்று அவர்கள் எல்லோரும் பாலியல் வல்லுறவிற்கு ஆளானவர்கள் என்று அறிவித்திருப்பார்களா? அவ்வாறான செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதை அனுமதித்திருப்பார்களா? ஆனால் குறித்த பெண்கள் தொடர்பில் எந்த தயக்கமும் இன்றி அவர்களால் இவ்வாறு சொல்ல முடிந்திருக்கிறது. எப்படி இது சாத்தியப்பட்டது? ஏனெனில் அவர்கள் அனைவரும் ஏழைகள். ஏழைகளை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம், எவரும் கேட்கப் போவதில்லை. இத்தகைதொரு அநாகரிக அரசியல் தமிழ்ச் சூழலில் நீண்டகாலமாக அரங்கேறி வருகிறது. அது இப்போது உச்ச நிலையை அடைந்திருக்கிறது.

தமிழர் அரசியல் ஆயுதப் போராட்டமாக உருமாறிய ஆரம்ப காலத்தில் ஒரு ஆரோக்கியமான போக்கு நிலவியது உண்மை. அரசியலில் கருத்து பேதங்களை கடந்து மற்றவர்களை நேசிக்கும் பண்பு உயர்வாக மதிக்கப்பட்டது. ஆயுதங்களை புறம்தள்ளி பரஸ்பரம் உரையாடவும், விவாதிக்கவும் கூடியதொரு சூழல் நிலவியது. ஆனால் 1990களுக்கு பின்னர் எல்லாம் தலைகீழானது. மனோரதியக் கற்பனைகளும், அந்த கற்பனைகளை தொடருமாறுமான கண்டிப்பான உத்தரவுகளும் தமிழர் அரசியல் அரங்கை ஆக்கிரமித்தன. உத்தரவுகளை புறம்தள்ளி சுயாதீனமாக சிந்திக்க முற்பட்டோர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அவர்களை சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தும் நோக்கில், அவர்களது ஆளுமைகள் படுகொலை (Characteristic Assassination) செய்யப்பட்டன.

தமிழர் அரசியலும் மனச்சாட்சியும் - இராணுவத்தில் சேர்ந்த தமிழ் பெண்கள் மீதான அவதூறுகளை முன்னிறுத்தி...

ஆரம்பத்தில் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான உபாயமாக கைக்கொள்ளப்பட்ட இத்தகைய அவதூறு பரப்பும் உபாயம், காலப்போக்கில் தமிழ்ச் சூழலின் ஒட்டுமொத்த அரசியல் போக்காகவே மாறியது. எவர் பற்றியும் எப்படியும் பேசலாம், எப்படியும் ஒருவரை கேவலப்படுத்தலாம், எவருக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டியதில்லை என்னும் நிலைமை உருவாகியது. ஆனால் அனைத்துவகை வசைபாடலுக்குப் பின்னாலும், தமிழ்த் தேசியம் என்னும் இரு சொல்லை போட்டுவிட்டால் போதும். உருவாக்கப்பட்ட கற்பனைகளுடன் தமிழ்த் தேசியம் என்னும் கொடியை உயர்த்தியவர்கள் எல்லோரும், உயர்ந்த மனிதர்களாக போற்றப்பட, ஏனையோர் துரோகிகளாகவும், அரசின் கைக்கூலிகளாகவும் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். உடன்பாடுகளுடனும் முரண்பாடுகளுடனும்தான் மனிதர்கள் பயணிக்க முடியும் என்னும் அடிப்படையான உண்மை குழி தோண்டி புதைக்கப்பட்டது.

அரசாங்கங்களின் எதேச்சாதிகார அணுகுமுறைகளால் வெறுப்புற்றிருந்த சாதாரண தமிழ் மக்களும் இவற்றை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொண்டனர். அரசியல் வியாபாரிகள் மத்தியில் அவதூறு என்பது நல்ல இலாபம் சம்பாதிப்பதற்கான பண்டமானது. விடுதலைப்புலிகள் தலைமையிலான ஆயுத அரசியல் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற பின்னர், இந்த நிலைமை மேலும் மோசமடைந்தது. முன்னர் ஒரு வழிகாட்டலில் கையாளப்பட்ட இத்தகைய உபாயம், தற்போது தலைவிரித்தாடுகிறது. அதுவரை அரசியலை விமர்சிப்போர் மீதும், ஒத்துப்போக மறுத்தவர்கள் மீதும் வீசப்பட்ட இத்தகைய கற்கள், தற்போது சாதாரண ஏழை மக்கள் மீதும் வீசப்படுகின்றன. இதன் ஆரம்பமே மேற்படி பெண்களை கேவலப்படுத்துவதன் மூலம் தங்களின் அரச எதிர்ப்பு அரசியலை பலப்படுத்திக் கொள்ள சிலர் முயன்றிருக்கின்றனர்.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தும் அரச எதிர்ப்பு என்பது வேறு, வாழவழியின்றி ஒரு வாழ்வை தெரிவு செய்துகொள்ளும் ஏழைகளை முன்னிறுத்தி அரச எதிர்ப்பை பேணிக்கொள்ள முற்படுவதுதென்பது வேறு. தற்போது நிகழ்ந்திருப்பது இரண்டாவது வகையான ஒன்று. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் மக்களின் நலன்சார்ந்து சிந்திப்போர் இது குறித்து கரிசனை கொள்ள வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.

***

ஆசிரியர் குறிப்பு

இக்கட்டுரையை வெளியிடுவற்கு முன் மருத்துவர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் குறித்து அறிந்துகொள்ள முயன்றோம். உளநல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஓர் உணர்வுமிக்க தமிழராகவே அவரை பலரும் எமக்கு அடையாளம் காட்டினர்.

தனது மருத்துவ சேவை தமிழ் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்குடன் வவுனியாவிற்கு மாற்றலாகி வந்த ஒருவர் என்றும், இப்பெண்கள் மீது விழுந்த பாலியல் ரீதியான அவதூறுகள் குறித்த உண்மைகளை தெளிவுபடுத்தவேண்டும் என்ற நோக்குடனேயே அவர் ஊடகங்களில் கருத்து வெளியிட்டதாகவும் அவரை நன்கு அறிந்த பலரும் எம்மிடம் தெரிவித்தனர்.

12/21/2012 3:50:34 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
! - (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்